உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Sunday, November 22, 2009

வானலையில் வெற்றிகரமாக ஒரு வருடம்.

காலம் சிலரை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடும் இல்லாவிட்டால் வடமராட்சியில் பிறந்து வரணியில் தவழ்ந்து இன்று வெற்றியோடு நான் தவழ்வதை என்னவென்று சொல்வது. சரி விசயத்துக்கு வா என்பது புரிகிறது. வெற்றி வானொலியில் வானலை வழியே உங்களை நான் சந்தித்து இன்றுடன் ஒருவருடமாகிவிட்டது. அதற்காக சில நினைவு மீட்டல்கள் தான் இந்த பதிவு.

நான் கொழும்பில் ஒரு விடுதியில் இருந்த காலம் என் கைத்தொலைபேசியில் எல்லா வானொலிகளையும் கேட்பேன். ஒருநாள் அலைவரிசைகளை செட் செய்யும் பொது தொடர் இசையாக பாடல்கள் ஒலித்த ஒரு அலைவரிசை தட்டுப்பட்டது. பாடல்கள் நன்றாக இருக்கே என கேட்க ஆரம்பித்தேன். சில நாட்கள் செல்ல கற்றது கையளவு என்னும் நிகழ்ச்சியில் நானும் என் கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன். அத்துடன் ஒரு சொல் ஒரு கானம் நிகழ்ச்சியிலும் பங்குபற்றியுள்ளேன். அதை தொடர்ந்து காற்றின் சிறகுகள் நிகழ்ச்சிதான் என்னை மாற்றிப்போட்டது எனலாம். எனக்கும் சுபாஷ் அண்ணாவிற்கும் இடையில் சிறு மோதலோடு தான் பேச்சு ஆரம்பமானது, அதன் பின் என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் நபர் அவர் என தெரியாமல். மோதல் எப்படி காதலாகுமோ அதேபோல எங்களுக்குள்ளும் மோதல் இல்லாமல் போய் நல்ல நட்பு சகோதரத்துவம் ஏற்பட்டது.

இந்த நேரம் தான் எனக்கு வானொலி ஆசை கொஞ்சம் எட்டிப்பார்த்தது. ஒரு இணையத்தில் இயங்கும் பிரபல வானொலியில் நேர்முகத்தேர்வுக்காக போனேன். நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டாலும் அந்த நிலையம் அமைந்துள்ள இடம் ரொம்ப தூரமாக அமைந்தது என் வீட்டுக்காரருக்கு கொஞ்சம் விருப்பமின்மையை ஏற்படுத்தியது. இதை நான் சுபாஷ் அண்ணாவுடன் பகிர்ந்து கொள்ள அவர் சொன்ன வார்த்தை உனக்கு வெற்றியில் ஒரு நேர்முகத்தேர்விற்கு வாய்ப்பினை உண்டு பண்ணிவிடுகின்றேன் ஆனால் மிகுதி உன் கையில் உன் திறமையில் என்றார். நானும் சரி என்று விட்டேன். இந்த இடத்தில் என் பெற்றோருக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம் நான் என்ன செய்தாலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுப்பவர்கள் இவர்கள். இல்லாவிட்டால் வாழ்க்கையில் விழுந்து போன என்ன தாங்கிப்பிடித்து எழுப்பிவிட்டிருப்பார்களா?


நேர்முகத்தேர்வுக்கான நாளும் வந்தது நான் என் பெற்றோருடனும் ஒரு அண்ணாவுடனும் வெற்றி அலுவலகத்துக்கு போனேன். இதில் இன்னொரு முக்கியமான விடயம் இதுவரை எனக்கு சுபாஷ் அண்ணாவின் முகமே தெரியாது. தொலைபேசியில் பேசியது மாத்திரமே. அலுவலகத்தில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு காத்திருக்க ஒரு பெண் வந்து என்னை அழைத்து போனார். அவர்தான் பூஜா அக்கா. நேரடியா Recording அறைக்கு என்னை அழைத்து போக அங்கே ஒருவர் இருந்தார். எனக்கு அவரையும் யாரென தெரியாது. அந்த அறைக்குள் இருந்த கண்ணாடியாலான இன்னொரு அறைக்குள் ஒலிவாங்கி இருக்கும் இடத்துக்கு என்னை போகச் சொன்ன அந்த நபர் தானும் உள்ளே வந்து ஒலிவாங்கியை எனக்கு சரி செய்துவிடும் போது உங்கள் பெயர் என கேட்க விமல் என்றார். உடனே நான் நீங்கள் தானே எங்க பாடசாலையில் படித்தீர்கள் என சொல்ல அவரும் ஆமாம் என சொல்லிவிட்டு என் குரலை பதிவு செய்யத் தொடங்கினார்.

செய்தி அறிக்கையை நான் வாசித்துக்கொண்டிருந்த போது லோஷன் அண்ணா உள்ளே வந்து நிறுத்த சொல்லிவிட்டு ஒரு நிகழ்ச்சி செய்ய சொன்னார். நானும் காற்றின் சிறகுகள் செய்து காட்ட Fast ஆக ஒரு நிகழ்ச்சி செய்யும் படி சொல்ல பகல் பந்தி செய்து காட்டினேன். வெளியே வரச்சொல்லி இப்போ சின்ன வயது தானே இன்னும் காத்திருக்கலாமே என்றார். எனக்கும் பயமாக இருக்க தாங்கள் மீண்டும் அழைக்கிறோம் இப்போ போகலாம் என்றார். நானும் வீட்டுக்கு வந்தாலும் சுபாஷ் அண்ணாவை நையப்புடைந்து கொண்டே இருந்தேன். என் குடைச்சலகளுக்கு கோபப்படாமல் பதில் சொல்லியே அவர் களைத்திருப்பார்.(அதற்கு பிறகு அண்மையில் தான் அன்றைய தினம் என்னை எடுப்பதா இல்லையா என்ற விடயத்தில் என்ன முடிவு என்ன பேசினார்கள் என்பதை விமல் அண்ணா மூலம் அறிந்தேன். விமல் அண்ணா உங்களுக்கு என் நன்றிகள். அத்துடன் நீங்கள் நடுநிலையாக நடந்தது மகிழ்ச்சியாக உள்ளது.)

அதன் பின் இன்னும் மூன்று முறை நேர்முகத்தேர்வு எல்லாம் முடிந்து நவம்பர் மாதம் மூன்றாம் திகதி அலுவலகத்தில் நானும் ஒரு ஊழியனாய் இணைந்தேன். ஆரம்பகால பயிற்சிகள் ஆரம்பித்தன. அப்போது எனக்கு இரண்டு பேரைக்கண்டால் பயம் ஒன்று விமல் அண்ணா இன்னொருவர் சந்துரு அண்ணா இரண்டு பேரும் ஏதாவது கேட்டு அன்று ஒரு ரணகப்படுத்தாமல் விடமாட்டார்கள். இன்று விமல் அண்ணா நல்ல அண்ணாவாக நல்லா நண்பனாக மாறினாலும் இன்னும் எனக்குள் அந்த பயம் போகவில்லை. ஆனால் இப்போது தான் உணர்ந்தேன் அது பயம் மட்டுமலல மரியாதையும் என்று.( ஆனால் நம் பாடசாலைக் காலத்தில் விமல் அண்ணா எங்களுக்கு சீனியர் அதை நினைத்தால் இன்றும் நடுங்கும்.) சந்துரு அண்ணாவும் தன் கண்டிப்பை குறைத்தாலும் இன்று நல்ல நண்பனாக அதேநேரம் என் தயாரிப்பு பணிகளில் நல்ல உதவியாக இருக்கின்றார்.

அடுத்து ஹிஷாம் அண்ணா செய்தி வாசிப்பதில் கவனிக்கவேண்டிய விடயங்களை முதலில் சொல்லித்தந்தவர். எங்கள் உதவி முகாமையாளர். பெரிதாக கோபப்படமாட்டார் ஆனால் வேலை சரியாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர். இப்போது எங்கள் மாலை நேரத்து வேலை நேர உற்ற நண்பனாக. அடுத்து பிரதீப் அண்ணா, ஆரம்பத்தில் நான் ஒருநாள் இவரிடம் வாங்கிய திட்டு தான் இன்று என்னை பக்குவப்படுத்தியுள்ளது. நன்றி அண்ணா. அதேபோல சகலவிடயங்களையும் சொல்லித்தருவதில் இவருக்கு நிகர் இவரே. ஆரம்பத்தில் எனக்கு பாடல்கள் பற்றிய அறிவை வளர்க்க பெரிதாக உதவியவர் இன்றும் என் பாடல்தெரிவுகளுக்கு ஆதாரமாக விளங்குபவர். செந்தூரன் அண்ணாவுடன் பெரிதாக பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.ஆனால் அவரின் அறிவுரை இன்றும் பயன்படுகின்றது. தான் நாடு விட்டு போகமுதலே எங்கள் கனவில் முதல் தீபத்தை ஏற்றிவைக்கும் வண்ணம் தன் அனுபவத்தை பகிர்ந்து போன அன்பு அண்ணா. இன்றும் வாழ்த்தி இருக்கின்றார். நன்றி அண்ணா.
.

அடுத்து பூஜா அக்கா, நேர்முகத்தேர்வுக்கு சென்ற நேரம் என்னை அழைத்து சென்றவர். இவரின் பகல் பந்தி எனக்கு பல அனுபவங்களை பெற்றுத்தந்த களம். அனேகமாக பகல் பந்தி நிகழ்ச்சி செய்யும் போது அதை பார்த்து பார்த்து நல்ல விடயங்களை கற்றுக்கொண்டேன். இந்த நேரம் தன்னால் முடிந்த அளவு எனக்கு நிகழ்ச்சி பற்றி சொல்லி கொடுத்த அக்காவிற்கு நன்றிகள். அடுத்தவர் வைதேகி அக்கா, இப்போது என் குறைகளை சொல்லி திருத்துவது மட்டுமில்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்லி விடுவார். ஆரம்பகாலத்தில் என் செய்திகளை அவர் தந்தை சர்வானந்தா அவர்கள் கேட்டு (பிரபல வானொலி அறிவிப்பாளர்.) நன்றாக இருக்கு நல்லா வருவான் என சொல்லி எனக்குள் நம்பிக்கை அளித்தவர்.

சுபாஷ் அண்ணா எப்போதும் மாலையில் வருவார் ஆனால் என் தயாரிப்பு வேலைகள் செய்ய பிள்ளையார் சுழி போட்டவர். முகம் தெரியாமலே உதவியவர் முகத்துக்கு நேரே நல்ல சகோதரனாக மாறிவிட்டார். அடுத்து லோஷன் அண்ணா. என் ஐந்தாம் ஆண்டில் இருந்து நான் தொடர்ந்து வந்த ஒரு சாதனையாளர். வானொலி அறிவிப்புத் துறையில் என் மானசீக குரு. இதை வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை. எந்தளவிற்கு நான் விஜய் ரசிகன் என நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதேபோல இங்கே லோஷன் அண்ணாவின் ரசிகன்.(விஜயை ஒப்பிட காரணம் எல்லோரும் என்னை விஜயின் தீவிர ரசிகனென நன்கறிந்திருப்பதே.) இதனால் தானோ என்னவோ அவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அவர் நிகழ்ச்சி செய்யும் நேரம் அவர் அருகே இருந்து ரசித்து பார்த்திருக்கின்றேன். அத்தனை விடயங்களையும் அறிந்து விட்டீர்களா என கேட்டு எங்கள் ஆவலை அதிகரிப்பதுடன் தெரியாத விடயங்களை தானே சொல்லித்தரும் நல்ல மனது. முகாமையாளர் என்னும் பதவியில் இருந்தாலும் பழகுவதில் அவர் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அண்ணாவே. (அண்ணா உங்களிடம் வேலை செய்த ஒருவர் எனக்கு சொன்னது லோஷன் அண்ணாவின் முகாமைத்துவத்தின் கீழ் வேலை செய்ய முடியாத யாரும் இன்னொருவரின் கீழ் வேலை செய்ய முடியாது என்று. இது என் அனுபவத்திலும் உண்மை.) இப்படி எத்தனையோ இனிமையான நினைவுகள் இருந்தாலும் இந்த பயிற்சிக்காலம் ஒரு முட்படுக்கையே.

நாங்கள் வெற்றியோடு இணைந்து அடுத்த வாரமே ஒரு சில வேண்டத்தகாத சம்பவங்கள் லோஷன் அண்ணாவிற்கு நடக்க உள்ளே வெளியே ஆட்டம் நடந்தேறியது. என்ன நடக்கப்போகின்றது என தெரியாமல் எல்லோரும் விழி பிதுங்கிய நேரம் ஹிஷாம் அண்ணா சொன்னார் நாளை சதீஷ்,வனிதா இருவரும் நிகழ்ச்சி செய்யப்போகின்றீர்கள் ஆனால் உங்கள் பெயர் சொல்லக்கூடாதென. மனதிலே பயமும் வலியும் கலந்திருக்க கடந்தவருடம் நவம்பர் இதே தினம் ஒரு சனிக்கிழமை என் கன்னிக்களம் சுபாஷ் அண்ணாவுடன் அரங்கேறியது நானாட நீயாடாவில். எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடலோடு நானும் நதியாக ஓடத்தொடங்கினேன்.அந்த நிகழ்ச்சியில் நான் விட்ட பிழைகள் எல்லாவற்றையும் திருத்தி எனக்கு நல்ல வழி காட்டினார் அவர். இதில் இன்னொரு சந்தோசமும் சேர்ந்துகொண்டது அதுதான் லோஷன் அண்ணா உள்ளே வெளியே ஆட்டம் முடித்து வீட்டுக்கு வந்து விட்டார். எவர் எனக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டரோ அவருடன் என் பயணம் ஆரம்பமானது இரட்டிப்பு சந்தோசம். மறுநாள் விமல் அண்ணாவுடன் அமரகானங்கள் மற்றும் ஒரு சொல் ஒரு கானம். அன்று நான் நன்றாக மாட்டி கொண்டேன். ஆனால் இன்று அதுவும் படிப்பினையாக மாறி உதவி புரிகின்றது. தொடர்ந்து அனேகமாக எல்லோருடைய நிகழ்ச்சியிலும் இருந்து அவர்கள் நிகழ்ச்சி செய்யும் விதத்தை பார்த்து கற்றுக்கொண்டேன்


இப்படியே போகப் போக குறுகிய காலங்களிலேயே வாங்க நீங்க நிகழ்ச்சி வாய்ப்பும் கிடைத்தது. ஒருநாள் சுபாஷ் அண்ணா தன் வீட்டுக்கு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு போக வேண்டும் என்பதற்காக என்மேல் முழு நம்பிக்கை வைத்து காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியை ஒப்படைத்தார்.

இதற்கு காரணமும் இல்லாமல் இல்லை, நானாட நீயாட நிகழ்ச்சியில் அடிக்கடி வெளியே சென்று என்னை தனியே செய்ய விட்டு எனக்கு பயத்தை போக்கி அனுபவத்தை வளர்த்தார். அந்த நம்பிக்கையை லோஷன் அண்ணா என்மேல் வைக்க முதல் முறையாக காற்றின் சிறகுகளில் தனி ஆவர்த்தனத்தை தொடங்கினேன். நிகழ்ச்சி முடிந்த உடன் சுபாஷ் அண்ணாவிற்கு அழைப்பெடுத்து சரியாக செய்தேனா என கேட்டேன் அவரும் குறைநிறைகளை சொல்லி மேலும் உதவினார். மறுநாள் காலை லோஷன் அண்ணாவிடம் இருந்து நேற்றைய நிகழ்ச்சி சூப்பர் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் என்ற எஸ்.எம்.எஸ் வந்தது இன்றும் என் தொலைபேசியில் இருக்கிறது அது. இன்று அதே நிகழ்ச்சி எனக்கு வழங்கப்பட்டிருப்பது இன்னொரு ஆச்சரியம். இதை அடுத்து பூஜா அக்காவும் என் மேல் தன் நம்பிக்கை வெளிப்பாட்டை பகல் பந்தியைக் கொடுத்து வெளிப்படுத்த நான் அதை பயன்படுத்திக்கொண்டேன். கிறிஸ்மஸ் தினத்தன்று நத்தார் தாத்தாவாக நான் செய்த அட்டகாசத்துக்கு கிடைத்த பாராட்டுகள் இன்னும் சந்தோஷ அலைகள்.

இப்படியே போகப்போக என்றென்றும் உங்கள் பிரியமானவனாக வலம் வர தொடங்கினேன். இந்த ஆண்டின் முதல் நாள் விடியலில் லோஷன் அண்ணா மூலம் நானும் வனிதாவும் உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டோம். அன்றும் இரவு காற்றின் சிறகுகளோடு வந்த நான் அதன் பின் இரு வாரங்கள் நெருப்பு காச்சலால் வைத்தியசாலையில் இருந்து மீண்டும் வந்தேன். அதன் பின் தொடர்ந்து குதூகல குவியல், இருபது புது இசை, வேகம் விவேகம், கற்றது கையளவு, அதிரடி புதிரடி, வினோத வியூகம், எங்கேயும் எப்போதும், சினிமாலை, விடியல் என பெரும்பாலான நிகழ்ச்சிகள் செய்து விட்டேன். இதில் சினிமாலை நிகழ்ச்சி லோஷன் அண்ணா செய்தது ஒருநாள் அவர் சொன்ன வார்த்தைகள் தான் கஷ்டப்பட்டு ரசித்து ரசித்து தயார் செய்த நிகழ்ச்சி உனக்கு வழங்கியுள்ளேன் கெடுத்துவிடாதே என்று. அதேபோல முழு சுதந்திரத்துடன் உன் ஸ்டைலில் செய் என சொல்லிவிட்டார். ஓரளவிற்கு நன்றாக அந்த நிகழ்ச்சியை கொண்டு செல்கின்றேன் என நம்புகின்றேன். அதேபோல்தான் விடியல் என் மனதுக்குள் ஒரு எட்டாத கோட்டையாக இருந்த நிகழ்ச்சி, சுபாஷ் அண்ணா விடை பெற்று செல்லும் போது உனக்கு இனி காலை நேர நிகழ்ச்சி தான் குறியாக இருக்க வேண்டும் அந்தளவிற்கு உன் செயற்பாடு அமைய வேண்டும் என்பதை எனக்குள் பதித்து போனது. இன்னும் உலாவரும் உற்சாகம், ஏன் எதற்கு எப்படி,அவதாரம், தாம் தூம் மட்டுமே எனக்கு எட்டாக்கனியாக இருக்கின்றன.

இப்படியே சென்ற எனக்கு இன்னொரு வாய்ப்பு செய்தி அறிக்கை மூலம் கிடைத்தது. ஒருநாள் காலை லோஷன் நான் இன்று மதியம் செய்தி வாசி என சொல்ல நானும் சரி சொல்லி விட்டு அலுவலகம் சென்ற நேரம் காலை பதினொன்று நாற்பது. அன்றுதான் என் வாழ்க்கையில் இன்னொரு சரிவை சந்தித்த நாள். ஆனால் அதை யாரிடமும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் தடுமாறி செய்தி வாசிக்க உள்ளே சென்றுவிட்டு இறுதி நேரம் வைதேகி அக்காவிடம் கொடுத்து விட்டு வெளியேறிவிட்டேன். இதனால் எல்லோரிடமும் கொஞ்சம் பேச்சு வாங்கவேண்டிய நிலை. அப்போதும் இருநாள் கழித்து மீண்டும் எனக்கு அந்த வாய்ப்பினை லோஷன் அண்ணா வழங்கினார். செய்தி வாசித்து விட்டு வந்ததன் பின்னர் அவர் சொன்ன வார்த்தைகளும் மறக்கவில்லை. சங்ககாரபோல எப்போதும் போர்மில் இரு மஹேல போல அடிக்கடி Form அவுட் ஆகிடாதே என்று. ஒரு சில நாட்களிலேயே காலை நேர செய்தி அறிக்கை வாசிக்கும் வாய்ப்பை லோஷன் அண்ணா வழங்கினார்.


இதுவரை நான் சொன்னவர்கள் உங்களுக்கும் தெரிந்தவர்கள் இவர்களை விட அருந்ததி அக்கா எப்போதும் பெரிய பலம். அறிவுரைகளும் அனுபவ பாடமும் அவரிடம் கிடைக்கும். அடுத்து திஷோ அண்ணா, எப்போதும் சிரித்த முகம் சிறுபிள்ளை போல குறும்புத்தனம். ஆரம்பத்தில் ஒரு பிரச்சனை எனக்கும் அவருக்கும்.ஆனால் அடுத்தடுத்த நாட்களிலேயே எல்லாம் சரியாகிவிட்டது. அண்ணா இந்த நேரத்தில் அந்த சம்பவத்துக்கு உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். இவரை பற்றி சொல்ல வேண்டுமாக இருந்தால் என் பாடல் விருப்பம் அறிந்தவர். அமரகானங்களில் எனக்காக பாடல் போட்டு அசத்தியவர். இப்போதும் இது உனக்கு ஏற்ற பாட்டு போடு என சில பாடல்களை தருபவர்.

அடுத்து செய்திப்பிரிவில் தெரியாதைதை சொல்லித்தரும் பென்சி அண்ணா, தன் வேலையில் கண்ணாயினும் எங்களுக்கு அறிவுரைதரும் ரஜினி அண்ணா என் நண்பர்கள் அருண், விஜய், லெனின்,ஸ்ரியான்(நம்மா சீயான்) என எல்லோரும் என் ஒரு வருட படிக்கட்டை தாங்கி நிற்பவர்கள். இதில் ஜெய்சன் தினேஷ் இருவரும் அடிக்கடி காணாமல் போனாலும் என் வெற்றிப்பயணத்தின் ஒவ்வொரு கற்கள்.

அடுத்து என்னுடன் வெற்றியில் இணைந்து குருவியாக வலம் வந்து இன்று உங்களுக்கும் எனக்கும் இனிய தோழியாக இருக்கும் வனிதா, நாங்கள் இணைந்ததன் பின் இணைந்து இப்போது என் இணைபிரியா நண்பனாக காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியில் என் பாடல்தெரிவுகளின் குறை நிறைகளை சுட்டிக்காட்டி என் பாடல் அறிவை மேம்படுத்தும் அன்பு நண்பன் ரஜீவ் இவர்களின் துணை என் வெற்றிப் பயணத்தில் கிடைத்தது. வெற்றியில் இப்போது இணைந்தாலும் அனுபவமுள்ள பாபு, பிர்னாஸ், தினேஷா என எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் என்னை மேம்படுத்த உதவுகின்றனர்.
லோஷன் அண்ணா முதல் பிர்னாஸ், தினேஷா வரை ஒவ்வொருவரிடம் இருந்தும் நிறைய கற்றுக்கொண்டிருக்கின்றேன்.

இவர்கள் எல்லாரையும் போல என் வெற்றிப் பயணத்தில் பிரதான பங்காளிகள் என் பிரியமான நேயர்கள். என்னையும் ஒரு அறிவிப்பாளனாக ஏற்றுக்கொண்டு ஆதரவை வழங்கிவரும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள். உங்களிடம் இருந்து கூட நல்ல பாடல் அறிவு, இன்னும் பல பொது விடயங்களை கற்பதோடு உங்கள் வீட்டில் ஒருவனாக ஏற்று அன்புதரும் நேயர்களும் இருக்கின்றார்கள் என்ற சந்தோசத்தில் உங்கள் அன்புக்கு தலை வணங்குகின்றேன். ஒரு வருடம் கடந்தாயிற்று.... இன்னும் பல வருடம் வெற்றிக்குடும்பத்தோடு வெற்றிகரமாக வலம் வரலாம் என்ற நம்பிக்கையில் இன்று வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றிகளோடு விடைபெறுகின்றேன்.
Share:

Saturday, November 21, 2009

நீ ஹலோ சொல்லவில்லை என்றால்.... இன்று உலக ஹலோ தினம்.


தினம் தினம் ஒரு தினம். அதை அனுதினம் கொண்டாடுவதில் ஒரு சுகம். அந்த வகையில் இன்று ஹலோ தினம். அட எவ்வளவோ தினம் கொண்டாடிட்டோம் இதையும் கொண்டாடிலாம் என கொண்டாட இருப்பவர்களுக்கு இத்தினம் பற்றிய சுவாரஸ்யமும் தெரியட்டுமே. இந்த தினத்தின் பிறப்பு இறப்புகளின் இறுதியில் இருந்து ஆரம்பமாகி இருப்பது இன்னொரு சுவாரஷ்யம்.

எகிப்து-இஸ்ரேல் நாடுகளுக்கிரையில் இடம்பெற்ற போர் நிறைவுக்கு வரும் நேரம் (1973.11.21) இரு நாட்டு தலைவர்களும், அப்படைவீரர்களும், மக்களும் மட்டும் ஹலோ சொல்லி சமாதானம் ஆனால் போதாது உலகமே ஹலோ சொல்லி அமைதியாக இருக்கட்டுமென நினைத்தார்களோ என்னவோ அன்றுமுதல் ஹலோ தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் கொண்டாடப்பட்டு வரும் ஹலோ தினத்தின் வயது 37. நிற்க நடக்க ஓட என மலிந்து போய் இருக்கும் தினக் கொண்டாட்டங்களுக்கு நடுவில் ஹலோ தினத்தின் சாரம் பாராட்டப்படக்கூடியதே. உலகமெங்கும் அமைதி நிலவ பாடுபடுவோம் என்னும் கருப்பொருளுக்கே வைக்கலாம் ஒரு சல்யூட்.

எல்லாம் சரி நாம கொண்டாடவேன்டாமா ? நான் ரெடி.....

ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ

என்ன பார்க்கிறிங்க பத்து தரம் சொல்லி நான் ஆரம்பித்து விட்டேன் கொண்டாட்டத்தை நீங்களும் கொண்டாடுங்கள். செலவில்லாமல் ஒரு அமைதிக்கான கொண்டாட்டம். பத்துப் பேருக்காவது ஹலோ சொல்லுங்கள்......

ஹலோ தினம் என்றவுடன் நினைவு வந்த பாடல்
நீ ஹலோ சொல்லவில்லை என்றால் ஒரு கிலோ எடை குறைவேன்........
பார்த்து சொல்லிடுங்க இல்லாட்டில் எடை குறைந்து குறைந்து ஒல்லிப்பிச்சான் ஆகமுதல்.......

ரொம்பநாளாக பதிவிடவில்லை. காரணம் என் பெரியப்பாவின் இழப்பு. இப்போது மீண்டும் வந்துவிட்டேன் இனி கலக்கல் தான். இந்த நேரத்தில் இறந்த செய்தி கேட்டு தொலைபேசி வாயிலாகவும் மூஞ்சிப் புத்தகம் வாயிலாகவும் இதர வழிகளிலும் ஆறுதல் கூறிய நண்பர்கள் நல்லுள்ளங்களுக்கும் என் திடீர் யாழ்ப்பான பயணம் செய்ய வியாபரங்களை தந்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இழப்புகள் இடிந்து போகவல்ல இதயத்திற்கு வாழ்க்கை பாடத்தை படிப்பிக்கவே.
Share:

Monday, November 9, 2009

வந்திக்கு என் பிந்திய வாழ்த்துக்கள்.


நம் பச்சிளம் பாலாகன் தான் இது.

வந்தியத்தேவன் என பதிவுலகில் பிரபலமாக மூத்த பதிவராக பலரால் அறியப்பட்ட என் மாமா(இந்த உறவுக்கு ஆயிரம் அர்த்தம் உண்டு யாரும் தப்பா நினைக்காதிங்க.) இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

லோஷன் அண்ணாவின் நண்பராக என் பிறந்தநாளில் அறிமுகமான நம் பச்சிளம் பாலகன் பிறந்தநாளுக்கு இந்த மருமகன்(மாமாவே பச்சிளம் பாலகன் என்றால் மருமகன் யோசித்து பாருங்க எவ்வளவு பச்சிளம் பாலகன் என்று. யோ வாய்ஸ் இது உங்கள் கவனத்திற்கு.௦) வாழ்த்தாமலா?

வந்துவிட்டேன் என் உளறல்களோடு(மன்னிக்கணும் மாமா வழக்கமா நீங்கள் தான் உளறுவிங்க இன்று நான்.காரணம் இது கவிதை என சொல்ல முடியாதெல்லா.) ஏன் தாமதம் என கேட்கலாம்? பிறந்தநாள் விருந்து கேட்டால் கொடுக்கமாட்டேன் என சொல்லிவிட்டார். அப்புறம் எதற்காக நேரத்தை செலவு செய்து ஒரு பதிவு என ஒதுங்கிய வேளை வரும் வாரம் விருந்தாம்(வர விரும்புபவர்கள் தெரியப்படுத்தலாம் மாமா எஸ்கேப் ஆக முதல்.) அப்பாடா இனி வாழ்த்தாவிட்டால் மனிசன் தரும் விருந்து சமிபாடடையாது.

இதோ என்னால் முடிந்த வாழ்த்து....


பதிவுலகம் வந்தீர்கள் நீங்கள் முந்தி.-இங்கே
பட்டையை கிளப்புகிறீர்கள் வந்தி.

நெல்லியடியில் உதித்தீர்கள்.- ஆனாலும்
பிறரை சொல்லால் அடிக்காமல் புன்முறுவல் உதிர்ப்பீர்கள்.

முதல் சந்திப்போ Futsalல்.-
உங்கள் பதிவுகளோ Fruit சலட்.

அண்ணனாய் என் பிறந்தநாளில் அறிமுகமாகி வாழ்த்தினீர்கள் -இன்று
மாமாவாய் உம் பணி செய்து மருமகனுக்கு வழிகாட்டுகின்றீர்கள்.

பின்னூட்ட பெருமகனே-எங்கள்
பின்னூட்டத்தின் பின்னூட்ட தளபதியே.

திரை உலகில் உங்கள் தலைவர் உலக நாயகன்-என்றும்
பதிவுலகில் நீங்கள் எங்கள் உள்ளூர் நாயகன்.

கோபியரின் கண்ணனே- எங்கள்
பதிவுலகின் பச்சிளம் பாலகனே.

சிரித்தால் நீங்கள் குழந்தை- மீறி
பலம்கொண்டெளுகையில் ஆயிரம் யானை.

புதியவர்களுக்கு வழிகாட்டி-இன்றும்
பழையவர்களுக்கு ஆட்காட்டி.(பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுபவர்.)

அகவைகள் பலபோயும்-உந்தன்
அகத்துக்கு வயதுபோகவில்லை.

பதிவுலகின் தேவனுக்கு விரைவில்- வந்து
சேரட்டும் ஒரு தேவதை.

இளவரசன் நீங்கள் தான்- அந்த
இளவரசி(????) உம்மவர் தான்.

இணையட்டும் இதயம் இரண்டு-இன்றுபோல்
அன்றும் வாழ்த்தும் இந்த இளைய உள்ளம
Share:

Wednesday, November 4, 2009

மீண்டும் இணையும் சிம்பு-நயன்?
ஐயா படத்தில் அறிமுகமான நயனை ஐயகோ என்ன கொடுமை இது என சொல்ல வைத்த படம் வல்லவன். பல்லனாக நுழைந்த சிம்பு மன்மதனாகி பின் வல்லவனாகும் நேரம் நயன் வல்லவளாகி
பல்லனின் பல்லை உடைத்த கதை எல்லோருக்கும் தெரியும். அதன் பின் இரண்டுபேரும் காதல் தோல்வியில் வாட நயனோ பில்லாவில் பிகினியில் வந்து பிஞ்சு நெஞ்சுகளையும் கெடுத்தார். சிம்புவும் ஒருபுறம் தன் வழியில் போனாலும் பெரிய வெற்றிப்படங்கள் இன்றி போய்க்கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் தங்கள் சொந்தக்கதை சோகக்கதையை கெட்டவன் என்னும் பெயரில் தொடங்கிய சிம்பு அதை கெட்டுப்போகவே விட்டுவிட்டார். இடையில் சிம்பு வரலட்சுமி (சரத்குமார் மகள்) பக்கம் சாய(படத்துக்கு கதாநாயகி மட்டுமே) நயனம் பிரபுதேவாவில் சயனம் கொண்டது ஊரரிந்ததே. இப்போது இந்த கூட்டணியிலும் ஒரு சிறு விரிசல் மறுக்கமுடியா உண்மையே.

இந்த நிலையில் மீண்டும் தன் சகலகலாதன்மையை நிரூபிக்க சிம்பு தயாராகிவிடார். வாலிபன் படத்துக்கு கதை திரைக்கதை எழுதி நடிக்கப்போவதே அவரேதான்(வல்லவனிலும் இதே கதை தான்) ஆரம்பத்தில் சரத்தின் மகள் வரலட்சுமியை கதாநாயகியாக கேட்டு ஒப்புதல் வாங்கியபின் என்ன காரணமோ சாக்கு போக்கு சொல்லி பின்வாங்கி விட்டார் நாட்டாமையின் மகள். ஆனால் இப்போது மீண்டும் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் சிம்புவின் பார்வை மீண்டும் நயனின் பக்கம் திரும்பி இருக்கிறது.

என்னடா ஆச்சரியம்? நம்பமுடியலையே, உங்களை கிள்ளிப் பார்க்கிறிங்களா? என்ன செய்வது சில உண்மைகள் நம்பமுடியாதுதானே. வாலிபனில் வாலிபி (சும்மா ஒரு டைமிங்க்கு தான் தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும் ) நாயனாக இருந்தால் நல்லம் என கெட்டவன் (சாரி வாலிபன் ) யோசிக்க ஆரம்பித்து விட்டார். அண்மையில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் அருகருகே இருந்தும் எதுவும் பேசிக் கொள்ளாத இந்த ஜோடி அதன் பின் தொலைபேசியில் தங்கள் அன்பை பொழிந்திருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் இனி அவனுடன் தொடர்பில்லை என சீறிய நயனே சிம்புவுக்கு அழைப்பெடுத்து வம்பில் மாட்டி இருக்கின்றார். பத்து நிமிடம் உரையாடிய இந்த ஜோடிக்கு பழைய தீ பற்றியதோ தெரியவில்லை வாலிபனில் நடிக்கிறாயா என கேட்க நயனும் யோசித்து செல்வதாக சொல்லி இருக்கின்றாராம். அப்போ பிரபுதேவா???? அந்த யோசித்து என்பது பிரபுதேவாவிடம் கேட்டா அல்லது அவரை கட்டி விட்டா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.
Share:

Monday, November 2, 2009

ஷேவாக், கம்பீர் இல்லாமல் களமிறங்குமா இந்தியா?
இறுதியாக இடம்பெற்ற போட்டியில் அமோகமாக ஆடி இந்தியா வெற்றி பெற்றது. இந்தநிலையில் ஷேவாக் துடுப்பெடுத்தாடும் போது ஏற்ப்பட்ட காயம், மற்றும் கம்பீருக்கு களத்தடுப்பில் ஈடுபடும் போது ஏற்ப்பட்ட அடி போன்ற காரணங்களால் இன்று இடம்பெறும் போட்டியில் இவர்கள் ஆடுவது கேள்விக்குறியாகி உள்ளது.

ஷேவாக் கடந்த போட்டியில் பிரகாசிக்காவிட்டாலும் ஆரம்பத்தில் அதிரடியை தொடரக்கூடியவர். சச்சினும் ஷேவாக்கும் களத்தில் இருந்தால் எதிரணிக்கு கலக்கும் அப்படி இருக்கையில் ஷேவாக் இல்லாதது இந்தியாவிற்கு பேரிழப்பு. கடந்த காலங்களில் ஷேவாக் இல்லாமல் இந்தியா தலை நிமிர காரணமாக இருந்த கம்பீரும் இப்போது இப்போது இல்லை என்றால் ஆரம்பமும் இல்லை இடையும் இல்லாமல் தடுமாரப்போகின்றது இந்தியா.

கடந்த போட்டிகளில் சச்சின் பிரகாசிக்காத நிலையில் இப்போது ஆரம்ப துடுப்பாட்டம் பலம் குன்றி காணப்படுகின்றது. இன்று சச்சினுடன் தொடக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் மீள அண்மைக்காலமாக சர்வதேச போட்டிகளில் சொதப்பிய தினேஷ் கார்த்திக் மீள அழைக்கப்பட்டுள்ளார்.

திராவிட், ஷேவாக்,கம்பீர், ரோஹித் ஷர்மா இல்லாத நிலையில் இவரை விட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யாரும் இல்லை. தோணியோ அல்லது யுவ்ராஜோ இன்று தொடக்க வீரராக வந்தாலும் அது மத்திய வரிசையை பலமிழக்க வைக்கும். எனவே கார்த்திக்-சச்சின் இணையே இன்று ஆரம்ப இணையாக் இறங்க வாய்ப்புண்டு. அவுஸ்திரேலிய அணி காயங்களால் தவிக்கும் இந்த நேரம் இரு ஜாம்பவான் அணிகள் மோதும் இந்த தொடரில் முழுமையான அணிவிளையாட முடியாமல் போனது ரசிகர்களாகிய எங்களுக்கு கவலையே.

டிஸ்கி: எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அச்சுவலை சந்திப்பு இன்று மாலை மூன்று மணிக்கு இருக்கிறம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தசந்திப்பில் நேரடியாக கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு நம் அந்நியன்(அவர் தலை முடி ஸ்டைல் அப்படிதான்) பிரியமுடன்,மதுவதனன் மௌ.(Aka) கௌபாய்மது (ஒன்றும் விடாமல் சரியா போட்டிட்டன் மது,

கடந்த முறை போன்று இம்முறையும் நேரடி ஒளி பரப்பு செய்து அசத்த தயாராகிவிட்டார். நிகழ்வு நடைபெறும் நேரம் உங்கள் பயன் மிக்க கருத்துகளை நீங்கள் அந்த ஒளிபரப்பில் chatting மூலம் பகிரும் வாய்ப்பும் உண்டு. மதுவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.(என்ன தான் கடந்தமுறை திட்டு வாங்கினாலும் மனிதர் சளைக்கவில்லை.) மீண்டும் வந்துவிட்டார். மாலை சந்திப்போம் நேரடியாகவும் நேரடி ஒளிபரப்பிலும்.

நேரடி ஒளி பரப்பை நீங்கள் பார்க்க மதுவின் ஏற்ப்பாட்டில் அமைந்த களம்.....

Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox