உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Wednesday, September 30, 2009

லோஷனுடன் அந்தரங்கம். பகுதி- 1



லோஷன். இந்த பெயர் இலங்கை வானொலி வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர். தமிழ் சினிமாவில் எப்படி ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நடிகர்கள் ஆண்டார்களோ அப்படி இப்போது இலங்கை வானொலிகளின் சூப்பர் ஸ்டார் லோஷன் அண்ணா தான். கடந்த பத்து வருடங்களாக அறிவிப்பு துறையில் கலக்கிக்கொண்டிருக்கின்றார். அங்கே கலக்கியது போதாதென்று இப்போது பதிவுலகிலும் தன்னை ஒரு முன்னணி பதிவராக நிலை நிறுத்தி பல பதிவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் லோஷன் அண்ணாவை என் ஐந்தாம் ஆண்டில் இருந்து வானொலியில் தொடர்ந்தவன் நான்.

முதல் முறையாக பார்த்த நாளே இன்னும் நினைவை விட்டு அகலா நிலையில் இன்று அவருடன் அருகாமையில் இருப்பது மகிழ்வளிக்கிறது. லோஷன் அண்ணாவிடம் பலருக்கு பல கேள்விகளை கேட்க மனதில் ஆசை இருக்கும் ஆனால் சந்தர்ப்பம் கிடைக்காது. சிலருக்கு இந்த கேள்வியை கேட்டால் அவர் எப்படி பதில் சொல்வார்? சங்கடப்படுவாரா என தாங்கள் சங்கடப்பட்டு கேட்காமல் விட்டோரும் பலர். இப்போது என் முறை கேள்விகளால் அவர் அந்தரங்கங்களுடன் உங்களை சந்திக்கின்றேன்.


லோஷன் அண்ணாவுடன் நான்...இரண்டு பேரும் பக்கத்திலேயே நின்று கொண்டு தொலைபேசியில் எங்களுக்குள் பேசவில்லை.
இங்கே நான் கேள்விகளை கேட்க லோஷன் அண்ணா தன் மனம் திறந்து உள்ளதை உள்ளபடி கொட்டி உள்ளார். இப்படி ஒரு பதிவு இடப்போகின்றேன் என அவரிடம் கேட்டவுடன் தலை ஆட்டிவிட்டார். இந்த நேரத்தில் அவருக்கு என் நன்றிகள். என்னிடம் பதிலகை அவர் ஒப்படைத்து இன்று கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. நேரம் கிடைக்காமல் இழுபட்டு இப்போதுதான் அந்தரங்கத்தை உங்களிடம் சொல்ல நேரம் வந்திருக்கின்றது. எந்த கேள்வியானாலும் உள்ளதை உள்ளபடி சொல்கின்றேன் என தன் மன ஓட்டத்தை கொட்ட தயாரான லோஷன் அனாவே இனி உங்களுடன் அடிக்கடி பேசப்போகின்றார்.
இன்னும் பல உண்மைகளை அவர் வாயிலிருந்தே கறக்க தயாராகுங்கள். நீங்களும் உங்கள் கேள்விகளை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் பரிசீலனையின் பின் கேள்விகளுக்கான விடைகளுடன் பதிவு தொடர்ந்து உங்களை நாடிவரும். ஆனால் இங்கே யாரும் பின்னூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படமாட்டாது என்பதையும் சொல்லிவிடுகின்றேன்.
உங்கள் கேள்விக் கணைகளை அனுப்புங்கள். sshathiesh@gmail.com
இதோ என் கேள்விகளும் அதற்கான லோஷன் அண்ணாவின் பதில்களும் கேள்வி பதில் வடிவில்? ஆரம்பத்தில் சிறிது சிறிதாக ஆரம்பிப்போம் அப்புறம் கேட்போம் கேட்க வேண்டிய கேள்விகளை..... லோஷன்.
கேள்வி: பிறந்து தவழ்ந்து வளந்த மண்ணைப்பற்றி சொல்லுங்களேன்?
லோஷன் அண்ணா: யாழ்ப்பாணத்தில் அழகிய கிராமம் இணுவில். ஆனால் அங்கு வசித்து 7 வருடங்களுக்கு உட்பட்ட காலமே.வாழ்க்கையில் பெரும்காலம் கொழும்பிலேயே வசித்துள்ளேன்.
கேள்வி: குடும்பப்பின்னணி பற்றி சொல்லுங்களேன்?
லோஷன் அண்ணா:அழகான ,அன்பான அக்கறையான மனைவி,குறும்பும் குழப்படியுடனும் குதூகலம் தரும் ஒன்றரை வயது செல்லமகன். அன்பால் இணைந்த அப்பா அம்மாவுடன் இரு இளைய சகோதரர்கள்.
கேள்வி: உங்களுக்கே செல்லம் கிடைத்துள்ள நிலையில் நீங்கள் அம்மா செல்லமா அப்பா செல்லமா?
லோஷன் அண்ணா: எப்போதுமே அம்மா செல்லம்.
கேள்வி: உங்கள் கண்டிப்பில் வளர்ந்தவர்கள் நிறையப்பேர் உங்களை வீட்டில் கண்டிப்பவர் யார்?
லோஷன் அண்ணா:செல்லமாக இருந்தாலும் அதிகம் கண்டித்தவர்/ கண்டிப்பவர் அம்மாதான். இப்போது இன்னொருவர் சேர்ந்துள்ளார். தேவையான நேரம் கண்டிக்கும் என் மனைவி. (தண்டிப்பதில்லை என்பதை தெளிவாக அறிவித்து விடுகின்றேன்.)
கேள்வி: மறக்கமுடியாத பாடசாலை கால பசுமை நினைவுகளை மீட்டுங்கள்?
லோஷன் அண்ணா: இப்போது அறுவடை செய்யும் எல்லாமே பாடசாலைக் காலத்தில் விதைத்த பல தமிழ் விதைகள் தான். நான் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் படித்தேனோ இல்லையோ விவாதம், பேச்சு, நாடகம், கவிதை, சிறுகதை எழுதுதல், வில்லுப்பாட்டு மட்டுமின்றி கிரிக்கெட், சதுரங்கம் என்பவற்றில் அதிகம் ஈடுபட்டேன். இன்று என் ஊடகத்துறையில் அவை அனைத்துமே மிக உதவியாக இருக்கின்றன.
கேள்வி: வானலையின் சிங்கம் படிப்பில் சிங்கமா?
லோஷன் அண்ணா: எனது முன்னைய வகுப்பாசிரியை ஒருவர் சொன்னது போல கா.பொ.த.சா/தரம் O/L வரை மொக்கர்களின் வகுப்பில் முதலாம் பிள்ளை தான். (8 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரை.) A/L தான் தடுமாறி சராசரி ஆகிவிட்டேன்.கவனக்கலைப்பான்களில் கலைந்து விட்டாலும்- எதிர்பார்த்த பெறுபேறுகள் வராவிட்டாலும் பல்கலைக்கழகம் கிடைத்தும்- பின் ஊடகத்துறையின் மேல் வந்த ஈடுபாட்டால் செய்யவில்லை.
கேள்வி: காதலில் விழுந்த அனுபவம் உண்டா?
லோஷன் அண்ணா: உண்டு.
கேள்வி: நிறங்களில் நெஞ்சை கொள்ளை கொண்டது?
லோஷன் அண்ணா: கறுப்புதான் எனக்கு பிடித்த கலர்!
கேள்வி: நன்றாக ஒரு பிடி பிடிக்கும் உணவு?
லோஷன் அண்ணா: பசிக்கும் நேரத்தில் ருசியான எதுவும்... பால் அப்பம், சில்லி பரோட்டா & Submarines
கேள்வி: எழுத்தால் உங்களை வென்றவர்கள்?
லோஷன் அண்ணா: மகாகவி பாரதி, சுஜாதா, வைரமுத்து மற்றும் வலையுலகில் பலர்.
கேள்வி: ஆட ஆசைப்படும் விளையாட்டு?
லோஷன் அண்ணா: எப்போதுமே கிரிக்கெட்.
கேள்வி: பார்த்து பரவசப்படும் விளையாட்டு?
லோஷன் அண்ணா: கிரிக்கெட்,கால்பந்து, டெனிஸ்( பெண்கள் டெனிஸ் மட்டுமல்ல.)
கேள்வி: கொள்ளைகொண்ட விளையாட்டு வீரர்கள் மூவர்?
லோஷன் அண்ணா: ஐவரை சொல்கின்றேன். - 5 தான் எனது அதிஷ்ட இலக்கம்.
முத்தையா முரளிதரன்.
அலன் போடர்.
ரொஷான் மஹாநாம.
மத்தியூ ஹெயடன்.
ஆந்திரே அகாசி.(டென்னிஸ்.)
கேள்வி: இசையால் வருடிய இசை அமைப்பாளர்கள்.?
லோஷன் அண்ணா: 80 களின் இளையராஜா.
90 களின் ஏ.ஆர.ரகுமான்.
90 களிலிருந்தும் இப்போதும் வித்யாசாகர்.
கேள்வி: குரலால் மயக்கிய பாடக பாடகியர்?
லோஷன் அண்ணா: S.P. பாலசுப்ரமணியம்.
P. சுசீலா.
சித்ரா.
சுஜாதா.
ஸ்ரேயா ஹோஷல்.

கேள்வி: கடவுள் நம்பிக்கை?

லோஷன் அண்ணா: தனிப்பட்ட முறையில் இல்லை. அன்புக்குரியோருக்காக கொஞ்சம். அதிகம் நம்பும் கடவுள்-லோஷன்.

கேள்வி: முதல் வேலை அனுபவம்?

லோஷன் அண்ணா: முதல் நாளே ஒலிவாங்கியில் குரல் ஒலித்தது. முதல் வேல மட்டுமல்ல இப்போதும் அதே ஒலிபரப்பாளர் வேலை தான்.........ஒவ்வொரு நாளும் புதிதாய்........

கேள்விக்கணைகளும் பதில் கனிகளும் தொடரும்............
Share:

Sunday, September 27, 2009

சொதப்பல் ஆட்டம் ஆடிய இந்தியாவும் சாதித்து காட்டிய பாகிஸ்தானும்.



இங்கேயும் வெற்றி இல்லை.

இம்முறை நடைபெறும் ஐ.சி.சாம்பியன் கிண்ண தொடரின் மிக முக்கியமான போட்டியாக நடை பெற்ற போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதின. சுவாரஷ்யத்துக்கு பஞ்சமில்லாமல் நடந்த போட்டியில் இந்தியா ஏமாற்றி விட்டது. நாணய சுழற்ச்சியில் பாகிஸ்தான் வென்றவுடன் முதலில் தாங்களே துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தார் பாகிஸ்தான் அணித்தலைவர். காயத்திலிருந்து மீண்டு வந்த யூனுஸ், இந்த போட்டியில் எப்படியும் இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம் என சொன்னதை சாதித்து காட்ட முதல் படியாக நாணய சுழற்சியில் வென்றார்.


துடுப்பாட்டத்தில் விட்டதை துடிப்பாக ஆடி ஈடுகட்டியவர்.

இம்ரான் நசீர்-கம்ரான் அக்மால் இணையை நீண்ட நேரம் நிலைக்கவிடாமல் நசீரை நெஹ்ரா அனுப்பி வைத்து இந்தியாவிற்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். தொடர்ந்து கம்ரான் அக்மாலையும் குறித்த இடைவெளியில் அவரே அனுப்பி வைக்க, அணித்தலைவர் யூனுஸ் கானை ஹர்பஜன் பார்த்துக்கொண்டார். நன்றாக போய் கொண்டிருந்த இந்த பயணத்தில் மாலிக் - முஹம்மத் யூசுப் ஜோடி இடியை கொடுக்க ஆரம்பித்தது. எந்த பந்து வீச்சாளராலும் இந்த இணையை பிரிக்க முடியாமல் போனது. இதற்குள் இந்திய அணியின் களத்தடுப்பு உலகத்தரம் வாய்ந்த ஒரு அணியிடம் இருக்க வேண்டிய களதடுப்பா இது என கேட்கவைத்தது. ஓட்டங்களை இவர்கள் பெற்றுக்கொடுக்க பாகிஸ்தானின் ஓட்ட எண்ணிக்கையும் அசுர வளர்ச்சி கண்டது. மாலிக் வழக்கம் போல இந்தியர்களை அடித்து துவைத்தார். மீண்டும் ஒரு சதம் கண்ட அவரின் துடுப்பாட்டம் மற்றவர்களுக்கு பாடமாக அமைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிரிடி ஏமாற்ற பாகிஸ்தான் ஐம்பது ஓவர் முடிவில் ஓட்டங்களை பெற்றது.


இந்தியாவின் கனவை தகர்த்த ஜோடி.

நம் இந்தியர்கள் தான் துடுப்பாட்ட சூரர்களாச்சே. அதுவும் கம்பீரும் வந்திருக்கிறார் கலக்குவார் என்னும் நம்பிக்கையில் காத்திருக்க சச்சினும் கம்பீரும் நன்றாக தான் தொடங்கினர். ஆனால் வழக்கமாக முக்கிய ஆட்டங்களில் சொதப்பும் சச்சின் இங்கேயும் அந்த நோயை ஆரம்பித்தது வைத்தார். ஆனால் தொடர்ந்து வந்த திராவிட் நம்பிக்கை கொடுக்க அடித்து பிளந்து கொண்டிருந்தார் கம்பீர். திராவிட் ஆமை ஆட்டம் ஆட கம்பீர் அனல் பறக்கும் ஆட்டம் நம்பிக்கை தந்தது. அந்த நம்பிக்கை நெடுநேரம் நீடிக்கவில்லை. அநியாயமாக ரன் அவுட் முறையில் கம்பீர் வெளியேற இந்தியாவின் வெற்றியும் அவர்களை விட்டு வெளியேறி விட்டது. இருந்தாலும் இந்திய ரசிகனாக இன்னும் நம்ம தோணி,ரெய்னா,யுஸுப் எல்லாம் இருக்கிறார்களே பார்க்கலாம் என நானும் ஆவலாக இருந்தேன்.


மீண்டு வந்து பலியாகிய சூரர்.

ஷேவாக் இல்லாதது ஆரம்பத்தில் தெரிய இடை வரிசையில் ஆடும் யுவராஜ் வெளியேற அந்த இடத்துக்கு வந்த கோலி கலக்குவார் என நம்பி இருக்க ஓரளவிற்கு அடித்து ஆடினார். இந்த நிலையில் ஆமை வேகத்தில் இருந்து திராவிட் அதிரடிக்கு மாறினார். இதை பார்த்து தானும் அதிரடிக்கு மாறிய கோலியின் அனுபவமினமையால் அவரும் நடையைக் கட்டினார். தொடர்ந்து வந்த அணித்தலைவர் தனக்கும் போட்டிக்கும் சம்பந்தமில்லை என்பது போல உப்பு சப்பு இல்லாமல் ஆட நீங்கள் போய் வாருங்க என அபிரிடி அனுப்பி வைத்தார். அதன் பின் வந்த ரெய்னா டிராவிட்டுடன் இணைந்து வெற்றியை நோக்கி கொண்டுவந்தார். இருவரும் இணைந்து பாகிஸ்தானை பந்தாட திராவிட் தன அரை சதத்தை கடந்து தன்னை இவ்வளவு நாளும் ஒதுக்கி வைத்த தெரிவாளர்களுக்கு சாட்டைஅடி கொடுத்தார்.


தன் பங்குக்கு அசத்தியவர்.

ஆனால் இந்த சந்தோஷமும் நெடுநேரம் நீடிக்கவில்லை.ரெயினாவும் நாற்பத்தாறு ஓட்டங்களோடு வெளியேற கனவு களைய தொடங்கியது. அப்போதும் டிராவிட்க்கு யுஸுப் கை கொடுப்பார் என எதிர்பார்க்க கைவிட்டு விட்டார். இறுதி நம்பிக்க ஹர்பஜனிடம். அதை காப்பாற்றும் படி ஹர்பஜன் ஆடினாலும் மீண்டுமொருமுறை முட்டாள் ஆட்டமாடிய திராவிட் இம்முறை தன விக்கெட்டை பரிதாபமாக பறி கொடுத்து நடையைக் கட்டினார். அத்துடன் இந்தியா ஜெயிக்கும் எனும் கனவும் கலைய தொடங்கியது.


தன்னை ஒதுக்கியவர்களுக்கு சாட்டை கொடுத்து விட்டு கரை சேர்க்க முடியாமல் போனவர்.

மொத்தத்தில் நீண்ட நாட்களாக திட்டம் தீட்டியது மட்டுமன்றி இந்தியாவை இம்முறை கவிழ்ப்போம் என கூறிய பாகிஸ்தான் வீரர்கள் அதை சாதித்தும் காட்டி விட்டனர். ஆனால் இந்த போட்டியில் சச்சின் உட்பட இந்திய வீரர்கள் பொறுப்பற்ற சொதப்பல் ஆட்டமாடியதே தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. இல்லையேல் உலகின் முதல் நிலை அணி இப்படி மூஞ்சியில் கரி படும் படி தோற்றிருக்காது. மொத்தத்தில் இம்முறை கிண்ணம் யாருக்கு என்ற என் கணிப்புகளும் பொய்யாகி வருகின்றன.சிலவேளை பாகிஸ்தானோ ஏன் இங்கிலாந்தோ கிண்ணத்தை சுவீகரித்தலும் ஆச்சரியமில்லை.
Share:

Saturday, September 26, 2009

விஜய் நடித்திருக்க வேண்டிய திரைப்படம் முதல்வன்- ஷங்கர்.



அண்மையில் தான் இளைய தளபதியின் வேட்டைக்காரன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. பாடல்களும் பட்டையை கிளப்ப ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் அந்த விழாவிற்கு வந்திருந்த பல பிரபலங்களும் விஜயையும் வேட்டைக்காரனையும் வாழ்த்திப் பேசியதுடன் சில பழைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

விழாவிற்கு அழைக்கப்படிருந்த சிபிராஜ் சன் பிக்சர்சும் விஜயும் கைகோர்த்திருக்கின்றார்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் என வாழ்த்தினார். அடுத்து கருணாசும் மேடையில் அழைக்கப்பட்டு பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வேட்டைக்காரி வந்தார் வந்தவர் கொஞ்சும் தமிழில் பேசியது பாராட்டுக்குரியது. பல தமிழ் நடிகைகளே தமிழில் பேச தள்ளாடும் நேரம் இந்த யோகா டீச்சர் தமிழில் பேசியது பாராட்டுக்குரியது.(விடுங்கப்பா நாலு வார்த்தை தமிழில் பேசினாங்க அதை தான் சொன்னேன்.) அதற்காகவே அவரின் தாராள மனதை சொல்லும் படம். இங்கே.


தொடர்ந்து வந்து பேசிய இயக்குனர் ஷங்கர் விஜய்க்கு வாழ்த்து சொல்லிவிட்டு, எந்திரன் படத்தை பற்றியும் பேசினார். அதை தொடர்ந்து நீண்டநாட்களாக இருந்து வந்த சந்தேகம் ஒன்றையும் போட்டு உடைத்தார். ஏற்கனவே தெரியும் முதல்வன் திரைப்படம் ரஜினிக்காக எழுதப்பட்ட கதை அந்த நேர அரசியல் சூழ்நிலை காரணமாக ரஜினி நடிக்காமல் போக அர்ஜூன் நடித்து படம் பெற்ற வெற்றி. ஆனால் ரஜினிக்கு அடுத்து தன்னுடைய தெரிவு விஜய் தான் என இதுவரை மெளனம் காத்து வந்த ஷங்கர் வெளிப்படையாக சொல்லிவிட்டார். முன்பொருமுறை இதை விஜய் சொல்லி எள்ளி நகையாடிய அத்தனைபேரின் மூஞ்சியிலும் கரி பூசப்பட்டு விட்டது. தொடர்ந்து பேசிய ஷங்கர் தானும் விஜயும் ஒரே பள்ளியில் இருந்து அதாவது எஸ்.ஏ.சியின் பள்ளியில் இருந்து வந்தவர்கள் ஏழு வருடம் அவரிடம் உதவி இயக்குனராய் இருந்து இருக்கின்றேன். விரைவில் விஜயை வைத்து படம் செய்யும் திட்டம் உண்டு என் குருநாதர் மகன் என்பது மட்டுமல்ல அவர் ஒரு திறமையான நடிகர் அவர் ஆட்டம் எந்த இடத்திலும் பிசிறு தட்டாது என சொல்ல அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து விஜயும் பல பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பேசினார். ஷங்கர் முதல்வன் பற்றி கூறிய உண்மை அடங்கிய வீடியோ இங்கே.


Share:

Friday, September 25, 2009

ஒரே திரையில் விஜய்,விக்ரம்,சூர்யா,விஷால்.



இளைய தளபதியாக திரை உலகில் வலம் வரும் விஜய்க்கும் சூர்யாவிற்கும் நல்ல நட்பு உண்டு. இரண்டு பேரும் கல்லூரி கால நண்பர்கள் என்பது இன்னொரு பலம். அதற்கு அச்சாரமாக நேருக்கு நேர், பிரெண்ட்ஸ் இரண்டு படங்களிலும் நடித்தனர். ஆனால் அப்போது சூர்யா பிரபலமாகாத நடிகர். முன்னணியிலும் இல்லை. ஆனால் இப்போதோ விஜயையும் விஞ்சி முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டிருக்கின்றார். விக்ரமோடு விஜய்க்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு ஆனால் அது வெளி உலகிற்கு தான் என்பது சாதாரண ரசிகனுக்கும் தெரியும். அதேநேரம் விஷாலுடன் விஜய் சண்டை கோழிதான். வெளி இடங்களுக்கு இருவரும் நெருக்கமாக காட்டினாலும் தன் பாதையில் விஷால் வருகின்றார் என்பது முதல் தன் பட்டத்தை சுட்டு வைத்தது வரை இரண்டுபேருக்கும் ஆகாது.


இது ஒருபுறமிருக்க. விக்ரமும் சூர்யாவும் பிதாமகனுடன் வேறு எந்த படத்திலும் இணைந்து நடிக்க முடியாதளவிற்கு முறுகல். அதுவும் இரண்டு பேரின் பாதையும் இப்போது ஒரே தடத்தில் போவது கண்கூடு. இந்த நிலையில் இவர்களுக்குளான கூட்டணியும் மீண்டும் சாத்தியம் இல்லை. விக்ரம் விஷாலுடன் நடிப்பது எந்த பிரச்சனைகளும் இல்லை. விஜயுடன் விக்ரம் நடித்தாலும் சரியான கதாபாத்திரம் அமைய வேண்டும். முன்னொருமுறை விஜய்க்கு வில்லானாக கூட நடிப்பேன் பாத்திரம் மிக சிறப்பாக இருந்தால் என சொல்லி உள்ளார் சீயான்.


மறுபக்கம் சூர்யாவிற்கு விஜயுடன் நடிப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது. ஆனால் நிச்சயம் விஜய்க்கு இணையான கதாபாத்திரம் இம்முறை வழங்கப்பட வேண்டும். அடுத்து விக்ரம் சூர்யா கூட்டு கடினமானதுதான். அதேநேரம் விஷாலை ஒரு பொருட்டாக நினைக்காமல் சூர்யா நடிக்கும் வாய்ப்புகள் உண்டு.


அடுத்தவர், பட்டத்தை துறந்திருக்கும் விஷால். விஜயின் ரசிகர்களின் எதிர்ப்பலையோடு இடை இடையே விஜய் புராணம் பாடுபவர் என்றாலும் விஜயுடன் சேரும் வாய்ப்பு நினைக்க முடியாதது. அதேநேரம் மற்ற இரண்டு பேருடனும் சேர்வதில் எந்த பிரச்சனையும் ஏற்ப்பட போவதில்லை. இந்த நிலையில் தான் இந்த நான்கு பேரும் ஒரே திரையில் வரப்போகின்றனர். இந்த மகத்தான சாதனையை செய்திருப்பது லயோலா காலேஜ் என்பது பெருமைப் படக்கூடிய விடயம். விஜய் அண்டனியின் இசையில் வர இருக்கும் லயோலா காலேஜின் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாடும் ஒரு இசை அல்பத்தில் தான் இவர்கள் ஒன்றாக நடிக்க உள்ளனர். ஒன்றாக என்றவுடன் நேருக்கு நேர் சந்திப்பார்கள் என்று கனவு கண்டால் அதுதான் இல்லையாம். ஒப்பந்தம் கேட்டு போனவுடனேயே எல்லோரும் ஒரே பிரேமில் வருவது கஷ்டம் என்னும் வசனத்தை பேசி வைத்து பாடமாக்கி சொன்னது போல சொல்லி இருக்கின்றார்கள் நால்வரும்.


ஆஹா கிளம்பிட்டாங்கையா என முணுமுணுத்துக்கொண்டிருந்தவர்களிடம் இன்னொரு விடயத்தை சொல்லி இருக்கின்றார்கள். அதுதான் மகா கொடுமையுங்க மற்றவர்கள் வராத நாட்களிலேயே எனக்கு படப்பிடிப்பை வைத்துக்கொள்ளுங்க ஏனென்றால் நான் ரொம்ப பிசி என்றிருக்கின்றார்கள். எல்லாவற்றுக்கும் தலை(அஜித்தில்லைங்கோ) அசைத்திருக்கின்றார்கள் லயோலா கல்லூரி) என்னதான் இருந்தாலும் மனதுக்குள் திட்டி இருப்பாங்க இங்கே ஒருத்தன் இருந்த சீட்டில் தானே இருந்திருப்பாய் இப்ப என்ன முகத்தையே பார்க்க மாட்டேன் என்கிறாய் என்று. என்னவோ படித்த கல்லூரிக்காக சேர்ந்து நடிக்க சம்மதிதிருப்பவர்கள் இப்படியே படங்களிலும் ஒன்றாக நடித்தால் தமிழ் சினிமா எங்கேயோ போய்விடும்.


ரஜினி-விஜய், கமல்-விக்ரம், கமல்-அஜித், கமல்- சூர்யா சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும் என கனவு காண தூங்கப்போகின்றேன் நண்பர்களே........ நீங்களும் கண்டால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
Share:

பட்டத்தை துறந்தார் தளபதி-தமிழ் சினிமாவில் பரபரப்பு.



நடிகர்களுக்கு யார் பட்டப்பெயர்களை வழங்குகிறார்களோ தெரியாது ஆனால் ரசிகர்கள் வழங்கினார்கள் என்னும் பெயருடன் தனக்கு தாங்களே பலர் வைத்து கொண்டு விடுவர். முன்பு ஸ்டார் என்னும் பட்டத்தின் மேல் இருந்த நடிகர்களின் காதல் இப்போது தளபதி மேல்.

இப்போ இருக்கும் முன்னணி கதாநாயகர்களில் சூர்யாவை தவிர அனேகமாக எல்லோருக்கும் பட்டம் உண்டு. இளைய தளபதி இருக்கும் போதே அவருக்கே சூட்டலாம் என நினைத்து விஜய் தரப்பு வைத்திருந்த புரட்சி தளபதி பட்டத்தை தானாகவே சூட்டிக்கொண்டார் விஷால். தொடர்ந்து வீரத்தளபதி ஜெ.கே.ரித்தீஷ்,அன்புதளபதி நரேன், சின்ன தளபதி பரத் என போனவர் வந்தவர் எல்லாம் பெயருக்கு முன்னாள் தளபதியாகி விட்டனர்.

இப்போது தான் தன வினையை தானே நொந்திருக்கின்றார் இவர்களில் ஒருவர். ஏற்கனவே பலர் கூறியும் கேட்காதவர் இப்போது இந்த பட்டப்பெயர் வேண்டாம் என முடிவெடுக்க காரணம் தொடர் தோல்விகள் தான். விஷால் எப்போது தன்னை புரட்சிதளபதியாக்கினாரோ அப்போதிலிருந்து காலம் சரியில்லாமல் போய்விட்டது. இப்போதுதான் இது மண்டையில் உறைக்க இனி அந்த பட்டத்தை பாவிக்க வேண்டாம் என தன ரசிக சிகாமணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரசிகர்கள் சொன்னதால் இந்த பெயரை வைத்தேன் என சொன்னவர் இப்போது ரசிகர்களிடம் கேட்காமலே பெயரை எடுத்து விட்டார். இதற்கு ஒன்றும் சொல்லமாட்டாங்களா உங்கள் ரசிகர்கள் புரட்சி தளபதி மன்னிக்கவும் விஷால் அவர்களே.
Share:

தேவதை எனக்கு தந்த வரம்.



தொடர் விளையாட்டின் அடுத்த திடலுக்கு நண்பர் க.கோபிகிரிஷ்னா என்னை அழைத்திருக்கின்றார்(http://tamilgopi.blogspot.com/2009/09/blog-post_7992.html). தேவதையை கண்டால் நீங்கள் கேட்கும் பத்து வரங்கள் என்ன என சொல்ல சொல்லி விட்டீர்கள் பலர். எல்லோரும் தங்களுக்கு தேவையான பல வரங்களை கேட்கின்றனர்.

அன்றும் இதேபோலத்தான் நான் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். இரவு ஒருமணி இருக்கும் மல்லிகைப்பூ வாசனை, சலங்கை ஒலி, ஜன்னல் எல்லாம் படபடக்க ஒரு உருவம் மேலே இருந்து என்னை நோக்கி வருகிறது. ஐயோ அம்மா என பயந்தபடி அதையே பார்த்துகொண்டிருந்தேன். அந்த உருவம் என்னை நோக்கித்தான் வருகிறது என தெரிந்து கையால் கண்களை மூடிவிட்டேன்.

கிட்ட வந்த உருவமும் என்னை பெயர் சொல்லி அழைத்தது. நான் கண்களை திறக்கவில்லை. பதிலும் பேசவில்லை. ஆனால் நல்லா வாசனை மாத்திரம் வந்தது. ஒருவேளை பேய்கள் எல்லாம் இப்போ வாசனை திரவியம் பாவிக்கின்றனவோ என நினைத்து விட்டேன். (இது நான் எந்த பெண்களையும் சொல்லவில்லை மேக் அப போடும் பெண்கள் பேய்களுக்கும் மேல்.....) மெதுவாக என் கையை ஒரு மெல்லிய கரம் பற்றி என் கண்ணில் இருந்த கையை எடுத்தது. அந்த கரம் என்னை பற்றும் போது என ஒரு புத்துணர்ச்சி என்ன ஒரு ஆனந்தம். ஆனால் ஏற்கனவே இந்த உருவம் வானில் இருந்து வந்ததை நினைத்து பயந்து போய் இருந்த நான் சட்டென அந்த உருவத்தை பார்த்துவிட்டு ஓட ஆரம்பித்து ஒருகால் வைத்திருப்பேன். அங்காலே என்னால் ஓடமுடியவில்லை. காரணாம் நான் பார்த்தது பேய் அல்ல அப்படி ஒரு அழகிய தேவதையை.

அதற்கு பிறகுதான் எனக்கு நிம்மதி. வந்த தேவதையோ நான் உன்னை அழைத்தபோது நீ பதிலளித்திருந்தால் உனக்கு பத்து வரங்கள் தந்திருப்பேன். அல்லது நான் உன் கரங்களை பற்றியபோதே என்னை பார்த்திருந்தால் உனக்கு ஐந்து வரங்கள் தந்திருப்பேன். கேவலம் பூலோகத்தில் உள்ள மேக் அப போடும் சில பெண்களை பார்த்து ஆண்கள் அலறி அடித்து ஓடுவதுபோல என்னை பார்த்து ஓடியதால் உனக்கு ஒரே ஒரு வரம் மாத்திரமே கிடைக்கும் என குண்டை தூக்கி போட்டது. அப்போ தான் உங்கள் எல்லோரையும் திட்டினேன். அடப்பாவிகளா இந்த தேவதை இப்படிதான் வரும் என யாராவது சொல்லி இருக்கலாமே. நீங்கெல்லாம் பத்து வரம் வாங்குவிங்க எனக்கு ஒன்றா என திட்டினேன்.

ஆனால் நான் என்ன முட்டாளா?(ஆமாம் என பதில் சொல்பவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன்.) தேவைதையே எனக்கு மற்றவர்கள் போல பத்துவரங்கள் வேண்டாம் ஒன்றே போதும். உன் தண்டனைக்கு கட்டு படுகின்றேன் என நானும் கூற தேவதையும் என்னை ஆச்சரியமாக பார்த்தது. சரி உனக்கு ஒருவரம் போதுமா என்ன வேண்டும் என கேட்க பெரிதாக ஒன்றுமில்லை நான் எப்போது என்ன நினைத்தாலும் அவை எல்லாம் நடக்கவேண்டும் அதுவே எனக்கு போதும் என கேட்க தேவதையும் தட்ட முடியாமல் எனக்கு அந்த வரத்தை கொடுத்து விட்டு பறந்து போய்விட்டது.

இப்போது நான் இவர்களும் இந்த தேவதையை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கின்றேன்.
லோஷன் அண்ணா -லோஷனின் களம். loshan-loshan.blogspot.com/
அருண்பிரசாத் http://aprasadh.blogspot.com
sumaazla-என் எழுத்து இகழேல். http://sumazla.blogspot.com

பி.கு: மன்னிக்கவும். இதே தலைப்பில் சுபானுவும் என்னை அழைத்திருந்தார். அதை நான் கவனிக்கவில்லை. என்னை தேவதையை சந்திக்க வைத்த சுபானுவிர்க்கும் நன்றிகள்.
Share:

Tuesday, September 22, 2009

ஆதிரையின் எலியை பிடிக்க வந்த பூனையும் பொண்ணு பார்க்க போன பிரபல பதிவரும்.



எலி கொண்டுபோன ஆதிரையின் சேட்

நேற்று மாலை வேளை வெள்ளவத்தை ராமகிருஷ்ணன் மண்டபத்தில் கோபாலின் மஜிக் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்ச்சிக்கு போக நான் தயாரான போது பிரபல மூத்த பதிவர் (கட்டாயம் சொல்ல சொன்னார் சொல்லிட்டன்) வந்தியத்தேவன் மாமாவும்(எந்த தப்பான அசிங்கமான அர்த்தமும் அல்ல ஆனால் நான் அவரை வந்தி அங்கிள் என அழைப்பதை தமிழ் படுத்தி உள்ளேன்) கடலேறி ஆதிரையும் தாங்களும் வருவதாக சொன்னார்கள். இதன் படியே நான் அங்கே போக இரண்டு சிங்கங்களும் அங்கே வெயிட்டிங்க்.

மாமாவிற்கு ஒரு வணக்கத்தை போட்டு விட்டு ஆதிரையுடன் கை குலுக்கி விசாரித்துவிட்டு. என்ன மாமா ரொம்ப நல்லா உடுப்பெல்லாம் போட்டு சும்மா மாப்பிளை போல வந்திருக்கிறிங்க என கேட்டன் .ஏண்டா நான் மாப்பிளை தானே அதுக்குதானே பொண்ணு பார்க்கிறம். இன்னும் யாரும் சரிவரல ஒருவேளை எனக்கு பிடிச்ச ஏற்ற கடவுள் நினைத்து வைத்திருக்கும் பொண்ணு இங்கே கூட வந்திருக்கலாமேல்லா, அதுதான் மாமா ரொம்ப கஷ்டப்பட்டு அயன் பண்ணி மேக் அப எல்லாம் போட்டு நாலு தடவை சோப் போட்டு குளிச்சு நல்ல வாசனை திரவியம் அடிச்சு வந்திருக்கேன். நான் பட்ட கஷ்டம் யாருக்காப்பா தெரியும் என புலம்ப ஆரம்பிச்சிட்டார்.

நிலைமை மோசமாகிறது என தெரிஞ்ச ஆதிரை அப்போ நாங்க உள்ளே போவமா என மாமாவையும் சரிக்காட்டிக்கொண்டு உள்ளே போய் ஒரு முன் வரிசை இருக்கையில் இருக்கலாம் என நான் சொல்ல உடன மாமா பதறி அடிச்சு போனார். ஏண்டா மோனே என்ன பலி கொடுக்கிற முடிவா? இன்னும் கலியாணம் குழந்தை குட்டிய பார்க்கல அதுக்குள்ளே எண்டா உனக்கு இந்த ஆசை. நான் முன்னுக்கு இருக்க அந்த பாவி மஜிக் செய்றவன் என்னை தன இஷ்டத்துக்கு கூப்பிட நான் போக அவன் என் கழுத்தை வெட்ட வேண்டாண்டா ரொம்ப பயமா இருக்கு. விட்டிடு என சொல்ல அடடா மாப்பிளைக்கு இவளவு பயமா என நானும் ஆதிரையும் யோசித்தோம். ஒரு மாதிரி மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்து எங்கள் அலட்டலை ஆரம்பித்தோம்.

பதிவுகள், பதிவர்கள் பற்றி பேசிய எங்கள் கவனம் ஐ.சி.சி. சாம்பியன் கிண்ணத்தை பற்றி தொட்டாலும் நம்ம மாமா சொன்னது போல இங்கே யாரும் அவரின் கற்பனை கதாநாயகி வந்திருக்கின்றாரோ என தேடிப்பார்த்தோம். எத்தனையோ அசின்கள், சமீரா ரெட்டிகள், அனுஷ்காக்கள் வந்தாலும் நம்ம மாமாக்கு செட் ஆகல. எனக்கோ சந்தேகம். ஆதிரையிடம் நேரடியா கேட்டன் என்ன இந்த மாமாக்கு யாரையுமே பிடிக்கலையே என்று அப்பத்தான் சொனார் பாருங்க நம்ம ஆதிரை நீங்க திரிஷா இல்லை அசினில்லை யாரை காட்டினாலும் நம்ம மாமா அசர மாட்டார் காரணம் அவர் தேடிறது கே.பி.சுந்தராம்பாள் மாதிரி ஒரு பொண்ணை. அட பாவி மனிஷா அவன் அவன் அசின், தமன்னா,நயன்தாரா ( யாருக்கு பிடிக்கும் என தெரியும்தானே. அவர் கோவிச்சுக்க மாட்டார் என நினைக்கிறன் தன் ஆள இங்கே இழுத்ததுக்கு.) கிடைக்கமாட்டாளவையா என அலைய உங்களுக்கு சுந்தராம்பாள் மாதிரி அதுவும் அந்த காலத்து பொண்ணுங்க போல இருக்கும் பொண்ணு வேணுமா என கோவம்தான் வந்திச்சு. அப்புறம் என்னை நானே சமாதான படுத்திவிட்டேன். என்ன இருந்தாலும் மாமா தன் வயசுக்கு ஏத்த மாதிரி தான் பொண்ணு தேடுகிறார். நம்ம லெவலுக்கு வரல என ஆறுதல்.

இந்த பந்தியை வாசிக்க முன்னர் கொஞ்சம் இந்த பதிவை வாசித்து விட்டு வந்தால் தான் விளக்கமா புரியும்.

எப்பிடியோ மாமனுக்கு மாமி இங்கே கிடைக்காதென எனக்கு தெரிஞ்சு போச்சு. நிகழ்ச்சியை ஆரம்பிக்க நானும் மேடை ஏறிவிட்டேன். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நேரம் அந்த மண்டபத்தில பெரும் பரபரப்பு. சின்ன பிள்ளைகள் எல்லாம் பயத்தில் கத்த ஆரம்பித்து விட்டார்கள். அங்கே இங்கே என ஓடியும் அவர்கள் அடங்கவில்லை. என்னதான் பிரச்சனை என நான் கீழே பார்க்க நம்ம வந்தி மாமா ஒரு அசட்டு சிரிப்போட ஒரு பூனையை காட்டினர். என்ன மாமா என நானும் சைகையால் கேட்க ஒன்றுமில்லை நம்ம ஆதிரையின் எலியை தேடி பூனை ஒன்று இங்கேயே வந்து விட்டது என சொன்னார். பாவம் ஆதிரை எலியை என்ன காற்சட்டை பொக்கெட்டுக்குல கொண்டு திரிகின்றார். அங்கே ஆதிரையின் எலி இல்லை.(என்னது ஆதிரையின் எலி இப்போ அவருடன் இல்லையா?) என தெரியாத பூனை அங்கே இங்கே என ஓடி திரிய இறுதியாக மஜிக் நிபுணர் கோபால் தான் அந்த பூனையை விரட்டி நம்ம ஆதிரையை காப்பாற்றினார். இல்லாவிட்டால் ஆதிரையும் சரி ஆதிரையின் எலியும் நேற்று அதோ கதி ஆகி இருக்கும்.

இதெல்லாம் முடிய இடை நடுவில் எனக்கு வேலைதளத்துக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் நானும் அவர்களிடம் விடை பெற்றுவிட்டு வந்துவிட்டேன். அதன் பின் இன்று காலை இரண்டு பேருக்கும் தொலை பேசி அழைப்பெடுத்தேன். அப்போதான் மாமா ரொம்ப கவலைப்பட்டார் என்னடா மருமோனே இங்கேயும் எனக்கு யாரும் செட் ஆகல வேறு எங்கயாச்சும் ஏதும் கூட்டம் வார நிகழ்ச்சி இருந்த சொல்லு அங்கேயும் போய் பார்ப்போம். எனசற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல தன் கொள்கையில் உறுதியாக இருந்தார். ஆதிரையோ ரொம்ப சந்தோசமாக இருந்தார். தன்னுடைய எலி பூனையிடம் இருந்து தப்பிவிட்டது கவலையாக இருந்தாலும் (அட பாவி எலி தப்பினது கவலையா) அந்த பூனையிடம் இருந்து தானும் புதிதாக வாங்கிய அந்த உடுப்பும் தப்பியதே தனக்கு பெரிய விடயம் என ஆறுதல் பெரு மூச்சு விட்டார்.

இந்த தொடர்கதை எப்போ தீருமோ?
Share:

Monday, September 21, 2009

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ணம் யாருக்கு- ஒரு அலசல்.



இலங்கை தொடர், அவுஸ்திரேலியா -இங்கிலாந்து தொடர்களை தொடர்ந்து இப்போது கிரிக்கெட் புயல் தென் ஆபிரிக்காவில் மையம் கொள்ளப்போகின்றது. இன்னும் சில நாட்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களின் முழு வேலையும் தொலைக்காட்சிக்கு முன் இருப்பதுதானாக இருக்கும். எட்டு அணிகள் எப்படியாவது இம்முறை கிண்ணத்தை வெல்லவேண்டும் என்னும் நோக்கில் களம் கண்டிருக்கின்றன. இரண்டு குழுக்களிலும் இருக்கும் அணிகள் முட்டி மோதப்போகின்றன. கிண்ணத்தை வெல்லும் என கணிக்கப்படும் இந்திய, இலங்கை அணிகள் பயிற்சிப் போட்டிகளிலேயே பல்லு போய் இருக்கின்றன. அண்மையில் சறுக்கிய அவுஸ்திரேலியா அணியோ அசுர பலத்தோடு எழுந்து நிற்கிறது. இதுதான் கிரிக்கெட் என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கிறது. எட்டு அணிகளின் பலம் பலவீனத்தை கொஞ்சம் அலசலாமா

குழு A

அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்.

குழு B

தென் ஆபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து.

குழுவை பார்க்கும் போது எட்டும் எகிறி அடிக்கும் அணிகள் தான். எந்தெந்த அணிக்கு வாய்ப்புக்கள் குறைவோ அவற்றை பற்றி முதல் அலசி விட்டு இறுதிக்கு வரும் அணிகளை இறுதியாக அலசலாம்.

மேற்கிந்திய தீவுகள்.

நாங்கள் இல்லாமல் சாதிக்க முடியுமா?

உள்ளே இருக்கும் பிரச்சனையால் இரண்டாந்தர அணியாக வந்திருப்பவர்கள். பெரிதாக அறிமுகமான வீரர்கள் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று யாரும் இல்லை. அதேநேரம் ஒரு போட்டியில் வென்றாலே அது இவர்களுக்கு பெரிய விடயம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாததே இவர்களின் மிகப்பெரிய பலம். இவர்களின் குழுவில் இடம்பெற்றிருக்கும் மூன்று அணிகளுமே கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள அணிகள் என்பதால் இவர்கள் சிக்கி சின்னா பின்னம் ஆகப்போவது உறுதி.

இங்கிலாந்து.

ஏதோ இம்முறையும் வாறம் பாத்து அடியுங்க அவுஸ்திரேலியா காரன் போல அடிக்காதிங்க வலிக்கிறது.

ஆஷசை வென்று பலமாக காட்டியவர்கள் தலை குப்பற விழுந்து நிற்கின்றார்கள். இந்த அடி போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேண்டுமா என கேட்டுக்கேட்டு கொடுத்தது அவுஸ்திரேலியா. இருப்பினும் இறுதி போட்டியில் வென்று நம்பிக்கையோடு காத்திருக்கின்றார்கள். பீட்டர்சன், பிளின்டோப் இல்லாத அணி பிரகாசிக்கும் வாய்ப்பு குறைவு. இலங்கை அல்லது நியூசிலாந்தை வீழ்த்திவிட்டால் சாதித்துவிடலாம். ஆனால் இப்போதுள்ள நிலையில் அது கடினமே.

பாகிஸ்தான்.


சொல்லாமல் அடிக்கிறதுதான் எங்க ஸ்டைல். இந்த முறை இந்தியாவிற்கு சொல்லிட்டம் அடிப்பமா?

டுவன்டி டுவண்டி உலக கிண்ணத்தில் கணக்கெடுக்கப்படாமல் உலக சாம்பியன் ஆகி புருவங்களை உயர்த்தியவர்கள். இப்போதும் அதே எதிர்பார்ப்பு இல்லாமல் போகின்றார்கள். போப் வூல்மருக்கு சமர்ப்பணமாக கிண்ணத்தை வெல்வோம், காலகாலமாக முக்கியமான போட்டிகளில் இந்தியாவை வெல்வதில்லை என்ற வடுவை துடைப்போம் என்னும் சூளுரையோடு களம் கண்டிருக்கின்றார்கள். எப்போதும் அடிப்பார் எப்போது சுருள்வார் என தெரியாத அபிரிடி இம்முறையும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றார். முழுதாக பார்த்தால் பலமான அணி ஆனால் வெளித்தோற்றத்துக்கு பலவீனமான அணி. மேற்கிந்திய தீவை இலகுவாக வென்று இந்திய அல்லது அவுஸ்திரேலியாவை தோற்கடித்தால் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு உண்டு. ஆனால் அடித்து நொறுக்கும் பலத்தோடு இருக்கும் இந்திய, அவுஸ்திரேலிய அணிகளிடம் இது பலிக்குமா என்பதே கேள்வி.

நியூசிலாந்து.


கறுப்பு உடையை போட்டு போட்டு கறுப்பு சரித்திரமே எங்களுக்கு பின்னால்.

இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் படு தோல்வியோடு வந்தவர்கள் இந்தியாவை பயிற்சியில் பழிக்கு பழி தீர்த்தனர். தரமான வீரர்கள் இருந்தும் சொதப்பும் அணியாக இருக்கின்றது. அதிஷ்டம் இன்மை முக்கியமான நேரங்களில் சொதப்பல் மட்டுமன்றி இப்போது மற்ற அணிகளுடன் ஒப்பிடும் போது பலவீனமான அணியாக இருக்கின்றது. ஆனால் முக்கியமான தொடர்களில் வீறு கொண்டெழுவது இவர்களின் பலம். இலங்கையை பழி தீர்த்துவிட்டால் அரை இறுதி கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

இலங்கை.


எங்கள் ராசி நல்ல ராசி. அதுவும் இப்போ எல்லா விடயத்திலும் காற்று எங்க பக்கம்.

வழக்கம் போலவே வென்றாலும் வெல்வார்கள் என்னும் எதிர்பார்ப்போடும் எதிர்பார்ப்பு இல்லாமலும் களம் இறங்கி இருப்பதே பலமும் பலவீனமும். ஜெயசூரியாவின் தொடர்ச்சியற்ற துடுப்பாட்ட பார்ம், டில்சானின் வீழ்ச்சி, ஜெயவர்தேனவின் வீழ்சியை தொடர்ந்து வந்த எழுச்சி மற்றும் நடுவரிசை துடுப்பட்டவீரர்களின் பலம் முரளி உட்பட வேகப்பந்து வீச்சாளர்களின் சிறந்த பந்து வீச்சு என சகலதும் நிறைந்திருந்தாலும் இவர்களை விட மற்ற மூன்று அணிகளும் பலமாக தோன்றுகின்றன. ஆனால் இம்முறையும் அதிசயிக்க வைத்து கிண்ணத்துடன் வரும் வாய்ப்பு இருக்கின்றது. இந்தியாவிடம் பொல்லுக்கொடுத்து அடிவாங்கி வந்திருக்கும் இலங்கை சூடு கண்டு எழுந்தால் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனம் தான்.

இந்தியா.


வெற்றி நிச்சயம்....ஆனால் எப்போது தோற்போம் என எங்களுக்கே தெரியாது...

ஷேவாக் என்னும் அதிரடி நாயகன் இல்லாதது பெரிய குறை. பந்து வீச்சாளர்களும் சோடை போய் இருந்தாலும் துடுப்பாட்டம் தான் மிகப்பெரிய பலம். ஆரம்ப துடுப்பாட்டத்த்டை சச்சினும் கம்பீரும் கவனித்தால் திராவிட்,ரெய்னா,யுவராஜ்,டோனி,யுஸுப் என தொடர்ந்து கொண்டு செல்ல துடுப்பாட்ட பிசாசுகள் நிறைய இருக்கின்றன. பந்து வீச்சுதான் கேள்வியாக இருந்தாலும் திடீரென பலமான பந்துவீச்சாக மாறி எதிரியை கலக்கும் திறமை கொண்டவர்கள் இருக்கின்றார்கள். களத்தடுப்பு வழமையை விட சிறப்பாக இருப்பது. அத்தனை அணிகளையும் அசைத்து பார்த்த வீரமும் இருப்பதால் இம்முறை கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக இருக்கின்றது. அரை இறுதிக்கு முன்னேறுவது நிச்சயமான நிலையில் இறுதியும் இன்னமும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டி உள்ளது அவுஸ்திரேலியாவின் திடீர் அசுர பலத்தினால்.

தென் ஆபிரிக்கா.


கனவெல்லாம் பலிக்குமா..?

சொந்த நாட்டில் போட்டிகள், சகலதுறை வீர்கள் தலைமைத்துவம் இருந்தும் இன்னும் பெரிய கிண்ணங்கள் எடுக்க அணி என்னும் பெயர் இப்போது இருக்கும் அணி. வழக்கம் போல இம்முறை அந்த துயரை துடைப்பார்கள் என்னும் நம்பிக்கையும் சாத்தியமும் உள்ள அணி. கலிஸ்,கிப்ஸ்,ஸ்மித் என அனுபவமும் திறமையும் கைகோர்க்க பந்து வீச்சிலும் வேதாளங்கள் கை கொடுத்தல் வெகுநாள் கனவு வெகு தொலைவில் இல்லை.

அவுஸ்திரேலியா.


நம்ம நடை வெற்றி நடை...

நேற்றுவரை சாத்தியமே இல்லை. இம்முறை எட்டில் ஒன்று என இருந்தவர்கள் எழுந்தார்கள் அடித்தார்கள் நாங்களும் இருக்கின்றோம் என பறை சாற்றி இருக்கின்றார்கள். இங்கிலாந்திடம் பலித்த இவர்களின் பாட்சா இந்தியாவிடமும் தென் ஆபிரிக்கவிடமும் பலிக்குமா என்பது சொல்லமுடியாது. இருப்பினும் தென் ஆபிரிக்காவின் துரதிஷ்டம் இந்தியாவின் வழக்கமான அவுஸ்திரேலியா பய மேனியா வந்து விட்டல் இம்முறையும் பொண்டிங்க் கையில் பூமாலை மன்னிக்கவும் கிண்ணம். ஆனால் பலமும் பலவீனமும் கலந்தே இருப்பதே இவர்களின் பலம். பலவீனம் இருப்பினும் பலமாக காட்டிக்கொண்டு ஒன்றாகி விளையாடும் அணி இம்முறை சாதித்தாலும் ஆச்சரியமில்லை.

போட்டிகளின் அடிப்படையில் என் கணிப்பு கிண்ணம் யாருக்கென.

தென் ஆபிரிக்கா எதிர் இலங்கை => தென் ஆபிரிக்கா.
பாகிஸ்தான் எதிர் மேற்கிந்திய தீவுகள் => பாகிஸ்தான்.
தென் ஆபிரிக்க எதிர் நியூசிலாந்து =>தென் ஆபிரிக்கா
இங்கிலாந்து எதிர் இலங்கை => இலங்கை
அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் => அவுஸ்திரேலியா
இந்தியா எதிர் பாகிஸ்தான் => இந்தியா
நியூசிலாந்து எதிர் இலங்கை => இலங்கை
தென் ஆபிரிக்கா எதிர் இங்கிலாந்து => தென் ஆபிரிக்கா
அவுஸ்திரேலியா எதிர் இந்தியா => இந்தியா/அவுஸ்திரேலியா ( ரொம்ப கஷ்டமுண்ணா நம்பி சொன்னா வைச்சிடுவாங்க நம்மாளுங்க ஆப்பு.)
இங்கிலாந்து எதிர் நியூசிலாந்து => நியூசிலாந்து.
அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான் => அவுஸ்திரேலியா
இந்தியா எதிர் மேற்கிந்திய தீவுகள் => இந்தியா

அரை இறுதி.
இந்தியா/அவுஸ்திரேலியா எதிர் இலங்கை => இந்தியா/ அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா/இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா => இந்தியா/அவுஸ்திரேலியா/தென் ஆபிரிக்கா.(ரொம்ப குழப்பிறாங்க அண்ணே)

மொத்தத்தில் இறுதியில் மோதப்போவது.
இந்தியா எதிர் அவுஸ்திரேலியா => ??????
இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா => ?????
அவுஸ்திரேலியா எதிர் தென் ஆபிரிக்கா => ?????

பொறுத்திருந்து பார்ப்போம் தோனியா? பொன்டிங்க? சிமித்தா?
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive