
Super Singers அழைக்க செல்லும்போது ஏற்பட்ட சிறு தடங்கலில் விட்டிருந்தேன். இதோ தொடர்கின்றேன்.......... காலை 9.30க்கு என் வீட்டுக்கு மாருதி குமார் அண்ணா வருவதாக சொன்னார். அதன் படியே நானும் தயாராகிவிட்டேன். குமார் அண்ணாவை காணவில்லை. மனிதருக்கு என் வீடு தெரியாது எங்கேனும் மாறிப் போய்விடுவாரோ? என மனதுக்குள் பயம். அவருக்கு தொலைபேசி அழைப்பெடுக்க அதுவும் ஏற்படவில்லை. என்ன செய்வதென தெரியாமல் ஜெய்சனிடம் விடயத்தை சொன்னேன்.இதற்கிடையில் லோஷன் அண்ணாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு "என்ன விமான நிலையத்துக்கு கிளம்பியாச்சா?" என்றார். குமார் அண்ணா இன்னும் வரவில்லை என அவருக்கு சொன்னேன். அத்துடன் ஜெய்சனிடம் நான் இதைப்பற்றி கூறியதை சொன்னவுடன், தானும் குமார் அண்ணாவுடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக லோஷன் அண்ணா சொன்னார். மீண்டும் சிணுங்கியது என் கையடக்கத்தொலைபேசி."குமார் அண்ணா வந்து கொண்டிருக்கின்றார், இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவார் என" ஜெய்சன் சொல்ல நானும் அவருக்காக காத்திருக்க ஒருவாறு வந்து சேர்ந்தார்.
என் வீட்டில் இருந்து புறப்பட்ட சற்று நேரத்தில் லோஷன் அண்ணாவிற்கு தொடர்பை ஏற்படுத்தி நாங்கள் செல்லும் விடயத்தை சொன்னேன். அதன் பின் பம்பலப்பிட்டியில் ஐஸ்வர் என்கிற சிறுவனும் அவரின் தந்தையும் ஏறிக்கொள்ள நான் முன்னுக்கிருந்து பின்னுக்கு சென்றுவிட்டேன். காரணம் புதிதாக ஏறிய நபர் வாகனத்தை செலுத்த குமார் அண்ணா எழுந்து பின்னுக்கு செல்ல என் மனம் முன்னுக்கு இருக்க இடம் கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு நான் பின்னுக்கு சென்றுவிட்டேன். அதன் பின் அந்த சிறுவனுடன் உரையாடியவண்ணம், நம் தினேஷை ஏற்றுவதற்காக சென்றோம். (அந்த பையன் எனது நானாட நீயாட நிகழ்ச்சியை கேட்பவராம். அப்பாடா ஒருவராவது நான் செய்யிறத கேட்கின்றார்.)

தினேஷை ஏற்றியவுடன் வாகனம் விமான நிலையத்தை நோக்கி மிக வேகமாக செல்ல தொடங்கியது. வெற்றியை ஒலிக்க விட்டபடி நாங்கள் பயணித்துக்கொண்டிருந்தோம். உலாவரும் உற்சாகம் நிகழ்ச்சியில் வைதேகியும்,பூஜாவும் எங்களை கலாய்த்துவிட்டனர். பதிலுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய வேண்டாமா அதற்கும் தயாரானோம். என்ன செய்திருப்போம்? இன்னும் கொஞ்சம் காத்திருங்கள் அந்த இனிய நினைவை சொல்கின்றேன்.