Monday, June 20, 2011

தமிழுக்கு ஒரு தமிழனின் கடிதம்!



எத்தனை எத்தனையோ காரணங்களுக்காக தாய் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து இன்று எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களில் ஒருவனாக தமிழுக்கு நான் எழுதும் கடிதம். நிச்சயம் இது என் ஆதங்கம் மட்டுமல்ல பல பேரின் ஆதங்கம்.

என் இனிய தமிழே! என்னை வாழவைக்கும் தமிழே! என் உயிரினும் மேலான தமிழே! என நான் உன்னை விழிக்க மாட்டேன். காரணம் இன்று பலர் உயிரிழக்க காரணமாக இருந்த உன்னை எப்படி நான் அப்படி அழைப்பது. இது நீ செய்த பாவமா இல்லை நாங்கள் செய்த பாவமா? இலங்கையில் ஒரு புறம் தமிழன் அழிந்து கொண்டிருக்க இந்தியாவில் மத்திய அரசோ தமிழனின் கத்தும் குரலையும் கணக்கெடுக்காமல் விட்டுவிட்டது. இந்த நிலையில் தம் நாடு விட்டு உறவு விட்டு எங்கெங்கோ வாழும் என் போன்றவர்கள் தான் உன்னை காப்பாற்ற போகின்றார்களாம். இந்த கொடுமையை சொன்னால் எனக்கு சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.

உன்னை தன் நாவினின்று பிறக்க வைக்கும் பல நல்லுயிர்களை நான் காண்பது இங்கே அரிதாகிவிட்டது. பெரும்பாலும் வேற்று நாட்டுக்காரர் தான் அதனால் தமிழ் பேசும் நபர்களை காண்பது அரிதாகிவிட்டது என நான் காரணம் சொன்னால் நீ என்னை அடித்தே கொல்ல வேண்டும் தமிழர்கள் பலர் இருந்தும் அங்கே உன்னை தேட வேண்டி இருக்கின்றது. சில நேரங்களில் நம்மை பற்றி அடுத்தவர்கள் சொல்வதை தமிழர்கள் நாம் உண்மையாக்கி உனக்கு அபகீர்த்தி தந்துவிடுவோமா என பயமாக இருக்கின்றது.

புலம்பெயர் தமிழர்கள். இன்று பல்வேறு விதத்தில் பெயர் சொல்லும் பெரிய சக்தி. ஆனால் எங்கள் மொழியை காப்பாற்ற தெரியாமல் நாங்கள் போடும் கூத்தை நினைத்தால் நான் வெட்கி தலைகுனிகின்றேன். இருபது இருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே வந்து சேர்ந்த ஆண்கள் சொந்த நாட்டு பெண்களை திருமணம் முடித்து அல்லது அதன் பின் பெண்கள் வர என இன்று பல அந்நிய நாடுகளில் தமிழர்கள் எண்ணிக்கை பல. அதுவும் லண்டனில் முக்கிய ஒரு மொழியாக சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்று விட்டாய் நீ. தமிழ் நாட்டிலேயே செம்மொழியாக்க செலவழித்த ஆண்டுகள் பல இருக்கையில் செந்நிறத்தவனே நின் சிறப்பறிந்து தந்த பெருமை அது. அப்படி இருக்கையில் உன் பெருமையை உன்னை சொல்லியே வயிறு கழுவும் நம்மில் சிலரும் உன்னையே மூச்சு, பேச்சு என வாழும் சிலரும் உன்னை வைத்து வியாபாரம் செய்வதை என்னால் பொறுக்கமுடியவில்லை.

தனியே வந்து பின் துணையை தேடி அதன் விதைகளை கனிகளாக்கி அறுவடை செய்யும் நம்மவர்கள் நம் பழையதையும் உன்னையும் மறந்துவிட்டார்களா என பயம்தான் வருகின்றது. எவனை பார்த்தாலும் ஹாய் சொல்கின்றான் தமிழன். சரி அதுதான் அறிமுகம் என நினைத்தால் அதை தொடர்ந்து வந்து விழுகின்றது உன் தலை. காரணம் அவன் பேசும் தமிழில் நீ செத்துப்போகின்றாய். ஆங்கில மொழி சரளமாய் புகுந்து Goal அடிக்கிறது. மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ் தமிழ் என உன்னை அழைக்கும் தமிழன் தன் சுய நலனுக்காய் உன்னையே விற்கவும் தயங்குவதில்லை. இருப்பினும் நம்மூத்தோர் இன்றும் தமிழை பேசினால் அது அமிர்தம் தான். ஆனால் அவர்கள் தான் பேச தயங்குகின்றார்கள்.

வீட்டில் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என தங்கள் குழந்தையிடம் கண்டிக்கும் உன் பிள்ளைகள் அங்கே தொடங்குகின்றார்கள் உன் முதல் கள பலியை. அதன் பின் உன்னை அறிந்து கொல்ல(எழுத்துப்பிழை அல்ல) , படிக்க என அதுக்கு வேறு பிரத்தியேக வகுப்புக்கள், பரீட்சைகள் வைத்து அதில் என் பிள்ளை சித்தி அடைந்துவிட்டான் என ஸ்வீட் எடு கொண்டாடு என கொண்டாடி உன்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துகின்றார்கள். உன்னை தாய் மொழியாய் பெற்றவர்கள் உன்னையே தனி வகுப்புக்கு சென்று கற்று அதை வெற்றியாய் கொண்டாடும் இழிச்செயலை என்ன சொல்வேன். சிறுவயதில் பிள்ளையின் மனதில் விதைக்கும் விஷம் விருட்சமாகும் போது What is this Culture? Why you waste to your time for tamil? என அந்த பிள்ளை கேட்கும் நிலைக்கு வளர்த்து விடுகின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை நாம் செய்யும் சடங்குகள் புலம்பெயர் தமிழர்களின் அடுத்த தலைமுறையிடம் கேலிக்குரியதாக இருக்கின்றது. இது சொல்வதற்கு வெட்கமாய் இருக்கின்றது.

பிள்ளை குழப்படி செய்தால் பிள்ளையை தண்டிக்க முடியாது. என்மேல் கைவைக்க நீங்கள் யார் நான் இந்த நாட்டு குடிமகன் என பெத்த தாய் தந்தையையே உருட்டுகின்றது மிரட்டுகின்றது விவரம் அறிந்த குழந்தை. அதை தாண்டியதும் குடி கும்மாளம் டிஸ்கோ பப் என பிள்ளையின் அட்டகாசம் உன்னையும் உன் பண்பாட்டையும் கொல்வதற்கான வலை விரிகின்றது. இதை தட்டிக்கேட்க முடிவதும் இல்லை தடுக்க முடியவும் இல்லை. பையன்கள் இப்படி என்றால் பெண்களோ அரைகுறை ஆடையும் கையில் ஆறாவது விரலும் நிழலில் இன்னொரு நிழலும் மனதில் பல இதயங்களும் என மாறி அடுத்த தலைமுறையின் தலை எழுத்தை இடியப்ப சிக்கல் ஆக்கிவிடுகின்றார்கள். இதற்கெல்லாம் பாவிக்கப்படுவது உன் பெயர் தமிழே.

சடங்கு சம்பிரதாயத்துடன் நடந்த கல்யாணங்கள் மாறிப்போய் தென் இந்திய பிரபலங்களின் சிறப்பு வருகைகளில் நடக்கிறது எம்மவரின் பிறந்த நாள் கல்யாண நாட்கள். தமிழன் என்பதற்கு எந்த ஒரு சான்றும் இன்றி கடந்து போகின்றான் தன் மானமும் பிறர் மானமும் பற்றி அடிக்கடி பேசும் தமிழன். உண்மையில் இந்த இடத்தில் ஒரு பட வசனம் தான் நினைவுக்கு வருகின்றது. அதிகமாய் தன் மானம் பற்றி கதைப்பதும் தமிழன் தான் அதேபோல தன் மானத்தை காப்பாற்றாமல் நாறடிப்பவனும் அவன்தான்.

அண்மையில் ஒரு வானொலியில் இதை ஒரு தலைப்பாய் எடுத்து சிலரிடம் இதை பற்றி கேட்ட ஒரு நிகழ்சி நடந்தது. உண்மையில் அதை கேட்கும் போது இப்படி ஒரு நிகழ்ச்சி செய்ய வேண்டிய நிலைக்கு தமிழன் வந்துவிட்டானே என்ற வெட்கம் தான் எனக்கு வந்தது. அதில் ஒருவர் இந்த நவ நாகரிகத்துக்கு நாங்கள் மாற வேண்டும் என்பதற்காய் ஏற்க முடியாத உன்னை கேவலப்படுத்தும் காரணியை சொல்கின்றார். ஒரு தாய் சொல்கின்றார் தன் பெண்ணுக்கு தானே கட்டை சட்டையும் அதுவும் இதுவும் கொடுப்பேன் என. எங்கே போகிறது தமிழே உன் கலாசாரம். ஆனால் அதே நிகழ்சியில் இன்னொரு பெண் கூறிய கருத்து எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தையும் என் மனநிலையையும் பிரதிபலித்தது. நாம் தெளிவாக் திடமாக இருந்தால் எந்த நண்பியும் என்னை இந்த உடுப்பு போடு என கட்டளை இடமாட்டாள் அங்கே இங்கே என இரவில் கூப்பிட மாட்டாள் அதேபோல தண்ணி கிண்ணி என இழுக்க வைக்க மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் எம் மன திடம் வேண்டும் என அவர் சொன்ன கருத்துக்கு என்னையறியாமல் புல்லரித்துவிட்டேன். நானும் எத்தனயோ வழிகளை தாண்டி வந்தவன் இன்றும் என் நண்பர்கள் சிலர் கட்டாயப்படுத்தியும் எந்த கெட்ட பழக்கத்துக்கும் அடிமையாகவில்லையே. உண்மையில் எங்கள் மனம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும் என அவர் சொன்னது எத்தனை உண்மை என உன்னை வைத்து வியாபாரம் செய்யும் நபர்கள் ஏன் சிந்திக்கவில்லை.

அண்மையில் லண்டனில் ஒரு தமிழ் கலை நிகழ்ச்சிக்கு அறிவிப்பு செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்னை கோட் சூட்டில் தான் வரவேண்டும் என சொல்லிவிட்டார்கள்.(கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே.) அந்த நிகழ்ச்சியின் பிரதம விருந்தினர் இங்கிலாந்து அமைச்சர் ஒருவர். தமிழை சொல்ல போகின்ற தமிழில் நடக்கப்போகின்ற ஒரு விழாவுக்கு எதுக்கு ஒரு ஆங்கில அமைச்சர். அவருக்கு அந்த நிகழ்வில் என்ன புரியப்போகின்றது. ஏன் இப்படி அவரை அழைத்தீர்கள் என கேட்டதுக்கு அவர் வந்தால் தான் ஏதும் கிடைக்கும் என்றார்கள். உன்னை விற்று பிழைப்பு நடத்தும் இந்த கூத்து தேவையா தமிழே. அதை விட இன்னொருகொடுமை அங்கே நிகழ்ச்சி செய்த பிள்ளைகள் கதைத்த தமிழுக்கு எமி ஜாக்சன் நமிதா பேசும் தமிழ் எவ்வளவோ மேல். வரவேற்புரை செய்த பையனின் தமிழ் அறிவை எண்ணி நான் உன்னையே கடிந்துகொண்டேன். இறுதியில் அந்த விழா தலைவர் உரையாற்றும் போது சொன்னா பாருங்க. இந்த விழாவுக்கு நான் ஆங்கிலத்தில் தான் என் உரையை தயார் செய்து வைத்திருந்தேன் அதனால் இப்போது தமிழில் சிறிது பேசும் போது தவறு வந்தால் மன்னித்துவிடுங்கள் என்று. என்ன கொடுமை இது. தமிழ் விழாவுக்கு எதற்கு ஆங்கில உரை. (இதுவும் அதுக்கு தான்.) அத்துடன் தமிழ் கதைக்க நடுக்கம் வருதாம். இதில் இன்னுமொன்றை சொல்கின்றேன் அங்கே வந்த அதிகாரியும் விருந்தினருமான ஒருவர் நான் பேசிய தனி தமிழ் கேட்டு தான் சந்தோசமாக இருந்ததாக என்னை வாழ்த்திவிட்டு போன போது அவர்களுக்காய் ஆங்கில மோகம் கொண்டு கத்தியவர்கள் கொஞ்சம் சிந்தித்திருப்பார்கள் என நினைக்கின்றேன்.

நான் கேட்பது எல்லாம் உன்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம் என்று தான். உன்னை பேச சுவாசிக்க பிடிக்கவில்லை என்றால் அவர்கள் எதையும் பேசிவிட்டு போகட்டும் பிரச்சனை இல்லை. ஆனால் உன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டாமே. உன்னை பற்றி அறியா விட்டால் தெரியாவிட்டால் உன்னை பற்றி பேசாமல் இருக்கலாமே. உன் பெயரை சொல்லி வேறு வேறு காரியங்களுக்கு பணத்தை கொள்ளை அடிக்காமல் இருக்கலாமே. எல்லாவற்றுக்கும் மேலாய் உன்னை வாள வைக்காவிட்டாலும் வாழ்விழக்க வைக்கமால் இருக்கலாமே என்பதுதான். நீ கேட்கலாம் நீயும் இதில் ஒருவன் தானே என்று. நான் எங்கும் நெஞ்சு நிமிர்த்தி சொல்வேன் உன்னை நான் எங்கும் எதற்கும் என் சுய நலத்துக்காய் பாவித்ததில்லை. அதே போல இங்கும் பலர் இருக்கலாம் ஆனால் இந்த பதிவின் தொப்பி அளவானவர்கள் செய்வது என்னை உன்னை என் உன் வீட்டு பக்கத்துவீட்டு காரனை கூட பாதிக்கிறது. இது தனி மனித சொத்தல்ல நினைத்தவர் நினைத்தபடி நடக்க. எனவே நீ தான் உன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் தமிழே.....

தொப்பி அளவானவர்களே நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். தமிழ் என சொல்லவும் தமிழன் என புளங்காகிதம் கொள்ளவும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று. நான் என்னையும் இந்த கேள்வியை கேட்டு பார்க்கின்றேன். சுய பரிசோதனைக்காய்.

இப்படிக்கு,
தமிழன்.(இப்படிதான் எல்லோரும் சொல்கின்றார்கள்.)
Share:

4 கருத்துரைகள்:

Admin said...

//வருக்கு அந்த நிகழ்வில் என்ன புரியப்போகின்றது. ஏன் இப்படி அவரை அழைத்தீர்கள் என கேட்டதுக்கு அவர் வந்தால் தான் ஏதும் கிடைக்கும் என்றார்கள். உன்னை விற்று பிழைப்பு நடத்தும் இந்த கூத்து தேவையா தமிழே//

எல்வலாரும் தமிமிழை விற்று பிழைப்பு நடத்துகின்றனர்.

Anonymous said...

கோர்ட் போடுக்கொண்டு வா என்று சொன்ன போதே முடியாது போங்கடா என்று சொல்லிவிட்டு இதை எழுதி இருந்தால் ஒரு மரியாதை வந்திருக்கும். அங்க படம் காட்டிப் போட்டு இங்க நீலிக்கண்ணீர் வடிப்பது எரிச்சலை வரவழைக்கிறது.

ஊரில சாராயம் குடிக்கலாம் இங்க தண்ணி அடிக்கக்கூடாது. ஓரு சிலர் செய்யும் பிழைகளை ஒட்டுமொத்தமாக எல்லோரும் செய்தவது போல சோடிச்சு எழுதி, கிட்டுக்காக பரபரப்பாக தலைப்பை வைத்து, நீலிக்கண்ணீர் விடும் உங்களை விடவா மற்றவன் தமிழை விக்கிறான். இல்லையே.

நாங்கள் கூடத் தான் இந்திய தமிழர்களுடனோ வேறு ஸ்லாங் உள்ளவர்களுடனோ ஆங்கிலத்தில் பேசுகிறோம். அதுக்கு ஆங்கிலத் திறமையைக் காட்ட என்றில்லை. வழக்கம் மாறக்கூடாது என்ற பயத்தில். நாலு நாள் கேட்ட பாட்டையே எங்களை அறியாமல் ஹம் பண்ணுகிறோம். மற்றவர்கள் பேசும் போது அந்த ஸ்லாங்கிற்கு மாறாமலா விடுவோம்.

அரைகுறை ஆடை போடுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அப்படிப் போடுவது அவனவன் விருப்பம். அந்தப் பிள்ளைகளுக்கு இன்று சரஸ்வதி பூசை என்றளவுக்காவது தெரிஞ்சு இருக்கு. ஊரை விட்டு மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் வந்த எங்களுக்கு சரஸ்வதி பூசையே மறந்துவிட்டது.

அந்தப் பிள்ளைகளை வித்து நீங்கள் எழுதுகிறீர்களே. மற்றவன் பல்லு சூத்தை என்று சொல்வதை விடுத்து உங்கள் சூத்தையை முதலில் மாற்றுங்கள்.

மைன்ஸ் ஓட்டு போட்டது நானே என்று பெருமையாகவே சொல்லிவிட்டுப் போகிறேன்.

Unknown said...

நண்பரே மொழி என்பது ஒரு ஊடகம்.. தொடர்பாடலுக்கான ஊடகம். புலம் பெயர் தேசங்களில் தமிழ் மொழியினை பல சிறார்கள் ஆர்வமாக கற்று வருகிறார்கள், அது அவர்களின் பெற்றோரின் கவனத்தில் தான் உள்ளது.

பல தேசங்களில் சிதறி வாழும் உறவுகளிற்கு ஒரே ஒரு தொடர்பாடல் மொழிதான் உள்ளது அதுதான் நம் தமிழ் மொழி. இங்கிலாந்தில் ஆங்கிலம் பேசும் பெறாமகள் பிரான்ஸ்ஸில் இருக்கும் சித்தப்பவுடன் ஆங்கிலத்தில் உறவாட முடியது. தமிழ் தான் ஒரே ஒரு வழி.

சொந்த நாட்டில் இருந்த போது நண்பர்களியோ, உறவினர்களையோ சந்திக்கும் போது , அல்லது தொலை பேசியிலோ வணக்கம் சொல்லுபவரை எங்காவது பார்த்திருக்கிறீரா?? இங்கு அது சாதாரணம் இப்படி தன் இங்கு தமிழ் வாழ்கிறது.

வேகநரி said...

நண்பரே! மேலே சொன்ன அம்மணி என்ன சொல்கிறார் இந்திய தமிழர்களுடன் ஆங்கிலத்தில் தானாம் கதைப்பார். தமிழில் கதைத்தால் வெட்கம் அவருக்கு. எல்லாம் எங்கள் தலை எழுத்து.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive