போப் இசை சக்கரவர்த்தி மைக்கல் ஜாக்சன் இன்னும் இறக்கவில்லை அவர் உயிரோடு தான் இருக்கின்றார், மிக விரைவில் மீண்டும் வருவார் என ஒரு சில ரசிகர்கள் பரபரப்பை ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவரின் ஆவியை பார்த்ததாக சொல்லும் சிலரும் இருப்பது மேலும் பரபரப்பை ஏற்ப்படுத்தி இருக்கின்றது.
வாழும் போதும் சர்ச்சை, மறைந்தாலும் சர்ச்சை இப்போது அவர் உடல் அடக்கம் செய்யப்படப்போகும் இந்த இறுதி நேரத்திலும் சர்ச்சை என சர்ச்சைகளின் நாயகனாக செத்தும் வாழ்கின்றார் மைக்கல் ஜாக்சன். இன்னும் சற்று நேரத்தில் அவரது உடல் கூட மறையப்போகும் நேரத்தில் அவருக்கு சொந்தமான நெவர்லேன்ட் பண்ணையில் ஜாக்சனின் ஆவி உலவுவதாக இப்போது ஒரு கதை பரவ ஆரம்பித்திருக்கின்றது.
மைக்கல் ஜாக்சனின் அந்த பண்ணை வீட்டின் சுவரில் அவரின் நிழல் உருவம் தோன்றி பின்னர் மீண்டும் மறைந்து விட்டதாக CNN தொலைக்காட்சியின் இன்சைட் நெவெர்லந்த் என்ற நிகழ்ச்சியில் ஒரு சில ரசிகர்கள் தெரிவித்து இருக்கின்றார்கள். அந்த உருவம் பண்ணை வீட்டின் கொரிடோர் வழியாக சென்று மறைந்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஜாக்சனின் பல ரசிகர்கள் இதனால் குழப்பமடைந்திருக்கின்றார்கள். எதுவாக இருப்பினும் மரணித்தும் ஒரு சகாப்தமாக வாழும் மைக்கல் ஜாக்சனின் பெயரை சொல்லி யாரும் தவறுகள் செய்யாமல் இருப்பதே அந்த அற்புத கலைஞனுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் ஆகும். இன்னும் சற்று நேரத்தில் அடங்கப்போகும் அவரின் உடலோடு சர்ச்சைகளும் அடங்கி அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.