Wednesday, April 14, 2010

கலைஞர் கருணாநிதி உத்தரவை மதிக்காத தோணி.


நாட்டாமைக்கே நம்ம தோணி சொல்வது...இதெல்லாம் செல்லாது செல்லாது.


பாசக்கார தலைவர் பாராட்டு நாயகன் இளைஞர்களின் இதய நாயகன் என்றும் அசராமல் ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர் என்று இன்னும் பல அடுக்கு மொழிக்கு சொந்தக்காரரான கலைஞர் கருணாநிதி அவர்கள் காலம் காலமாக தமிழர்களின் பண்பாடாகவும் வழக்கமாகவும் கொண்டாடப்பட்டு வந்த தமிழ்ப் புத்தாண்டை மாற்றி அமைத்துவிட்டார். இதை பற்றி காரசாரமாக விவாதங்கள் கருத்துக்கள் வந்து மறைந்து விட்டன. மறையா சூரியன் தன் உத்தரவு மூலம் தமிழ் நாட்டு நண்பர்களின் தலைவிதியை மாற்றி விட்டார். ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லை என சொல்லிக்கொண்டே தன் வீட்டில் ஆன்மீக வாதிகளை வைத்திருக்கும் இவரால் எப்படி ஒரு ஆன்மிகம் சம்பந்தப்பட்ட உலக மக்களின் நம்பிக்கையை மாற்ற முடியும்.

எனக்கு தெரிந்தளவில் மீனா ராசியில் இருந்து மேட ராசிக்கு இடம்பெயர்வதுதான் புதுவருடப்பிறப்பு. இது நம் பூட்டன் பூட்டிக்கு முன்னைய பல தலைமுறையில் இருந்து நம்பிக்கையின் வெளிப்பாடு என வரலாறு சொல்கின்றது. இந்த இடப்பெயர்வு தைப்பொங்கல் அன்று வருமா? அதேநேரம் வசந்த காலப் பிறப்பு தான் வருட பிறப்பு என்ற நம்பிக்கையில் பார்த்தால் அந்த கால மாற்றத்தை மாற்ற எந்த கொம்பனாலும் முடியாது? அப்படி இருக்கையில் இதை மாற்றிய கருணாநிதி.................?????

பாசத்தலைவர் என்ன சொன்னாலும் தமிழக மக்கள் மட்டுமே இந்த உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலையில் இருக்கின்றார்களோ தெரியாது. இதில் எத்தனை பேருக்கு உடன்பாடோ என்பதும் தெரியாது. ஆனால் இலங்கையில் நாம் இவருக்கு கட்டுப்பட தேவையும் இல்லை. கட்டுப்படவும் இல்லை. வழக்கம் போல இன்று தமிழ் சிங்கள புத்தாண்டு எல்லா இடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க தோணி கருணாநிதியின் கருத்துக்கு என்ன சொன்னார்??? பாவமப்பா கேப்டன்(நான் நம்ம விஜயகாந்தை சொல்லல) நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் இந்த வெற்றியை நாளை புத்தாண்டை கொண்டாட இருக்கும் தமிழர்களுக்கு சமர்பிக்கின்றேன் என பேட்டி அளித்துள்ளார். அதுவும் தமிழ் நாட்டில் வைத்து நம் தமிழினத்தலைவர் ஆட்சியில் இருக்கும் நிலையில். பாவமப்பா தோணி அவருக்கு யாரும் சொல்லவில்லை போல தமிழக முதல்வர் சரித்திரத்தையே மாற்றி அமைத்தவர் என்று. அல்லது தெரிந்தும் இதை சொன்னாரா யாருக்குத் தெரியும். காரணம் வரலாறு அதுதானே. ஒரு சின்ன சந்தேகம் அவருக்கு இருக்கும் தமிழ் நண்பர் யாரும் தன் ஆதங்கத்தை பிரபலமாக இருக்கும் இவர் மூலம் வந்தாலாவது கருணாநிதிக்கு இதுதான் சரித்திரம் இதுதான் வரலாறு இதுதான் நம்பிக்கை என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பாரோ?

எது எப்படியோ தமிழர்களையும் தாண்டி எல்லோரிடமும் ஏப்ரல் 14 தான் தமிழ் புத்தாண்டு என்று பதிந்துவிட்டது. இதை யாராலும் மாற்ற முடியாதது என்பதற்கு ஒரு சின்ன உதாரணமே இந்த சம்பவம்.....

அட என்னங்க இந்த புது வருடத்தில் ஒரு நல்ல காரியம் செய்யணும் என்பதற்காக கொளுத்திப்போடிருக்கேன் இனி இந்த வெடியை கையாள்வது உங்கள் இஸ்டம்...
Share:

10 கருத்துரைகள்:

thamil said...

இது தெலுங்கு மன்னர்களின் கை வரிசை ஆங்கில புத்தாண்டை எதிர்க்கும் இந்தியர்களே தெலுங்கர்களின் புத்தாண்டை எதிர்க்க எங்களுக்கு உரிமை இல்லையா இது கருணாநிதி கண்டுபிடிப்பல்ல 1921 இல் தமிழர்களின் வேட்கையால் எழுந்த உரிமை போரரட்டம் மறைமலை அடிகளார் நாவலர் சோமசுந்தர பாரதியார் ,பெரியார் போன்ற பெரியோர்களால் எடுக்கப்பட்ட முடிவு கருணாநிதியை எதிர்க்க 1000 நியமான காரணக்கள் உண்டு ஆனால் இதுவல்ல இது இல்லை இது எங்களின் வரலாறு மீட்டெடுப்பு

SShathiesh-சதீஷ். said...

@thamil

உங்கள் கருத்துக்கு நன்றி.ஆனால் எனக்கு இதில் விளக்கம் போதாமல் உள்ளது முடிந்தால் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.
தெலுங்கர்களின் புத்தாண்டு என குறிப்பிட்ட புத்தாண்டு எது?

//1921 இல் தமிழர்களின் வேட்கையால் எழுந்த உரிமை போரரட்டம் மறைமலை அடிகளார் நாவலர் சோமசுந்தர பாரதியார் ,பெரியார் போன்ற பெரியோர்களால் எடுக்கப்பட்ட முடிவு//

அப்படியாயின் அவர்கள் காலத்தில் இல்லாமல் இன்று இதை நடைமுறைக்கு கொண்டுவர என்ன காரணம்?
காலம் காலமாக் நம் முன்னோர்கள் கொண்டாடியது அப்போ புத்தாண்டில்லையா?
இது கருணாநிதி எதிர்ப்பு பதிவல்ல ஒரு ஆதங்கப்பதிவே.

chandru2110 said...

லெமூரியா கண்ட காலண்டரின்படி புத்தாண்டு தை ஒன்றுதான். அதுதான் உலகின் மிக பழமையான காலண்டர். மாயன் காலண்டருக்கு முந்தையது. அதுதான் தமிழ் காலண்டர்.

தெய்வமகன் said...

1. மீனதிலிருந்து மேஷத்திற்கு மாறுவதுதான் புத்தாண்டு என்றால் தெலுங்கு, குஜராத்தி போன்ற பிற மொழி புத்தாண்டுகள் எல்லாம் ஒரே நாளில் தானே வரவேண்டும்? ஏன் அவ்வாறு வருவதில்லை? நீங்கள் சொல்வது உண்மை என்றால் ராசி சக்கரம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறதா?

2. வசந்த கால பிறப்பு தான் புத்தாண்டு என்றால் கோடை காலத்தில் வரும் சித்திரை 1 எப்படி புத்தாண்டாக இருக்க முடியும்? வசந்த காலமும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுமா?

3. சித்திரை 1 ல் வரும் விக்ருதி ஆண்டு தான் தமிழ் புத்தாண்டு என்றால்... விக்ருதி என்பது தமிழ் வார்த்தையா? விக்ருதி என்ற சமஸ்கிருத வார்த்தையை பெயராக கொண்டு தொடங்கும் ஒரு ஆண்டு எப்படி தமிழ் புத்தாண்டாக இருக்க முடியும்? வேண்டுமானால் தமிழ்-இந்து புத்தாண்டாக கருதலாம்! ஏனென்றால் சித்திரை 1 ஐ தமிழ் பேசும் கிறித்தவர்களோ, இஸ்லாமியர்களோ கொண்டாடுவதில்லை...

தமிழ் பேசும் அணைத்து மக்களும் கொண்டாடும் விதமாக கலைஞர் தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக அறிவித்திருக்கிறார்... இது திருவள்ளுவர் ஆண்டை அடிப்படையாக கொண்டது, திருவள்ளுவர் தினம் தை மாதத்தில் வருவதால் தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதே சரி!
சித்திரை 1 ஐ தமிழ்-இந்து புத்தாண்டாக மட்டுமே கொண்டாட முடியும். இந்து புத்தாண்டு என்று கூட கொண்டாட முடியாது, ஏனென்றால் அண்டை மாநிலங்களில் வாழும் தமிழரல்லாத இந்துக்கள் வெவ்வேறு நாட்களில் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்!

தங்க முகுந்தன் said...

இவ்வார யாழ்தேவி நட்சத்திரப் பதிவரே!
பிந்திய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
கொஞ்சம் வேலைப்பளுவால் தாமதமானது - மன்னிக்கவும்!

கன்கொன் || Kangon said...

இதுபற்றி யாராவது அறிந்தவர்கள் விளக்கம் தரவும்...

ஏற்கனவே பெரியாரும் தை வருடப் பிறப்பையே வலியுறுத்தியிருந்தார்...

அறிந்தால் மீண்டும் வந்து சொல்கிறேன்.

SShathiesh-சதீஷ். said...

@chandru2110
தகவலுக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

@தெய்வமகன்
1.மீனத்திலிருந்து இடபத்துக்கு செல்வது தமிழ் புத்தாண்டு என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். தெலுங்கு குஜராத்தியிலும் இதை அடிப்படையாக வைத்த கொண்டாடுகின்றார்கள் அல்லது இது தமிழர்களின் ஐதீகமா? எனக்கு தெரியவில்லை. முடிந்தால் என சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.

2. சித்திரை ஒன்று வசந்தகாலத்தின் பிறப்பென்று கேள்விப் பட்டுள்ளேன். தகவல் தப்பானதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

3. உண்மைதான் இதை ஏற்றுக்கொள்கின்றேன். குழப்பங்கள் தொடர்கின்றன. பெரியவர்களும் அறிஞர்களும் இதை தெளிவுபடித்தினால் நன்றாக இருக்கும்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

@தங்க முகுந்தன்

உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. வலைப்பூவில் இதுவரை வாழ்த்தியது நீங்கள் மட்டும்தான்.

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon
எப்பாடா ராசா நீயும் இப்படி அறிஞர் ஆகிவிட்டாய். சும்மா சொன்னேன். கருத்துக்கு நன்றி.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive