ஒருவாறு பல்வேறு அதிர்ச்சிகளோடும் ஆச்சரியங்களோடும் என் முந்தயபதிவில் என் கணிப்புக்கெல்லாம் சாட்டை அடி கொடுத்ததுபோல T20 உலகக்கிண்ணம் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது.
நிறைவில் கடந்தமுறை போல் இம்முறையும் இறுதிவரை வந்து அசத்திய பாகிஸ்தான் அணிக்கா? அல்லது அதிஷ்டதேவதை தலையில் ஏறி ஆடும் நம் சங்கக்காரவின் கையில் தான் T20 உலகக்கிண்ணம் தவழப்போகின்றது என தெரியப்போகின்றது.
பயிற்சிப்போட்டிகள் ஆரம்பித்தது முதல் பரபரப்பு தொடங்கிவிட்டது. என்ன ஆச்சரியம், பயிற்சியில் சொதப்பிய இரண்டு அணிகளுமே இப்போ இறுதியில். முதல் போட்டியிலேயே இங்கிலாந்துக்கு, நெதர்லாந்து அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தபோதே, பதிவர்கள் நாம் கொஞ்சம் யாக்கிரதையாக கணித்திருக்கலாம் என்ன செய்வது பெரிய ஜாம்பவான்கள் மேல் வைத்த நம்பிக்கையில் கணித்துவிட்டேன்.
T20 எல்லாம் டூப்பு 50-50 தான் டாப்பு.
இம்முறை களங்கங்களை எல்லாம் துடைத்து T20 கிண்ணத்தை ஏந்துவோம் என்ற நினைப்பில் வந்த அவுஸ்ரேலியா முதல் போட்டியிலேயே மேற்கிந்திய தீவுகளிடம் மரண அடிவாங்கி விட்டது. அதுவும் ஏழு விக்கெட்டுகளால் தோல்வி. அடுத்தபோட்டியில் இலங்கைக்கு சவுக்கடி கொடுக்கலாம் என்றால் அடேய் வலிக்கிறமாதிரி விரட்டி விரட்டி அடிகின்றான்களே என பாண்டிங் மற்றும் சகாவினர் அழாதகுறையாக இலங்கையும் ஆறு விக்கெட்டினால் தோற்கடித்து ஒருநாள் சாம்பியன்கள் மற்றும் டெஸ்ட் நாயகர்களை பெட்டியை கட்டவைத்தனர். அந்த வகையில் இம்முறையும் அவர்களுக்கு T20 எட்டாகனி ஆகிவிட்டது. இவர்களை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை காரணம் இன்னும் இவர்களுக்கு T20 சரிப்படவில்லை. அதீத நம்பிக்கைக்கு ஏற்ப செயற்பட்டு இருந்தால் வென்றிருக்கலாம்.
அது ஒரு காலம் அழகிய காலம்.
அடுத்தவர்கள் உண்மையில் T20 உலகசாம்பியன்கள் கடந்தமுறை. ஆனால் இம்முறை அப்படி எந்த ஆட்டைத்தையும் வெளிப்படுத்தவில்லை. நியூசிலாந்துடன் தோல்வி. வழக்கமாக நியூசிலாந்து தானே T20 இல் இவர்களின் வில்லன். போட்டி தொடங்கியபின் எல்லாம் சரி ஆகிவிடும் என பார்த்தால், பங்களாதேஷ் அணியுடன் ஏதோ வென்றோம் என்னும் அளவிலே தான் அவர்கள் விளையாட்டு. அதன் பின் உப்புசப்பில்லாமல் செத்த பாம்பான அயர்லாந்தை வாரிக்கட்டிக்கொண்டு பிரித்து மேய்ந்தார்கள்.. (ஆனால் இம்முறை அயர்லாந்து தன் வரவு சரியானதே என நிரூபித்துவிட்டது.)
ஒருவாறு சூப்பர் 8க்குள் நுழைந்த இந்தியாவிற்கு அதன் பிறகு தான் ஆப்பு காத்திருந்தது. மேற்கிந்திய தீவுகள் , இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை வீழ்த்தவேண்டிய கட்டாய சூழல். ஆனால் முதல் போட்டியிலேயே மேற்கிந்திய தீவுகள் கொடுத்த அடி இடியாகி போனது. அடுத்த இரண்டு போட்டியும் வென்றாக வேண்டிய சூழலில் இங்கிலாந்துடன் போட்டி. தோனியின் சில பிழையான கணிப்புகள் அணியின் ஒட்டுமொத்த தப்பாட்டம் என இதிலும் மூன்று ஓட்டத்தால் தோற்று தொடரை விட்டே வெளியேறியது இந்தியா.
ஷேவாக் இல்லாதது நன்றாகவே தெரிந்தது. யுவராஜ் துடுப்பில் மட்டுமே பந்துபடும் மற்றவர்கள் துடுப்பில் படமாட்டாது என எல்லோரும் ஆட இந்தியாவே ஆடிப்போனது. (இதை பற்றி பல பதிவர்கள் பதிவிட்டிருப்பதால் அதை விட்டுவிடுவோம்.) அதன் பின் தென் ஆபிரிக்காவிடம் வென்றாவது ஆறுதல் வெற்றி பெறலாம் என்றால் அங்கும் வேகவில்லை பருப்பு. மொத்தத்தில் ஒரு சாதாரண அணியைபோல ஆடிவிட்டு நாடு திரும்பியது இந்தியா.
வரும் காலம் வசந்தமாகும்.
மாற்றங்களை தரும் என எதிர்பார்த்த பங்களாதேஷ் இம்முறை கத்துக்குட்டி அணியாக வெளிஏறிவிட்டது. முதல் போட்டியில் அதிர்வை தந்த நெதர்லாந்து பின் சோர்ந்து போய்விட்டது. ஸ்கொட்லாந்து வந்ததும் தெரியல போனதும் தெரியல. இந்த மூன்று அணிகளும் இம்முறை அடவியை நிரப்பியது மட்டுமே மிச்சம்.
அள்ளவும் முடியல வெல்லவும் முடியல உலககிண்ணத்தில் ஏதோ ஆகிப்போச்சு.
இங்கிலாந்து அணி முதல் போட்டியில் கண்ட தோல்வியுடன் சுதாகரித்து விட்டது. இறுதிவரை வந்திருக்கும் பாகிஸ்தானை ஆரம்ப சுற்றிலேயே வீழ்த்தி சூப்பர் 8க்குள் வந்து விட்டது. அங்கேயும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆபிரிக்காவிடம் அடிவாங்கிய அணி சாம்பியன்கள் இந்தியாவிற்கு இடியை கொடுத்துவிட்டு தானும் வெளியேறிவிட்டது. இவர்களின் ஆட்டம் பெரிதாக சொல்லும் படி இருக்கவில்லை.
காயம்தான் எங்களை போட்டு வாட்டி எடுத்ததே.
நியூசிலாந்து அணி இம்முறை அரை இறுதிவரை வரும் என எதிர்பார்க்கப்பட, சுக்கிரதிசையோ என்னவோ எல்லாத்திலும்(யாரும் தேவையற்றதையும் சேர்த்தால் நான் பொறுப்பல்ல நான் சொல்வது போட்டிகளை.) நியூசிலாந்தின் கனவையும் உடைத்தது. இன்னும் எத்தனை நாடுகளை ஏமாற்றி மூக்குடைக்கப்போகின்றதோ?(இதுவும் கிரிக்கெட் போட்டிகள் தான்.)
ஆரம்பத்தில் ஸ்கொட்லாந்தை வென்று தென் ஆபிரிக்கவிடமே ஒரு ஓட்டத்தினால் தோற்று இம்முறை சாம்பியன் ஆகும் கனவுடன் சூப்பர் 8க்குள் வந்தவர்கள் அயர்லாந்தை வென்று வெற்றியை தொடர பாகிஸ்தான் அதற்கும் முட்டுக்கட்டை போட்டு விட இலங்கை அதற்க்கு முடிவே கட்டிவிட்டது. அணியில் பல வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டது தான் இறுதியில் இவர்களுக்கு எமனாகிப்போனது.
சென்று வா மகனே.
அயர்லாந்து அணியினரை பொறுத்தவரை இம்முறை கலக்கியவர்கள் என சொல்லலாம். பங்களாதேஷை வீட்டுக்கு அனுப்பிவிட்டு சூப்பர் 8க்குள் வந்தவர்கள் இறுதிவரை வந்திருக்கும் இலங்கையை கொஞ்சம் ஆடவைத்டவர்கள் இவர்களே. அதைவிட இவர்களை பற்றி சொல்லவேண்டும் என்றால், இப்படியே போனால் மிகவிரைவில் தவிர்க்க முடியாத ஒரு அணியாக மாறிவிடுவார்கள்.
அதிரடிக்காரன் மச்சானே.
மேற்கிந்திய தீவுகள் அணி இம்முறை கைல் என்னும் அசகாய சூரனின் வழிநடத்தலில் அவுஸ்ரேலியாவை கூட வீழ்த்தி அடுத்த சுற்றிலும் பலமான இந்தியா மற்றும் இங்கிலாந்தை வீழ்த்தினர். ஆனால் தென் ஆபிரிக்காவிடம் தோல்வி கண்டாலும் அரை இறுதிக்குள் வந்து முதல் சுற்றில் இலங்கையிடம் தோற்றதுபோல அரை இறுதியிலும் தோற்று வெளி ஏறிவிட்டது. இம்முறை அணியாக விளையாடி அசத்திய முக்கியமான அணி இதுதான். அத்தனை பேரும் அர்ப்பணிப்புடன் ஆடினர்.
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை வெறுக்கலாமா.
இவர்களுக்கும் அரை இறுதிக்கும் எப்போதும் ராசி இல்லை. இறுதிக்குள் வந்திருக்கும் இலங்கை-பாகிஸ்தான் அணிகளை விட இம்முறை சாம்பியனாகும் அனைத்து தகுதியும் உள்ள ஒரே அணி என நான் அடித்து சொல்லும் அணி இதுதான். அதுதான் தென் ஆபிரிக்கா. ஆரம்பம் முதல் அமர்க்களமான ஆட்டம். பந்துவீச்சா , துடுப்பாட்டமா கலத்தடுப்ப எதிலுமே இவர்களை விஞ்ச ஆளில்லை. என்னைப் பொறுத்தவரை இப்போதுள்ள அணிகளில் டெஸ்ட், ஒருநாள், என அனைத்திலும் கில்லிகள் இவர்கள்தான்.. வழக்கமான துரதிஷ்டம் இம்முறையும் துரத்த பாகிஸ்தானிடம் அநியாயமாக தோற்று வெளி ஏறிவிட்டார்கள். இம்முறை யாரிடமும் தோற்காமல் அரை இறுதி வரை வந்தவர்கள் இடையில் இந்தியாவிடம் மட்டுமே துடுப்பாட்டத்தில் மட்டுமே சோடை போனார்கள்.
பாகிஸ்தான் அணி என் முதல் பதிவில் சொன்னதுபோலவே சொல்லமுடியாத் அணியாகத்தான் தன்னை காட்டி இருக்கின்றது. எப்போது எழுவார்கள் எப்போது வீழ்வார்கள் இது இவர்களுக்கான தனி வாசகம். இங்கிலாந்திடம் தோற்று தடுமாரியவர்கள் நெதர்லாந்தை அடித்து துவைத்து சூப்பர் 8க்குள் வந்தார்கள். இலங்கையிடம் தோற்று தடுமாறியவர்கள் அதன் பின் நியூசிலாந்தை வருத்தெடுத்தவுடன் ஆரம்பமாகியது இவர்களின் வெற்றிப்பயணம்.
அயர்லாந்தை வென்று அரை இறுதிக்குள் வந்தவர்கள் அரை இறுதியில் அதிர்ச்சி கொடுத்து தென் ஆபிரிக்காவை வென்று இறுதிக்குள் இன்று. சைட் அபிரிடி என்னும் அதிரடி துப்பாக்கி இருக்கும் வரை இலங்கைக்கு கஷ்டம்தான். பாகிஸ்தான் வெல்லத்தொடங்கும் வரை சின்ன அணிகளும் அவர்களை துவைத்தெடுப்பர். வெல்ல ஆரம்பித்தால் இவர்களை கட்டுப்படுத்துவது கஷ்டம். பந்து வீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என அத்தனை விடயத்திலும் இப்போது அசத்தும் பாகிஸ்தான் கடந்தமுறை போல இறுதியில் சொதப்பாமல் நம்பிக்கையோடு ஆடினால் இம்முறை கிண்ணத்தோடு திரும்பலாம்.
இலங்கையின் பலத்துக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கின்றது பாகிஸ்தான். எனவே ஒரு சூப்பர் போட்டி காத்திருக்கின்றது.
வெற்றி மீது வெற்றி வந்து நம்மை சேரும்.
இலங்கை அணிக்கு இப்போ என்ன நடக்கின்றது தெரியவேஇல்லை. முதலில் அவுஸ்ரேலியா, மேற்கிந்திய தீவுகளை வெல்லுமா இந்த அணி என்ற கேள்விகள்? ஆனால் அத்தனைக்கும் தொடர் வெற்றியின் மூலம் விடை சொல்லி விருந்து வைக்க காத்திருக்கின்றார்கள். ஜெயசூரியாவை விட இம்முறை இலங்கையின் நாயகன் டில்ஷான். பந்துவீச்சிலும் முரளியைக் கூட புதியவர்கள் விஞ்சி அசத்துகின்றார்கள்.
நானே சங்ககாரவின் தலைமை பற்றி சந்தேகப்பட்டேன். ஆனால் எனக்கு இப்படி இரு சவுக்கடியை கொடுத்துவிட்டார் அவர். வாழ்த்துக்கள் சங்கா. எனவே இம்முறை கிண்ணம் வெல்ல அதிக வாய்ப்போடு இருக்கின்றார்கள். அவர்களின் திறமை ஒரு பக்கம் இருக்கட்டும் மறுபக்கம் அதிஷ்டதேவதை சங்காவின் தலையில் அறி இருந்து கூத்தாடுகின்றது. எனவே கைகளில் கிண்ணம் கூத்தாடும் வாய்ப்பும் அதிகம்.
தருவியா தரமாட்டியா?
மொத்தத்தில் பல அணிகளை தலை குனியவைத்து இப்போது இருதிப்போட்டிக்காக காத்திருக்கின்றது உலகக்கிண்ணம். யுனிஷ்கானா? சங்ககாரவா? எல்லாவற்றிலும் இலங்கைக்கு உதவும் பாகிஸ்தான் இன்றும் இலங்கைக்கு கையில் தூக்கி கொடுக்குமா? அல்லது வீராவேசத்தோடு வென்று இலங்கையின் மூஞ்சியில் கரியை பூசுமா பொறுத்திருந்து பார்ப்போம்.
4 கருத்துரைகள்:
கடும் உழைப்பு உங்களுக்கு பாரட்டுக்கள்
இன்றைய இறுதி ஆட்டமும், இந்திய அணியின் தோல்வியும்
படித்துவிட்டீர்களா தோழரே..,
பூச்சரம்
இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS
http://poosaram.blogspot.com/
nalla aluthura PADIKKA VIRUPPAMA IRUKKU PARAVIYA88.BLOGSPOT.COM
Post a Comment