Monday, March 30, 2009

இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். சிலருக்கு சிலரை பிடிக்கும் சிலருக்கு சிலரை பிடிக்காது. அப்படித்தான் என் வாழ்க்கையில் நான் இதுவரை காதலித்த பத்து பேரிடம் நான் எவ்வாறு என்னை பறிகொடுத்தேன் என்பதை இங்கே சொல்கின்றேன்.(இவர்கள் பாடலால் என்னைக் கவர்ந்தவர்கள் மாத்திரமே!)

ஹரிகரன்.
காந்தக்குரலோன் ஹரிகரனின் குரல் ஏனோ என்னை காந்தத்தோடு ஓட்டுவது போல ஒட்டவைத்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை சோககப்பாடல்களையும் மெலடியான பாடல்களையும் தமிழை கொல்லாமல் அழகாக பாட இவர் தான் என் முதல் Choice. வசீகரமான குரல் எல்லோரையும் வசியப்படுத்திவிடும். (இவரைப் போலவே நானும் பாட Try பண்ணுவது வேறு கதை) அயன் திரைப்படத்தில் இடம்பெறும் "பள பளக்கிற....." பாடல் இப்போது என் favourite.(கூந்தலுடன் கூடிய இவர் சிகை அலங்காரம் ஸ்பெஷல்)

ஷங்கர் மஹாதேவன்.
கம்பீரக்குரல்! குத்துப் பாட்டென்றால் அதில் ஒரு ஸ்டைல். காதல் பாடல் என்றால் அதில் ஒரு ஆழம். கலகலக்க வைக்கும் இவரின் பாடல்களும் குரலும் ஏதோ ஒரு மாயாஜாலம் செய்துவிடும் என்னை. அண்மையில் வந்த "யாவரும் நலம்...." பாடல் தான் இப்போது என் tonic. "கட்டிப்பிடி கட்டிப்பிடிடா......" என பாடினாலும் ஒரு கவர்ச்சி "இல்லை இல்லை ......." என பாடினாலும் உணர்ச்சி.

S.P.பாலசுப்ரமணியம்.
இவரைப் பற்றி சொல்லவா வேண்டும். ஒவ்வொரு பாடலிலும் இவர் ஸ்டைல் தனி. பாடல்களைக் கேட்கும் பொது ஏதோ ஒரு சுகம். ஏதோ ஆகாயத்தில் மிதப்பது போல உணர்வு. எத்தனை வயதானாலும் இன்னும் மாறாத அந்த இளைய நிலாவின் குரல் தனிமைக்கு ஒரு துணை. SPB என்ற மூன்றெழுத்து பாடும் தத்துவ பாடல்களுக்கு நான் அடிமை.

கார்த்திக்.

கிட்டத்தட்ட ஹரிகரனின் குரல் சாயல் இருந்தாலும் தனக்கென ஒரு பாணி. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே தன் ஆரம்பகாலங்களில் பாடிய பெருமை. அருமையான தமிழ் வளம். திரும்பத்திரும்ப கேட்கவைக்கும் ஈர்ப்பு சக்தி. இவர் பாடலில் என்றென்றும் என்னை பாடவைப்பது "கண்பேசும் வார்த்தைகள்........" பாடல்.

திப்பு.

மிகவும் சிறப்பான உச்சரிப்பு. குத்தும் சரி காதலுக்காக குழையும் பாடலானாலும் சரி திப்புவின் பாடலில் எனக்கு ஏதோ ஒரு பிடிப்பு. ஒரு பக்கம் "இலங்தப்பழம்........ " என அதிர வைப்பவர் மறு பக்கம் "தாய் மடியே......." என கண்கலங்கவும் வைப்பார்.

உன்னி கிருஷ்ணன்.
என் சிறுவயதில் இவர் குரல் எனக்கேனோ தேன் வார்க்கும். பாடசாலைக்கு போகும் காலத்தில் செல்லும் வாகனத்தில் இவர் பாடல் அடிக்கடி ஒலிக்கும் பொது எனக்குள் பிறக்கும் உற்சாகம் அன்றைய நாள் முழுவதும் எனக்கான Boost.

உதித் நாராயணன்.

என்ன தான் தமிழை கடிச்சு துப்பினாலும் அந்த மழலைக் குரல் என்னைக் கிறங்கடிக்கும். தமிழை கொள்ளும் பாடகர்களை நான் வெறுத்தாலும் ஏனோ இவரை வெறுக்க முடியவில்லை. "காதல் பிசாசே......." என பலரது நெஞ்சத்தை "அள்ளு அள்ளு ....." என அள்ளியவர். என் நெஞ்சத்தையும் அள்ளிவிட்டார்.

அனுராதா ஸ்ரீராம்.
ஒருவருக்குள் இத்தனை வகையாகப் பாடும் குரலா? என அதிசயிக்கவைத்தவர். காதல், மோதல், சோகம், ஒப்பாரி, ஸ்டைல் எல்லாவற்றிலும் பெண் பாடகிகளில் என் முதல் மனம் கவர்ந்தவர் இவர்தான். "கறுப்புத்தான் எனக்கு........" பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் அதேவளை "ஏண்டி சூடாமணி......." பாடலும் பட்டையைக்கிளப்பும். ஹரிகரனும் இவரும் சேர்ந்து பாடல் தந்தால் என்னையே மறந்து விடுவேன்.

சித்ரா.
சின்னக்குயிலின் குரல் என்றுமே புத்துணர்ச்சி தரும். "பாடறியேன் படிப்பரியேன்......"என பாடினாலும் பாடலில் அத்தனை நுணுக்கங்களும் இருக்கும். கர்நாடக இசையாக இருக்கட்டும் காதல் முதல் அதிரடிப்பாடல்களிலும் கலக்கும் சித்ராவின் சோகப்பாடல்களும் கருத்தாளம் மிக்க பாடல்களுக்கும் என் செவி என்றும் பக்தன்.

ஹரிணி.
திப்புவின் மனைவி இப்போது. "எனக்கென ஏற்க்கனவே பிறந்தவள் இவளா.....?" என பாடியபோதே இசையில் எனக்கானவள் இவள் என திரும்பிப் பார்க்க வைத்து உன்னி கிருஷ்ணனுடன் சேர்ந்து தந்த பாடல்கள் இன்றும் எனக்கு தேசிய கீதங்கள். முக்கியமாக கர்நாடக சங்கீத சாயல் பாடல்களில் பாட ஹரிணிக்கு நிகர் அவர்தான்.

Tuesday, March 24, 2009

இங்கே அங்கே என பூச்சாண்டி காட்டிய IPL விவகாரம் ஒரு வாறாக முடிவுக்கு வந்திருக்கிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ம் திகதி IPL போட்டிகள் தென் ஆபிரிக்காவில் நடைபெற உள்ளதாக IPL நிர்வாகி லலித் மோடி அறிவித்துள்ளார். இன்று தென் ஆபிரிக்க மற்றும் இங்கிலாந்துக்கு விஜயம் செய்த இவர் இப்போது இந்த முடிவை அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்திய நேரப்படி மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணிக்கே போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்பாட்டு வேலைகள் மேற்கொள்ள உள்ளதால் ஏப்ரல் 16ம் திகதிக்கு போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். சந்தோசமான விடயம் தானே!

Monday, March 23, 2009


இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்ச்சத்திரம், உலக கிரிக்கெட்டின் மேதையும் ஆகிய சச்சின், கிரிக்கெட் போட்டி ஒன்றுக்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். சச்சின் ஏன் இப்படி மாறிவிட்டார்? கிரிக்கெட் மீதான அவர்காதல் செத்துவிட்டதா?

ICLக்கு போட்டியாக தொடங்கப்பட்ட IPL கடந்த வருடம் மிகவும் வெற்றிகரமாக நடந்த்தப்பட்டது யாவரும் அறிந்ததே. ஆனால் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்திலேயே சில அசம்பாவிதங்கள் நடந்தேறின. பல வீரர்கள் தொடர்ந்து போட்டியில் ஆடமாட்டோம் என கூறி பின்னர் ஒருவாறாக நல்ல படியாக நடந்து முடிந்தது. அதன் மூலம் கிடைத்ததோ எத்தனை கோடிகள், எத்தனை முத்தான வீரர்கள் நல்ல புரிந்துணர்வு.

இப்போது அந்தக் களியாட்ட திருவிழாவின் இரண்டாம் பருவகாலம். ஆனால் அதை தொடங்க முன்னரே இம்முறை பல பிரச்சனைகள் ஆரம்பமாகிவிட்டன. ஏப்ரல் மாதம் இந்தியாவின் லோக் சபா தேர்தல் நடைபெறவுள்ள காலப்பகுதியிலேயே IPLதொடரும் களம் காண இருகிறது. எனவே பாதுகாப்பு காரணங்களால் போட்டியை பிற்போடுமாறு இந்தியாவின் உள்த்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டிருந்தார்.ஆனால் லலித் மோடி எந்த மாற்றமும் இன்றி IPL நடந்தே தீரும் என ஒற்றைக்காலில் நின்றார்.
அப்படியாயின் தேர்தல் நடைபெறும் தினங்களிலும் இடங்களிலும் போட்டியை தவிர்க்குமாறு ப.சிதம்பரம் கேட்டும் லலித் மோடி சம்மதிக்கவில்லை. அதன் பின் இந்தப்போட்டிகளை நடத்த வேண்டாம் எங்கள் பேச்சை கேட்காமல் நடத்தினால் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல என அரசாங்கம் கைவிரித்ததோடு கடுமையாக சாடியுமிருந்தது. வீரர்களின் பாதுகாப்பே முக்கியமாக கொள்ள வேண்டிய இந்தத் தொடரில் எத்தனையோ முன்னணி வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

என்ன நடந்ததோ தெரியாது அண்மையில் கூடிய IPLபோட்டி ஏற்ப்பாட்டுக்குழு இப்போது ஒரு சவாலான முடிவை எடுத்திருக்கிறது.
SPL அல்லது EPL ஆகுமா IPL?

இந்தியாவில் நடக்கும் IPL போட்டிகள் அதே திகதிகளில் தென் ஆபிரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ நடக்கும் என இப்போது அறிவித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். அப்படி நடை பெற்றால் இதனை IPL என்றா அல்லது தென் ஆபிரிக்காவில் நடை பெற்றால் S(outh Affica)PL அல்லது இங்கிலாந்தில் நடைபெற்றால் E(ngland)PL என்றா அழைக்கமுடியும்?

கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது ஆசிய ரசிகர்களையும் பெரிதும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த கோடை கால விடுமுறையை சந்தோசமாக கழிக்க திட்டம் தீட்டிய இந்திய மற்றும் அயல் நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் தலையில் இது மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் சச்சின் இந்தப்போட்டிகள் வெளிநாட்டில் நடத்துவதற்கு தன் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றார். "IPL போட்டிகளை வெளிநாட்டில் நடத்த முடிவெடுத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. இந்தப் போட்டிகளை இந்தியாவில்தான் நடத்த வேண்டும். அதுவே நியாயமானதும்கூட. ஒவ்வொரு இந்தியருக்கும் அதுவே பெருமையளிக்கும். என்னைப் போன்ற வீரர்களின் கருத்தும் இதுவே" என்று கூறியுள்ளார். நிச்சயமாக சச்சினின் கருத்தும் ஒரு வகையில் ஏற்கக்கூடியதே.

அதேபோலத்தான் இந்தியாவிற்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த ஜாம்பவானும் ICL இல் அங்கம் வகிக்கும் கபில் தேவும் தன் அதிர்ப்தியை தெரிவித்திருக்கின்றார். என்னதான் தன் போட்டி அமைப்பாக இருந்தாலும் அதன் போட்டிகளை வேறு இடத்துக்கொண்டு செல்லாமல் தங்கள் நாட்டிலேயே நடத்தவேண்டும் என்ற கபிலின் எண்ணமும் பாராட்டத்தக்கதே.
இது இவ்வாறு இருக்க இந்திய ரசிகர்களையும் அயல் நாட்டு ரசிகர்களையும் கருத்தி கொண்டு இப்போது அந்த போட்டிகள் இந்திய நேரப்படி மாலை வேளைகளில் நடைபெறும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அடிக்கடி மாறும் இந்த முடிவுகளால் நான் எழுதும்போது உள்ள இந்த நிலைமை, நீங்கள் வாசிக்கும் பொது எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம். .

Saturday, March 21, 2009

மிகவும் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தில் இடம்பெறும் இறுதிப்பாடல் காட்சியை படமாக்கவேண்டும் மிகவும் சிறப்பாக நடன அரங்கு அமைக்கப்படுகிறது. ஒரூ இயற்கை வளத்தால் அலங்கரிக்கப்பட்ட சொர்க்கபுரியாக இருந்த அரங்கில் தான் அழகு தேவதை அசின் அந்த அசகாயசூரருடன் ஆடவேண்டும். இவர்களை ஆடவைத்து பார்ப்பவரும் ஒரு மேதை.

என்ன அழகு எத்தனை அழகு?

நடனக்குழு தயாராகியபின் ஹீரோவும் தயார் அசினும் தயார். கூடவே அந்த பாடலில் ஆடும் துணை நடிகர்களும் தயார். நடன இயக்குனர்களும் நடன அசைவுகளை சொல்லிக்குடுத்தாயிறு. இயக்குனர் Start Camera Action சொன்னதுதான் தாமதம் நாயகனுடன் சேர்ந்து அசினும் நடனத்தில் பிளந்து காட்டத்தொடங்கினார். ஆடிக்கொண்டிருந்தவரின் ஆட்டம் ஒரு சத்தத்துடன் மெதுவாக அடங்கியது. ரசிகர்களால் விலை மதிக்க முடியாத அசினின் ரத்தம் கசின்தொடத் தொடங்குகிறது.

நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான்
தேவதை, ரசிக சிகாமணிகளின் தெய்வம், அழகுப் புயல் அசினின் கண்கள் சற்று கலங்கத்தான் செய்தது. சுற்றி இருந்தவர்கள் பதறிப்போனார்கள். காயப்பட்டு கண்கலங்கியது யார்? தமிழ் சினிமாவின் கனவுக்கன்னி அழகுப் பிசாசு அல்லவா?உடனடியாக பெரிய மருத்துவக்குழு ஒன்றை அவ்விடத்துக்கு அழைக்க ஏற்ப்பாடு நடக்கிறது. இருந்தாலும் வழங்கிய முதலுதவியில் திருப்திப்பட்ட அசினுக்கு என்ன நடந்தது என மற்றவர்களுக்கு அதன் பின் தான் தெரிய வருகிறது. அசினின் போர்ப்பாதங்களை அரங்கில் இருந்த ஒரு ஆணி நன்றாக பதம் பார்க்கிறது. (அந்த அரங்கை அமைத்த யாருக்கப்பா இந்த அழகான ராட்சசியை காயப்படுத்த மனம் வந்தது.

ஏன் இந்த பார்வை?

முதலுதவியின் பின் அசினின் இன்னொரு செயற்ப்பாடு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. சில நடிகைகள் கை நகம் ஒன்று முறிந்து விட்டாலும் படப்பிடிப்பை ரத்துச் செய்யும் நிலையில் காலில் கட்டுடன் தொடர்ந்தும் நடனமாட தயாரானார் அசின்.

என்னடா எல்லாவற்றையும் சொல்லிவிட்டு இன்னும் அந்தப்படம் எந்தப்படம் என்று சொலவில்லையே என பார்க்கிறிங்களா? படமா முக்கியம் அசினைப்ப்றி ஒரு செய்தி என்றவுடன் எவ்வளவு ஆர்வமா வாசிக்கிறிங்க ஒரு பழைய செய்தியை. இருந்தாலும் உங்கள் வாசிப்பு வேகத்திற்கும் அசின்மேல் கொண்ட பக்திக்கும் ஒரு சபாஷ்.

இது நடைபெற்றது போக்கிரி திரைப்படத்தின் மாம்பலம் பாடல் படப்பிடிப்பின்போது அசினுடன் இணையாக ஆடிய அந்த நடிகர் விஜய். இயக்குனர் பிரபுதேவா. இப்ப புரிதா இது எவ்வளவு பழைய செய்தி என்று! இது எப்பிடி இருக்கு?

Thursday, March 19, 2009

மஹேந்திர சிங் டோனி வெற்றி நிச்சயம்

இவர் ஆரம்பகாலமே மின்னல் இடி போல பலமாகத்தான் களம் கண்டது. இலங்கைக்கு எதிராக அதிரடியாக இரட்டைச்சதம் நெருங்கியமை பாகிஸ்தானை துவசம் செய்தமை என இவரது ஆரம்ப அதிரடிகளே சச்சினின் ஆரம்பகால அதிரடியை நினைவூட்டின. இன்று தலைவரான பின் பொறுப்புடனும் நிதானத்துடனும் ஆடிவருகின்றார். மிகச்சிறந்த விக்கெட் காப்பாளர் மட்டுமன்றி சிறந்த தலைவரும் கூட. மிக லாவகமாக sixer க்கு பந்தை விளாசுவதில் கில்லாடி. என்னதான் பரபரப்பான சூழல் என்றாலும் மிகவும் சாதுரியமாக ஓட்டங்களை குவித்து அணியை வெற்றி பெற வைக்கும் சிறந்த match winner. சுருக்கமாக சொல்லப் போனால் middle order இல் இவர் ஒரு சச்சின்.


இந்தியாவின் வளர்ச்சியில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியாச்சு எனி அவங்களே விஸ்வரூபம் எடுப்பாங்க

மிகச் சிறந்த அணித்தலைவராக மட்டுமில்லாமல் சச்சினுடன் இணைந்து அபார தொடக்கம் தந்ததோடு பல அற்புத ஆட்டங்களை ஆடிய கங்குலி கொஞ்சம் கோபக்காரரும் கூட. இவரின் சாதனைகள் எல்லோருக்கும் தெரிந்ததே. இவரின் வழியிலே அதே கோபம் ஆக்ரோசத்துடன் ஆடுபவர்தான் யுவராஜ் சிங். இவரும் இடக்கை ஆட்டக்காரர்.
ஆறு பந்தையும் விளாசியாச்சு வேற ஏதும் இருக்கா?

கங்குலி பிட்சில் முன்னோக்கி வந்து சிக்ஸ் அடிக்கும் அழகே தனி. அதேபோல் நாலாபுறமும் விதவிதமான ஸ்டைல் இல் சிக்ஸர் அடிப்பதில் சிங் கிங். ஒருநாள் தொடர்களில் போட்டிகளை சுவாரஷ்யமாக்குபவர். களம் இறங்கினாலே எதிரணிக்கு கலக்கும். வான வேடிக்கையை மைதானத்திலேயே பார்க்கலாம். மிகச்சிறந்த களத்தடுப்பாளர். அபாரமான பிடிகளை பிடிப்பவர். ஒரு நாள் போட்டிகளிலேயே இப்படி என்றால் இருபதுக்கு இருபது போட்டிகளில் இவரது ஆட்டம் சொல்ல வார்த்தையே இல்லை. அதுவும் உலகக்கிண்ணத்தில் இவரது ஆட்டம்! இந்ங்கிலாந்தின் Stuard Broadக்கு ஆறு பந்திலும் ஆறு இமாலய சிக்ஸர்கள் .கங்குலி விட்டுச்சென்ற middle order ரை மிக அற்ப்புதமாக செய்கின்றார்.
கெளதம் கம்பீர்
நான் ஆடும் ஆட்டம் அரங்கம் அதிரவே!
சச்சின்-கங்குலியின் ஆரம்பத்துடுப்பாட்டத்தின் அடுத்த பிரதி சேவாக்-கம்பீர். Off Side இல் கங்குலி யும் இவரும் அசகாய சூரர்கள். இப்போதெல்லாம் இவராடுவது மின்னல் வேக ஆட்டம். டெஸ்ட் இலும் இவரது ஆட்டம் பொறுப்பானது. கொஞ்சம் கோபக்காரரான வீரரானாலும் விளையாட்டில் இவர் அதிரடியானவர். இப்போது நியூசிலாந்திலும் சரி, இலங்கையிலும் சரி, ஏன் ஆஸ்திரேலியாவுக்கும் சரி இவர் கொடுத்த அடி மறக்கமுடியாது. இவரின் ஆட்டத்தைப் பார்த்தால் எத்தனை சாதனைகளை அபகரிக்கப்போகிறாரோ தெரியவில்லை. ஷேவாக்குடன் இவர் தரும் ஆரம்பத்தைப்பிரிக்க எதிரணியினர் படும் அவஸ்தை இன்னும் பல வருடம் தொடரத்தான் போகிறது.

ஜெயிப்பது நிச்சயம்!

ஒரு சச்சின் ஒரு கங்குலியை சமாளிப்பதே எதிரணிக்கு கதிகலன்கிப்போகும் விடயம். இன்றோ ஒரிஜினல் சச்சினுடன் சேர்த்து சேவாக், டோனி என மூன்று சச்சின்கள். ஒரிஜினல் விடைபெற்றாலும் அவரையே உரித்து வைத்தாற்போல் ஆடும் யுவராஜ், கம்பீரைப் பார்த்தால் இரண்டு கங்குலிகள். இவர்களுடன் சுரேஷ் ரைனா,ரோஹித் ஷர்மா, யுஸுப் பதான் துடுப்பாட்டத்தில் அசத்த சகீர் கான், இஷாந்த் ஷர்மா, இர்பான் பதான், ஹர்பஜன் சிங் என பந்து வீச்சு ஹீரோக்களும் அசத்த இந்திய அணி ஒருநாள், டெஸ்ட், இருபதுக்கு இருபது என எல்லாவற்றிலும் முதல் நிலை அணியாக வரும் நாள் தொலைவில் இல்லை.

Tuesday, March 17, 2009

கடந்த திங்கள் கிழமை நான் வழமை போலவே அலுவலகம் வந்தபோது லோஷன் அண்ணாவும் ஹிஷாம் அண்ணாவும் ஏன் வைதேகி அக்கா கூட சேர்ந்து என்ன உங்கள் தலைவர் இப்படி செய்துவிட்டார்? என கேட்டதுடன் சில காரசாரமான விடயங்களும் பரிமாறப்பட்டது. அந்த நேரம் எனக்கு சார்பாக(அதாவது விஜய் சார்பாக) நண்பர்களான அருண் மற்றும் ரஜீவ், ஏன் எங்கள் அருந்ததி அக்கா கூட பேசினார் . அதுமட்டுமில்லாமல் தைரியமிருந்தால் ஹிஷாம் அண்ணாவின் பதிவில் என்னிடம் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்குமாறும் கூறினார். நான் அங்கே பதில் அளிக்கவில்லை. இப்போது எல்லாவற்றையும் சேர்த்து இங்கே கொட்டப்போகின்றேன்.
என்னுடைய கிரிக்கெட் சம்பந்தமான பதிவின் தொடர்ச்சியை தர முதல் இவ்வாறான ஒரு பதிவை இட வேண்டிய நிலைமையில் நான்.
சத்தியமா எனவென்றே புரியவில்லை
இன்று நான் அலுவலகம் வந்து பார்த்தேன் லோஷன் அண்ணாவின் மற்றுமொரு பதிவில் விஜய் வசைபாடப்பட்டுள்ளார். (ஏன் அண்ணா உங்களுக்கு இவ்வளவு கோபம்?) எனக்கு இன்னும் கொஞ்சம் ஆத்திரம் வந்துவிட்டது. அதே நேரம் அருந்ததி அக்கா சொன்னார் "தம்பி இவர்கள் இப்படி விஜய் பற்றி தப்ப சொல்லிறத என்னால கேட்கமுடியல யாரவது அவருக்கு சார்பா அவர் பக்க நியாயத்தையும் சொல்லுங்களேன்" என்றார். இந்த உணர்வு பூர்வமான கருத்துகளின் வெளிப்பாடு தான் இந்த பதிவு.

எனி எங்கே போனாலும் வாயை மூடியபடி இருப்போமோ?
அண்மையில் இளைய தளபதி விஜய் திருச்சியில் நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரசிகர்களை கோபமாக திட்டி விட்டதாக சர்ச்சைக்குரிய vedio ஒன்று பல இணைய தளங்களிலும் உலாவருகின்றது.
நானும் பார்த்தேன் மிகச் சில வினாடிகளே தோன்றும் அந்த vedio வில் விஜய் அருகில் பிரபுதேவா இருக்கிறார் அவர்கள் முன் சில ஊடகங்களது ஒலிவாங்கிகள். அதில் நேராக பார்த்து நிருபர்களுக்கு மிகவும் அமைதியாக பதில் சொல்லும் விஜய் திடீரென மறுபக்கம் திரும்பி தான் அவ்வாறு பேசுகின்றார். உண்மையில் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தால் அந்த கேள்வி ஏன் அதில் கேட்கவில்லை. அப்படியாயின் ஏன் விஜய் மறு பக்கம் திரும்பி அவ்வாறு சொல்ல வேண்டும்? நேரடியாகவே சொல்லி இருக்கலாமே. இதனால் நாம் ஏன் அதை அவர் பத்திரிகையாளர்களை திட்டவில்லை என்பதை ஏற்கக்கூடாது?

இவரா அப்படிப் பேசியிருப்பார்?
அடுத்தது அவர் ரசிகர்களை திட்டினார் என்கிறார்கள். அப்படியே அவர் திட்டி இருந்தாலும் அது மிகச்சரியானதே. ஏனெனில் ஒரு தலைவன், முன்மாதிரி ஒரு பொது இடத்தில் தன் ஆளுமையை காட்டி தன் படையை சிறந்த கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். அதைத்தான் விஜய் செய்திருக்கிறார்.

அண்ணா! உங்களை புரியாதவங்க பேச்சு அது.

இவர் யார் இப்படி பேச என நீங்கள் எனக் கேட்கலாம்? நாம் படிக்கும்போது தப்பு செய்தால் ஆசிரியர் திட்டுவதில்லையா? அலுவலகத்தில் மேலதிகாரிகள் திட்டுவதில்லையா? ஏன் வீட்டில் பெரியவர்கள் தான் திட்டி திருத்துவதிள்ளயா? அது போல ஒரு செயல் தான் தன்னை நம்பி இருப்பவர்களை திருத்த எடுத்த இந்த செய்கை. இப்படி நல்ல கோணத்தில் பார்க்காது ஏன் நாம் தப்பாக பார்க்க வேண்டும். இது எங்கே விஜய் மேல் தப்பு கண்டு பிடிக்கலாமென காத்திருந்தவர்களது ஆவலைத்தான் வெளிப்படுத்துகிறது.

நாங்கள் சேர்ந்தாலும் தப்ப எழுதி விடுவாங்களோ?
ஆரம்பகாலங்களில் ரஜினி, அஜித் போன்றவர்களுக்கும் இதே நிலை தான் நடந்தது. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஒருவர் கருத்தை சொல்லி விட்டால் அதை பெரிது படுத்திப் போடுவது பல ஊடகங்களின் வழக்கமாகிவிட்டது. இதனால் தான் மனதில் பட்டத்தை வெளிப்படையாக சொல்லும் அஜித் கூட ஊடகங்களை விட்டு விலகி இருந்தார்.
நாங்கள் என்ன செய்தாலும் செய்திதான் என சிரிக்கிறார்களோ?
இவ்வாறான சம்பவங்கள் எல்லா இடங்களிலும் நடக்கிறது. அப்படி இருக்கும் பொது இது மட்டும் பெரிது படுத்தப்பட காரணம் விஜய் இன்று மாபெரும் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்பதும் அவர் மேல் கொண்ட சில வெறுப்பானவர்களது எண்ணமுமே. இதில் மிக முக்கியமாக குறிப்பிட்ட காரணம் அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு என்பவற்றின் தோல்விகள். முதலில் இந்த மூன்று படங்களும் தோல்விப்படங்கள் அல்ல. இந்த படத்தயாரிப்பாளர்கள் யாரும் இவை தோல்விப் படம் என சொன்னார்களா? இவற்றை தோல்வி என்பவர்கள் விஜய் இடம் நிறைய எதிர் பார்க்கிறார்கள் ஏனெனில் அவர் கொடுத்த வெற்றிப் படங்கள் அப்படி. இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் விஜய் ஆரம்பகாலங்களில் பார்க்காத தோல்விப்படங்களும் இல்லை அதன் பின் பெற்ற வெற்றிகளும் சாதாரணமானவை அல்ல. மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு. மிக முக்கியமாக பெண்களின் பேராதரவு. எங்கள் ஆதரவு உங்களுக்கே
விஜய் படங்களை குறை சொல்பவர்கள் விஜய் இதே போல் முன்னர் கொடுத்த மசாலா படங்களை மட்டும் ஏன் வெற்றி பெற வைத்து இன்று சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தினர். அன்றே ஒதுக்கி தள்ளி இருக்கலாமே. விஜய் தன் உருவத்தை மாற்றி நடிப்பதில்லை என்கிறீர்கள் ஒருவர் தன் உருவத்தை மாற்றாமல் பெரிய வெற்றிப்படங்கள் கொடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? விஜய் தன் உருவத்திலே வந்து ஜெயிக்கிறார்தானே.

எனவே ஒருவரை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் நன்றாக எழுதுங்கள் பரவாயில்லை அனால் தவறாக எழுத முதல் உங்கள் மனசாட்சியுடன் சேர்த்து சிந்தியுங்கள். அடுத்தவரை காயப்படுத்தும் சிறு புன்சிரிப்புக்கூட தப்புதான். விஜய் நல்ல விடயங்கள் செய்யும்போது ஏன் நீங்கள் இப்படி வரிந்து கட்டிக்கொண்டிருக்கவில்லை.

இத்தனை வருடமாக திரை உலகில் இருக்கும் விஜய் அப்படிப் பேசியதற்கு தகுந்த காரணம் இருக்கும். எனவே தவறான காரணங்களை நீங்களே கண்டுபிடித்து வஸ்கொடகாமா ஆகாதீர்கள். உண்மையான விஜய் ரசிகர்கள் அவரை நிச்சயம் புரிவர். எங்கேயும் எப்போது அமைதியாக இருக்கும் விஜய் அதேபோல் அவரது ரசிகர்கள் இப்போது பொறுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள். விஜய் ரசிகர்களே உங்கள் மன ஓட்டங்களையும் தட்டி விடுங்கள். உங்களால் முடியும்!

Monday, March 16, 2009

மிக விரைவில் சர்வதேச ஒருநாள் அரங்கில் முதல் நிலையை அடைய இருக்கும் இந்திய அணி இலங்கையை துவைத்து விட்டு நியூசிலாந்துக்கும் வதம் செய்யும் கனவுடன் பறந்து சென்றது.

புதிய நிற உடையுடன் இருபதுக்கு இருபது உலக சம்பியன் எனும் பெருமையுடனும் உலகத்தரம் வாய்ந்த இருபதுக்கு இருபது போட்டி வீரர்களையும் கொண்ட இந்திய அணிக்கு இடியை கொடுத்தது வெட்டோரியின் அணி இருபதுக்கு இருப்பதில்.

ஆனால் தூங்கிற சிங்கத்தைத் தட்டி எழுப்பக்கூடாது என்பார்கலேல்லா அதேபோல்தான் இருபதுக்கு இருபதில்விழுந்த அடிக்கெல்லாம் சேர்த்து பிளந்து கட்டிக்கொண்டிருக்கிறார்கள் இந்திய வீரர்கள். இவர்களின் விஸ்வரூபம் அப்பப்பா சொல்லவே முடியவில்லை. பிரகாஷ்ராஜ் ஸ்டைல் இல் சொல்வதென்றால் என்னடா இப்படி அடிக்கிறா செல்லம்? வடிவேல் ஸ்டைல் இல் சொன்னால் வேணாம் வலிக்கிது என்பார்கள் நியூசிலாந்து வீரர்கள்.

இந்திய அணியில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஸ்டைல் இல் அசத்தினாலும் இப்போதுள்ள அணியில் 3 சச்சின்கள், 2 கங்குலிகளுடன் இன்னும் பல ஜாம்பவான்களும் விளையாடுவது போலத்தெரிகிறது.

சச்சின் டெண்டுல்கர்.

இருபது வருடமென்ன இருநூறைத் தொட்டாலும் ஓயாது இந்த வேகம்

கிரிக்கெட் ஒரு மதமாக இருந்தால் அதில் கண்டிப்பாக சச்சின் கடவுளாக இருப்பார் என எல்லோருமே சொல்வார்கள். எத்தனை சோதனைகள் அத்தனை சோதனையிலும் ஏதோ ஒரு சாதனை. சச்சின் ஒரு ஓட்டம் எடுத்தாலும் அது சாதனைதான். ஒரு நாள் டெஸ்ட் போட்டி என எந்தப்போட்டியானாலும் சிங்கம் சிங்கம் தான். ஆனால் இருபதுக்கு இருபது போட்டியில்தான் இந்த அதிரடி அட்டகாச நாயகனின் ஆட்டத்தை காணமுடியாதிருக்கிறது. எத்தனை சாதனைகள்! இவற்றை எழுத இங்கே இடம் போதாது.


அடிச்ச பந்தை தேடும் வரை இப்படியே தூங்கும் எண்ணமோ?

இத்தனை சாதனைகளை கண்டாலும் மற்றுமொரு புதிய மைல்கல்லை தொட மற்றைய வீரர்களுக்கு ஒரு வழியை திறந்து விட்டதுடன் ஒரு உந்து சக்தியாக 200 ஓட்டங்களை மிக அற்புதமாக வேகமாக நெருங்கியிருக்கிறார். அன்றைய தினம் அவரது உடல் நிலை ஒத்து ளைத் திருந்தால் புதியதொரு சரித்திரம் படைக்கப்பட்டிருக்கும் இந்த வயதிலும் 18 வயது பையன் போல என்ன வேகம்! என்ன தாண்டவம்! இவரது வழிகாட்டலை மிக விரைவில் ஒரு நாள் அரங்கில் இரட்டை சதம் விளாசப்படும்.இந்திய அணியின் இரண்டாவது சச்சின் ஷெவாக்!

என்னை நோக்கி வந்த பந்தை அடிச்சேன் காணவில்லையே!.

சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த இவரது புயல் வேக ஆட்டம் இன்று சூறாவளியாக சுழன்றுக் கொண்டிருக்கின்றது.சச்சின் - கங்குலி என்ற அதிசிறந்த ஆரம்ப இணையே இவரது கலக்கலான அதிரடிக்கு மதிப்பளித்து சச்சினுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அனுப்பி அழகிய தொடக்கம் கண்டு வருகின்றது.

ஆரம்ப காலங்களிலேயே சச்சினின் மறுவடிவம் என புகழப்ட்ட ஷெவாக்கின் ஒவ்வொரு அடியும் சச்சினை நினைவூட்டி களத்தில் இருவரும் துடுப்பெடுத்தாடும் போது இருவரையும் பிரித்தறிவது கடினமாக இருந்தது.

இன்றும் சச்சின் வழியிலே சச்சின் 163 ஓட்டங்களை விளாசிய மறு போட்டியிலேயே இந்தியா சார்பாக அதிவேக சதம் விளாசினார். அன்றைய போட்டியில் மலை குறுக்கிட்டது நியூசிலாந்துக்கு நல்லதாக போய்விட்டது. இலையேல் நிச்சயம் 200ஐ நெருங்கியிருப்பார். (என்ன நியூசிலாந்தின் ஓட்ட எண்ணிக்கை அதற்க்கு இடம் கொடுத்திருக்காது)

டெஸ்ட் இலும் 400௦ஐ எட்டித் தொட இவர் எப்போதும் தயார். பாகிஸ்தான், தென்னாபிரிக்காவிற்கு எதிராக இவர் 300௦௦ ஓட்டங்களை கடந்தது கூட டெஸ்ட் போட்டிபோல் அன்றி வானவேடிக்கையுடனேயே. சச்சின் வழியிலே ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக பின்னி எடுக்கிறார்.

அடுத்தவர் யார்??????????? தெரியணுமா? கொஞ்சம் காத்திருங்கள் விரைவில் சொல்கின்றேன்.

Sunday, March 8, 2009

எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் என பெரும் தலைகளின் ஆட்சியில் தமிழ்த்திரையுலகம் பல ஹீரோக்களை கண்டிருக்கிறது. இன்றும் கண்டுகொண்டிருக்கிறது.

ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், மோகன், பிரபு, கார்த்திக் அர்ஜுன் என்ற ஒரு தலைமுறை நடிகர்களில் வெள்ளிவிழா நாயகன் மைக் மோகன் என புகழப்பட்ட மோகன் சுட்டபழம் மூலம் re-entry கொடுக்க முனைந்தும் bold ஆகிவிட்டார். தன் மோசமான நடத்தைகள் காரணமாக மிகச்சிறந்த நடிகரான நவரச நாயகன் கார்த்திக் கூட திரையுலகை விட்டு ஒதுங்கி அரசியலில் நுழைந்துவிட்டார்.

நடிகர் திலகத்தின் வாரிசு இன்று கதாநாயகன் அந்தஸ்து இழந்து அண்ணா, அப்பா வேடம். ஆனால் அதிலும் பிளந்து கட்டுகிறார். இன்னொரு சிவாஜியாக.
ஆக்சன் கிங் அர்ஜுன் அன்றும் இன்றும் ஒரே மாதிரியான படத்தை கொடுத்தாலும் சராசரி வெற்றியைக் பெர்ருக்கொண்டிருக்கிறார்.
புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் சினிமா தோல்விகள் காரணமாக அரசியலில் நீந்த தொடங்கிவிட்டார். இருந்தும் இடையிடையே தன் வழமையான பாணியிலேயே படத்தை தருகின்றார்.

புரட்சித்தமிழன் சத்யராஜ் தன் வயதை புரிந்து அதற்கேற்ற வேடங்களில் நடிப்பதோடு இளைய நாயகிகளோடு டூயட் பாடி வெற்றி கண்டுகொண்டுமிருக்கிறார்.

சூப்பர் ஹீரோ சரத்குமார் இன்று சினிமாவிலும் அரசியலிலும் சராசரியாக ஓடிக்கொண்டிருக்கிறார். இடை இடையே நல்ல படங்களைத் தருவதோடு தன் குண்டுச் சட்டிக்குள்ளேயே குதறி ஊட்டும் படங்களையும் தருகிறார்.சபாஷ் சரியான போட்டி! சோதனை முயர்சிசில் உங்களுக்கு போட்டி நீங்களே.
உலகநாயகன் கமல். பல சோதனை முயற்சிகளை செய்து அவற்றில் வெற்றியும் காண்கிறார். தசாவதாரம் உலக சினிமாவின் மைல்கல். இருந்தும் தன் அடுத்த படம் என மர்மயோகியை தொடக்கி அதன் மர்மத்தை அவராலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. தலைவன் இருக்கிறானும் எங்கே என தேடவேண்டிய நிலை. இருந்தாலும் அவர் சினிமாவை விட்டு ஒதுங்காமல் புதிய முயற்சிகளுக்கு வித்திட்டுக்கொண்டே இருக்கிறார்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இந்த சூப்பர் ஸ்டார் நாற்காலி? பேசாமல் அரசியல் நாற்காலிக்கு போகலாமோ?
சூப்பர் ஸ்டார் ரஜினி, எத்தனை சூப்பர் ஹிட் படங்கள். வசூல் சாதனைகள். ௮௦௦ நாட்களுக்கு மேல் ஓடிய சந்திரமுகியின் இமாலய வெற்றி. ஸ்டைல், இமேஜ், பெரிய ரசிகர் கூட்டம் இவை எல்லாவற்றையும் மனதில் வைத்தோ என்னவோ 1980௦களிலேயே தன் படங்கள் மூலம் அரசியலுக்கு அரிதாரம் பூசத்தொடங்கிவிட்டர். 1994இல் மீண்டும் தன் குரல் மூலம் அரசியல் நிலைமைகளை மாற்றி அமைத்துப்பார்த்தார். ஆனால் பாபா தோல்வியால் விழுந்து அதன் பின் சந்திரமுகியில் சடார் என எழுந்து அதனைத் தொடர்ந்து சிவாஜியால் உலக மக்களை பிரமிப்பில் ஆழ்த்திய ரஜினி குசேலன் படம் மூலம் அதலபாதாளத்தில் விழுந்ததோடு பலரது விமர்சனங்களுக்கும் உள்ளானார். குசேலனில் பேசிய சில வசனங்களால் தன் ரசிகர்களாலேயே தூற்றும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நேரம் மீண்டும் ஒரு சர்ச்சையை லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு ஏற்ப்படுத்தியது. சினிமாத்துறையில் தற்போது இருப்பவர்களில் மக்கள் மத்தியில் செல்வாக்கானவரராக சூப்பர் ரஜினியை(16.2 புள்ளி) இளைய தளபதி விஜய் (16.4 புள்ளி) முந்தியதால் மீண்டும் கொதித்த ரஜினி ரசிகர்கள் அவரை உடனடியாக அரசியலுக்கு வருமாறு வற்புறுத்திய நிலையில் ஷங்கர், AVM, ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோருடன் இணைந்து எந்திரன் எனும் மாபெரும் திரைப்பட தயாரிப்பு ஆரம்பமானது. இந்நிலையில் ஜோதிடர் ஒருவர் ரஜினியின் செல்வாக்கு சுக்கிரதிசை முடிவடைகிறது இனி அவரால் சினிமாவில் ஜொலிக்கமுடியாது என கூறி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். ராஜ்ஜியமா இல்லை இமயமா இல்லை சினிமாவா இது இன்று அவருக்கே தெரியாது.

இவர்கள் காலத்திலேயே வெற்றிப் படங்களை அடுத்த முதல்வர் என புகழப்பட்ட ராமராஜன் இன்று எங்கே என்ன நிலையிலிருக்கிறார் என பலருக்கு தெரியாமல் போன இந்நேரம் மீண்டும் பீனிக்ஸ் பறவைபோல மேதை படத்தை தொடங்கப்போகிறார்.
மிகச் சிறந்த படங்களை தந்து காதல் இளவரசனாக வலம் வந்த பிரசாந்த் குடும்ப பிரச்சனை மற்றும் சில படத்தோல்விகளால் திரை உலகை விட்டே ஒதுங்கி இருக்கிறார். தன் தந்தையின் மலையூர் மம்பட்டியானாவது தனக்கு கைகொடுக்குமா என இப்போது அதில் நடிக்க போகிறார்.

சிறந்த நடிகர் மட்டுமன்றி ஈகோ இன்றி மற்ற நடிகர்களுடன் இணைந்து கூட நடிக்கத் தயங்காத மாதவனாலும் பெரிய வெற்றிப்படங்களை தரமுடியவில்லை. வேற்று மொழிகளில் கலக்கி எடுக்கிறார்.

சீயான் விக்ரம் சேதுவில் ஆரம்பித்து இன்றுவரை வித்தியாசமான படங்களை தந்தாலும் பீமா எனும் தோல்விப்படத்தை கொடுத்து இன்று ஒரு வருடத்துக்கு மேலாகியும் படம் எதனையும் தராததால் இன்னும் field இல் இருக்கிறாரா இல்லையா என எண்ணத் தோன்றினாலும் கந்தசாமியில் கலக்குவாரென அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அதுமட்டுமில்லாமல் அபிஷேக் பச்சன் ஐஸ்வரயா ராய் பச்சனுடனும் இணைந்து ஹிந்தி மற்றும் தமிழில் ராவணா, அசோகா வனம் என பெயர் வைக்கவே தடுமாறும் படத்தில் மொட்டை போட்டு நடித்து வருகின்றார்.

சூர்யா. ஜோதிகாவுடன் இணைந்து பல வெற்றிப்படங்களைத் தந்து மட்டுமன்றி பல சோதனை முயற்சிகளை செய்கின்றார். நந்தாவில் ஆரம்பித்த இவரின் விஸ்வரூபம் இன்றும் தொடர்கின்றது. வாரணம் ஆயிரம் படத்தில் "சிக்ஸ் பேக்" எடுத்தும் தன் அயராத முயற்சிகளை எடுத்துவருகின்றார். அயனை நம்பும் இவர் இவர் சாதிப்பாரா?

இப்படிக் கஷ்டப்பட்டால் தான் வெற்றி பெறலாமோ?
அல்டிமேட் ஸ்டார் அஜித். எத்தனையோ சோதனைகள் வேதனைகள் எல்லாவற்றையும் தன் தன்னம்பிக்கையால் வென்று அதிக தோல்விப்படங்களை கொடுத்தாலும் பெரிய ரசிகர் கூட்டத்தோடு இடையிடையே மிகப் பிரமாண்ட படங்களை தருவதில் தல எல்லோருக்கும் தல. இருந்தாலும் அண்மையில் வரலாறு படத்தில் தான் இவரின் உண்மையான நடிப்பால் வெற்றி கிடைத்தது. அதன் பின் பில்லா (ரஜினியின் பட ரீமேக்) மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் அதன் பெறுமு முழுவதும் அஜித்தை சாராது. படத்தை கொலொர்புல்லா ஆக தந்த இயக்குனர் விஷ்ணுவர்த்தன், ஏன் ரஜினிக்கு கூட பங்கு உண்டு.இறுதியாக வந்த ஏகன் சராசரியாக ஓடி அஜித்தின் எதிர்பார்ப்பை உடைத்துவிட்டது. அசலை மலைபோல(மலை என்பது திருமலை விஜய் அல்ல) நம்பும் அஜித் கதையையும் நம்பினால் அசத்தலாம்.

இதனால் பார்த்தாலாவது வெற்றி கண்ணுக்கு எட்டுமோ?

இளையதளபதி விஜய். ரஜினிபோல் சிறுவர் முதல் பெரியோர் வரை பலதரப்பட்ட ரசிகர்களை கொண்ட இவர் திருமலையில் தொடங்கிய அதிரடி வெற்றிகளால் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக கடகடவென உயர்ந்து வசூல் சக்கரவர்த்தியுமானார். பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக உள்ளன. தனது தந்தையால் தட்டி பண்படுத்தப் பட்ட இவர் அதிகம் பேசமாட்டார் ஆனால் இவர் படங்கள் அதிகம் பேசப்படும். எனினும் கடைசியாக வந்த படங்களில் இவரது மெகா ஹிட் போக்கிரிதான். அதன் பின் வந்த அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு மூன்றும் சராசரியாக ஊடியவையே. இருந்தாலும் இவரின் மார்க்கெட் ரசிகர் பலம் என்பன குறையவே இல்லை. அரசியலுக்கு ஐவரும் அரிதாரம் பூசினாலும் இப்போது வர சாத்தியமே இல்லை. தன் அடுத்த படமான வேட்டைக்காரனை வசூல்காரனாக்கலாம் என வெற்றிக்காக உழைக்கிறார்.

எப்படி காய் நகர்த்தினாலும் பெரிசா ஜெயிக்கமுடியவில்லையே!

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. இவருடன் கூடவே இருப்பது வம்பு. நயன்தாரா பிரச்சினை ஓய்ந்தாலும் இவர் ஓயவில்லை. ரசிகர்களை எவ்வறெல்லாம் கோபப்படுத்தலாமோ அவ்வாறான படங்களை தன் முயற்ச்சியால் தருவதில் இவர் கெட்டிக்காரர். இருந்தாலும் சகலதும் தெரிந்த சகலகலாவல்லவன். திறமைசாலி சிலம்பாட்டம் வசூலை தந்தாலும் தன் வழமையான playboy ஐ விட்டு விண்ணை தாண்டி செல்லப்போகின்றார். சிம்பு இனியும் வம்புக்கு போகாமல் நல்ல படங்களைத் தந்தால் இவர்போல் சகலகலாவல்லவன் இவர் குழுவில் இவர் தான்.


அவள் பறந்து போனாளே!(கையில் இருக்கும் பேப்பரைபாருங்க தலைகீளைப்படிக்கிறாராம்).
நீங்க சும்மா படம் குடுத்தாலே பயமா இருக்கும். இப்பிடி வேறயா?


தனுஷ். சூப்பர் ஸ்டாரின் மருமகனான பின் இவர் தான் தான் ரஜினி என்பதுபோல் படத் தலைப்பிலும் படங்களிலும் காட்டுவது ரொம்ப ஓவர். தனக்கு பொருத்தமான வேடங்களை தெரிவதிலும் இவர் கில்லாடி. படிக்காதவன் சராசரி வெற்றியைக் கொடுத்தாலும் பொல்லாதவன் பகுதி இரண்டு என பலராலும் விமர்சிக்கப்படுவதால் அடுத்த படத்தில் கவனம் செலுத்தியாக வேண்டும்.


உங்க அளவிலேயே எங்கு இருந்து கையில் வைத்திருப்பதை தேடிப் பிடித்தீர்கள்.


புரட்சித் தளபதி விஷால். ஆரம்பத்தில் இவர் தான் இளைய தளபதி விஜயின் திரையுலக வாரிசென சில ஊடகங்கள் சொன்னாலும் சொன்னார்கள் தனக்கு புரட்சித் தளபதி என பட்டமும் வைத்துக்கொண்டு ரசிக்க முடியாத படத்தை தந்திருக்கிறார். ஆரம்பத்தில் சிறந்த படங்களைத் தந்தவர் தனக்கு பொருந்தாத சத்யம் படத்தை தந்து ஏனோ? தோரனையை ஆவது யோசித்து தந்தால் விஜயின் பாதையை தொடரலாம்.

சின்ன தளபதி பரத். ரஜினி உச்சத்தில் இருக்கும் நேரம் எலோருக்கும் ஸ்டார் பட்டம் போடும் பைத்தியம் பிடித்தது போல் இப்போது எல்லோருக்கும் விஜயின் பட்டமான தளபதி மீது மோகம். அதை நிரூபிக்கும் வகையில் விஜய் நடிக்க சந்தர்ப்பம் கிடைக்காத படங்களைத் தேடிபிடித்து அவரைப்போலவே நடித்து வருகின்றார். காதல், பட்டியல் போல் படம் தந்து ரொம்ப நாளாகி விட்டது.

ஜெயம் ரவி. காதல் கதைகளில் நடிப்பது இவருக்கு அல்வா சாப்பிடுவது போல. சாக்லெட் போயாக வெற்றிகரமாக் ரீமேக் படங்களைத் தந்து கொண்டிருக்கிறார். இது நிரந்தர வெற்றி அல்ல என்பதை உணர்ந்து சுதாகரித்துக்கொள்ளவேண்டும்.

ஜீவா. ராம் எனும் காவியத்தை தந்தவர் கற்றது தமிழ், ராமேஸ்வரம் பட அடியால் தன் பாதையை தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றார். சிவா மனசில சக்தி பார்க்கலாம் ரகம்.

இப்படிப் பெரிய நட்சந்திரங்கள் எல்லாம் தடுமாறிக்கொண்டிருக்க பூ ஸ்ரீகாந்த், நான் கடவுள் ஆர்யா, பருத்திவீரன் கார்த்தி, மற்றும் நகுல், ஜெய் போன்றோரும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். இவற்றை யோசித்தாவது ஸ்டார்களும் தளபதிகளும் நல்ல படங்களை தந்தால் தமிழ் திரை உலகம் உலக அரங்கில் மாபெரும் இட்டதைப் பெறும். அதேபோல் ஹீரோக்களும் நிஜமாகவே ஹீரோக்களாக வலம் வரலாம்.


Wednesday, March 4, 2009

உலக கிரிக்கெட் அரங்கில் ஒரு பலமான அணியாக இருந்து கடந்த ஒரு சில மாதமாக இந்திய அணியிடம் வாங்கிய மரண அடியால் மதுவாக விழுந்து இன்று பாகிஸ்தானில் மலையாக எழுந்து நிற்கிறது இலங்கை அணி.
1996 உலக கிண்ண சாம்பியன் 2007 இல் இறுதிப்போட்டி. முதலாவதில் அர்ஜுன ரணதுங்க இரண்டாவதில் மஹேல ஜெயவர்த்தென. இலங்கை அணி இதுவரை கண்ட மிகச்சிறந்த தலைவர்களில் முதன்மையானவர்கள் இவர்கள்.


எல்லோருக்கும் ஏற்றமும் இறக்கமும் வரும். ஆனால் கடந்த மாதம் இந்திய அணி வரும்போது மஹேல மட்டுமில்லை மஹேந்திர சிங் தோணி கூட நினைத்திருக்க மாட்டார் இப்படி நடக்குமென்று. இந்தியாவின் இளம்படை இலங்கைக்கு கொடுத்த அடி ஒவ்வொன்றும் இடியாக இறங்க ஒருநாள் தொடரின் முதல் 4 போட்டிகளும் இந்தியாவசம். அதுபோதாதென்றது இருபதுக்கு இருபது போட்டியிலும் வெற்றி.
இந்தியா இப்படியா அடித்து துவைப்பது?

இலங்கை துடுப்பாட்டக்காரர்கள் அடிக்கிறார்கள் இல்லையே என ஆதங்கப்பட்டு இலங்கை ரசிகர்கள் அடித்து விட்டனர் இந்திய வீரர்களை.


அதுவும் இருபதுக்கு இருபது போட்டியில் மஹேலவையும் சங்கக்காரவையும் அணியிலிருந்து தூக்கிவிட்டு திலகரத்ன தில்ஷானிடம் தலைமைப்பொறுப்பை வழங்கியும் வைக்கவில்லை.


அது ஒரு காலம்!

அஜந்தா மென்டிஸ் என்ற மாயவலை முற்றாக அறுந்து அழிந்துபோனது.


இவைதான் மகேலவின் அணித்தலைமை பதவியிலிருந்து ராஜினாமா செய்ய காரணம் என வெளிப்படையாக சொல்லப்பட்டாலும் உள்ளேயும் சில காரணங்கள். இவை எல்லாம் நடந்துமுடிந்தவை.


மஹேலவின் அறிவிப்பின் பின் பாகிஸ்தான் பறந்தனர் இலங்கை அணியினர். இன்றைய இந்திய அணியைப்போல் பாகிஸ்தான் பலமான அணியாக இல்லாவிட்டாலும் அந்த அணியையும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம்.


முதலாவது டெஸ்ட் போட்டியில் out of form இலிருந்த மஹேல, திலான் சமரவீரவுடன் இணைந்து விஸ்வரூபம் கொண்டு சாதனை ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டார். இவர் ஏன் தலைமைப்பொறுப்பில் இருந்து விலகவேண்டும் என எல்லோர் மனதிலும் ஒரு கேள்வியை எழுப்பினார். அது சரியானதே.


ஆனால் பாகிஸ்தான் அணியினரும் சளைக்காமல் ஓட்டங்களை குவித்து அந்தப் போட்டியை ஒரு செத்த போட்டியாக மாற்றினர்.மஹேலவின் தலைமையில் இறுதிப்போட்டி. தொடரை தீர்மானிக்கப்போகும் போட்டி எனும் சுவாரஸ்யத்தோடு ஆரம்பமான போட்டியில் மஹேல எடுத்ததோ சொற்ப ஓட்டங்கள். எனினும் சமரவீரவின் அற்புத ஆட்டத்தால் தலைநிமிர்ந்து நின்றது ஸ்ரீ லங்கா. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானின் ஆட்டத்தைப் பார்த்தால் இதுவும் ஒரு செத்த போட்டியாக மாறும்போலத்தான் இருந்தது.


இலங்கைக்கு இன்னும் டெஸ்டில் ஒரு சிறந்த ஆரம்ப இணை கிடைக்கவில்லை என்பது துரதிஸ்டமே.

நீங்கதான் வரனும்போலகிடக்கு


இந்த தொடரில் நேற்று நடந்த அசம்பாவிதம் இரு அணிகளுக்கு மட்டுமன்றி விளையாட்டு உலகுக்கே ஒரு பேரிடியாக அமைந்து விட்டது.


இந்த தொடருடன் மஹேலவின் தலைமைப்பதவி?


அடுத்து?

சங்கக்கார!

நானா அடுத்தது?

உலகின் சிறந்த விக்கெட் காப்பாளர் மட்டுமன்றி சிறந்த துடுப்பாட்ட வீரானும்தான் ஆனால் தலைமைப்பதவியில் ஜொலிப்பாரா தெரியவில்லை.


டில்ஷானுக்கும் இந்த பதவிக்கும் இப்போது எட்டப்போருத்தம் என்பதை அவரே இந்தியாவுடனான இருபதுக்கு இருபது போட்டியில் நிரூபித்துவிட்டார். மீறிக் கொடுத்தால் அது அணிக்கும் வெற்றிக்கும் எட்டாக்கனியாகிவிடும்.


சனத் ஜெயசூரிய.


இன்னும் எத்தனை நாட்களுக்கோ? மனிதர் கொடுத்தாலும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. வந்து இறங்கி விசுக்கவே அவர் மனம் ஏங்கும்.


வரும்போது சூறாவளியாக வந்து எமி அணிக்கு முரளியே வேண்டாம் என ஒதுக்க வைத்து அடுத்த தலைவர் என புகழப்பட்ட அஜந்த மென்டிஸ் தன் பந்து வீச்சையே சரியாக செய்யமுடியாது இந்தியாவிடம் அடி வாங்கி சின்னாபின்னமாகி அணி பதினோரு பேருக்குள்ளேயே இடம்பெற இன்று தவித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு தலைமைப்பதவி?????????


இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார் என அவருக்கே தெரியாது. ஒரு நாள் அணியில் இல்லை. டெஸ்ட் அணியிலோ சோதனையில். இந்த நிலையிலும் சமிந்த வாஸ் தலைவராவது பொருத்தமில்லை.


இந்தியாவுடன் எல்லோரும் தடுமாறிய வேளையில் தனியாக விளாசிய திலின கண்டம்பியிடம் ஒருநாள் மற்றும் 20க்கு 20 போட்டியில் அணித்தலைமை பொறுப்பை ஒப்படைப்பது மிகச் சரியாக இருக்கும் என நினைக்கின்றேன். இவரின் துடுப்பாட்டம் முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலியை நினைவுபடுத்துகின்றது. அதுமட்டுமன்றி புதிய துடிப்பான இளம் தலைவரை இலங்கை அணி பெறும்.


இந்தியாவின் தோணி மற்றும் தென் ஆபிரிக்காவின் சிமித் இதற்கு நல்ல உதாரணங்கள். அதே நேரம் டெஸ்ட் அணிக்கு முதுகெலும்பாக இருக்கும் திலான் சமரவீரவை தலைவராக்கலாம். அப்படி இல்லை எனில் சகலதுறையிலும் பிரகாசிக்கும் Farveez Maharoof சகல போட்டிகளிலும் தலைவராக்கினால் அவர் சிறந்த தலைவராக விளங்க வாய்ப்புள்ளது.


எனியாவது கிடைக்குமா?

இவர்களை எல்லாம் விட தலைமைப்பதவி கொடுத்து கௌரவப்படுத்த வேண்டிய அனுபவமுள்ள துடிப்பான ஒருவரும் அணியில் இருக்கிறார். ஆனால் அவருக்கு தலைமைப்பதவி கிடைக்குமா என்பது வடதுருவமும் தென்துருவமும்தான். பல சாதனைகளின் சொந்தக்காரனும் எங்கேயும் எப்போதும் இலங்கையின் வெற்றிக்கு காரணமுமான மாஜாயால மன்னன் முத்தையா முரளிதரன் தான்.2011 உலகக் கிண்ணம் வரை விளையாடுவேன் என அறிவித்திருப்பதால் அவரிடம் அணியை ஒப்படைத்து மதிப்பளிக்கலாம். (முரளி ஏற்க்கனவே தனக்கு தலைமைப்பதவி வேண்டாம் என பேட்டி கொடுத்ததெல்லாம் வேறு கதை). 20க்கு 20௦க்கு தலைவராக ஒரு புதிய இளம் வீரரை நியமித்து அவரை பயிற்றுவிக்கலாம். அவர் திலின கண்டம்பியாக இருந்தால் நல்லது.


அணில் கும்ப்ளே என்னும் சகாப்தத்துக்கு அவரின் கடைசிக் காலத்திலாவது தலைமைப் பதவி கொடுத்து கௌரவப்படுத்திய இந்தியாவைப் பார்த்தாவது(எதற்கும் இந்தியாவிடம் ஐடியா கேட்கும்) இலங்கை முரளிக்கும் ஒரு மணி மகுடம் சூட்டுமா? அல்லது இப்போதும் கொடுக்காது அவர் மனதை முள் கொண்டு தைக்குமா?

Sunday, March 1, 2009

வெற்றி வானலை வழியே உங்கள் அனைவரையும் சந்தித்துக்கொண்டிருந்த நான் இன்று முதல் உங்களை வலைப்பூ வாயிலாக சந்திக்கப்போகின்றேன்.


என் மனதில் தோன்றும் எண்ணங்களையும் பல நல்ல விடயங்களையும் இதன் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.


உங்கள் பின்னூட்டங்களை என் ஆக்கங்கங்களுக்கும் இட்டு எனக்கு ஊக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடு சுவாரஸ்யமான பல விடயங்களோடு விரைவில் சந்திப்போம்.


இந்த நேரத்தில் நான் இந்த வலைப்பூவை ஆரம்பிக்க எனக்கு வழிகாட்டியாக இருந்த எங்கள் வெற்றி வானொலியின் முகாமையாளரும் அறிவிப்பாளருமான லோஷன் அண்ணாவிற்கும் எங்கள் செய்திப்பிரிவைச் சேர்ந்த என் நண்பர்களான அருண் மற்றும் விஜயகுமாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து மகிழ்கின்றேன்.


சந்திப்போம்......

அடிக்கடி வருவன்.

வரட்டா...................

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive