
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்று அன்று கவிஞன் பாடினாலும் பெரும்பாலான நாட்கள் விடுமுறை இன்றி கழிந்ததும் உண்டு. நம்மில் சிலர் ஆடிக்கூழ் குடித்தும் பல வருடங்கள் ஆகிவிட்டன. என்னதான் இருந்தாலும் நம் சொந்த மண்ணில் சொந்த வீட்டில் இருந்து கூழ் குடிக்கும் சுகமே தனிதான். இன்னும் என் வாழ்வில் என் சொந்த வீட்டில் இருந்து நான் கூழ் குடிக்கவில்லை என்பது கவலை தான்.
கடந்த நாட்களில் ஆடிப்பிறப்பு வரும் நாளில் காலை எழுந்து அம்மா காய்ச்சும் கூழை குடித்து விட்டு அப்பா வேலைக்கு போக நானும் அம்மாவும் பாடசாலை போனது இன்றும் நினைவுக்கு வருகின்றது. சிறுவயதில் யாழில் ஒரு சிலவருடமும் பின் வவுனியாவில் பல வருடங்களும் கழிந்து இப்போது கொழும்பிலும் கூழ் குடிக்கின்றேன்.
நினைவுகள் நினைக்கும் போது சுகமாக இருக்கும். இன்றும் காலையில் அம்மா கூழ் காய்ச்சிவிட்டு எழுந்து குடி என சொன்னபோதும் என் இலட்சியப்பாதையில் இருந்து மீளக்கூடாது என்பதற்காய் பத்து மணிக்கு எழுந்து அதன் பின் கூழ் குடித்து என் பிறவிப்பயனை அடைந்தேன். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடலில் விடுதலை வந்தாலும் இன்னும் இந்த தினத்துக்கு அரச விடுமுறை இல்லை. இதனால் பலருக்கு கூழ் வாய்ப்பு இல்லாமல் போகலாம்.
அம்மா கொடுக்கும் கூழை பாத்திரத்தில் எடுத்து சுட சுட குடிக்கும் போது அதற்குள் இட்டிருக்கும் பொருட்கள் நமக்கு கடிபடும் போது அப்பப்பா என்ன சுவை அது. ஆனால் பாருங்கோ இனிப்பு கூழாக இருப்பதால் நிறைய குடிக்க முடியாது தானே.
கூழானாலும் குளித்து குடி என்பர். சமய முறைப்படி ஆறுமாத காலம் கடந்து புது மாதம் ஒன்று பிறந்திருக்கின்றது பல சிறப்புக்கள் வாய்ந்த மாதம் பிறந்திருக்கிறது. ஆடிக் கூழும் கொழுக்கட்டையும் உண்டு மகிழ்ந்து இன்றைய நாளை பலர் ஆரம்பித்திருப்பீர்கள். உங்கள் ஆடிக்கூழ் அனுபவத்தையும் சொல்லுங்களேன்.