Monday, March 22, 2010

வெற்றி வானலையில் விடை பெறல்.



இன்று நாளை என இழுத்தடித்துக்கொண்டு வந்த என் வானொலி நிறைவுப் பகுதியின் நிறைவுப்பதிவிற்கு ஒரு முடிவு கட்டலாம் என்ற நினைப்பில் இப்போது இந்தப் பதிவு. இது இழுபடக் காரணம் பல. ஒன்று என்னால் இன்னும் முழுமையாக வானொலியில் இருந்து விடை பெற்ற அந்த சோக தருணத்தில் இருந்து மீளமுடியவில்லை. அதேநேரம் இந்தப் பதிவை எழுதலாம் என்றால் மனம் வரவே இல்லை. இதோ இப்போது பணக்காரன் படத்தை பார்த்துக் கொண்டே எழுதுகின்றேன். இதில் என்ன கொடுமை என்றால் நான் விடை பெற்ற நாளுக்கு முதல் நாளில் என் இறுதிப் பாடலாக ஒலித்த மரத்தை வச்சவன் பாடல் என்னை மீண்டும் எங்கோ இழுத்துப்போகின்றது. காத்திருப்பவர் எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு உண்மையில் ஒரு வெறியை தரும் வரி இது.

வெற்றி வானொலி ஒரு சாதாரண ரசிகனாக அதன் ஆரம்ப காலத்திலேயே நான் ரசித்துக் கேட்ட வானொலி. சுபாஷ் அண்ணாவுடன் வந்த சின்ன முரண்பாடு என்னையும் அங்கேயே வேலை செய்ய வைக்கும் என நான் நினைக்கவில்லை. ஆனால் விதி யாரை விட்டது. என்னையும் எங்கோ கொண்டு சென்று விட்டது. இதை பற்றிய என் முன்னைய பதிவை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

நவம்பர் 3, 2008 ஆரம்பித்த பயணம் 2010 மார்ச் பத்தாம் திகதியோடு முற்றுப்பெற்று விட்டது. இந்த முற்றுப்பெறுகை என்னை நிச்சயமாக பாதித்தே இருக்கின்றது. காரணம் இல்லாமல் இருக்குமா? ஒரு குறுகிற காலத்திலேயே ஒரே குடும்பமாக பழகிய வெற்றிக் குழுவினர். என்னையும் தங்களில் ஒருவனாக நினைக்கும் என் பிரியமான நேயர்கள். அத்துடன் பல பிரபலங்களின் நட்பு. இவை எல்லாவற்றையும் ஒரே நாளில் விட்டு வர யாருக்கு மனது வரும். என் குரல் முதல் நாள் ஒலிக்க ஆரம்பித்ததிலிருந்து என் குறை நிறைகளை சுட்டிக்காட்டி என்னை வளர்த்தெடுத்த வெற்றிக்குடும்பமும் நேயர்களும் இன்னும் சில இத்துறை சார் நண்பர்களுக்கும் முதலில் என் நன்றிகளை சொல்லிவிட்டு. இறுதி நாளில் நடந்த மறக்கமுடியா நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றேன்.

என் உயர் கல்விக்காக போகப்போகின்றேன் என்கின்ற காரணமே நான் வெற்றி வானொலியை விட்டு ஒரு அறிவிப்பாளன் என்கின்ற நிலையில் பிரிய காரணம். முதல் நாள் இரவு நான் காற்றின் சிறகுகள் நிகழ்ச்சி செய்யும் போது மறுநாள் ஆகாய முகவரியை நிறுத்தி விட்டு உன்னுடைய சிறப்பு நிகழ்ச்சியாக செய்வோம் என சொன்னார். உடனடியாக ரஜீவும் நானும் சேர்ந்து அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டோம். மறுநாள் மதியம் நான் அலுவலகம் சென்று விட்டேன். காரணம் நான் வழக்கமாக வரும் மாலைப்பொழுதில் வேலை செய்யும் எல்லோரையும் ஒன்றாக காண்பதென்பது எப்போதாவது நடக்கும் ஒரு அதிசயம். எல்லோருடனும் என் இறுதி நிமிடங்களில் சந்தோசமாகா இருக்கவேண்டும் என்ற காரணத்துக்காக சென்றேன். என் எதிர்பார்ப்புப்போலவே எல்லோரும் அங்கே பிரசன்ட். எல்லோருடனும் மனம் விட்டு பேசிவிட்டு இன்னொரு முக்கியமான விடயத்தை செய்யும் வாய்ப்பு எனக்கு அன்றுதான் கிடைத்தது. வழக்கமாக புதியவர்கள் தங்கள் அறிமுக நாளில் லோஷன் அண்ணாவின் ஆசீர்வாதத்துடன் தான் கலையகம் செல்வார்கள் என கேள்விப்பட்டிருக்கின்றேன். எனக்கு அந்த கொடுப்பனை அமையவில்லை காரணம் என்னவென பலருக்குத் தெரியும். எனக்கும் மனதுக்குள் இது ஒரு பெரிய குறையாகவே இருந்து வந்தது. ஆனால் இது என்று கழுவப்படும் என ஏங்கிய எனக்கு என் இறுதி நாள் நிகழ்ச்சியை செய்யும் முன் தான் அந்த வாய்ப்புக் கிடைத்தது. அந்த மன நிறைவுடன் நான் என் இறுதி நிகழ்ச்சியில்......

இரவு 7.30அளவில் அலுவலகம் சென்றுவிட்டேன். மனதுக்குள் பட படப்பு. இதற்குள் Face bookஇலும் என் கடைசி நிகழ்ச்சி பற்றி சிலர் தங்கள் வாழ்த்துக்களுடன் கூடிய அறிவிப்பை செய்து விட்டனர். இந்த இடத்தில் நன்றிகள். என் கடைசி செய்தியை வாசிக்கப்போகின்றேன். எனக்குள் இதே போல ஒரு டென்சன் வேறு ஒருநாளும் இருந்ததில்லை. தயாராகிவிட்டேன். செய்திக்கும் இறுதி நிகழ்ச்சிக்கும். இதில் நானும் ரஜீவும் எடுத்துக்கொண்ட ஒரு சபதம் எக்காரணம் கொண்டும் நிகழ்ச்சியில் கண்கலங்கக்கூடாது என்று. அதில் தெளிவாகவும் இருந்தோம். என் செய்தியை வாசிக்க நான் கலையகத்துக்கு சென்ற வேளை அங்கே நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தது பூஜா அக்கா . எனக்காக அவர் நிகழ்ச்சியில் மகராசன் தோஸ்து நீ பாடலுடன் விடைபெற்று செல்லும் போதே "அடேய் சதீஷ் போறியாடா ரொம்ப நல்ல பழகிட்டு போறியா தம்பி" என கவலைப்பட எனக்கும் முதல் கலக்கம் ஆரம்பித்தது அக்கா நான் செய்தி வாசிக்கணும் வேண்டாம் விட்டுடுங்க என அவரையே கலாய்த்துவிட்டு செய்திக்கு தயாராகிவிட்டேன் மனதில் வலியோடு.

செய்தி வாசித்து விட்டு வேப்ப மரம் புளிய மரம் பாடலோடு என் இறுதி நிகழ்ச்சி ஆரம்பமானது. ரஜீவிடம் போர்ட்டை கையாளும் படி சொல்லிவிட்டு நான் மறு ஒலிவாங்கியில் அமர பூஜா அக்கா மீண்டும் கலையகம் வந்தார். வந்தவர் எனக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கண்கலங்கிவிட்டார். நானும் கொஞ்சம் அப்செட் ஆக அந்த இடத்தை கலகலப்பாக்கியது ரஜீவ். அக்கா வேண்டாம் இன்னும் நிகழ்ச்சி ஆரம்பிக்கவில்லை. நாங்கள் நிகழ்ச்சி செய்யணும் என சொல்ல ஒருவாறு அந்த பிரியாவிடை முடிந்தது. ஆரம்பத்தில் வெளியில் இருந்து பேசிய ரஜீவ் இப்போது சொன்ன வசனம் எனக்கு இன்னும் வலியைக் கொடுத்தது. சதீஷ், வெளியில் இருக்கும் போது இதுதா கடைசி நிகழ்ச்சி என்றாலும் எனக்கு அது பெரிதா தோணல இந்த நிமிடம் ரொம்ப கவலையா இருக்கு சதீஷ் என்ற வார்த்தை என்னை கொஞ்சம் வலியை உணரவைத்தது. நேயர்கள் கேட்கும் கேள்விக்கும் தான் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லவேண்டும் என்றவுடன் கொஞ்சம் பயமாய் தான் போய்விட்டது. ரஜீவ் என்னத்தை கேட்பாரோ அதைவிட நம் அன்பு நேயர்கள் என்னத்தை கேட்டு திக்கு முக்காட வைத்துவிடுவார்களோ என்ற பயம். ஆனால் அட நம் நேயர்களிடம் மறைக்க என்னதான் இருக்கு எந்த கேள்வியாய் இருந்தால் என்ன ஒரு கை பார்த்து விடலாம் என்று முடிவோடு. நல்ல ஜாலியாக ஆரம்பித்தோம் நிகழ்ச்சியை.

இடையில் வெளியே சென்று மூஞ்சிப்புத்தகத்தை திறந்து பார்த்தால் ஒரு நண்பர் சதீஷ் தன் இறுதி செய்தி அறிக்கையை இப்போது வாசித்து முடித்துவிட்டார் என போடா இன்னொருவரோ சதீஷின் இறுதி நிகழ்ச்சி வெற்றியில் என போட கொஞ்சம் அசந்து போனேன். என்னடா இது கிரிக்கெட் ஸ்கோர் போடிறது போல போடுகின்றார்களே என கமென்ட் போட்டு விட்டு அந்த நண்பர்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பை நினைத்து வியந்தேன். அதேநேரம் எஸ்.எம்.எஸ். வாயிலாக மற்ற வானொலிகளின் அறிவிப்பாளர்கள் சிலரின் வாழ்த்தும் வந்து சேர்ந்தது. அந்த அன்பான நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

நேயர்களின் கேள்விகள் ஆரம்பமானது. தொலைபேசியில் வந்த நேயர்களுடன் என்னையே பேசச் சொல்லி விட்டு விட்டார் ரஜீவ். காரணம் உங்களுடன் தானே அவர்கள் பேச எடுப்பார்கள் என்று. அதேநேரம் யாரும் கேள்வி கேட்டால் அதை தான் குறிப்பெடுத்துக்கொண்டு தன் ஸ்டைலில் என்னை போட்டு தாக்க தொடங்கினார் ரஜீவ்.

அங்கே என்னை நோக்கி வந்த கேள்விக்கணைகள் சிலவும் அதற்கான என் பதில்களும்.

கேள்வி: உங்கள் சொந்த இடம்,குடும்பம்.?

பதில்: என் சொந்த இடம் யாழ்ப்பாணம், பிறந்தது அங்கே அதன் பின் கல்வி வவுனியாவில் இப்போது இங்கே. அம்மா அப்பாவிற்கு ஒரே பிள்ளை.

கேள்வி: வெற்றிக்கு வந்த விதம்?


கேள்வி: வெற்றில் பிடித்தவர்?

பதில்: சந்தேகமே இல்லை லோஷன் அண்ணாதான். காரணம் என் ஐந்தாம் ஆண்டில் இருந்து அவரை நான் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். முதலில் நான் அவருக்கு ரசிகன் அதற்க்கு பின்தான் அவர் முகாமைத்துவத்தில் வேலை செய்யும் ஒரு அறிவிப்பாளன்.

கேள்வி: லோஷன் அண்ணாவை தவிர வேறு யாரை வெற்றியில் பிடிக்கும்?

பதில்: ரஜீவ் உங்களை தான் சொல்லணும் காரணம் நீங்கள் தான் எனக்கு அருகில் இருக்கின்றீர்கள் என சொல்லிவிட்டே நான் சொன்னது. எனக்கு வெற்றியில் யாரையும் பிடிக்கதென்று இல்லை.

லோஷன் அண்ணா- பல தடவை இவரிடம் நான் திட்டும் வாங்கி இருக்கின்றேன் அப்போதெல்லாம் சொல்வார் என் தம்பி செந்துவிர்க்கும் இப்படிதான் செய்வேன் விரும்பினால் கேட்டுப்பார் என்று. அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் தொழிலில் அண்ணன் தம்பி எல்லாம் இல்லை எல்லோரும் சமம்தான் அதேபோல்தான் எங்களையும் தன் தம்பி போல நினைத்து தான் நடத்துகின்றார் என்று.

ஹிஷாம் அண்ணா- உதவி முகாமையாளர் என்பதை மீறி நல்ல நண்பர். மாலையில் எங்களுடன் அரட்டை ஆகட்டும் சண்டை(வம்புச் சண்டை தான்) இன்னும் உணவருந்த செல்வதாகட்டும் ரஜீவை போட்டு கலாய்ப்பதாகட்டும் சார்தான் முன்னோடி.

விமல் அண்ணா- இவரை நான் சரியாக புரிந்து கொண்டது அண்மையில் தான். ஒருமுறை மவிண்ட்லவனியா கடற்கரையில் வைத்து அவர் எனக்கு சொன்னது என்ஜாய் பண்ணும் போது பண்ணனும் வேலை செய்யும் போது செய்யணும் அப்படியான ஒரு அண்ணன் உனக்கு கிடைப்பாரா இதோ என்னை பார் என்று அவர் சொன்னதுதான் அவரை நான் புரிந்து கொண்ட சந்தர்ப்பம்.

பிரதீப் அண்ணா- காற்றின் சிறகுகள் நிகழ்ச்சி என்னிடம் தந்தபோது நான் ஆரம்பத்தில் பயந்தேன் என்னால் எப்படி பாடல்களை பக்காவாக போடமுடியும் என்று. ஆனால் என் பாடல் தெரிவுகளை நெறிப்படுத்தி உங்களுக்கு பிடித்த பாடல்களை நான் தர காரணம் இவர்தான்.

சந்துரு அண்ணா- நல்ல நண்பர். எப்போதும் பார்க்க டெரர் போல இருப்பார் என பலர் நினைப்பார். ஆனால் அந்தளவிற்கு என்ஜாய் பண்ணக்கூடியவர். நம்மை எப்போதும் கலாய்ப்பது இந்த தலைதான்.

பூஜா அக்கா- இந்த நிகழ்ச்சிக்கு நான் வரும்போது அவர் கண்கலங்கி வாழ்த்தியதே அவரின் அன்புக்கான ஒரு சாட்சி.

வைதேகி அக்கா- பல விடயங்களை பேசினாலும் அநேகமாய் எனக்கும் அவருக்கும் இடையில் வேண்டுமென்றே வம்புச்சண்டை பிடிப்போம்.

ரஜீவ்- தன் சொந்த விடயங்களையும் பகிர்ந்து கொள்ளும் நல்ல நண்பன். நான் காற்றின் சிறகுகள் பாடல்களை இட்டவுடன் முதலில் பார்த்து திருத்துவது இவர்தான்.

வனிதா- என்னுடன் அறிமுகமான என் நண்பி. அண்மைக்காலமாக தான் எங்கள் நட்பு இறுக்கமானது. நீங்கள் இன்னும் பயணிக்க நிறைய தூரம் இருக்கு. உங்களிடம் திறமை இருக்கு அதேநேரம் வெற்றியில் உங்களுக்கு சாதிக்க நிறைய வாய்ப்புகளும் இருக்கு சாதிக்க இந்த அன்பான நண்பனின் வாழ்த்துக்கள்.

தினேஷா- பழக பெரிதான வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டாலும். எங்கள் அலுவலகத்தில் என்னை அண்ணா என கூப்பிடும் ஒரே தங்கை. உங்களுக்கும் இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள். .

பாபு- உண்மையில் என்னை விட நான்கு வயது அதிகம் ஆனால் பாபு எனதான் கூப்பிடுவேன். அனுபவமும் என்னைவிட அதிகமானவர். பாபு சரியான இடத்துக்கு வந்திட்டிங்க. இனி நீங்களும் மேலே போக வாழ்த்துக்கள்.

டிஷோ அண்ணா- என்னுடைய விருப்பம் அறிந்து பாடல் போடும் அண்ணா. அதாவது எனக்கு எந்த எந்த பாட்டுகள் பிடிக்குமோ அந்த பாடல் களை போடுபவர். அமரகானங்கள் நான் செய்யும் போது பாடல்களை போட்டு அசத்தியவர்.

அருந்ததி அக்கா- எப்போதெல்லாம் ஏதும் குழப்பத்தில் இருந்தால் தீர்த்து வைப்பவர். நல்ல ஒரு வழிகாட்டி.

கேள்வி: வெற்றியில் செய்ததில் பிடித்த நிகழ்ச்சி?

பதில்: நானாட நீயாட காரணம் என் முதல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி என்றால் எங்கிருந்துதான் எனக்கு ஒரு எனெர்ஜி வருமோ தெரியாது. அடுத்து விடியல் ஒருநாள் முழுவதும் இன்னொருநாள் சிறு பகுதியும் செய்துள்ளேன். இந்த துறைக்கு வரும் என்னைப்போன்ற பலரின் இலட்சியமாக இருக்கும் கட்டாயம் செய்ய வேண்டும் என ஆசைப்படும் நிகழ்ச்சி.

கேள்வி: வெற்றியில் இதுவரை செய்யாத நிகழ்ச்சி?

பதில்: ரஜீவ் உங்கள் நிகழ்ச்சிதான். தாம் தூம், ஏன் அதற்கு அப்படி இந்த இரண்டும் இன்னும் எட்டவே இல்லை.

கேள்வி: செய்தி வாசிப்பது தனி ஸ்டைலில் இருக்கும் அதெப்படி யாரிடம் கற்றீர்கள் அப்படி முடிகின்றது?

பதில்: இதற்காக தனியாக கற்றது என்றில்லை. வெற்றியில் தந்த பயிற்சி அதே போல என் ஆசிரியர்கள். பாடசாலை காலத்திலேயே இந்த திறனை வளர்த்துக்கொண்டேன்.

கேள்வி: வெற்றியில் முதல் நாள் முதல் நிகழ்ச்சி?

பதில்: முதல் நாள் அமைதியாக சந்தோசமாக ஆரம்பமானது. முதல் நிகழ்ச்சி சுபாஷ் அண்ணாவுடன் சேர்ந்து எல்லாப்புகழும் ஒருவனுக்கே நீ ஓடிக்கொண்டிரு என்ற பாடலோடு ஊட ஆரம்பித்தேன் ஓடிக்கொண்டிருக்கேன்.

கேள்வி: ஒரு துடிப்பான ஒலிபரப்பாளனாக நல்ல எழுத்தாற்றல் கொண்டவனாக அதை விட நல்ல நண்பனாக எங்களுக்கு தெரிந்த இவனின் அடுத்த பரிமாணம் என்ன? இதை கேட்டவர் ஒரு போட்டி வானொலியில் வேலை செய்யும் அறிவிப்பாளர்.

பதில்: நல்ல நண்பன் என்று சொன்னது உண்மையில் மற்ற இரண்டு விடயங்களையும் விட சந்தோசமானது. காரணம் இந்த துறையில் போட்டி இருக்கு அதை விட நட்பு இருக்கின்றது என்பதை உணர்த்திவிட்டீர்கள். அடுத்த பரிமாணம் என்ன எதையும் ப்ளான் பண்ணல என் வாழ்க்கையில் எல்லாம் தன் பாட்டில் நடக்கின்றது. ஓடுவோம் ஓடிக்கொண்டே இருப்போம். அதேபோல நம்பிக்கையோடு போராடிக்கொண்டே இருப்போம்.

கேள்வி: வெற்றியில் இருந்து போகும் நீங்கள் இந்த துறையை விட்டு ஒரேயடியாக போய் விடுவீர்களா அல்லது படிப்பு முடித்து வருவீர்களா?

பதில்: உண்மையில் அந்தக்கணம் நான் இந்த துறையில் மீண்டும் வருவேன் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் படிப்பை முடித்த பின் எப்படியும் என் வாழ்க்கை இன்னொரு மாற்றத்துக்குள் சென்று விடும் என எனக்குத் தெரியும். எனவே வாய்ப்புக்குறைவு என்றே சொனேன். சொல்லிவிட்டு எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து படுத்தால் இரவில் தூக்கம் இல்லை. இன்னும் நான் தூங்க தொடங்கவில்லை. நேசித்த ரசித்த தொழில் அதைவிட பாசமான சொந்தங்களான நேயர்கள் இவர்கள் இல்லாமல் வாழ்க்கை ஏனோ வெறிச்சோடிப்போய் இருக்கின்றது. இன்றும் நேயர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் எஸ்.எம்.எஸ் எல்லாம் என்னை மீண்டும் வா வா என்கின்றது. அந்த இறுதி நிகழ்ச்சியை கேட்டு அழுதோம் என சொல்லும் நேயர்கள் பலர் அதை விட இதே துறையில் இருக்கும் பலர் இவர்கள் எல்லாம் எனக்காக ஒரு சொட்டுக்கண்ணீர் வடித்தனர் இந்த பாசம் எங்கே கிடைக்கும். உறவுகள் பெரிதாக இல்லை என்று சொன்ன எனக்கு இதோ உனக்கு ஒரு அக்கா ஒரு அண்ணா தம்பி தங்கை என ஒவ்வொரு உறவும் இருக்கு என்று கலையகத்துக்கு அழைப்பெடுத்து அழுத அந்த நல்லுள்ளங்களுக்கு நான் என்ன செய்யப்போகின்றேன்.

என்னால் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும். இன்னும் இந்த துறையில் படிக்க சாதிக்க நிறைய இருக்கும் போது நான் இதுவரை செய்த நிகழ்ச்சிகளை கேட்டு எனக்கும் ஆதரவளித்தவர்களுக்கு நன்றிகள் ஆனால் உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை இந்த பதிவின் இறுதியில் சொல்கின்றேன்.

கேள்வி: உங்கள் காதல் கதை?

பதில்: என் பெற்றோரை தொழிலை காதலிக்கின்றேன். ஆனால் நீங்கள் என்ன கேட்கின்றீர்கள் என தெரியும் என் வாழ்விலும் ஒரு காதல் வந்தது ஆனால் சில காரணங்களால் அது தோற்றுவிட்டது. இந்த இடத்தில் அந்த நபருக்கு என் நன்றிகள். காரணம் இன்று நான் சந்தோசமாக இருக்கவும் இத்தனை சொந்தங்களை பெறவும் காரணமாக இருந்தது அந்த காதல் தோல்விதான். கேள்வி கேட்டவரே போதுமா?
நினைவில் நின்ற கேள்விகளை மீட்டு இங்கே பகிர்ந்துள்ளேன். நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கும் போது என் தனிப்பட்ட தொலைபேசிக்கே பல எஸ்.எம்.எஸ்களும் அழைப்புக்களும் வந்திருந்தன. அதில் மற்ற வானொலி, தொலைக்காட்சியில் இருந்து சாதித்தவர்கள் சிலரும் அடங்கி இருந்தது எனக்கு கவலையிலும் சந்தோசம் கொடுத்தது, காரணம் என்னையும் இவர்கள் கவனித்திருக்கின்றார்களே என்று. இன்றும் அந்த நட்புக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதிலும் ஒருவர் தாங்கள் ஒரு குட்டி லோஷனை மிஸ் பண்ணப்போகின்றோம் என என் மீது கொண்ட அன்பு மேலீட்டால் சொல்லிவிட்டார். அதேபோல இன்னொரு அறிவிப்பாளரும் அவர் நண்பன் ஒருவர் இதை சொன்னதாக சொன்னார். உண்மையில் நீங்கள் அப்படி சொன்னது சந்தோசம் காரணம் என் குருவும் நான் ரசித்து ரசித்து வளர்ந்தவரும் அவர்தான். இதை விட பெரிய விடயம் வேறு என்ன இருக்கும் எல்லோருக்கும் அந்த துறையில் வரும் போது சாதித்த ஒருவரை போல தாங்களும் வர வேணும் என்பதே இலட்சியமாக இருக்கும். அந்த அன்பு வார்த்தைகளுக்கு நிச்சயம் நான் தகுதியானவன் இல்லை. நான் இன்னும் படிக்கவே பல இருக்கின்றது. அதைவிட இன்னொரு சுவாரஷ்யமான விடயமும் நான் இதில் சொல்ல வேண்டும். சினிமாலை நிகழ்ச்சியை அடுத்தவாரத்தில் இருந்து நீதான் செய்யப்போகின்றாய் என அப்போது நான் சொன்ன விடயம் அண்ணா வெற்றியின் ஒரு அறிவிப்பாளனாய் அந்த நிகழ்ச்சி எனக்கு கிடைப்பது சந்தோசம் ஆனால் உங்களின் ஒரு ரசிகனாக எனக்கு அது கவலை. காரணம் உங்களுக்காகவே சினிமாலை கேட்டவன் நான். இனி நான் எப்படி அதை செய்வேன்?

நிகழ்ச்சியில் இடை இடையே ரஜீவ் தன் சொல்லாளுமையாலும் தகுந்த பாடல்களினாலும் கலங்கடித்து விட்டார். இனி ஒரு அறிவிப்பாளனாய் இந்தக் கலையகத்துள் வர முடியாதே. நேயர்களின் தொலைபேசி அழைப்பெடுக்க முடியாதே. உங்கள் கவிதைகளை வாசிக்க முடியாதே, காற்றி சிறகுகளின் ஆகைய முகவரியில் உங்கள் கடிதங்களுக்கு குரல் கொடுக்க முடியாதே என என்னும் போது கலங்கத் தொடங்கினேன். அந்த நேரம் பார்த்து ஒலித்த பாடல் விடுகதையா இந்த வாழ்க்கை. பொதுவாக நான் பாடல் தெரிவுகளை செய்யும் போது நம்மை அந்த இடத்தில் வைத்து பார்த்து தான் தெரிவு செய்வேன். இது கொஞ்சம் ஓவர் தான் ஆனால் இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் என்னை வாளால் வெட்டியது போல இருந்தது. அதில் வந்த ஒரு வரி வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்..... என்று வந்தது நான் போவதும் வாழ்வை தேடி கிடத்தட்ட வடக்கே தானே. அழுதே விட்டேன். ரஜீவும் நானும் கலங்கி இருக்க அதன் பின் வந்த எந்த அழைப்பையும் நான் எடுத்துப் பேசவில்லை. பேசும் நிலையில் நான் இல்லை. ஏதோ ஒரு கவசம் இல்லாமல் போவது போல இருந்தது. ஏதோ பெரிய இழப்பு என்று வாட்டியது.

இந்த நிகச்சியை எப்படியாவது பதிவு செய்ய வேண்டும் என்று பார்த்து ஒன்றல்ல இரண்டு ஏற்பாடு செய்தேன். அலுவலகத்தில் இணையத்தில் வெற்றி ஒலிக்கும் நேரம் அதேபோல வீட்டில் கசட்டில் ஒலிப்பதிவு செய்தால் இடையில் நம் இணைய ஒலிபரப்பு தடைப்பட்டுப்போக அதை கைவிட வேண்டிய நிலை. சரி வீட்டில் சரியாய் இருக்கும் தானே என்று வந்து பார்த்தால் நன் செய்தி வாசிப்பதும் இறுதியில் விடைபெறுவதும் மட்டும் இருக்கின்றது. என்ன கொடுமை சார் இது. ஒருவாறு வழக்கம் போல விடை பெற என்ற எண்ணத்தில் எங்கள் மன நிலையை இலகுவாக்கி கொண்டோம். புதியவர்கள் வரப்போகின்றார்கள் அவர்களுக்கும் நேயர்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் என் நானாட நீயாட விடைபெறல் ஸ்டைலில் வரட்டாவுடன் விடை பெற்றேன். இறுதிப்பாடல் நாடோடி நண்பா போகாதே.............எனை ஈன்ற பூமி எனை அங்கு தேடும் என் தொட்ட பூவெல்லாம் காணாமல் வாடும் எனவே வருவேன் என்பதே வெற்றியில் என் இறுதி வார்த்தைகள்.

ஒருவாறு விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன். வந்திருந்த எஸ்.எம்.எஸ்கள் எல்லாவற்றுக்கும் பதில் அனுப்பிக்கொண்டிருந்த போது லோஷன் அண்ணாவின் எஸ்.எம்.எஸ் வந்தது அதை அப்படியே இங்கே இடுவிடுகின்றேன். Good show da. Sentimental. All the best for ur new future. Its all in the game of life. Thanks for the nice words about me. take care. தொடர்ந்து காலையிலும் எனக்கு வாழ்த்தியதோடு என்னைப் பற்றி நன்றாக கூறி இருந்தார். அண்ணா நன்றி மட்டும் தான் என்னால் சொல்ல முடியும் ஆனால் நான் தடுமாறிய வேளைகளிலும் இன்னும் சில சூழ்நிலைகளிலும் எனக்கு ஆதரவாகவும் ஆலோசனைகளை தந்தமைக்கும் நன்றி மட்டும் தான் சொல்லமுடியும். அதே போல வெற்றிக் குடும்பமும் நீங்களும் சொல்லித்தந்த இந்த தொழிலை இந்த கலையை நான் எங்கிருந்தாலும் உங்கள் பெயரை காப்பாற்றுவது மட்டுமே நான் செய்யும் கைம்மாறு.

வெற்றிக்குடும்பமே, ஜேசன்,தினேஷ்,செய்திப் பிரிவை சேர்ந்த பென்சி அண்ணா,ரஜினி அண்ணா, அருண்,விஜய்,லெனின்,சிறியான் இன்னும் அங்கே இருக்கும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் உயர் அதிகாரிகளுக்கும் உங்கள் அன்புக்கு நன்றி. என் பிரியமான நேயர்களே, உங்களை ரொம்பவே விட்டு செல்கின்றேன். இந்த இழப்பை எப்படி ஈடு செய்வேன் தெரியவில்லை. வெற்றிக்கான உங்கள் ஆதரவுக்கு நன்றி. அதேபோல ஒரு நாள் நானும் புதுமுகம்தான் எனவே அடுத்து புதிதாய் வருபவர்களுக்கும் உங்கள் ஆதரவைக் கொடுங்கள். உங்கள் ஆதரவு இல்லாவிட்டால் எந்த ஒரு அறிவிப்பாளரும் நிலைக்கமுடியாது. எனவே அவர்களையும் வளர்த்துவிடுங்கள். பதிவுலக நண்பர்களே பின்னூட்டத்திலும் சரி சில பதிவுகளிலும் சரி என்னை பற்றி நல்ல விதத்திலும் சரி குறைகளையும் சரி விமர்சித்த உங்களுக்கும் என் நன்றிகள்.

அந்த சந்தோஷமான செய்தி என்ன..... சிலவேளை நான் என் கல்வியோடு நான் செல்லும் நாட்டில் இருந்து இயங்கும் ஒரு சர்வதேச வானொலியில் இணைந்து மீண்டும் இதே துறையில் பயணிக்கும் வாய்ப்பிருக்கின்றது.....ஒரு நண்பர் இது பற்றி பேசி இருக்கின்றார்.......இந்த துறையை விட்டு இருக்க முடியாது....எனவே சிந்திப்போம் என்ற நம்பிக்கையில் இப்போது விடைபெறுகின்றேன் விடைபெறும் நான் என்றென்றும் ப்ரியமுடன் உங்கள் பிரியமானவன் சதீஷ்.
Share:

16 கருத்துரைகள்:

கன்கொன் || Kangon said...

வாழ்த்துக்கள் அண்ணா...

நடப்பவை எல்லாம் நலமாகவே அமையும்.
உங்கள் வானொலி வாழ்க்கை வெற்றியுடன் நிறைவடைந்து போகாமல் குறிப்பிட்டவாறு தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள்....

பதிவைப் படிக்கும் போதே அந்த சோக உணர்வு வருகிறது...

எதிர்காலப் படிப்புகள், முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள், வெற்றி உங்களதே...

KANA VARO said...

வாழ்த்துக்கள்… கொஞ்சம் லேட்டா வாரன்..

ஆதிரை said...

வாழ்த்துக்கள் சதீஷன்.

Vijay said...

உங்கள் பயணங்கள் அனைத்தும் இனிதாக அமைய என் வாழ்த்துக்கள்

தமிழ் மதுரம் said...

வாழ்த்துக்கள் நண்பரே! வானொலி வாழ்வை மிக இனிமையாகப் பகிர்ந்துள்ளீர்கள்.. தொடரட்டும் தங்கள் பயணம்.

Unknown said...

உங்க பதிவு காற்றின் சிறகுகள் போலவே மிகவும் சென்டிமென்டலாவே இருக்கு


வாழ்த்துக்கள் உங்கள் உயர் கல்வி படிப்புக்காக

யோ வொய்ஸ் (யோகா) said...

சிறந்த எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் சதீஷ்.

பதிவுலகில் தொடர்ந்து இருங்கள்

Subankan said...

வாழ்த்துகள் சதீஷ் :)

Ramesh said...

வாசிப்பை நிறுத்திவிட்டேன் இடையில் முடியல சதீஷ்... கலக்கம் கண்களைவிட நெஞ்சினில்... ஏனெனில் வானொலி ரசிகன் எப்போதும் எனது மனதில் கஸ்டம் வந்தால் அதை விட துணை வேறுயாரு இதில் எப்போதும் உங்கள் நிகழ்ச்சி பிடிக்கும். நேரம் கிடைப்பது அந்த நேரம் எனக்கு மட்டுமே பொருத்தமானது போல இருக்கும்.
இருந்தாலும்
வாழ்க்கையின் பாதைகளில் இதுவும் ஒரு அனுபவம் பிரிவு தாங்கொணாது ஆனாலும் வெற்றி உன்னைச் சுற்றி இருக்கும் நீ எங்கு சென்றாலும்.. வாழ்த்துக்கள் அடுத்த வெற்றி இலக்குக்கு.. நன்றி இதுவரை தந்த படைப்புகளுக்கு. முடிந்தால் எப்போதும் தொடர்பிலிருங்கள்.

அ.ஜீவதர்ஷன் said...

மாற்றம் என்ற ஒன்றைத்தவிர எல்லாமே மாறும் என்பது பொதுவிதி, இன்றைய உங்களின் ஏக்கம் நாளை உங்களின் வசந்தகால நினைவுகளாக இருக்கும், இனி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிகரமாக இருக்க வாழ்த்துக்கள்.

தர்ஷன் said...

வாழ்த்துக்கள் சதீஷ்
உங்கள் கல்வி நடவடிக்கைகள் சிறக்கவும் வளமான எதிர்காலத்திற்கும்

வந்தியத்தேவன் said...

Welcome to new life :-)

கரவைக்குரல் said...

தொடர்ந்தும் உங்கள் உங்கள் பயணம் சிறப்பாக வாழ்த்துக்கள் சதீஷ் வாழ்த்துக்கள்
வானலையில் இருந்து விடைபெறல் என்பது மிகக்கஸ்டம் தான்.
என்ன செய்வது? தவிர்க்க முடியாதது அல்லவா?

தொடர்ந்தும் உங்கள் கல்வியோடு எல்லாம் சிறக்க வாழ்த்துக்கள்

Hisham Mohamed - هشام said...

அவசரப்படாமல் நிதானமாக சிந்தித்து செய்றபடு வெற்றி கிட்டும். வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்

செல்வராஜா மதுரகன் said...

அருமையான நிறைவுக்கட்டுரை சதீஷன், பாடசாலைக் காலத்திலிருந்து உங்களை அறிந்தவன் என்பதால் கூறுகிறேன் நீங்கள் ஏற வேண்டிய மலையில் இன்னும் நிறையத்தூரம் இருக்கிறது...

SShathiesh-சதீஷ். said...

வந்து வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்த்த நன்றிகள்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive