இளைஞர் யுவதிகள் என்பவர்கள் எப்போதும் வெட்டிப்பேச்சு பேசுபவர்கள் இணையத்தில் நேரத்தை வீணாக்குபவர்கள் ஆபாசத்தை தேடுபவர்கள் என்பது பலரால் குறை சொல்லப்பட்டு கொண்டே இருக்கும் விடயம். ஆனால் அதே இளைஞர் யுவதிகள் நினைத்தால் எப்படி ஒரு மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை இன்று வெள்ளவத்தையில் சாதித்து காட்டி இருக்கின்றார்கள்.
சுன்னாகம் எண்ணெய் கழிவு எமது சந்ததியை அடியோடு அழிக்கும் என்பது பலருக்கு இன்னமும் புலப்படாமல் இருப்பது என்னவோ கவலையளிக்கின்றது. ஒரு சிறு பிரதேசத்தில் ஆரம்பித்த நிலத்தடி நீர் மாசு இன்று 10 மைல்களுக்கு மேல் பரவி இருப்பது அதன் ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது. இதன் பாதிப்பு கடந்த நவம்பரில் எனக்கு தெரியவந்த போது ஊடகனாக என் பங்குக்கு விழிப்புணர்வு மற்றும் அது தொடர்பான உண்மை நிலைப்பாடுகளை வெளிக்கொண்டு வர இது தொடர்பான ஆரம்பகட்ட செயற்பாட்டாளர்கள் உதவி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் மைந்தன் சிவாவின் முகப்புத்தகத்தில் வெள்ளவைத்தையில் ஒரு விழிப்புணர்வு ஒன்று கூடல் என்று பார்த்த போது இன்று நடந்த அளவுக்கு பலரது பங்களிப்பு இருக்கும் என எண்ணவில்லை.
எமக்கும் பொறுப்பு இருக்கின்றது என்ற எண்ணத்தில் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டிய ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள். இனி வரும் நாட்களில் இன்னும் பல ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்ய இது ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இன்று இடம்பெற்ற ஒன்று கூடல் தொடர்பான ஊடக அறிக்கை:
கரம் கோர்த்த உறவுகளுக்கு நன்றி!
யாழ் குடாநாட்டின் சுன்னாகம் உள்ளிட்ட வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்கழிவுகள் கலப்பதால் மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினையை முன்னிறுத்தி, இன்று ஞாயிற்றுக்கிழமை (பெப் 15, 2015) காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரையில் கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற ‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ கவனயீர்ப்பு நிகழ்வு நூற்றுக்கணக்கான மக்களின் பங்களிப்போடு அமைதியான முறையில் நிறைவு பெற்றது.
சமூக ஊடகத் தளத்தில் தொடர்ச்சியாக இயங்கும் இளைஞர்கள் சிலர் இணைந்து ‘சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள்’ என்கிற பெயரில் இந்த கவனயீர்ப்பு நிகழ்வுக்கான அழைப்பை விடுத்திருந்தோம். இந்த அழைப்பு விடுக்கப்பட்டதும் சமூக ஊடகத் தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேவேளை, விமர்சனங்களையும், பல்வேறு விதமான கேள்விகளையும் எதிர்கொள்ள நேரிட்டது.
நிகழ்வுக்கான அழைப்பை விடுத்தபின், அதனை செயற்பாட்டுத் தளத்தில் நகர்த்த முனைந்த போது பல பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பின்னர், வெள்ளவத்தையில் காலி வீதியின் ஒரு பக்கத்தில் அமைதியான முறையில் எமது உரிமைக்காக நாம் ஒன்றிணைந்து கவனயீர்ப்பை செய்ய முடிந்துள்ளது.
இந்த கவனயீர்ப்பின் மூலம்,
1.யாழ் குடாநாட்டின் சுன்னாகம் உள்ளிட்ட வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்கழிவுகள் கலப்பதால் மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் பரந்துபட்ட அளவிலான கருத்தாடல்களையும் கவனத்தினையும் பெற வைத்தல்.
2.பிரதான ஊடகங்களில் பேசப்படாது பெருமளவு மறைக்கப்பட்டு வந்த யாழ் குடிநீர் பிரச்சினையை யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் எடுத்துச் சென்று மக்களிடம் குறிப்பிட்டளவு விழிப்புணர்வை ஏற்படுத்த முனைதல்.
3.மத்திய, மாகாண அரசாங்கங்கள் யாழ் குடிநீர் பிரச்சினைக்கு வெளிப்படையாகவும், தெளிவாகவும், அதேவேளை விரைவாகவும் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்துதல்.
4.நிலத்தடி நீரைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தி, எமது அடுத்த தலைமுறைக்கு நீரை வழங்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
5.எமது அடிப்படை உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியிலான கவனயீர்ப்பு நிகழ்வுகளை எதிர்காலத்திலும் முன்னெடுக்க முடியும் என்பதை உணர்த்துதல்.
6.சமூக ஊடகத் தளங்களில் இயங்கும் இளைஞர்களுக்கு சமூகப் பொறுப்புணர்வும், கடமையும் இருக்கின்றது என்பதை வலியுறுத்தல்.- உள்ளிட்ட விடயங்களை வெளிக்கொணர்வது ஆகும்.
அத்தோடு, இன்று நிகழ்த்தப்பட்ட ‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ கவனயீர்ப்பு நிகழ்வு சமூக பொறுப்புள்ள விடயங்களுக்காக இளைஞர்கள் எந்தவித பாகுபாடுமின்றி இணைவார்கள் என்பதை இன்னொரு வடிவில் நிரூபித்தும் இருக்கிறது. இதனையே, நாம் வெற்றியாகவும் கொள்கின்றோம்.
நிகழ்வில் நேரடியாக பங்களித்தவர்கள், வெளியிலிருந்து ஆதரவு அளித்தோர், சமூகத் தளங்களில் தொடர்ந்தும் கருத்தாடல்களை நிகழ்த்தி ஒத்துழைத்தோர், ஊடகங்கள், தங்களை வெளிக்காட்டாவிட்டாலும் தொடர்ச்சியாக உதவியோர் என்று பல தரப்பினருக்கும் இந்த வெற்றியில் பங்கிருக்கின்றது. அது, ‘எமக்கான உரிமைக்காக நாமே இணைந்தோம்’ என்கிற ரீதியில் பொறுப்புணர்வாகின்றது. ஆனாலும், ஏற்பாட்டாளர்கள் என்கிற ரீதியில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!