எந்த மனிதனானாலும் தன் கருத்தை சொல்ல உரிமை இருக்கின்றது அதுவும் உங்கள் துறையில் நடக்கும் விடயங்களை பற்றி சொல்ல நிச்சயமாக உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அந்தக் கருத்துக்களை சொல்ல முதல் சற்றே சிந்திப்பது ஒரு அறிவாளியின் பண்பென நான் நினைக்கின்றேன்.
அண்மையில் நீங்கள் அங்காடித்தெரு திரைப்பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசியது எனக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் நிறைய மாற்றங்கள் நடக்கின்றது, ஆனால் இன்னும் மாற்றங்கள் வேண்டும் என்றீர்கள். அது மிகச்சரியானதே. உண்மையில் இன்று தமிழ் சினிமா உலகத்தரத்தை எட்டி இருக்கின்றது பல மொழி சினிமாக்களோடு போட்டிபோட்டு விருதுகளையும் குறிவைக்கின்றது.
தமிழ் படங்களில் காதல் பாடல் அன்றிலிருந்து இன்றுவரை இருக்கின்றது. அது எரிச்சலூட்டுகின்றது என்றீர்கள். அதுமட்டுமில்லாமல் அதை மாற்ற முயன்றீர்கள் என்றும் சொல்கின்றீர்கள். ஆனால் உங்களால் காதலையோ அல்லது காதலர்களின் பழக்க வழக்கங்களையோ மாற்றமுடியாது. உங்களுக்கு முன்னைய கால பாடல் காட்சிகள் பிடிக்காமல் தான் நீங்கள் நடன அமைப்பை மாற்றியதாக சொல்கின்றீர்கள். அப்படித்தான் காலத்தின் மாற்றத்தில் மாற்றம் என்பது மட்டும் மாறாமல் இன்று நடனத்தில் பல மாற்றங்கள். ஒரு முன்னோடி என்னும் ரீதியில் அதை நீங்கள் வரவேற்க தான் வேண்டும்.
குரங்கிலிருந்து தானே மனிதன் வந்தான் எனவே அவர்கள் குரங்காட்டம் போடுவதை பாத்து நீங்கள் கவலைப்பட்டு பிரயோசனமில்லை. உங்கள் மூன்றாம் பிறை படத்தில் நீங்கள் காட்சிப்படுத்தியசில காட்சிகள் இன்றும் காரம் குறையவில்லையே. சிலுக்கும் கமலும் ஆடிய ஆட்டக்த்துக்கு என்ன பதில் ஐயா? போதை ஏறிய குரங்கு குட்டிகள் என்கிறீர்கள் நீங்கள் பாடல் மூலம் போதை ஏற்றியதை மறந்து விட்டு. ஆனால் நீங்கள் சொல்வதுபோல் சிலர் செயற்ப்படுகின்றனர்தான். அதற்காக ஒட்டுமொத்தமாக நீங்கள் சொன்ன குறையை ஏற்க முடியாது. இது காலத்தின் மாற்றம் ரசனையின் வித்தியாசம் எனவே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
பாகவதர்-சின்னப்பா காலம் பிடிக்காமல் போய்த்தான் எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் என தலைமுறை மாற்றத்தில் கதை திரைக்கதை பாடல்கள் நடன அமைப்பு என்பன மாறிவருகின்றது.( பழைய கதைகளை இன்றைய இயக்குனர்கள் தங்கள் சொந்தக்கதை என்பது வேறு கதை.) இன்று இப்படி ஆடினால் தான் நடனம் பதினைந்து வருடத்துக்கு முன் வந்த நடனத்தை பார்த்தால் இன்றைய தலைமுறை சிரிக்கின்றது. இதுதான் இன்னும் பத்து வருடத்தில் நடக்கப்போகின்றது. இதை எல்லாம் நான் சொல்லித்தான் உங்களுக்கு புரியும் என்றில்லை. (ஜாம்பவானான நீங்கள் கொடுத்த அது ஒரு கனாக்காலம் படம் இதற்கு உதாரணம்)
நீங்கள் சொன்னது போல் பக்கத்து வீட்டு பையன் போல பொண்ணு போல்த்தான் இருக்கவேண்டும் நடிகர்கள் என்பதும் சரியே. இருப்பினும் வர்த்தக சினிமா கலைப்படைப்பு என்னும் இரண்டு வகையில் வர்த்தகப்படைப்பில் நிச்சயம் நீங்கள் உடைக்க வேண்டும் எனும் Star அந்தஸ்து தான் மிகப்பெரிய பலமே. தான் செய்ய நினைக்கும் ஆனால் செய்யமுடியாததை தன் ஹீரோ, ஹீரோயின் செய்யும் பொது சந்தோசப்படும் சராசரி ரசிகனை திருப்திப்படுத்தும் சினிமாவால் கலைப்படைப்பை ரசிப்பவரையும் கலைப்படைப்பை ரசிப்பவரை வணிக ரீதியான படங்களும் திருப்திப்படுத்தமுடியாது என்பது உங்களுக்கு தெரியாததல்ல.
கலைஞன் என்பதை விட மிகச்சிறந்த ஒரு ரசிகனான நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறான வார்த்தையை பாவித்ததுக்கு உங்கள் படங்களின் ரசிகனான நான் வருந்துகின்றேன். இனிமேலாவது பொது இடங்களில் சாதாரண ரசிகர்களின் ரசனைக்கும் மதிப்பளிப்பீர்கள் என நம்புகின்றேன்.
இது உங்களை குறை கூற அல்ல என் ஆதங்கமே. ஒரு கடைக்கோடி ரசிகன் நான் எனவே என் கருத்தில் பிழை இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இல்லையேல் கொஞ்சம் மனதில் பத்துக்கொள்ளுங்கள்.
0 கருத்துரைகள்:
Post a Comment