உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Monday, August 31, 2009

Super Singers உடன் ஒரு சூப்பர் பயணம்-பகுதி-3




நாங்கள் வாகனத்தில் விமான நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த நேரம் எங்களை நக்கல் செய்த வண்ணம் வைதேகி அக்காவும் பூஜா அக்காவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தினேஷின் வேறொரு தொலைபேசியிலிருந்து நாங்கள் கலையகத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி குரலை மாற்றி அவர்களை கலாய்த்தோம். அதன் பின் உண்மையை சொல்லி விட்டு நாங்கள் அழைப்பை துண்டித்தவுடன் மீண்டும் அவர்கள் ராச்சியம் ஆரம்பமானது. இப்படியே நிகழ்ச்சியை கேட்டவண்ணம் பயணித்த எங்களுக்கு குமார் அண்ணா தாக சாந்தி செய்து வைத்தார். அப்போதே எனக்கு அல்சர் வருத்தம் வாரத்தொடங்கியதால் நான் அடக்கி வாசித்தேன். அதன் பின் விமான நிலையத்தை நோக்கிய பயணம் விரைவானது. 12.15க்கு விமானம் தரை இறங்கும் என்ற தகவலுடன் அதற்கு முன் சென்றடைய வேண்டுமே என்ற அங்கலாய்ப்பில் பயணித்த எங்களுக்கு அதிசயம் தான். காரணம் விமான நிலையம் போகும் வரை எந்த சோதனை சாவடியிலும் எங்களை மறிக்கவில்லை.(நானும் தினேஷும் ஒருவரை ஒருவர் கிள்ளிப்பார்த்துக்கொண்டோம் இது உண்மைதானா என்று.)



ரேனு.

ஒருவாறு விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகில் எங்களுக்கான முதல் சோதனை. குமார் அண்ணா எங்கள் வருகையின் காரணத்தை சொன்னார். அதன் பின் சாரதி ஆசனத்தில் இருந்த அந்த சிறுவனின் தந்தையிடம் சில பத்திரங்களை வாங்கிப்பார்த்த பின். இத்தனை பேர் எதற்கு வந்தீர்கள் என்ற கேள்வி. காரணத்தை குமார் அண்ணா சொன்னதுடன். என்னையும் தினேசையும் ஊடகத்தை சேர்ந்தவர்கள் என அந்த இராணுவ சிப்பாயிடம் சொல்ல எங்கள் எந்த அடையாள அட்டையும் கூட கேட்காமல் எல்லோரும் உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.



வெற்றிக் களிப்பில் ஷெரிப்


எங்கள் வாகனம் உள்ளே கம்பீரமாக சென்றது. தரிப்பிடத்தில் வாகனத்தை விட்டு விட்டு உள்ளே சென்றோம். காத்திருக்கும் மண்டபத்தில் காத்திருக்க வேண்டிய நிலை. காரணம் நேரத்துக்கு சென்றுவிட்டோமே. அதன் பின் எங்கள் அலுவலகத்தை சேர்ந்த தியாகேஷ் அண்ணா எங்களோடு இணைவதாக சொல்லி இருந்தார். காத்திருந்த நேரத்தை பிரயோசனம் செய்ய வேண்டுமே. எங்கள் கண்கள் ஆங்காங்கே அலை பாய்ந்தன. அந்த அலைபாய்தலில் அங்கங்கே நின்ற சில ஷாலினிகள் தட்டுப்பட்டனர். நாங்களும் மாதவனாகிவிட நேரமும் பறக்கத்தொடங்கியது. இடை இடையே கலையகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டோம்.



அஜீஸ்


இலங்கை மக்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூப்பர் சிங்கர்ஸ்,கலக்கல் மன்னன் சிவகார்த்திகேயன், அடுத்த பிரபுதேவா ஷெரிப் ஆகியோர் ஒரு கலை நிகழ்வுக்காக முதல் முதல் இலங்கை மண்ணில் கால்பதிக்கப்போகும் அந்த நேரம் நிமிடங்கள் செக்கன்களாக மாறி எதிர்பார்ப்பை எகிறவைத்தது. அந்த இனிய எதிர்பார்ப்பு அடுத்த பகுதியில் ............
Share:

Friday, August 28, 2009

50ஓவர் கிரிக்கெட் போட்டியை அழிக்கும் இங்கிலாந்து.

கிரிக்கெட்டின் வடிவம் மாறி எங்கேயோ போக ஆரம்பித்து விட்டது. பரபரப்பான அனல் பறக்கும் ஆட்டங்களால் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு தான் ஆபத்து இருந்து வந்தது. இப்போது அவை 50 ஓவர் போட்டிகளின் அஸ்தமனத்துக்கும் காரணமாக அமைந்து விட்டதுவோ என எண்ணத்தோன்றுகின்றது.
2011ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கிண்ண தொடரோடு ஓவர் போட்டிகளை தொடர்ந்து விளையாடுவதா அல்லது வேண்டாமா என்பதை ஐ.சி.சி முடிவு செய்யும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறி உள்ளது. அதுமட்டுமில்லாமல் தனது 2011ஆம் ஆண்டு கிரிக்கெட் சீசனில் இருந்து 50 ஓவர் போட்டிகளை விலக்கியும் இருக்கிறது.
40 ஓவர்கள் கொண்ட புரோ 40- போட்டிகள் மற்றும் நான்கு நாள் போட்டிகள் மட்டுமே இப்போது இங்கிலாந்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அது எப்படி இருப்பினும் இங்கிலாந்து அணி ஓவர் போட்டிகளில் சர்வதேச அளவில் பங்கு பற்றும் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
எப்படி இருப்பினும் கிரிக்கெட்டின் மூன்று பிரதான வகைகளும் அழியாமல் கிரிக்கெட்டை மேம்படுத்துவதே ஆரோக்கியமாக இருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா.?
Share:

இராணுவப்படைகளில் ரோபோ.

ஒவ்வொரு நாட்டுக்கும் அந்த நாட்டின் ராணுவம் தான் முதுகெலும்பாக இருக்கின்றது. ஒரு நாட்டில் பாதுகாப்பின் பெரும் பங்கை கட்டிக்காப்பது இராணுவத்தினர் தான். அப்படி இருக்கும் போது இன்று உலகின் பல இடங்களில் பல வகையான போர்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த போர்களில் எத்தனையோ உயிர் பலிகள் இவை எல்லாவற்றுக்கும் முடிவுகட்டும் நோக்கில் புதிதாக வரப்போபவை தான் இராணுவ ரோபோக்கள்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் தான் இப்போது இந்த அரிய முயற்சியில் இறங்கி உள்ளது. களத்துக்கு நேரடியாக மனித இராணுவ வீரர்களை ஆப்பாது ரோபோக்களை அனுப்பி விட்டு ரிமோட் மூலம் ஓரிடத்தில் இருந்தவண்ணம் அவற்றை கட்டுப்படுத்தி போர் செய்ய வைக்கும் புதிய முயற்சியில் துணிந்து இறங்கி இருக்கின்றார்கள். அவுஸ்திரேலிய அறிவியல் தொழில் நுட்ப அமைப்பு இந்த விடயத்துக்கு தன அமோக ஆதரவை வழங்கி இருக்கின்றது.
இந்த முயற்சியில் ஈடுபடும் விதமாக பலரை தூண்ட ஒரு போட்டியையும் ஒழுங்கு செய்துள்ளது. அதில் வெற்றி பெறுபவருக்கு பத்து லட்சம் டாலர் பணத்தொகை வழங்கப்படவுள்ளது. அடுத்தவருடம் பிரிச்பெர்னில் நடைபெற இருக்கும் மாநாட்டுக்கு முன் உங்கள் ஆலோசனைகளை நீங்கள் அனுப்பி வைத்தால் நீங்களும் வெற்றியாளராக மாறலாம். ஆனால் உங்கள் ஆலோசனை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படாது. தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு இராணுவ மையத்தில் வைத்து உங்கள் ஆலோசனையை நீங்களே செயற்ப்படுத்திக்காட்ட வேண்டும். அங்கே இருக்கும் குழுவினர் உங்களை பரீட்சித்து சிறந்த ஐந்து ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள இருக்கின்றனராம்.

மொத்தத்தில் போர் ஓயனும் என்னும் நிலைப்பாடு தீராது போல் இருக்கின்றது. இதுவரை காலமும் தனக்குள்ளேயே சண்டை இடு வந்த மனித இனம் இனிவரும் காலங்களில் இயந்திரத்தை வைத்தே தன்னை அளிக்கப்போகின்றது. ஒருவேளை ரோபோக்கள் அதிசக்தி வந்து தாமாகவே இயங்கும் நிலைக்கு வந்து மனிதரை அளித்தாலும் ஆச்சரியமில்லை.
Share:

தலைமைப்பதவியை துறந்தார் பாண்டிங்.

அவுஸ்திரேலிய அணியின் தலைவராக வீறு நடை போட்டு நெஞ்சை நிமித்தி கடந்த சில மாதங்களாக வலம் வந்த ரிக்கி பாண்டிங் இன்று வெறும் நடைப்பிணமாக வாழ்கின்றார்.

இருபத்தோராவது வயதில் கிரிக்கெட்டில் தடம் பதித்த பாண்டிங் தன் அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே 96 ஓட்டங்களை பெற்று தன் வரவை அவர் நிரூபித்துக் காட்டினார். அதன் பின்னர் அவர் திறமை இன்றுவரை மங்கவில்லை என்பது உண்மையே. அதேநேரம் தன் முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெறும் ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று அதிர்ச்சியுடன் ஆரம்பித்தார் தன் பயணத்தை.ஆனால் போட்டிகளில் அதிரடியாக ஓட்டங்களை பெற்று சாதனையோடு ஆரம்பித்தார்
. பாண்டிங் இப்போது மற்ற அணி வீரர்களையும் அணிகளையும் வாட்டும் பழக்கம் அவரின் ஆரம்பகாலத்தின் பழக்க வழக்கத்தின் மூலமே நாங்கள் அறியக்கூடியதாக இருக்கும். தன் ஆரம்பகாலத்தில் அடிக்கடி மது அருந்திவிட்டு பிரச்சனை கொடுப்பதென எப்படியெல்லாம் பெயரை கெடுக்க முடியுமோ அவ்வளவிற்கு கெடுத்துக்கொண்டார். அணிக்குள் இருக்கவே தகுதி அற்றவர் என எல்லோரும் தூற்றிய நேரம் ஓரளவிற்கு தன்னை மாற்ற ஆரம்பித்த நேரமே 2002ஆம் ஆண்டு ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அப்படி இருப்பினும் தன் வழக்கமான குழப்படிகளை குறைத்துக்கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்த ஆரம்பித்தார்.அதன் பிரதிபலனாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அணியை வழி நடத்தும் பொறுப்பு பொண்டிங்கிடம் வழங்கப்பட்டது. ஸ்டீவ் வாவின் தலைமையில் வெற்றிபெறும் வழியை தெரிந்து கொண்ட அணி, பொண்டிங்கின் தலைமையில் வெற்றிக் கோட்டைகளை கட்டத் தொடங்கியது.

பாண்டிங்க்கு தொட்டதெல்லாம் துலங்க தொடங்கியது. வெற்றி மேல் வெற்றி குவிந்தது.வெற்றிக்கே பிறந்தவர் என்னும் மமதையில் பொண்டிங்கும் அவர் சகாக்களும் ஆடிய ஆட்டம் இன்னும் கண் முன் நிற்கிறது. ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதற்கேற்ப இந்தியாவின் கங்குலி அவுஸ்திரேலியர்களை அடக்கும் வேலையை அவர்கள் பாணியிலேயே ஆரம்பித்து வைத்தார். அதன் பின் வந்த தோனியின் தலைமையிலான இளம்படை, சாட்டை அடியுடன் இடியைக்கொடுக்க தென் ஆபிரிக்க இலங்கை என எல்லா அணிகளும் பொண்டிங்கின் சகாக்களை வறுத்தெடுக்க பழகிக்கொண்டனர்.

அவுஸ்திரேலியாவில் வைத்தே அவர்களை மண்கவ்வ வைத்து இந்திய அணி அவர்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டிவைத்து. அதன் பின்னும் அடிபட்ட புலி போல எழுவதும் வீழ்வதுமாக பாண்டிங் குழுவினர் தங்கள் வழக்கமான விளையாட்டையும் விளையாடி வந்தனர். இந்த நேரம் பார்த்து நீண்ட நாட்களாக அணியின் முதுகெலும்பாய் இருந்த பலர் ஓய்வு பெற அணியும் ஆட்டம் காண தொடங்கியது. இம்முறையும் ஆஷசில் வெற்றி கிடைக்கும் அன்ற இறுமாப்புடன் இங்கிலாந்தில் காலடி வைத்த பாண்டிங் குழுவினருக்கு இறுதியில் ஆப்படித்தது அனுப்பிவிட்டது இங்கிலாந்து அணி. எத்தனை முறை தான் அடிக்க அடிக்க வாங்குவது என முடிவெடுத்து விட்டாரோ என்னவோ இந்த தோல்வியோடு ஒருநாள் மற்றும் போட்டிகளின் தலைமைப்பொறுப்பை துறந்து டெஸ்டில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக சொல்லி இருக்கின்றார்.
இதுவரை நல்ல தலைவராக வழி நடத்தியவர் இறுமாப்பு காரணமாகவே இறுதிக்காலங்களில் தோல்வியை சந்திக்கிறார். அந்த இறுமாப்பை தவிர்த்து விளையாட்டை விளையாட்டாய் விளையாடி இருக்கலாம். யாருக்கு பயந்தாரோ இப்போது தலைமை என்னும் கிரீடத்தை இழக்க துணிந்து விட்டார். என்ன தான் பாண்டிங் மற்றவர்களை ஒரு பொருட்டாக மதிக்காவிட்டாலும் அவர் ஒரு சிறந்த தலைவரே. அப்படிப்பட்ட ஒருவரை இழப்பது அவுஸ்திரேலியாவிற்கு மட்டுமல்ல முழு கிரிக்கெட் உலகிற்கும் இழப்பே.
Share:

Thursday, August 27, 2009

ஸ்ரேயாவை களங்கப்படுத்தினாரா விக்ரம்?

பதிவர்கள் என்பவர்கள் மிகப்பெரிய சக்தியாக உருவாகி விட்டார்கள். அவர்கள் நினைத்தால் ஒரு மாற்றத்தை கொண்டுவரலாம் என்பதுக்கு அண்மையில் கந்தசாமியை நொந்தசாமியாகவும் நொண்டிச்சாமியாகவும் சூப்பர் சீரோவாகவும் வர்ணித்து எழுதி அந்த படத்தை தாறுமாறாக கிழித்ததே ஒரு நல்ல உதாரணம்.

என் விடயம் இதுதான். ஊடகம் என்பது மிக முக்கியமான ஒரு ஆயுதம். பதிவர்கள் நாங்களும் அந்த வகையில் பொறுப்பானவர்களே. எண்கள் ஒருவருக்கு ஒருவரை பிடிக்கும் ஒருவரை பிடிக்காமல் போகும். ஆனால் எனக்கு தெரிந்தவரை பதிவர்கள் எல்லோருக்கும் பிடிக்காத இரண்டு விடயங்கள் ஒன்று இளைய தளபதி விஜய் இன்னொன்று கந்தசாமி திரைப்படம். இந்த இரண்டிலும் பதிவர்களுக்கு என்ன பிரச்சனையோ எனக்கு தெரியவில்லை.(அடப்பாவி எங்களுக்கும் தான் தெரியவில்லை என நீங்கள் முனு முணுப்பது எனக்கு கேட்கின்றது.)

வில்லு திரைப்படம் வந்தபோது வரிந்து கட்டிக்கொண்டு எல்லோரும் விஜய் டி.வி மதன் போல விமர்சம் எழுதினார்கள். படம் படுத்துக்கொண்டது. என் இதற்கு முன் வந்த விஜய் படம் பர்க்காதவர்களா நீங்கள்? விஜய் படம் என்றால் இதுதான். நாலு சண்டை, ஆறு பாட்டு, நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த மசாலா தான் என கடந்த பத்துவருடமாக தெரியும். அப்படி விஜய் கொடுத்த கில்லி,திருப்பாச்சி,சிவகாசி எல்லாவற்றையும் வெற்றி ஆக்கிய ரசிக பதிவர்கள் இப்போது மட்டும் விஜய் கெட்டப் மாற்றவில்லை நடிக்கதெரியாது என்பது எந்த வகையில் நியாயம்?.


விஜய் விஜயாக வருவது தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்கின்றது. அதேநேரம் தொடர்ந்து அவர் அப்படி நடித்த படங்கள் தானே வெற்றியும் பெற்றிருக்கின்றன. நீ என்ன விஜயின் கொள்கை பரப்புச் செயலாளரா என கேட்கலாம்.விஜய் மட்டுமல்ல விக்ரம் பற்றியும் பேசத்தான் போகின்றேன். எனக்கு தெரிந்த ஆரம்பத்தில் இருந்து வருகின்றேன். குருவி,வில்லு படங்களுக்கு பிறகு விஜய் என்பவர் ஒரு நடிக்கத்தெரியாதவர், என்னும் தோற்றப்பாடு மட்டுமில்லாமல் எள்ளிநகையாடும் ஒரு பொருளாக பதிவுலகில் பார்க்கப்படுகின்றார். விஜய் ரசிகர்கள் கூட எத்தனையோ பேர் இப்போது தங்கள் பதிவு ஹிட் ஆக வேண்டுமென விஜயை தாழ்த்தி பதிவிடுகின்றனர். பலரின் கேட்ட பழக்கத்தில் ஒன்று ஒரு பதிவர் ஒன்றை கெட்டதென்றால் அது எல்லோருக்கும் கெட்டது இல்லாவிட்டால் நல்லதென்றுவிட்டால் அது நல்லதுதான். ஒருவேளை கந்தசாமியை பற்றி நான் முதலில் பதிவிட்டிருந்தால் எல்லோரும் கந்தசாமியை போற்றிப்புகழ்ந்திருப்பீர்கள்.

இவ்வளவு சொல்கின்றாயே உனக்கு என்ன விஜய் மச்சானா அல்லது தாணு காசு கொடுத்தாரா என கேட்கலாம் கேட்டும் இருக்கின்றனர் சிலர். அவர்களிடம் கேட்கின்றேன் ஒருவரை தாழ்த்தி எழுதுவதால் உங்களுக்கு என்ன பயன். எழுத எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால் இப்படியான வேலைகள் செய்யும் போது ஹிட், மற்றவர் இப்படி சொல்லிவிட்டாரே என எண்ணி செயற்படாதீர்கள்.

அடுத்து கந்தசாமி.

எவ்வளவுகால உழைப்பு. பிரமாண்டம். ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் செலவழித்து படமெடுப்பார். அதை எல்லாம் யோசிப்பதுமில்லை சிலர் படத்தை பார்ப்பதுமில்லை. பார்த்து புளித்து போனதுபோல இன்னொரு பதிவரின் பதிவை பார்த்து விமர்சனம் போட்டு விடுவார். உண்மையில் சில பதிவர்கள் தங்கள் நெஞ்சை தொட்டு சொல்லட்டும் மற்ற பதிவுகளை பார்த்து விட்டு அதேபோல தாங்கள் எழுதவில்லை என்று. இதில் என்ன கொடுமை என்றால் சிலர் வசன நடையை கூட மாற்றவில்லை. படம் வந்து ஒருவாரம் தாண்ட முதலே ஒரு படம் தோல்வி என சொல்ல நீங்கள் என்ன திரை உலக மேதாவிகளா?(நான் மேதாவி இல்லைங்கோ?)

ஷங்கரை பின்பற்றினார் என்கிறீர்கள் சுசி. ஏற்றுக்கொள்கிறேன். அதில் இரண்டு விடயம் இருக்கின்றது. சிவாஜி என்னும் அற்புத காவியம்(உங்கள் மொழியில்) தயாரான காலத்திலே தான் உங்கள் நொந்தசாமியும் கருப்பெற்றான். கொஞ்சம் தாமதமாக வந்துவிட்டான். சிவாஜி,ரமணாவின் நகல் என்னும் நீங்கள் தானே அன்று இதேபோல வந்த அந்தப்படங்களை வெற்றிபெற வைத்தீர்கள். இன்று அதேபோல வரும் கந்தசாமி சரியில்லையாம் என்ன நியாயம் இது. ஒருவேளை கந்தசாமி முதல் வந்து சிவாஜி பிந்தி வந்திருந்தால் சிவாஜியையும் இப்படி நாறடித்திருப்பீர்களா?

சிலரின் பதிவில் சுசி,இன்னொரு ஷங்கர் ஆக முயல்கின்றார் என போடப்பட்டிருந்தது. ஷங்கரை இன்று நல்ல இயக்குனர். பிரமாண்ட இயக்குனர் என கொண்டாடும் நீங்கள் அதேபோல பிரமாண்டத்தை தரும் இன்னொருவரை ஏன் ஏற்கமறுக்கின்றீர்கள்? பருத்தி வீரனை வெற்றி ஆக்கிய நீங்கள் பொக்கிஷத்தை சுருட்டினீர்கள். ஆனால் இதே பாணியில் தந்த ஆட்டோகிராப்பை வெல்ல வைத்தீர்கள்.கந்தசாமி விக்ரமின் காசி,சேது போன்ற படம் என யாரும் உங்களை சொல்லி ஏமாற்றினார்களா? முழுக்க முழுக்க வணிக ரீதியான படம் இது. அங்கே எங்களால் செய்ய முடியாத செய்ய நினைக்கும் விடயங்கள் தான் அதிகம் வரும். அதை ஏற்கும் பக்குவம் எம்மில் சிலரிடம்
இல்லையே என்பதே என் கருத்து.


எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. நீங்கள் என்ன மாதிரி படங்களை ரசிக்கின்றீர்கள்? வணிக ரீதியாக எடுப்பதும் தப்பு யதார்த்தம் தந்தாலும் தப்பு என்றால் உங்கள் ரசனை என்ன? எப்படி படம் எடுத்தால் அத்தனை பதிவரும் ஆகா ஓகோ என புகழ்வீர்கள்.? விமர்சனங்கள் எழுதி பழக்கப்பட்ட உங்கள் கைகளால் இன்றாவது எந்த மாதிரி படம் எப்படி உங்களுக்கு வேண்டுமென கருத்து சொல்லிவிட்டு போங்கள். இல்லையேல் வழக்கம் போல என்னை கும்மி விட்டு போங்கள்.

படங்கள் அனைத்தும் சூடனர்வர்களை குளிர்விக்கவும் சூடாகாவிட்டால் இன்னும் சூடாகவும்.

அடடா எல்லாம் முடிந்ததே தலைப்புக்கு பதிலா காணமே எனப்பார்க்கிறிங்களா? கந்தசாமி பாருங்க ஸ்ரேயா விக்ரமின் அலுவலகத்தில் வந்து செய்யும் சேட்டையின் விளைவு தான் தலைப்பு. அப்பாடா எனக்கு ஒரு ஸ்ரேயா சிக்கிட்டாங்க.
Share:

Tuesday, August 25, 2009

இலங்கை பதிவர் சந்திப்பில் என்ன நடந்தது?-திடுக்கிடும் உண்மைகள்.

பதிவர் சந்திப்பே ஒருவாறு நடந்து முடிந்துவிட்டது. ஆனால் என்னால் இன்று வரை அங்கே நடந்த உண்மைகளை போட்டு உடைக்கமுடியாமல் போய்விட்டது வருத்தமே.காரணம் சந்திப்பு நடந்த அன்று மாலையே எனக்கு வேலை ஆரம்பமாகி இரவு பன்னிரண்டு வரை அதுதொடர, நேற்று வீடு மாற்றம்,இன்று போலீஸ் பதிவுகள் என எல்லாம் முடித்து விட்டு வந்துதான் இப்போது உண்மைகளை சொல்லப்போகின்றேன். யாராவது ஆரம்பிக்கணும் என்ற ஒன்றுக்காக நான்கு சிங்கங்கள்(வந்தி அண்ணா அப்படித்தான் சொன்னார்) ஒன்றாகிய இடம் ஒன்றான விபரங்கள் அடங்கிய பதிவு மிக விரைவில் வந்தி அண்ணாவினால்அல்லது லோஷன் அண்ணாவினால்
பதியப்படும். அப்போது இன்னும் பல உண்மைகள் வெளிவரும்.

புல்லட்டின் கைவண்ணம்.

அந்த நால்வரும் நாங்கள் தொடக்கி வைப்போம் என துணிந்து எடுத்த முடிவினால் கடந்த அன்று இலங்கை பதிவர்களின் இனிய முதலாவது ஒன்று கூடல் நிகழ்வு ஆரம்பமானது. நல்லதோ கெட்டதோ ஆரம்பித்து வைப்பது என்பது எல்லாராலும் முடியாது. ஆனால் அதை ஆரம்பித்து வைத்தவர்களுக்கு நன்றிகள். காலை எட்டு மணிக்கு என்னையும் வர சொல்லிவிட்டார்கள். தொகுத்து வழங்கும் விடயம் தொடர்பாக என்னுடன் பேச. நானும் எட்டு பத்தளவில் வர அங்கே இருந்தது ஆதிரை மட்டுமே. அதன் பின் ஒரு உலக மகா காரியம் செய்ய நான் மீண்டும் வீடு சென்று வர ஓரளவிற்கு பலர் வந்திருந்தனர். ஒன்பது மணி ஆகியதும் தொடங்கலாமென்று பார்த்தால் ஒரு சில இருக்கைகள் காலியாக இருந்தன. தொடர்ச்சியாக வந்த பதிவர்களின் வருகையை பார்த்து இன்னும் சற்று நேரத்தில் அதுவும் நிரம்பிவிடும் என காத்திருக்க அந்த நம்பிக்கையும் வீண்போகவில்லை.

அறிவிப்பில் நான்.

9 .15 அளவில் நிகழ்ச்சியை தொகுக்க ஆரம்பித்தேன்.(வானொலியிலும் இவன் தொல்லை இங்கேயுமா என எத்ததனை பேர் திட்டினார்களோ? வானொலி அறிவிப்பில் நாலு சுவருக்குள் யாரும் இருக்கமாட்டார் இங்கே எத்தனை பேர்.) புல்லட்டின் அறிமுக உரை எல்லாவற்றுக்கும் அச்சாரம் போட்டது. சிரிப்பு வெடி வரவைத்தது புல்லட்டின் Gun(அதுதாங்க வாய்).

பேர கேட்டாலே அதிருதெல்ல. புல்லட்

அதன் பின்னர் bloggerன் பத்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக புல்லட்டின் யோசனையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.கடலேறி ஆதிரையின் விளக்க உரையுடன் நிகழ்விற்கு வந்த நல்லுள்ளங்களில் எழுந்தமான அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டவர்கள் மெழுகுதிரி ஏற்றிவைக்க எழில் அண்ணா உட்பட்ட குழுவினர் கேக் வெட்டி சிறப்பித்தனர்.(கடைசிவரை கேக் கிடைக்கலையே.) சுபானுவின் சட்டம்

இந்த சந்திப்பின் மூலம் அறிமுகமான சுபானுவின் வலைப்பதிவும் சட்டமும் சட்டப்படி இருந்தது. சிலருக்கு இவை தெரிந்தாலும் வந்திருந்த பலருக்கு உதவியாக இருந்தது. ஊஞ்சலில் ஆடுபவர் இங்கே பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். திரட்டிகள் பற்றி விளக்க வந்த மருதமூரான் தனது யாழ்தேவியை மட்டும் முன் நிலை படுத்தியது உறுத்தலாக இருந்தது. பரந்து பட்டு அவரின் பேச்சு இருந்திருந்தால் கலந்துரையாடலில் அவ்வளவு கேள்விக்கணைகளை அவர் சந்தித்திருக்க முடியாமல் போய் இருக்கும் என்பது என் கருத்து. அதே நேரம் யாழ் தேவி என்ற பெயர் சர்ச்சைக்குரியதாக பேசப்பட்டது.

யாழ் தேவியின் சொந்தக்காரர்.

யாழ் தேவி என்னும் பெயர் சூட்டும் உரிமை அதை நடத்துபவர்களுக்கே உரியது. வீணாக நாங்களே எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி பதிவர்களை ஊக்குவிக்கும் திரட்டிகளை அழித்துவிடாமல் இருப்பதே சிறந்தது. சிலர் சொல்வது போல யாழ்தேவியில்(திரட்டியைதான் சொல்கின்றேன்) பிரச்சனைகள் இருந்தால் அதை கவனத்தில் கொள்வது திரட்டியின் எதிர்காலத்துக்கு நல்லது.

கோபி,மது நேரடி ஒலி,ஒளிபரப்பில்.

கௌ போய் மதுவதனன் முயற்சியில் யாழில் இருந்து வந்த ஊரோடி பகியும் இணைந்து நிகழ்வை நேரடி ஒலி ஒளி பரப்புச் செய்தமைக்கு என் சார்பாக நன்றிகள்.இதன் மூலம் நேரடியாக வர முடியாதவர்கள் கூட அங்கே இருந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். எல்லோருக்கும் நன்றி நன்றி நன்றி. தொடர்ந்து சேரன் கிரிஷின் தொழில்நுட்ப விளக்க உரை மிகப்பிரியோசனமாக இருந்தது. என்னைப்போன்ற வளர்ந்து வரும் பதிவர்களுக்கு இது நிச்சயம் மிகப்பெரிய அறிவை கொடுத்திருக்கும். வந்த பதிவர்கள் யாரென தெரியாமலே கூட்டம் முடிந்து விடுமோ என யாரும் குறைப்பட்டு கொள்ளாமல் இருக்க பதிவர் அறிமுகம் இடம்பெற்றது. இளம் பதிவர்.

பத்துவயது சிறுவன் முதல் பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் வரை தங்களை அறிமுகம் செய்த போது அடடா அவனா நீ என்னும் வடிவேல் வசனம் தான் எனக்குள். காரணம் எழுத்தால் சாதித்துக்கொண்டிருக்கும் அந்த பதிவர்களை நேரே பார்க்கும் போது என்னால் என்னையே நம்பமுடியவில்லை.சில பெண் பதிவர்களும் கலந்து கொண்டது நிகழ்வின் முழுமைத்தன்மையை பறைசாற்றியது. உணவு நேரம்

இடையில் புல்லட்டின் வடைதானம் பற்றிச் தானம் கோப்பிதானம் என்பவற்றோடு கேக் தானம் இடம்பெற்றது. வயிற்றுப்பசிக்கு உண்டவர்கள் சூடும் சுவாரஸ்யமும் மிக்க கலந்துரையாடலுக்கு செல்ல முன்,சிறப்புரை ஆற்றிய எழில் அண்ணாவின் உரை முத்தாய்ப்பாய் அமைந்தது. அதன் பின்னர் கலந்திரையாடலுக்கு அழைத்து செல்லும் வண்ணம் லோஷன் அண்ணாவின் உரை அமைந்தது. இது பதிவர்களுக்கான படையல் லோஷன் அண்ணாவினால் .

கலந்துரையாடலில் அனானிகள் பிரச்சனை பிரதான இடமாக வரும் நானும் பேசலாம் என்று பார்த்தால் விசைப்பலகை யாழ்தேவி என்னும் சுப்பரின் கொல்லையிலே கலந்துரையாடலின் பல நிமிடங்கள் கரைக்கப்பட்டன. இந்த இடத்தில் சகல பதிவர்களுக்கும் ஒரு வேண்டுகோள் முக்கியமான விடயங்களை பேச வேண்டும் தான் அதற்காக இப்படி ஒரே விடயத்தை நாலு பேர் மாறி மாறி பேசுவதை விட எல்லோரும் வேறு பல நல்ல விடயங்களை பேசி இருக்கலாம் அல்லவா.எனவே அடுத்த சந்திப்பில் இதை கவனத்தில் கொண்டால் நல்லது. கலந்துரையாடல் சூடு பிடிக்கும் போதெல்லாம் புல்லட்டிடம் ஒலிவாங்கியை கொடுத்து விட்டு நான் எஸ்கேப். ஆனால் என்னதான் சூடாக விவாதித்தாலும் எல்லோரும் புன்னகையுடன் நண்பர்களாய் விடைபெற்றது. இந்த பதிவர் சந்திப்பின் வெற்றியே. இடையில் என்னுடன் சேர்ந்து தொகுத்தளிக்க இருந்த அறிவிப்பாளினி டயானா அக்கா தாமதமாக வந்து தன்னை காப்பாற்றி கொண்டார். இல்லாவிட்டால் என்னுடன் சேர்த்து இன்ப அவஸ்தைக்குள் அவரும் தள்ளப்பட்டிருப்பார். பின்னூட்டி பிளந்து கட்டிய வந்தி அண்ணா

பின்னூட்டத்துக்கு பின்னூட்டமிட்டு கலக்கும் வந்தி அண்ணா நிகழ்வின் நிறைவாக நன்றி கலந்த பல உண்மைகளுடன் பின்னூட்டம் வழங்கினார். எந்த வித தீர்மானங்களும் இன்றி அனைத்து பதிவர்களின் விபரங்கள் திரட்டளுடன் இனிய சந்திப்பு இதமாக நிறைவடைந்தது. நான் விட்ட குறை தொட்ட குறைகளை சரிவர செய்து இதைப்பற்றி எழுதிய பதிவர்களின் பதிவுகள்.....


வந்தியத்தேவரின் : நாம் சாதித்துவிட்டோம்

கௌபாயின் இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஒலி வடிவவில் முழுதும்

கடலேறியின் பதிவர் சந்திப்பு - சில புகைப்படங்கள்

கிருத்தியின் இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு

வசந்தனின் இலங்கை பதிவர் சந்திப்புக்கு ஒரு எதிர்ப்பாட்டு

ஈழவனின் பார்வையில் இலங்கை பதிவர் சந்திப்பு

சந்ருவின்,ஒளிபரப்பினூடான பார்வையில்

மயூரேசனின் இலங்கை பதிவர் சந்திப்பு – 2009

சயந்தனின் சந்திப்பு ஒரு இசைப்பாட்டு

விகிபீடியாவில் முதல் சந்திப்பு பற்றி

லோசன் பார்வையில் பதிவர் சந்திப்பு

கோபியின் படங்களுடனான ஒரு பதிவு

சுபானுவின் வரலாற்றின் பக்கங்களில் முதலாவது பதிவர் சந்திப்பு

ஹரனின் பதிவர் சந்திப்பில நயன்தாரா பரபரப்பு

மருதமூரானின் அன்புள்ள காதலுக்கு

அமுதனின் இலங்கை பதிவர் ஒன்றுகூடல்

இலங்கனின் பதிவர் சந்திப்பும் பற்றீசும்

இணையம் இலங்கைத் தரையில் இறங்கி மகிழ்ந்த இனிய பொழுது


நன்றி ம். பட உதவி: ஆதிரை,வந்தி அண்ணா,சுபானு, புல்லெட்,லோஷன் அண்ணா.
Share:

Sunday, August 23, 2009

இலங்கை பதிவர்கள் சந்திப்பு நேரடியாக இணையத்தில்......

இன்று காலை 9மணிதொடக்கம் 12 மணிவரை நடைபெற இருக்கும் பதிவர்கள் சந்திப்பு உங்களுக்காக நேரடி ஒலி,ஒளிபரப்பு பதிவர்களின் தளங்களில். நீங்களும் பாருங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
Share:

Saturday, August 22, 2009

கந்தசாமி-காப்பாற்ற வந்த சாமி.

முக்கிய குறிப்பு: நான் ஒரு விக்ரம் ரசிகன் அல்ல. அதேநேரத்தில் விக்ரமின் அநேக படங்களை பாராட்டாதவன். இங்கே என் மனதில் தோன்றிய நடுநிலை கருத்தை விமர்சனமாக தருகின்றேன்.

நீண்ட காலமாக சாக்கு போக்கு காட்டி வரும் ஆனால் வராது என இழுத்தடித்த கந்தசாமி திரைப்படம் ஒருவாறு வந்து விட்டது. முதல் நாளே முதல் ஷோ பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இருந்தாலும் நேற்று இந்த நேரம் அந்தப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். நான் இந்த படத்தை பார்க்கவேண்டும் என ஆரம்பத்தில் நினைக்கவில்லை. அதேநேரம் என் தொழில் நிமித்தம் வரும் புதுப்படங்களை பார்க்கவேண்டிய கட்டாயமும் உண்டு.(என்ன தான் மொக்கை என்றாலும் பார்த்து தான் தீரணும். என் தலை விதி அது.) இந்தப்படமும் தலை விதி தான் என்ற எண்ணத்தில் திரை அரங்குக்கு போயிருந்தேன்.

படமும் ஆரம்பம். டைட்டிலே சூப்பர் ஹீரோ சீயான் விக்ரம் என போட்டது, விக்ரம் சிறுவர்களுக்கான படம் என்றது, கிரிஷ் படத்தின் தழுவல் என படம் வர முதலே வந்த எறிகணைகளை தாண்டி இந்த படத்துக்கான எதிர்பார்ப்பில் நானும் அடங்கிப்போனேன்.

கண்ணீரை துடைப்பவன் கடவுள் என்று போடும் போதே இந்த படத்தில் லாஜிக் பார்க்க தேவை இல்லை என்பதோடு கடவுளையும் சம்பந்தப்படுத்தி தான் திரைக்கதை செல்லும் என்பது தெரிந்துவிடுகின்றது. அதற்கு ஏற்றால்போல உயிருக்காக போராடும் ஒருவரின் குடும்பத்துக்கு பணம் கொடுத்து வள்ளல் சாமியாக படத்தை தொடங்குகின்றார். அதற்கு பின் மன்சூர் அலிகானுடன் மோத விக்ரம் அறிமுகமாகும் காட்சியே அருமையாக இருக்கின்றது. சேவல் வேடமிட்டு மன்சூரை பந்தாட விக்ரம் செய்யும் சின்ன சின்ன அசைவுகளும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை கட்டிப்போடுகின்றது.

அதற்கு அடுத்த காட்சியில் ஒரு சி.பி.ஐ அதிகாரி வேடம் விக்ரமுக்கு.(இரட்டை வேடமல்ல). கந்தசாமி என்னும் பெயரில் அவர் அறிமுகமாகும் போதே இவர் தான் சேவல் என்பதும் தெரிந்துவிடுகின்றது. அவரின் மேலதிகாரியாக பிரபல தெலுங்கு நடிகர் கிரிஷ்ணா. விக்ரமின் சி.பி.ஐ அதிகாரி வேடத்துக்கு பெரிய பில்ட் அப்புகள் இல்லாதது நல்லது. மனிதர் பார்க்க அழகாக இருக்கின்றார். சின்ன சின்ன அசைவுகளிலும் நடிக்கின்றார். அதேநேரம் கடைமை தவறாத ஒரு நல்ல அதிகாரியாக இருந்து கொண்டே கந்தசாமி சேவல் அவதாரம் எடுத்து மக்களை காப்பாற்றுவதை முதலே சொல்லாமல் இறுதியில் சொல்லி படம் பார்க்கும் ரசிகனை முட்டாளாக்காமல் எப்படி எல்லாம் பறக்கின்றார், பாய்கின்றார் என்பதை வெளிப்படையாக சொல்லி இருப்பதே படத்தின் பெரிய பலம்.

பெண் வேடமிட்டு அசத்துவது வயோதிபர் வேடம் சேவல் கலக்கல் தவிர(இவை திரையில் வரும் நேரம் குறைவு) விக்ரமின் நடிப்புக்கு தீனிபோடும் கதாபாத்திரமில்லை இது. விக்ரமிடம் நடிப்புடன் கூடிய படத்தை எதிர்பார்க்காமல் போனால் நல்ல படமிது. படம் வெளிவர இவ்வளவு தாமதம் ஏன் என்று படம் ஆரம்பித்தவுடனேயே தெரிந்து விடுகின்றது. பிரமாண்டம் என்றால் என்ன என்பதை காட்ட ஷங்கருக்கு அடுத்து இன்னொரு இயக்குனர் வந்திருக்கின்றார். படத்தின் கதை எல்லோரும் சொல்லவதுபோல சிவாஜி+அந்நியன்+சாமுராய்+ரமணா=கந்தசாமி. இதில் கோட்டை விட்ட இயக்குனர் சுசி கணேஷன் திரைக்கதையில் கோட்டை கட்டி இருக்கின்றார். நாங்கள் பார்த்த படங்களின் காட்சிகள், ஆனால் அலுப்பு தட்டவில்லை என்பது என்னவோ உண்மைதான். அதற்கு காரணம் சுசியின் making style என்றால் பொய்யல்ல. அதேநேரம் படம் பெரிதாக இருப்பது ஒரு குறை என்றாலும் திரைக்கதை ஓட்டத்தின் வேகம் அதை சரி செய்து விடுகின்றது.

விக்ரமுக்கு அடுத்து கிருஷ்ணாவின் கதாபாத்திரம் வழக்கமான விஜயகாந்தின் போலீஸ் படங்களில் வந்த மேலாதிகாரி வேடம். ஆனால் அதுவும் இவருக்கு பொருந்தி இருக்கின்றது.(ரகுவரன் நடிக்க இருந்த வேடம் இதுதானோ) பிரபு.(கொஞ்சம் உடம்பை குறையுங்க சார் நீங்கள் திரையில் வந்தால் உங்களுக்கு பின்னுக்கு நிற்பவர்களை தெரியவில்லை.) அண்மையில் பில்லா படத்தில் பார்த்த அதே பிரபு. இங்கும் அதே வேலை வேறு ஒன்றும் இல்லை சொல்ல. ஆனால் அதுவும் ரசிக்கும்படி செய்திருக்கின்றார்.

கதாநாயகி+வில்லி ஸ்ரேயாவிற்கு நடிக்க வாய்ப்பு குறைவென்றாலும் வில்லத்தனமான பாத்திரங்களில் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார். ஆடைக்குறைப்பு(கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணம்) என வந்திருந்தாலும் கவர்ச்சியை தேட வேண்டி இருக்கின்றது. அதேநேரம் பாடல் கட்சிகளில் வளைந்து நெளிந்து இடுப்பை கூட ஆட்டோ ஆட்டென ஆட்டி கலக்கி இருக்கின்றார். பாடல்காட்சிகளில் என்னவோ விக்ரமை விட நடனத்தில் கலக்குவது ஸ்ரேயாதான். அம்மா சுசித்ரா தாயே நீங்கள் பாடுவதுடன் நிறுத்திக்கொள்வது நல்லது. உங்கள் குரலை அதுவும் அழகான நடிகைககளிடம் கேட்க பயமா இருக்கிறது. தந்தைக்காக விக்ரமை காதலிப்பதாக நடிக்க வந்து பின் வழக்கம் போல விக்ரமிடம் சரணடையும் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா என சுருக்கமாக சொன்னாலும் மோதல்,காதல் விறுவிறுப்பு, பழி வாங்கல்கள் என சுவாரஷ்யத்துக்கு பஞ்சமில்லை.

இருவரும் தத்தமது வேலைகளுக்காக காதலை பாவித்து இறுதியில் அந்த ஆயுதத்துக்கே பலியாகிப்போகின்றார்கள்.ஸ்ரேயாவின் அப்பாவாக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி என்ன நடிப்பது. வழக்கமான வில்லன் என்றாலும் சிறப்பாக செய்திருக்கின்றார். போடி போடா என ஒரு திரைப்படம் பற்றி பேச்சு வந்தது நினைவிருக்கலாம் அதற்க்கு விளம்பரத்துக்காகவோ என்னவோ பாடலிலும் வசனத்திலும் பிரபலமான வார்த்தைகளாக இவை. ஆஷிஷ் வித்யாராத்தியின் கையாளாக வரும் வை.ஜி.மகேந்திரன் கதாபாத்திரம் சிறப்பானது.
விவேக்கின் இடத்தில் வந்த வடிவேல் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றார். வயிறு குலுங்க சிரிக்க வைக்க அவர் உத்தரவாதம். அதுவும் பிரபுவிடம் மாட்டி விசாரணையில் அவர் செய்யும் அலப்பறை இன்னொரு குஷி.புதிய சரக்கோடு மீண்டும் சிரிக்க வைக்கும் வடிவேலு அன்மைப்படங்களில் தெரிகின்றார்.இதை விட விக்ரம் தன் நண்பர்களோடு இரந்து ஏன் இந்த மாதிரி காரியத்தில் ஈடுபடுகின்றார்? என்ன நடந்தது என்னும் சொல்லும் சின்ன கிளைமாக்ஸ் வரும் போதே பிரதான வில்லன் யார் என தெரிந்து விடுகின்றது. என்ன ஆட்டமையா அது.தமிழ் நாட்டின் அடையாளம் என்றுகொண்டே ஒரு வாகனத்துக்குள்ளேயே எல்லாவற்றையும் முடிப்பது அமர்க்களம். அதே நேரம் இன்னும் கொஞ்சம் அவருக்கு அழுத்தமாக குடுத்திருக்கலாமோ என தோன்றி இருந்தாலும் அது கூட ஆபத்தாக அமைந்து விடும்.

மேக்ஸ்சிகோ காட்சிகள் படத்தில் கொஞ்சம் நீளம் என்றாலும் அந்த Locationsகளுக்காக பார்க்கலாம். சண்டைக்காட்சிகளில் லாஜிக்கை தவிர்த்து பார்த்தால் ரசிக்க முடிகின்றது. பின்னணி இசை பாடல்கள் என தேவி ஸ்ரீ பிரசாத் தன பங்கை சிறப்பாக செய்திருக்கின்றார். தாணு காசை தண்ணி போல செலவு செய்திருக்கின்றார் என்பது படத்துக்கு பெரிய பலம். அதேநேரம் பிரபுவுடன் மட்டுமன்றி மற்ற முக்கியமான தலைகளுடன் எல்லாம் விக்ரமின் நண்பர்கள் இருந்து அவருக்கு உதவி செய்வது தெரிய வரும் இடங்கள் நல்ல திருப்பங்கள். அடுத்தது என்ன என்கின்ற எதிர்பார்ப்போடு வேகமாக நகரும் திரைக்கதை தான் படத்தை காப்பாற்றி இருக்கின்றது. மொத்தத்தில் இந்த திரைப்படத்தை பற்றி பல பதிவுலக நண்பர்கள் எழுதிய விமர்சனகள் இந்த படத்தை பொறுத்தவரை ஏன் என தெரியவில்லை. ஆனால் உண்மையில் இப்படியான வித்தியாசமான படங்களில் சில லாஜிக் பார்க்காதீர்கள் அதேபோல படத்தின் கதை பழையதாக இருந்தாலும் அதை கொடுத்திருக்கும் விதம் புதிசாக இல்லாவிட்டாலும் நன்றாக இருக்கின்றது. விக்ரம் சொன்னது போல நிச்சயம் இந்தப்படம் குழந்தைகளையும் பெண்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் நம்மிடம் இல்லாத ஒரு அதிசய சக்தியை தான் குழந்தைகள் ரசிக்கின்றார்கள். அதேபோல பெரியவர்களை ஏமாற்றாமல் எப்படி இப்படி எல்லாம் நடக்கின்றது என விளக்காமாக சொல்லி இருப்பது பாராட்டக்கூடியதுடன் புரிந்து ரசிக்க கூடியதே.
மொத்தத்தில் படம் பார்க்கும் நேரம் முழுவதும் சோர்வை தராமல் ஒரு படம் இருந்தால் அது நிச்சயம் வெற்றியே. அதை கந்தசாமி கொடுக்கின்றார். பக்தி செண்டிமெட் இருப்பது அடிமட்ட மக்களை சென்றடையும் அதேநேரம் கதையும் அவர்களிடமிருந்து ஆரம்பித்து பெரிதாக சொல்லப்படிருப்பது வர்க்க வித்தியாசங்களை உடைத்து ரசிகர்களை கூட்டும். அதேபோல ஒரு படத்தை பார்த்தால் குறைந்தது மூன்று மணி நேரம் ஆவது அந்தப் படத்தின் பாதிப்பு எங்களை ஆட்டுவித்தால் அதுதான் படத்தின் வெற்றி. உண்மையை சொல்லுங்கள் கந்தசாமி உங்களை பாதிக்கவில்லையா?.

சிலர் சொல்வதுபோல கந்தசாமி நொந்தசாமி இல்லை தாணுவை விக்ரமை சுசியை என எல்லோரையும் காப்பாற்ற வந்தசாமி.

கந்த கந்த கந்த கந்த கந்தசாமி எல்லோரையும் காப்பாற்ற வந்தசாமி.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive