Tuesday, June 25, 2013

ICC Champion கிண்ணமும் எதிர்கால இந்தியாவும்.

ஐ.சி.சி சாம்பியன் கிண்ணம் மழையையும் வென்று இந்தியா வசம் ஆகிவிட்டது. எதிர்பார்த்த பல அணிகள் பல் இழித்து நிற்க திடீர் விஸ்வரூபம் எடுத்த இந்தியா சாதித்து விட்டது. அதுவும் எதிர்கால நம்பிக்கைகளுடன்.



போட்டி ஆரம்பிக்க முன் பெரிதும் எதிர்பார்த்த தென் ஆபிரிக்கா முதல் போட்டியில் இந்தியாவிடம் மண்டியிட்டாலும் எப்போதும் அவர்களுக்கு வில்லானாக அமையும் மழை இம்முறை கை கொடுக்க அரை இறுதியை அடைந்துவிட்டது. அதே குழுவில் இடம்பிடித்த பாகிஸ்தானோ கனடா அணியை விட கேவலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறிவிட மீண்டும் 1970/80 காலங்களை நினைவில் கொண்டுவரும் மேற்கிந்திய தீவுகளும் இம்முறை தனது அசுர பலத்தைக் காட்டியது. துரதிஷ்டம் துரத்தவே அவர்களும் அவுட். வழக்கத்துக்கு மாறாக இந்தியா இந்த மூன்று அணிகளையும் ப்பூ என ஊதித்தள்ளி முதல் ஆளாக அரை இறுதிக்குள் நுழைந்து நின்றது.



மறுபுறமோ யார் உள்ளே யார் வெளியே என்பதை தீர்மானிக்க பபிள்கம் இழுபடுவது போல எல்லா போட்டிகளும் இழுவை.  கடந்த இரு முறை சாம்பியன் ஆன அவுஸ்திரேலியா இம்முறை ஒரு போட்டியிலும் வெல்லாது வெளியேறியது. நீண்ட கால ஜாம்பவான்களின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. நம்பிக்கைக்குரிய வீரர்கள் என்று இப்போது யாருமே இல்லை. வாட்சன் எப்போதாவாது பிரகாசிக்கின்றார். மழை கை கொடுத்திருக்காவிட்டால் சில நேரம் கிடைத்த அந்த ஒரு புள்ளியும் கை விட்டு போயிருக்கும். ஆனால் அந்த போட்டியில் ஓரளவுக்கு அவுஸ்திரேலிய கை ஓங்கி இருந்தது.



அடுத்தவர்கள் இவர்களின் அயல் நாட்டுக்காரர்கள். திறமையான வீரர்கள் இருந்தும் பெரிதாய் சாதிக்க தவறும் அணி, இம்முறையும் பலமாய் வந்து கடைசியில் பாவமாய் வெளியேறினார்கள். இலங்கை அணியோ இம்முறை தடுமாற்றத்தின் மேல் தடுமாற்றம் கண்டு கடைசி நேர துடிப்பால் அரை இறுதியை அடைந்தது. சங்கா, மகேல தாண்டி இளம் வீரர்கள் பலர் கைவிட்டு விட்டனர். அத்துடன் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு மத்தியூசின் தலைமைத்துவத்தில் உடன்பாடில்லை.(என் கருத்து மாத்திரமே) ஒரு சோம்பேறி போன்று களத்தில் இருக்கும் ஒருவர் எப்படி மற்ற வீரர்களை ஊக்குவிக்க முடியும். இந்த விசயத்தில் எனக்கு என்னவோ சந்திமால் சிறப்பான தெரிவாக இருக்கும் என நினைக்கின்றேன். கொஞ்சம் வாய்ப்பை குடுத்து எதிர்காலத்தை யோசிக்கலாமே. மறுபுறம் இங்கிலாந்து அணி இலங்கையுடன் மாத்திரம் தோல்வி அடைந்தாலும் தங்கள் தாயகத்தில் மிகப்பலம் பொருந்திய அணியாக இந்த தொடரில் சிறப்பாக செயற்ப்பட்டனர். குக்கின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை அளிக்கின்றது இந்த அணி.



இந்நிலையில் முதல் அரை இறுதியில் தென் ஆபிரிக்காவும் இங்கிலாந்தும் மோதின. ஒட்டுமொத்த பலத்தையும் இங்கிலாந்து காட்ட பெட்டிப்பாம்பாய் சுருண்டது தென் ஆபிரிக்கா. இம்முறையும் துரதிஷ்டம் அவர்களை தொற்றிக்கொண்டது. பந்து வீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என அனைத்திலும் அசத்திய இங்கிலாந்து புதிய வேகத்துடனும் பலத்துடனும் தங்கள் மண்ணில் இன்னொரு இறுதிப்போட்டியில் காலடி வைத்தது.



மறுபுறம் போர் அடித்தால் மாறி மாறி அடிவாங்கும் அண்ணனும் தம்பியும். இம்முறை இந்தியா கொண்டிருக்கும் பலத்துடன் ஒப்பிட்டால் காலுக்குள் போட்டு நசுக்கி விடுவார்கள் என விமர்சிக்கப்பட்டாலும் முக்கியமான போட்டிகளில் இலங்கை அணி எளிதில் சோடை போகாது என்ற நம்பிக்கையில் அடுத்த அரை இறுதி. ஆனால் எப்போதும் இல்லாதளவு பலமான பந்துவீச்சை கொண்டிருக்கும் இந்திய அணியிடம் இலங்கையின் பம்மாத்து ஆட்டம் பலிக்கவில்லை. குறைந்த ஓட்டத்துக்குள் சுருட்டி வேகமாய் அடித்து நொறுக்கி பெட்டி படுக்கையை கட்ட வைத்துவிட்டது இந்தியா.

இப்போது முதன் முறையாக ஒரு ஐ.சி.சி இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து. பலம் என்று பார்க்கும் பொது இந்தியா கொஞ்சம் மேலே தெரிந்தாலும் அரை இறுதியில் தென் ஆபிரிக்காவை சுருட்டிய விதம் சொந்த மண் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு அலேர்ஜி என இங்கிலாந்துக்கும் ஒரு நம்பிக்கை கொடுத்தது.



போட்டி ஆரம்பிக்க முன்னரே மழை விளையாட்டை தொடங்கிவிட்டது. (வானொலியில் நேரடி வர்ணனைக்கு காத்திருந்து சலித்தது தான் மிச்சம்.) 50ஓவர் போட்டி 20ஓவராக மாறியதும் தாதா கங்குலி இந்த வகை கிரிக்கெட்டில் இந்தியா புலி என நம்ம தாத்தா சாரி தல லோஷன் அண்ணாவோ அதெல்லாம் இந்தியாவிலும் ஐ.பி.எல்லிலும் என ஸ்டேடஸ் போட இந்தியாவின் துடுப்பாட்டமும் கங்குலி இருந்த நேரமெல்லாம் எப்படி இறுதி வரை வந்து கோட்டை விடுவார்களோ அதே கதை தான் இந்த முறையும் என நினைக்க வைத்துவிட்டார்கள். ஆரம்பம் முதலே மழை விளையாட இடை இடையே இவர்கள் விளையாட என போட்டியும் பெரிய சூட்டை கொடுக்கவில்லை.

இந்த தொடர் முழுவதும் பிரகாசித்த இந்தியாவின் ஆரம்ப ஜோடி இறுதியில் அம்பேல். தவான் கொஞ்சம் முயன்று பார்த்தாலும் முடியவில்லை. எப்போதும் அசத்தும் கோலி இங்கும் தனது பங்கை சிறப்பாக வழங்கினார் இறுதியில் அந்த துடுப்பாட்டம் தான் இந்தியாவின் வெற்றிக்கும் கை கொடுத்தது. தொடர்ந்து இம்முறை ஆரம்ப போட்டியிலும் பயிற்சி போட்டியிலும் அசத்திய தினேஷ் கார்த்திக் தான் வந்த வேலையை மறந்து கஜினி ஆனது தான் மிச்சம். எப்போதும் உச்சம் போவதும் பின் அடி மட்டம் செல்வதும் இவரை கேட்டுத்தான். தொடர்ந்து அணியில் இருப்பதெல்லாம் நடக்காது. அடுத்தவர் ஐ.பி.எல் நாயகன் ரைனா அணியில 11 பேர் வேண்டும் என்றதுக்காக ஆடினவர் போல இருக்கு. தலையும் இம்முறை பெரிதாய் துடுப்பால் சாதிக்கவில்லை. எல்லோருக்காகவும் சேர்த்து இம்முறை சாதித்தது Sir தான். கடந்த சில வருடங்களுக்கு முன் தோணி அதிகம் இவருக்கு சப்போர்ட் பண்ணுகிறார் உருப்படமாட்டார் என்று எல்லாம் விமர்சிக்கப்பட்ட ஜடேயா தான் இப்போது இந்தியாவின் அசகாய சூரன். கையில் துடுப்பிருந்தா பந்து பறக்கிறது பந்து இருந்தா விக்கெட் பறக்கிறது களத்தடுப்பு செய்தா பயபுள்ள பறக்கிறது.



துடுப்பாட்டத்தில் ஒட்டு மொத்த சொதப்பல் முடிந்த பின் இங்கிலாந்து தனது ஆட்டத்தை ஆரம்பித்தது. ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் இந்தியாவின் தற்போதைய வேகப்பந்து நம்பிக்கை யாதவ். மறுபுறம் புவநேஷும் சிறப்பாக பந்துவீச இங்கிலாந்து ஆட்டம் காண தொடங்கியது. இருந்தாலும் ஆஷிஷ் நெஹ்ராவின் வாரிசு இஷாந் ஷர்மா(எப்போ ரன் கொடுப்பாங்க எப்ப விக்கெட் விழுமென்று அவங்களுக்கே தெரியாது) பந்து வீச இங்கிலாந்து பக்கம் காற்று வீசியது. இந்நிலையில் ஜடேயாவும் அஷ்வினும் சுழலில் சுழற்ற இங்கிலாந்தும் தடுமாறி தடுமாறி வெற்றியை நோக்கி நகர்ந்தது. பந்து வீச்சில் வில்லனான இந்திய வம்சாவளி வீரர் போபரா துடுப்பில் தடை போட மோர்கன் மறுபுறம் கை கொடுக்க வெற்றியை உறுதியுடன் நெருங்கியது இங்கிலாந்து. அப்போதுதான் அந்த உலக அதிசயம் நடந்தது. உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்???? இஷாந்த் ஷர்மா அடுத்தடுத்து இந்த இரண்டு பேரையும் அனுப்பி வைக்க இந்தியாவின் கை ஓங்கியது. இறுதியில் சுழல் நாயகர்கள் இருவரும் வெற்றியை உறுதி செய்து தோணி கையில் இதுவரை தவழாத அந்த ஒரே கிண்ணத்தையும் தவழ வைத்து விட்டனர்.



இம்முறை ஐ.சி.சி கிண்ணத்தின் பின்னர் ஒவ்வொரு அணிகள் மீதான என் கணிப்புக்கள்.

அவுஸ்திரேலியா.


இவர்களின் காலம் முடிந்துவிட்டது. மைக்கல் கிளார்க் மீண்டும் வந்தாலும் ஒரு நல்ல சமச்சீரான அணி உருவாகும் வரை அந்நிய மண்ணில் இவர்களின் வெற்றி இனிக்கனவே. நம்பமுடியா வொட்சன் குழப்படி பயல் வார்னர் தலைவர் கிளார்க் இவர்களுடன் ஹியூச், மக்ஸ்வெல், பெயிலி, வோக்ஸ், வேட் என எல்லோரும் துடுப்பாட்டத்தில் அசுரராக வேண்டும். பந்து வீச்சிலும் இன்னும் எத்தனை காலம் ஜோன்சனை நம்புவது. மற்றவர்களும் நம்பிக்கை அளிக்க வேண்டும். இதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமே இல்லை.


பாகிஸ்தான்.


சொல்ல ஏதுமே இல்லை. நசீர் ஜம்சாட் , உமர் அக்மல் தவிர நம்பிக்கை தரும் இளம் வீரர்கள் வேறு யாருமே இல்லை. எப்போ வெல்வது எப்போ கோட்டை விடுவது என அவர்களுக்கே தெரியாத போது நான் என்ன சொல்ல.

நியூசிலாந்து.


இன்று இல்லை எப்போதும் நல்ல வீரகள் உண்டு. அதேபோல எப்போதும் ஓரளவை மிஞ்சி பிரகாசிப்பதில்லை. இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் இவர்கள் இதே போல தான் இருப்பார்கள்.

தென் ஆபிரிக்கா.



அடுத்த அணித்தலைவர் என்று சொல்லப்படும் டூ பிலேசிக்கே முப்பது நெருங்கும் நிலையில் டேவிட் மில்லர் ஒருவரே எதிர்கால நம்பிக்கை. மோர்கல் மற்றும் ஸ்டைன் இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் தாக்கு பிடிக்கலாம். ஆனால் இந்த அணிக்கு எங்கிருந்து பலமான வீரர்கள் எப்போது வருவார்கள் என்பது சொல்ல முடியாது. எப்போதும் பலமாகவே இருப்பார்கள்.

இலங்கை.


நிறைய இளம் வீரர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால் தொடர்ச்சியான பெறுபேறுகள் தான் தொடர்ந்து வருவதில்லை. சங்கா, மகேல, டில்ஷான் என்ற மும் மூர்த்திகளின் ஓய்வுக்கு பிறகு இவர்கள் இடங்களில் நின்று அணியை தாங்கும் வல்லமையை இவர்கள் இப்போதே வளர்த்தால் பலமான ஒரு அணிக்கு வாய்ப்புண்டு. குசால் பெரேரா, சந்திமால், திசர பெரேரா, எரங்கவுடன் தலைமையை விட்டு சகலதுறை வீரராக மத்தியூசும் பிரகாசித்தால் இன்னொரு இளம் படை ரெடி.

மேற்கிந்திய தீவுகள்.


கிரிக்கெட்டின் ஆரம்பகால மேற்கிந்தியாவை கட்டி எழுப்பிக்கொண்டிருக்கின்றனர் என சொல்லவேண்டும். டுவைன் பிராவோ, சமி ஆகியோரின் சில வருட பங்களிப்புடன் கேமோர் ரோச், போலர்ட், சுனில் நரைன், ஹோல்டர் மற்றும் டரன் பிராவோ போன்றோர் அடுத்த கட்டத்துக்கு அணியை கொண்டு செல்வார்கள். மீண்டும் ஒரு ஆட்சிப்பீடம் ஏறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இங்கிலாந்து.


ஒரே காலகட்டத்தில் (70/80) உச்சத்தில் இருந்த அணிகள் மீண்டும் ஒரே நேரம் எதிர்கால நம்பிக்கை கொடுக்கும் நேரம் இது. இந்தியா, மேற்கிந்தியாவுடன் அந்த நம்பிக்கையை இங்கிலாந்தும் கொடுக்கின்றது. இம்முறை ஆஷஷில் அவுஸ்திரேலியாவுக்கு மரண அடி காத்திருக்கிறது. துடிப்பான ஆளுமை கொண்ட தலைவர் குக். வேகப்பந்தில் இன்னும் ஓரிரு வருடம் தாக்கு பிடிக்கும் அண்டர்சன், கொஞ்சம் நம்பிக்கை கொண்ட புரோட், ஸ்வான் விடை பெற சில காலம் தாக்கு பிடிக்கக் கூடிய ட்ரேட்வேல் இவர்களுடன் வோக்ஸ், ஸ்டீபன் பின், ரூட், பட்லர், போபரா, பரிஷ்டவ் என இன்னொரு தலைமுறை காத்திருக்கிறது. அடுத்த தலைவராய் இயன் மோர்கனின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன். சமச்சீருடன் துணைக்கண்ட ஆடுகளங்களிலும் சாதிக்கும் ஒரு அணி உருவாகும் வாய்ப்பு உண்டு.

இந்தியா.


தற்போதைய கிரிக்கெட்டின் முடி சூடா மன்னர்கள். குறைந்தது ஐந்து வருடத்துக்கு இவர்கள் வெற்றியை தொடர்ந்து ருசிக்கும் வாய்ப்பு உண்டு. சச்சின், கங்குலி, திராவிட், லக்ஸ்மன், கும்பிளே ஓய்வுக்கு பிறகு இந்தியா அவ்வளவு தான் என நினைக்க அவர்கள் இருந்ததை விட பலமான ஒரு அணி உருவாகி நிற்கிறது.  இங்கே தான் அவுஸ்திரேலியா கோட்டை விட்டு நிற்கிறது. சச்சின் ஓய்வின் பின் யார் ஒப்பெநிங் என்ற கேள்விக்கு சேவாக்-கம்பீர் என்ற பதிலுக்கு பதலாக ரஹானே வந்தார். இப்போது அவருக்கும் பதில் கொடுத்து நிற்கிறது இந்த புதிய இணை. எதிர்கால தலைவர் ரோஹித் ஷர்மா - சகீர் தவான் நம்பிக்கைக்குரிய ஜோடியாக தெரிகிறது. ஆரம்ப துடுப்பாட்டக்காரனாக அசத்தும் ரோஹித் இங்கிலாந்து ஆடுகளத்தில் பிரகாசித்து இருப்பது இன்னொரு பலம். மறுபுறம் தவான் இனொரு கங்குலி. ஷேவாக்கின் காலம் முடிந்துவிட்டது என்றே தோன்றுகிறது. கம்பீர் வந்து வந்து போகலாம்.


அதற்க்கு அடுத்த இடத்தில் அடுத்த தலைமுறையின் கிரிக்கெட் வீரர் விராத் கோலி(குழப்படியை தாண்டி திறமையை அங்கீகரிக்க வேண்டும்) எந்த மைதானத்திலும் எந்த அணிக்கு எதிராகவும் ஆக்ரோஷமாக சிறப்பாக ஆடுபவர். இப்போது டெஸ்ட் மட்டுமே ஆடும் புஜாரா, மனோஜ் திவாரியில் ஒருவரோ அல்லது இருவர் உள்ளே வந்தால் மத்திய வரிசைக்கு இன்னொரு பலம். புஜாரவை விரைவில் எதிர்பார்க்கின்றேன். இவர்களை தொடர்ந்து ரைனா மற்றும் ஜடேயா கைகொடுப்பார்கள். இப்போது இருக்கும் சிறந்த சகலதுறை ஆட்டக்காரரில் ஒருவராக ஜடேயா தொடர்ந்து பிரகாசித்தால் இந்தியாவுக்கு கூடுதல் பலம். மறுபுறம் பந்து வீச்சில் இப்போது ஏகப்பட்ட தெரிவுகள். உமேஷ் யாதவ், திண்டா, புவனேஸ்வர் குமார், பிரவீன் குமார் என பல வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளேயும் வெளியேயும் உள்ளனர். சுழற்ச்சி முறை தெரிவு அவர்களிடம் இருந்து மிகச்சிறந்த திறமையை அணிக்கு கொடுக்க வைக்கும். மறுபுறம் ஹர்பஜன் சிங்கின் அட்டம் முடிந்தது. அஷ்வின் சுழலை கவனிக்க இடை இடையே அமித் மிஸ்ரா மற்றும் பிரகன் ஓஜா கைகொடுக்கலாம்.

அடுத்ததாக நான் சொல்லப்போகும் விடயம் தான் பலருக்கு ஆச்சரியத்தை தரலாம். 

தல தோணி.


இப்போது இருக்கும் நல்ல விக்கட் காப்பாளரில் ஒருவர். தேவைப்பட்டால் பந்துவீசுகின்றார். நிலைத்து நின்று ஆடி அணியை கரை சேர்க்கின்றார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெல்லாத கிண்ணம் இல்லை. இந்தியாவின் அதிக வெற்றிக்கரமான தலைவர் பல நட்டு ரசிகர்களை தன வசம் கொண்டிருக்கும் நல்ல மனிதர். இவரின் இழப்பு தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். காரணம் நீண்ட காலத்தின் பின் இந்தியாவுக்கு கிடைத்த நல்ல விக்கெட் காப்பாளர். விக்கெட் கீப்பரிடம் பந்தை விட்டால் அப்பிடியே எல்லைக் கோட்டை கடந்துவிடும் என ஓட்டங்கள் பெற்ற அணிகளும் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தது  இவரின் வருகையின் பின். சகா அல்லது கார்த்திக் அந்த இடத்தை நிரப்ப இருந்தாலும் இருவருமே முப்பதை நெருங்குகின்றார்கள். அதே போல இவரைப்போல ஒரு சிறந்த பினிஷரும் இந்தியாவுக்கு இலகுவில் கிடைக்க போவதுமில்லை.

என்ன இருப்பினும் இவருக்கு ஈடாக இன்னொரு வீரரை தேட வேண்டிய நேரம் இது. அணித்தலைவராக கோலி சிறப்பாக செயற்படுவார் என நம்புகின்றேன். உதவி தலைவராக ரோஹித்தை நியமிக்கலாம். தோணி இருக்கும் இந்த நேரமே இவர்களை பழக்கப்படுத்தி விடவேண்டும். இந்நிலையில் எல்லா கிண்ணங்களும் வென்று இந்தியை உச்சத்தில் கொண்டு சென்று விட்டிருக்கும் தோணி இத்துடன் ஓய்வை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் சச்சின் தன இறுதிக்காலத்தில் செய்ததை தோணி இப்போதே செய்ய வேண்டும். முக்கியமான போட்டிகளில் மட்டும் தான் ஆடிக்கொண்டு அவருக்கான மாற்று வீரரை உருவாக்க வேண்டும். காரணம் அடுத்த உலகக்கோப்பையில் தோணி விளையாடும் வாய்ப்பு இல்லை. எனவே காலம் கடந்து செய்யாமல் இப்போதே துணிந்தால் இன்னு பத்து வருடங்கள் கிரிக்கெட்டில் இந்தியாவின் ராஜ்ஜியமாக இருக்கும்.


Share:

1 கருத்துரைகள்:

தமிழ்வாசி பிரகாஷ் said...

இந்நிலையில் எல்லா கிண்ணங்களும் வென்று இந்தியை உச்சத்தில் கொண்டு சென்று விட்டிருக்கும் தோணி இத்துடன் ஓய்வை அறிவிக்க வேண்டும்.///

ஏன் அண்ணே இப்படி??????

இருக்குற வரை இருந்துட்டு போகட்டுமே...

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox