என்னுடைய பெயர் சத்தியமூர்த்தி சதீஷன். வயதில் ரொம்ப சின்னவனுங்கோ. வாழ்க்கையில சில நேரங்களில் சில தடுமாற்றங்கள் சிலருக்கு. அப்படி தடுமாறிய பொழுது சுபாஷ் என்னும் என் உடன் பிறவா சகோதரன்(இதை அவரே வானொலியில் சொல்லி இருக்கின்றார் அதனால் நான் துணிந்து சொல்கின்றேன்.) மூலம் வெற்றி வானொலியில் இணையும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. ஆரம்பகால பயிற்சிகள் எல்லாம் முடிந்த பின் எங்கள் வானொலியின் வலைப்பதிவை எழுதும் பொறுப்பை லோஷன் அண்ணாவும்,ஹிஷாம் அண்ணாவும் சேர்ந்து என்னிடம் கொடுத்தனர். அதன் பின்னர் என் வலை உலகில் பதிவெழுதும் பயிற்சியை அங்கேயே நான் பெற்றுக்கொண்டேன். அந்த தளத்தில் நான் எழுதிக்கொண்டிருக்கும் போதே எனக்கு தேவையான் ஆலோசனைகள் வழங்குவது இந்த இரண்டுபேருமே.
அதன் பின்னர் ஆசை யாரைத்தான் விட்டது. எனக்கு நானும் சொந்தமாக ஒரு தளம் தொடங்கவேண்டும் என்ற ஆசையில் எங்கள் செய்திப்பிரிவில் இருக்கும் நண்பன் அருண் பிரசாத் மூலம் வலை உலகில் நான் பல விடயங்களை அறிந்து கொண்டேன். அந்த முயற்சியில் வேறு ஒரு பெயரில் ஒரு தளத்தை ஆரம்பித்து அதில் கிளறிக் கிண்டிக்கொண்டிருந்த காலம். ஒருநாள் லோஷன் அண்ணா பார்த்து விட்டு நீயும் பதிவு எழுதப்போகின்றாயா எனக்கேட்க நானும் ஆமாம் போட, அவரின் துணையுடன் திடீரென ஒரு புதிய தளம் தொடக்கி ஒரு புதிய பதிவையும் இட்ட நாள் மார்ச் மாதம் முதல் நாள்.
அன்று முதல் லோஷன் அண்ணா,அருண்,ஹிஷாம் அண்ணா, சந்துரு அண்ணா விஜய் என அத்தனை போரையும் துளைத்து துளைத்தது கேட்டு பதிவுலகம் பற்றி அறிந்து கொண்டேன். இந்த நேரத்தில் எனக்கு துணை நின்று வழிகாட்டிய அவர்களுக்கு என் நன்றிகள் கோடி. என் பிரியமானவர்களுக்கு நான் இட்ட முதல் அறிமுகப்பதிவில் முதல் பின்னூட்டமிட்டு என்னை வரவேற்ற பங்களாதேஷில் இருக்கும் சிந்துவை இந்த நேரம் நினைவு கூர வேண்டும். தொடர்ந்து லோஷன் அண்ணா. துஷா, ராகலை கலை என நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களோடு நானும் காலடி வைத்தேன். அதன் பின்னர் பல சந்தேகங்கள் வரும் அப்போதெல்லாம் என் சந்தேகங்களை தீர்த்து வைத்த அத்தனைபேருக்கும் நன்றிகள்.
என் அடுத்த பதிவின் தலைப்பு என்ன வைக்கலாம் என நான் குழம்பி ஏழு, எட்டு தலைப்புகளோடு லோஷன் அண்ணாவிடம் போய் நிற்க முட்கிரீடம் யாருக்கு என அவர் தெரிந்த தலைப்பில் எழுதினேன், தமிலிஷில் எனக்கு கிரீடம் சூட்டினர் சக நண்பர்கள். அந்த வெற்றி தந்த உற்சாகம் என்னையும் மேலும் எழுதத் தூண்ட எல்லாவற்றையும் எழுதினேன். வெற்றியும் தோல்வியும் என்னை மாறி மாறி அரவணைத்தன.
இப்படியே போய்க்கொண்டிருந்த என் பதிவுலக பயணத்தில் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். நான் ரசித்தவர்கள் என்னை ரசித்தவர்கள் என பலர். அதன் பின் என் தளத்தை முற்றாக அழகுபடுத்த நான் துடித்த போது ஆரம்பத்தில் எனக்கு அத்திவாரம் இட்ட கைகள் இப்போது தோள் கொடுத்தன. உங்கள் ஆதரவிற்கு மீண்டும் மீண்டும் நன்றிகள். இடையில் பதிவர் சந்ரு வானொலி கட்ஜெட்டை தந்துதவியது மடுமில்லாமல் பட்டாம் பூச்சி விருதையும் அளித்து என்னை கொஞ்சம் திரும்பி பார்க்க வைத்தார். அதன் பின் நானிட்ட பதிவிற்கு வந்து பல பிரபல பதிவர்கள் பின்னூட்டமிட்டது என் இனிய நினைவுகள்.
இப்படியே போய்க்கொண்டிருக்கும் என் பதிவுலக வாழ்க்கையில் ஒரு வெற்றியாக என்னை மீண்டும் புத்துணர்ச்சி தந்தது பூச்சரம் நடத்திய போட்டியில் நான் வெற்றி பெற்றது. இந்த நேரத்தில் அந்த போட்டியில் பங்குபற்றிய மற்றைய பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். அதனைத்தொடர்ந்து கடலேறி ஆதிரையின் சுவாரஷ்ய பதிவர் விருதென விருதுகளும் வரத்தொடங்கி இருக்கின்றன. ஏதோ ஒரு சந்தோசம், நானும் ஓரளவிற்கு எழுத்துகின்றேன் என்று. இப்போது ஐம்பதை தொட்டுவிட்டதால் இன்னும் பொறுப்புக் கூடி இருக்கின்றது. எனவே தரமான நல்ல படைப்புகளை எழுதும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றேன்.
அதேநேரம் இதுவரை வந்த பின்னூட்டங்களில் இரண்டு பின்னூட்டங்கள் மட்டுமே என்னை சீண்டிப்பார்த்தவை என்பதில் ஒரு சந்தோசம். (இப்போது நான் இந்த பதிவை இடும் நிலையில் பெயரில்லாமல் ஒருவர் தன் கருத்துகளை விட்டுச் சென்றிருக்கின்றார் என் கடந்த பதிவில் அதற்கு என் சக பதிவர்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் நான் மிக விரைவில் அவருக்கு பதில் சொல்லி பதிவிட பெயர் தெரியா அந்த நண்பர் என்னை தூண்டி விட்டிருக்கின்றார்.)நமக்கும் கல்லடி கொடுக்க நண்பர்கள் இருக்கின்றார்கள் என்று.
என் தளம் இப்போது முன்னேறி வருவது சந்தோசம். அதேநேரம் தொடர்ந்து நீங்கள் விரும்பும் பதிவுகளை கொடுக்காமல் இருப்பது கவலை. என்ன செய்வது எல்லோருடைய விருப்பமும் ஒரே மாதிரி இருப்பதில்லையே. எனக்கு பிடித்தவற்றையும் நான் படித்ததில் என்னை கவர்ந்தவையையும் என் சொந்த ஆக்கங்களையும் தொடர்ச்சியாக எழுதப்போகின்றேன். இதுவரை எனக்கு ஆதரவு தந்த பின்னூட்ட நண்பர்கள் சக பதிவர்கள், வாக்களித்த வாசகர்கள், இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் என்னை வளர்த்துவிட்ட அத்தனை அன்புள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
என்னடா இவ்வளவும் தன்னை பற்றியே சொல்றான் விஜய் அஜித்துக்கும் தனக்கும் இடையான தொடர்ப்பை சொல்லலையே எனப்பார்க்கிறிங்களா.பெரிசா என்னங்க இருக்கப்போகிறது அவங்களைப் போல என் பதிவுலகில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகிறது. இன்னுமொன்று அவர்கள் இரண்டு பெயரையும் விட நான் முந்திக்கொண்டு அரைசதத்தை கடந்து விட்டேன். அவர்கள் இன்னும் காத்திருக்கின்றார்கள். இப்போ சொல்லுங்க தலைப்புக்கும் நான் இட்ட பதிவிற்கும் தொடர்பு இருக்கு தானே.
வரட்டா....
பி.கு:நன்றி மறப்பது நன்றன்று என்பதற்கிணங்க என்னை வளப்படுத்திய அத்தனை பேருக்கும் நன்றிகளை சொல்லி இருக்கின்றேன். யாரையும் தவற விட்டிருந்தால் இந்த சிறியவனின் மனமார்ந்த நன்றிகளை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன்.













