வெற்றிமாலைக்கென்று பிறந்தவனே.......
இன்றோடு உங்களுக்கு முப்பத்தாறு வயதாகின்றது. நடிக்கவந்து ஐம்பதாவது படமும் தொடப்போகின்றீர்கள். எல்லாவற்றுக்கும் உங்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
கொஞ்சம் உங்கள் கடந்த கால வாழ்க்கையை நீங்கள் அலசிப்பார்க்கவேண்டும். அப்படி பார்க்கும் போதுதான் நீங்கள் இப்போது எங்கே நிற்கிறீர்கள் அரசியல் தேவையா என்பது தெரியும்.
உங்கள் தந்தை தன்னை ஒரு புரட்சிகரமான இயக்குனராக ஓரளவு வெற்றிகரமான இயக்குனராக நிரூபிக்க, பட்ட கஷ்டங்கள் தெரிந்தவர் நீங்கள். ஒருமுறை நீங்களே ஒரு பேட்டியில், உங்கள் இளவயது கஷ்டங்களை எல்லாம் சொன்னிர்கள். நீங்கள் குழந்தையாக இருக்கும் போதே குடிக்கும் பால் மா இல்லாமல் கஷ்டப்பட்டது, பெட்ரோல் நிலையத்தில் இருந்து படித்தது எல்லாம் உங்களுக்கு நினைவிருக்கும். இதை நீங்களே சொல்லி இருப்பதால் நிச்சயம் நீங்கள் பழசை மறக்காதவர் என்பது தெரிகின்றது.
குட்டி விஜயின் பிறந்தநாள்.
உங்கள் வாழ்வில் நீங்கள் கலகலப்பானவர் ஆனால், தங்கையின் இழப்பே உங்களை இப்படி மாற்றியது என்பதை ஏற்கின்றோம். இந்த அமைதி பக்குவம் எல்லாருக்கும் வராது. லயோலா கல்லூரியில் படிக்கும் போதே கல்லூரிக்கு "கட்" போட்டிட்டு உங்கள் தலைவர்(இப்போ இவர் யாரென கேட்கக்கூடாது) ரஜினியின் படம் பார்க்காப்போனது எல்லாம் உங்களுக்கு சுவையாக இருக்கும். ஆனால் அதுதான் பின்னர் உங்கள் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது என்பது உண்மையே.
தமிழ் திரையில் சொந்தக்காலில் விஜய்.
உங்கள் தந்தை இயக்குனர், தாய் தயாரிப்பாளர், கதாசிரியர், பாடகி இப்படி இருக்கும்போது நீங்கள் சினிமாவிற்கு வந்தது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் பலர் சொல்வது போல உங்கள் தந்தை மற்றும் தாய் ஆரம்பத்தில் உங்களை தாங்கிப்பிடித்து வளர்த்ததை நீங்களும் ஏற்கத்தான் வேண்டும். அதுமட்டுமில்லாமல் அதனாலே மட்டும் நீங்கள் இன்று இந்த நிலைக்கு வந்தீர்கள் என்பது ஏற்கமுடியாது. வாரிசாக மட்டும் இருந்தால் ஜெயிக்கமுடியாது. திறமையும் வேண்டும், அந்த திறமை இருப்பதால் தான் இன்று உங்கள் நிலை இப்படி.
தளபதியும் இளையதளபதியும்....... ஒரேமாதிரி யோசிப்பாங்களோ?
அண்ணாமலை திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியை உங்கள் தந்தைக்கே நடித்து காட்டி ரஜினிதான் உங்கள் குரு என சொல்லாமல் சொல்லி நடிக்க வந்த நீங்கள் அறிந்தோ அறியாமலோ அவரை பின்பற்றியது ஆச்சரியமில்லை.(ஏனெனில் ஒரு துறையில் ஒருவரை நாங்கள் ரசிக்கும் போது அதே துறைக்கு நாம் வந்தால் அவர் பாதிப்பு நம்மிடம் வரும் என்பது தவிர்க்கமுடியாததே.) அப்படி இருக்கும் போது ஒரு சில தனித்தன்மைகளோடு உங்கள் படங்களை கொடுக்கின்றீர்கள்.
உங்கள் திரைபிரவேச காலத்தில் நீங்கள் நடித்த சில திரைப்படங்கள் இன்று நீங்களே பார்க்கும் போது ஏன் நடித்தோம் என உங்களுக்கு தோன்றும். (உதாரணம் மாமிக்கு "soap" போடும் நல்ல தரமான காட்சிகள்.) ஆனால் அதை எல்லாம் இப்போது பேசுவதை விட காலம் கடந்தும் நிற்கும் படத்தை கொடுப்பதே உங்களுக்கு நல்லது. பொதுவாக நீங்கள் நடிக்கும் படங்கள் பெரிதாக கதை இருப்பதில்லை. ஆனால் ஏதோ சுவாரஷ்யம் இருக்கும். உங்கள் வெற்றியும் அதுதான், உங்கள் தோல்வியும் அதுதான்.
அன்றும் இன்றும் ஒரு சில வித்தியாசங்களுடன்.
இதிலே முக்கியமான விடயம் என்னவென்றால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் நடித்த பல திரைப்படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் ஓடியதுதான். இன்று பெரும் விமர்சனத்தை சந்தித்த வில்லு, குருவி படங்கள் கூட யாரையும் ஏமாற்றவில்லை. உங்களின் மிகப்பெரிய வெற்றி அதுதான். அதனால் தான் உங்களுக்கு எம்.ஜி.ஆர்,ரஜினி என்ற ஜாம்பவான்களுக்கு பிறகு வசூல் நாயகனாக ஒரு இடத்தை மக்கள் கொடுத்திருக்கின்றார்கள். அதை புரிந்து நீங்கள் உங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சிறுவயதில் விஜய்.
பொதுவாக நீங்கள் தோற்றத்தை மாற்றாது ஒரே தோற்றத்தோடு ஒரேமாதிரியான படத்தை கொடுத்தாலும் முன்னணி கதாநாயகனாக வலம் வருவது சாதாரண விடயமில்லை. அதாவது உங்கள் படம் ஓடுவது உங்களுக்காக மட்டும்தான் என்பதை நிரூபித்து நிற்கின்றது. அதிலும் கதை சேர்த்து நடித்தால், நீங்கள் இன்னும் உங்களை உயர்த்தலாம் என்பது உங்களுக்கு தெரியாதா?. ஆரம்பகால உங்கள் படங்கள் பலத்த விமர்சனத்துக்கு உள்ளானாலும் அதன் பின்னர் அதை எல்லாம் மாற்றி இன்று தாய்க்குலத்தின் மதிப்பை வென்ற ஒருவர் நீங்கள் தான். சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அத்தனை பேரையும் திருப்திப்படுத்தி கட்டி வைத்திருப்பது என்பதும் ஒரு சாதனையே.
டாக்டர் பட்டம் ஷங்கருடன். எஸ்.ஏ.சியின் இரண்டு மாணவர்களும்.
நீங்கள் செய்த சமுகசேவைகள் இன்னும் அளப்பரிய சேவைகளை(என்ன என கேட்கக்கூடாது.) எல்லாம் பாராட்டித்தான் உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்கள். ஆனால் அதுவே இன்று உங்களை இங்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றதா என்பதே என் கேள்வி. நன்றாக போய்க்கொண்டிருந்த உங்கள் திரைப்பயணத்தில் அண்மையில் பல சறுக்கல்கள். அதை திருத்தி கொடுக்கும் அக்கறையே இல்லாதவர் போல உங்கள் நடவடிக்கைகள் இருக்கின்றது. அடிமட்ட ரசிகர் முதல் அவுஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் வரை உங்களை ரசிக்கின்றார்கள்.(இந்திய சஞ்சிகை ஒன்றில் பார்த்தேன்) அப்படி இருக்கும் போது தரமான படங்களை கொடுக்கவேண்டாமா?
கிடைச்சது இதுமட்டும் தானுங்கண்ணா.......
ஒரு காலத்தில் உங்களுக்கு நடனம் தெரியாதென நடன இயக்குனர் திட்டியதால் அதன் பின் உங்கள் முயற்சியினால் தானே இன்று நடனத்தில் உங்களை யாரும் அடிக்க முடியாவில்லை. அதேபோல கதையிலும் உங்கள் நடிப்பிலும் கவனம் செலுத்தலாமே.(நான் இயக்குனர்களை நம்புறன் அவங்க தான் கவுத்து விடுறாங்க என சொல்லாதிங்க.)
உங்களின் படிக்கல். அப்போது ஏற்றிவைத்தவர். இப்போது இறக்கியும் விடுகின்றார்.
சினிமாவில் உங்கள் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் உங்கள் தந்தை என்பதை மறுக்கமுடியாது. உங்கள் ஆரம்பகாலத்தில் அவர் எடுத்த சில முடிவுகள் உங்களை இன்று சிகரத்தில் வைத்திருக்கின்றது. அதை இன்றும் நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள். ஏன்??????? இவ்வளவு அனுபவம் எத்தனையோ பிரச்சனைகளை எல்லாம் பார்த்து வெற்றி தோல்விகள் எல்லாம் பார்த்த நீங்கள் ஏன் முடிவெடுப்பதற்கு இன்னும் குழம்புகின்றீர்கள். நீங்கள் குழம்புவதோடு ரசிகர்களையும் குழப்புகின்றீர்கள். ஆனால் உங்களை குழப்புவது என்னவோ உங்கள் தந்தை தான். அவரை கொஞ்சம் யோசித்து பார்க்க சொல்லுங்கள். ஒழுங்காக மைக் பிடித்தது பேசத்தெரியாத உங்களுக்கு எதுக்கு அரசியல்.
இந்தியாவே விஜய்க்கு பின்னாலயாம்!!!!!!
மகனை முதல்வராக்கிப்பார்ப்பது அவருக்கு ஆசையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சினிமாவில் சாதிக்க இன்னும் எவ்வளவோ இருக்கின்றது. உங்களுக்கு தெரிந்த அந்த துறையில் முதலில் சாதனை நாயகானாக முன்னுக்கு வாருங்கள். ஒரு காலத்தில் ஸ்டார் பட்டத்தின் மேல் இளம் நடிகர்களுக்கு இருந்த ஈர்ப்பு இப்போது உங்கள் தளபதிப்பட்டம் மேலேதானே. அது ஏன் உங்களுக்கு புரியவில்லை. தமிழ் சினிமாவில் நீங்கள் இன்னும் உழைத்தால் உங்களுக்கு ஒரு சிகரத்தை தர ரசிகர்கள் காத்திருக்கும் போது ஏன் இப்பட்டிப்பட்ட ஆசை. நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டுமென்றால் அரசியல் என்ன ஆகுமென யோசியுங்கள்.
இவரும் ஒரு வழிகாட்டியா? நடக்கட்டும் நடக்கட்டும்.
எனைப்பொறுத்தவரை நீங்கள் சுயமாக சிந்திக்கவில்லை என நினைக்கின்றேன். உங்களுக்கு பிடிக்காத இந்த அரசியலில் உங்கள் தந்தையின் வலுக்கட்டாயத்தால் தான் இறங்க முடிவெடுத்தீர்கள் என நினைக்கின்றேன். இப்போது நீங்கள் அந்த முடிவை பிற்போட்டிருப்பது சந்தோசம். இந்த இடைப்பட்ட காலத்தில் யோசித்து நல்ல முடிவெடுங்கள்.
இப்பிடி கூடும்போதே திட்டம் தீட்டுவாங்களோ?
ஏராளமான ரசிகர் பலம், அரசியல் பலம் இருக்கும் ரஜினியே அரசியலுக்கு வர தயங்கும்போது உங்களுக்கு ஏன் இந்த அவசரம். ஆனால் நீங்கள் ரஜினியின் விசிறி என நிரூபிக்கின்றீர்கள். அதுதான் அரசியக்கு வருவேன்.......ஆனால் வரமாட்டேன்.
உன்னால் முடியும் என்பது உங்களுக்கும்தான் விஜய்.(நல்ல படங்களை கொடுப்பதை சொன்னேன்.)
உங்களுக்கு அரசியல் வேண்டாம். சினிமாவே போதும் ஆனால் அதிலும் ரசிகர்களை சோதிக்காமல், உங்களை பற்றி வரும் விமர்சனங்களை எல்லாம் உடைக்கும் படி உடனடியாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கவேண்டியதே இப்போதைய காலத்தின் தேவை. அதுமட்டுமன்றி ஐம்பதாவது படத்தை ஒரு பிரமாண்ட வெற்றிப்படமாக கொடுப்பதே இதுவரை உங்களை நம்பிய ரசிகர்களை நீங்கள் திருப்திப்படுத்த ஒரே வழி. உன்னால் முடியும் என கொடியில் பதித்திருக்கும் உங்களாலும் முடியும் என்பதை தலைவரான நீங்கள் முதலில் நம்பவேண்டும். எனவே கொஞ்சம் சிரத்தை எடுத்தால் உங்களை விஞ்ச எவரும் இல்லை. வெற்றிமாலை உங்கள் தோள்களில் ஆடாமல் போக வாய்ப்பும் இல்லை. அதை விட்டுவிட்டு எனக்கும் silence சொல்லிவிட்டு நீங்கள் வேண்டாத துறைதான் வேண்டுமென போனால் அங்கே உங்களுக்கு silence சொல்ல நிறையபேர் காத்திருப்பார்கள்.
2 கருத்துரைகள்:
ஆஹா...,
விஜய்க்கு கூட இவ்ளோ விஷயம் தெரியுமான்னு தெரியலயே....
கண்டிப்பா அவர் கட்சி ஆரம்பிச்சா அவைத்தலைவர் பதவி உங்களுக்குத்தான்
வெறும்பயல் விஜய் சொல்லுவது .,
வடிவேல் காமெடியை விட கொடுமையாக உள்ளது.
கடந்த நான்கு படங்கள் பிளாப் ஆனதால் ரசிகர்களுக்கு உற்சாகம் தர தனது புது படம் வேட்டைக்காரன் பிளாப் ஆகாமல் இருக்கவும் நடிக்கிறார்.இந்த நடிப்பை படத்தில் அவர் காட்டினால் படமாவது வோடும்.
Post a Comment