இளம் கலை-இலக்கிய ஆர்வலர்களின் ஒன்றிணைவில் கடந்த வருட நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டு, வவுனியா மாவட்டத்தில் கலை இலக்கிய ரீதியிலான தொடர்ச்சியான பணிகளை சிறப்பாக செய்து வருகின்ற, தமிழ் மாமன்றம், தனது முதலாவது பொது விழாவான 'இயல் விழா 2014' இனை இம்மாதம்(மார்ச் மாதம்) 30ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, வவுனியா கலாசார மண்டபத்தில் நடாத்தவுள்ளது.
இவ் இயல் விழாவில், உலக அளவில் பிரசித்தி பெற்ற சிறந்த பேச்சாளரும், அகில இலங்கைக் கம்பன் கழகத்தினுடைய ஸ்தாபகருமான, கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
காலை 9 மணி தொடக்கம் 12.30 மணி வரை காலை அமர்வும், மாலை 4.00 மணி தொடக்கம் 8.30 மணி வரை மாலை அமர்வும் இடம்பெறவுள்ளது. காலை அமர்விலே பாடசாலை மாணவர்கள் பங்கேற்று விவாதம் புரியும் விவாத அரங்கு "பாரதி மகாகவியாய் நின்று நிலைப்பதற்குப் பெரிதும் காரணமாவது , தேச விடுதலைப்பாடல்களே !, தெய்வ வணக்கப் பாடல்களே!, தமிழ் வாழ்த்துப் பாடல்களே !, பெண் விடுதலைப்பாடல்களே !, சாதி எதிர்ப்புப் பாடல்களே !, சுயசரிதைப் பாடல்களே!" என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது. இவ்விவாத அரங்கிற்குத் தமிழாசிரியர் என். கே. கஜரூபன் அவர்கள் நடுவாண்மை புரியவுள்ளார்.
காலை அமர்விலே இரண்டாவது நிகழ்வாகத் தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் களம் காணும் சுழலும் சொற்போர் இடம்பெறவுள்ளது. "வள்ளுவன் கூறும் பெண்மை ஆற்றலில் பெரிதும் சிறந்தவள், கண்ணகியே !, சீதையே !, பாஞ்சாலியே !, தாரையே !, புனிதவதியே !, கைகேயியே !" என்ற தலைப்பில் அமைந்த சுழலும் சொற்போரினை, கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் நடுவுநிலைமை புரிந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மாலை அமர்வில் முதல் நிகழ்வாக கவிஞர் ஐங்கரன் அவர்கள் தலைமையில் தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கவியரங்கு இடம்பெறவுள்ளது. "நால்வர் நற்றமிழ்" என்ற பொதுத் தலைப்பிலே இடம்பெறும் இக்கவியரங்கில் "நாமார்க்கும் குடியல்லோம் - அப்பர்", "மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சம்பந்தர்", "ஆளிலை எம்பெருமான் - சுந்தரர்", "மூர்க்கரொடும் முயல்வேனை - மாணிக்கவாசகர்" என்ற நான்கு தலைப்புக்களில் கவி பாடவுள்ளனர்.
மாலை அமர்விலே இரண்டாவது நிகழ்வாகவும் விழாவின் சிறப்பு நிகழ்வாகவும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் தலைமையில், நாட்டின் பல பாகங்களில் இருந்து கலந்து கொள்ளும் சிறப்புப் பேச்சாளர்களும் தமிழ் மாமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் பட்டி மன்றம் இடம் பெறவுள்ளது. இப்பட்டி மன்றம், "செயற்கரும் செய்கை செய்த தீரருள் முன்னிற்பவர், சிறுத்தொண்டரே !, நீலகண்டரே !, கண்ணப்பரே !" என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது.
குறைந்து செல்லும் தமிழார்வத்ததை, மீண்டும் துலங்க
வைத்து, வவுனியா மாவட்டத்தினுடைய, கலை இலக்கிய ரசனையும், இளம் சமுதாயத்தினுடைய கலை இலக்கிய ஆர்வத்தையும் பெரிதும் உயர்த்திச் செல்ல, இவ் விழா கால்கோளாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
உங்கள்
சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்
உங்கள்
சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
எம்
சமூக கருத்துக்கள்
சதீஷ் தொகுத்த
பொது நிகழ்வுகள்
ஒரே தளத்தில்
இன்னும் பல