ஊருறங்கா மெசின் உறங்கா நாடு கூட - தன்
உறக்கத்தை உறவாக்கும் நேரம் கூட
உறவோடு ஊருறங்கும் நாட்டவன் எந்தன்
உள்ளம் மட்டும் இன்னும் விழி உறங்கிப் போனாலும் உறங்கவில்லை.
பள்ளிப் படிப்பது பாதியில் பலியானதனால்
பல நாடு கடந்து வந்து பலிக்கடா ஆகிவிட்டேன்.
கல்லூரிப்படிப்புக்கு காசு வேண்டும் அதை விஞ்சி
ஒரு சாண் வயிற்றுக்கும் கஞ்சி வேண்டும்
ஆறடி உடல் ஒப்புக்காய் தூங்க ஓர் இடம் வேண்டும்
இதற்கெல்லாம் விலையை எம்மவரின் ரத்தம் வேண்டும்.
காலை எது மாலை எது கவலையேதும் கிடையாது - நாளை
விலை கொடுத்து எனை வாங்க இன்று உலையிலே எரிகின்றேன்
ஊட்டி விட இருந்தன அன்று ஊரின் கைகள் - இன்று
விக்கல் எடுத்தாலும் விக்கி விக்கி அழவேண்டும்.
தாய் நாட்டின் அரவணைப்பு தான் தாயின் அரவணைபென்று
தெரியாமல் வந்திங்கு தெருத் தெருவாய் அலைகின்றேன்
மனிதன் யார் மிருகம் யார் எனப் பிரித்து அறியாமல்
பணம் உழைக்கும் எந்திரனாய் மனிதர் நாம் மாறுகின்றோம்.
கவி படிக்கும் நேரம் இது பேனா மைக்குப் பதிலாய்
கண்ணீர்த்துளி கொண்டு என் கதை எழுதுகின்றேன்
கேட்பாயா என்தாயே என்பது தான் அவா எனினும்
கேட்டிடாதே என் தாயே உன் மகன் படும் பாடு இதுதான் என்று.
கேட்டால் நீ தாங்கமாட்டாய் திருப்பியும் அழைத்திடுவாய்
சரித்திரம் மாறிவிடும் இனி ஒரு தாயும் அனுப்பமாட்டாள் தன் பிள்ளையை
இப்போதுதான் எழுகின்றது எனக்குள் ஒரு கேள்வி
இனி எந்தப் பெண்ணுக்கு கிடைப்பாள் வெளிநாட்டு மாப்பிள்ளை.