இந்த உலகில் அடுத்தவர்களை துன்புறுத்தும் மனிதர்கள் இருக்கும் இந்த நிலையில் உன்னதமான இடத்தில் இருக்கும் ஒருவர், ஒரு மதத்தின் உன்னத குருவாக இருந்த ஒருவர் தன்னை தானே வதைத்ததை இன்று இணையத்தில் மேய்ந்தபோது அறிந்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
போப்பாண்டவர் 2ம் ஜான் பால், போப்பாக இருந்தபோது தன்னைத் தானே பெல்ட்டால் அடித்துக் கொள்ளும் பழக்கம் கொண்டிருந்ததாக ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.பிஷப்பாக இருந்தபோதிலிருந்தே இந்தப் பழக்கம் அவரிடம் இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையான கிறிஸ்தவராக இந்த உலகில் தான் முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்பதற்காக போப் இப்படி நடந்தார் என்று Why He's a Saint என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் நடக்கும் பாவங்களை எண்ணி வருந்தி அவர் இந்த தண்டனையை தனக்கு கொடுத்ததாக அதில் சொல்லப்பட்டுள்ளது.
இதை நம்பலாமா இல்லையா என்ற கேள்வி ஒருசிலருக்கு எல்லாம் ஆனால் இதை சொல்பவர் போப்க்கு புனிதர் பட்டம் வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் முக்கிய இடம் பிடித்த மான்சிக்னர் ஸ்லவோமிர் ஓடர் என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
இதை பற்றி கருத்து தெரிவித்த நூலாசிரியர் போப் தன்னை வருத்தியத்தில் தவறில்லை என்றும் கிறிஸ்தவர்கள் சிலர் இயேசு சிலுவையில் அறைந்ததை நினைவு கூரும் முகமாக இப்படியாக தம்மை வருத்துவது வழக்கமான ஒரு விடயம் என சொல்கின்றார்.
இது மட்டுமல்லாமல் பலமுறை உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு இருப்பார் போப்பாண்டவர் 2ம் ஜான் பால். மேலும், வெறும் தரையிலும் படுத்துத் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் மற்றவர்களுக்கு அது தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தனது படுக்கையை தானே கலைத்து விட்டு அதில் படுத்துத் தூங்கியது போல காட்டிக் கொள்வார்.
போப்பாண்டவர் தன்னைத் தானே வருத்திக் கொள்வதை தங்கள் காதுகளால் கேட்டதாக போலந்திலும் (அவர் பிஷப்பாக இருந்தபோது), வாடிகன் சிட்டியிலும் பணியாற்றிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் மான்சிக்னர்.
உண்மையில் ஆச்சரியம் மட்டுமல்ல மரியாதையும் கவலையையும் தரும் ஒரு செயல் தான் இது. மதங்களை தாண்டி ஒரு மனிதனாக போப்க்கு தலை வணங்குகின்றேன்.
பி.கு: கிட்டத்தட்ட ஒரு மாதமாக எனக்கு பதிவெழுத ஏனோ தோன்றவில்லை. காரணங்கள் பல சொல்லலாம் மாத ஆரம்பத்தில் எங்கள் வானொலி சார்பாக யாழ் விஜயம், வந்திறங்கியவுடன் சுகவீனம், அதன் பின் என் தனிப்பட்ட சில ஆணி பிடுங்கல்கள் என போய்க்கொண்டிருக்க இன்று ஏனோ இந்த செய்தியை படித்தவுடன் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம் என முடிவெடுத்து எழுதிவிட்டேன். நாங்கள் தான் ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா எங்க பேச்சையே கேட்க மாட்டோமே. அடிக்கடி வருவேன் என்ற நம்பிக்கையில் வேட்டையை ஆரம்பிக்கின்றேன்.
அறுவை: நண்பர்களுக்கு பிந்திய பொங்கல் வாழ்த்துக்கள். ஹி ஹி ஹி