லோஷன்!
இந்த பெயர் சொன்னதன் பின் எனக்கு அதற்க்கு மேல் சொல்ல என்ன இருக்கு என தெரியவில்லை. நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா என்ன? ஆனால் எனக்கும் அவருக்கும் இருக்கும் உறவை பற்றி சில சுவாரஷ்யங்களை சொல்லலாமே. கடந்த முறை அவர் பிறந்த நாளுக்கும் என் பதிவு தாமதமாக வந்தது. அப்போது அவரின் ரசிகர்கள் பதிவுலகை தொடரும் வானொலி நண்பர்கள் சிலர் லோஷன் அண்ணா பற்றி வந்த பதிவுகளை வாசித்துவிட்டோம் ஆனால் நீங்கள் எழுதப்போகும் பதிவுக்கு வெயிட்டிங் என்றார்கள். உண்மையில் சந்தோசமாக இருந்தது.....
ரகுபதி பாலசிறீதரன் வாமலோஷணன்(பேரை சொல்லும்போதே களைக்குது பாஸ்) இந்த பெயர் எனக்கு அறிமுகமானது என் சிறுபிராயத்தில். சக்தியின் முத்துக்கள் பத்து தான் என்னை இவர் பக்கம் திரும்ப வைத்த நிகழ்ச்சி. எதிர்காலத்தில் இவருடனே வேலை செய்யபோகின்றேன் இப்படி ஒரு நல்ல உறவு எனக்கும் அவருக்கும் இருக்கப்போகின்றது என எதுவுமே தெரியாமல் ஒரு பெரிய மனிதர் என்ற எண்ணத்தில் இவர் நிகழ்ச்சிகளை ரசிக்க தொடங்கினேன். அதுதான் அவரின் வானொலி ஆரம்ப கால கட்டம் என்பது கூட தெரியாமல்..........அந்த வயதில் எனக்கு யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை லோஷன் அண்ணாதான் சிறந்த அறிவிப்பாளர் அதேபோல இவ்வளவு உயரத்தை தொடப்போகின்றார் எனவே இவரை ரசி என்று. தானாக சிறு வயதில் வந்தது இதுதான் அவர் கைங்கரியம். நான் எப்போதும் இவரை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒப்பிட்டு பார்ப்பேன் காரணம் சிறுவர் முதல் பெரியோர் வரை அத்தனை பேரையும் தன குரலில் கட்டி வைத்திருக்கிறாரே.
சக்தியில் தொடங்கிய பயணம் என்றென்றும் புன்னகை என தினமும் காலை சூரிய ராகங்களில் தொடர்ந்து ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே என அவர் பட்டையை கிளப்பும் இன்றுவரை நான் அவர் ரசிகன். என் வெற்றி அறிமுகம் எப்படியானது வெற்றி அனுபவங்கள் என்ன என்பதெல்லாம் என் கீழ்வரும் பதிவுகளில் சொல்லி உள்ளேன். ஆனால் அதையும் மீறி எனக்கும் அவருக்கும் இடையில் நடந்த சில சுவாரஷ்யங்கள் நினைத்து பார்க்கும் போது இன்றும் உயர்ந்து நிற்கின்றார்.
முதலில் லோஷன் அண்ணாவிடம் எனக்கு மிக பிடித்ததே சரியோ தப்போ பட்டதை பட்ட படி சொல்லுவது. உண்மையில் பலருக்கு இது இருப்பது குறைவு. எனக்கு இவரிடம் மிகப்பிடித்ததும் இதுவே. லோஷன் அண்ணாவுக்கும் எனக்கும் உள்ள உறவில் எனக்கு பல சந்தேகங்கள். இது ஒரு குருசிஷ்யனுக்கானதா? ஒரு கலைஞனுக்கும் ரசிகனுக்குமானதா? இல்லை ஒரு மேலதிகாரிக்கும் அவர் தலைமையில் வேலை செய்த ஒரு ஊழியருக்கானதா? இல்லை சகபதிவர் என்னும் உறவா? இல்லை ஒரு அண்ணா தம்பி உறவா? இல்லை வயது வித்தியாசங்கள் மறந்து எல்லாம் பேசும் ஒரு நண்பனா? சத்தியமாக இந்த கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் நம் உணர்வு மட்டுமே.
வானொலியில் நான் பணிபுரியும் நேரம் அவரை பார்த்து வியந்திருக்கின்றேன். பல விடயங்களை அத்துப்படியாக தெரிந்து வைத்திருக்கின்றார். இணையம் இல்லாமல் பல விடயங்களை தன்னுள்ளே கொண்டு திரியும் ஒரு விக்கிபீடியா. (அதனால தான் விக்கி லீக்ஸ் வந்துதா என கேட்கப்படாது) இவை எல்லாவற்றையும் மீறி அடுத்தவர்களை மதிக்க தெரிந்த மனிதன். அவரின் வயதில் பாதிக்கு கொஞ்சம் தான் எனக்கு கூட (அப்பாடா லோஷன் அங்கிள் என நான் கூப்பிட காரணம் சொன்னாச்சு) ஆனால் நாங்கள் கூட ஒரு விடயம் சொல்லி அது சரி எண்டால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவர். சரியை சிறுவன் சொன்னாலும் அதை மதிக்கும் மதிப்புக்குரியவர். அதனால் தான் இன்று எல்லோரும் அவரை மதிக்கின்றனர்.
என் வானொலி ஆரம்ப நாட்களில் என் மேல் அதிகம் நம்பிக்கை வைத்தவர் அதனால் தான் அத்தனை நிகழ்ச்சிகளும் செய்யும் வாய்ப்பை நான் பெற முடிந்தது. என்னை தட்டிக்கொடுத்து வளர்த்து விட்டவர். அதேநேரம் நான் தவறு செய்யும் போது தட்டி நிமிர்த்தவும் அவர் தவறவில்லை. சில நாட்கள் அவர் மேல் நான் கோபப்பட்டதும் உண்டு மனதில். ஆனால் அவை எல்லாம் உடனே மறைந்துவிடும் காரணம் அடுத்த தடவை அவரை சந்திக்கும் போது இன்னொரு பரிமாணத்துக்கு எங்களை கொண்டு போய்விடுவார்.
செய்தி வாசிக்க எனக்கு வாய்ப்பு வழங்கும் போது பொதுவாக எல்லோருக்கும் மணித்தியால செய்தி வாசிக்க கொடுத்துவிட்டு தான் பிரதான செய்தி கொடுப்போம் ஆனால் இங்கே மணித்தியால செய்தியும் இல்லை பிரதான செய்தி வாசிக்க போதிய ஆட்களும் இல்லை எனக்கு உன்னில் நம்பிக்கை இருக்கு என என்னையே என்னால் நம்பவைத்தவர். என் தனி ஆவர்த்தன நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு நன்றாக இருக்கு என அவர் போட்ட குறுந்தகவல்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன. ஆரம்ப நாட்களில் ஒரு இமயத்தை பார்ப்பதை போல அவரை வியந்து தூர நின்று பார்த்துக்கொண்டிருந்த என்னை அவரை நெருங்க வைக்க சில நாட்களே போதுமாய் இருந்தது. நெருங்கி பழகும் குணம் மட்டுமன்றி 04.02.2009 அன்று நடந்த ஒரு சம்பவத்தில் என்னை கடுமையாய் கடிந்து கொண்ட அடுத்த நிமிடமே நான் செய்தி வாசித்துவிட்டு வெளியே வந்ததும் செய்தி SUPERடா என்று சொல்லும் போது அவர் மேல் இருந்த கோபமே எங்கே போனது என தெரியவில்லை.
சில காலம் கடந்து வெற்றியின் காலை நேர செய்தி வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் என் அலுவலகத்தில் உயர் அதிகாரி, பத்து வருடங்கள் சாதித்த சாதனையாளர், அளவில்லா ரசிகர்கள் எல்லோரும் வியந்து பார்க்கும் மனிதர் அவர் நினைத்திருந்தால் காலையில் உனக்கு செய்தி இருக்கு ஆறுமணிக்கெல்லாம் என்று சொல்லிட்டு போயிருக்கலாம். ஆனால் காலை செய்தி உனக்கு போடுறேன் விடிய நான் வரும் போது உன்னை ஏத்த உன் வீட்ட வருவேன் இத்தனை மணிக்கு ரெடியாய் நில்லு என சொல்லி முதல் நாள் முதல் அந்த கடமையில் மாற்றம் வரும் வரை தினமும் என்னை ஏற்றி வந்தவர் இவர். இதை நான் சொல்ல காரணம் அறிமுகணாம ஒரு சில மாதத்திலேயே எனக்கு இப்படி என்றால் அவர் எந்தளவுக்கு தன கீழ் வேலை செய்த ஏனைய அறிவிப்பாளர்களுடன் எப்படி நடந்திருப்பார் என நீங்களும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இதுதானே ஒரு நல்ல தலைவனுக்கும் மனிதனுக்கும் அழகு.
காற்றின் சிறகுகள் நிகழ்ச்சி சுபாஷ் அண்ணா சென்ற பின்னர் எனக்கு தருவதாக சொல்லப்பட்டாலும் பின்னர் அதை ரஜீவிடம் கொடுத்த நேரம் மனதளவில் நான் காயப்பட்டாலும் அந்த நிகழ்ச்சியை ரஜீவை கொண்டு வீழ்ச்சி பெற விடாமல் செய்யும் போது ஒரு சிறந்த மேலதிகாரியாக அவரின் அந்த முடிவை ரசித்தேன். காரணம் அந்த இடத்தில் நிச்சயம் என்னால் சுபாஷ் அண்ணா இல்லாத குறையை தீர்த்திருக்க முடியாது. எனவே அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்காக தனி மனிதர் என்ற பாசம் மீறி கடமைக்கு மதிப்பு கொடுக்கும் ஒருவர். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மகுடம் சூட்டுவது போல தான் செய்த சினிமாலை நிகழ்ச்சியை என்னிடம் கொடுத்து அதற்க்கு ஆலோசனையை சொல்லி என்னை மெருகேற்றி அழகு பார்த்தவர். இந்த மனது உண்மையில் அவர் மேல் இன்னும் எனக்கு அவாவை கொண்டுவந்தது. இதை தொடர்ந்து விடியலை செய் என என்னிடம் ஒரு நாள் கொடுக்கும் போது அதை நான் நம்பவே இல்லை. ஆனால் அன்று மாலை முதல் எனக்கு ஆலோசனைகள் சொல்லி வெற்றியின் ஏனைய நிகழ்ச்சிகள் மூலம் நாளை ஒரு வித்தியாசமான சிறப்பான விடியல் இருக்கு என விளம்பரபடுத்த வைத்து அந்த நிகழ்ச்சியை என்னை செய்ய வைக்க யாருக்கு மனது வரும். அவர் எங்கோ ஒரு இமயத்தில் நின்று எங்களையும் தன்னுடன் வர சொல்லி இழுக்கின்றார் ஆனால் மன்னிக்கணும் அண்ணா எங்களால் நீங்கள் நிற்கும் இடத்துக்கு வரவே முடியாது.
செய்தி வாசிக்கும் போது எனக்கு ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே வாசிக்கும் பழக்கம் உண்டு. இதை பல தடவை கண்டித்ததுடன் ஒருமுறை அது பிரச்சனையை உருவெடுத்த நேரம் என்னை காப்பாற்றி அதன் பின் கண்டித்து திருத்திய நல்ல தல. இதே உடல் நிலை பிரச்சனையால் நான் வானொலியை விட்டு போகப்போகின்றேன் என நான் ஒருமுறை கூறியபோதுகூட யோசிச்சு முடிவெடு சில நாட்கள் விடுமுறை எடுத்து ரெஸ்ட் எடுத்திட்டு திருப்பி வா என சொல்ல எந்த மேலதிகாரியால் முடியும். இதுதான் இன்று அவரால் பல அறிவிப்பாளர்கள் உருவாகவும் உங்களை என்னை போன்ற ரசிகர்கள் அவருக்கு இருக்கவும் காரணம். அவதாரம் நிகழ்ச்சியை அவருடன் செய்ய நான் ஆசைப்பட்ட வேலை அதை செய்ய அனுமதி தந்ததுடன் நான் பயமாய் இருக்கு என சொல்ல எதுக்கு பயம் செய்டா என தட்டி தந்ததுடன் நிகழ்ச்சி முடியும் வரை ஒரு இடமும் என்னை தர்மசங்கட படவோ இல்லை பயம் என்ற எண்ணம் வரவோ விடாமல் சாதாரணமாக இருந்து என்னையும் செய்யவைத்தார்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர் வீட்டில் பொங்கல் இவர் பொங்குவதில்லை. அதுதான் நாடு முழுக்க இவர் குரல் கேட்டு பொங்கி கொண்டாடுகின்றதே. அத்தியாவசிய தேவை தவிர தான் விடுப்பு எடுப்பது எப்போதாவதே. இப்போதுதான் ஒரு வருடம் முத்த ல்தொடக்கம் ஞாயிறு லீவு என நினைக்கின்றேன். இந்த கடமையுணர்வு எப்போதும் வானொலி பற்றி சிந்திக்கும் அவர் புலன்கள் என ஒரு சிறந்த தன்னிகரில்லா ஊடகவியலாளர். சூப்பர் ஸ்டார் என இவரை நான் சொல்ல இன்னொரு காரணம் உண்டு அவருக்கும் ரசிகர்கள் நிறைய இவருக்கும் நிறைய இரண்டுபேரும் ரொம்ப சிம்பிள். அவரும் தன ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும் என நினைக்கின்றார் இவரும் நினைக்க மாட்டாரா என்ன? அண்ணே எப்போ அண்ணே அடுத்த கட்டம்.....(அப்பாடா சும்மா கொளுத்திப்போட்டிருக்கேன்......)
இனி லோஷன் அங்கிளின் இன்னொரு பக்கம்.................
அடுத்து பதிவுலகில் என்னை அழைத்து வந்தவர் இவர் தான். டேய் உன் பதிவுகள் உதவாது திருத்து என என் மொக்கைகளை கண்டித்த மொக்கை சிங்கம். எங்கள் அதிகார மைய முன்னாள் தலைவர்....எங்கள் அரட்டை குழுவின் அங்கிள்.....ஆனாலும் பாருங்கோ அரட்டை எண்டு வந்தால் அங்கிள் தொல்ல தாங்க முடியாது. நம்ம மாமாவையும் குஞ்சுவையும் அப்பப்ப என்னையும் பந்தாடுவது அங்கிள் தான்.....இன்னொரு முக்கியமான விஷயம்... யாராவது இருவருக்கு இடையில் பத்த வைத்திட்டு பறந்திடுவார். ஆனாலும் அப்பப்ப தன தலையிலும் பத்த வைத்துக்கொள்வார்.
என்ன தான் இருந்தாலும் இந்த மனிசனை வாட்டி எடுக்கிறது கொஞ்சம் கஷ்டமாய் இருக்கு. சிங்கம் ஒரு நாளைக்கு சிக்காமலா போய்டும் எங்க கும்மில நல்லாய் வறுத்தெடுத்தா தான் எங்கள் எல்லோருக்கும் மன திருப்தி...அப்புறம் இந்த பிறந்த நாள் தன பதினாறாவது பிறந்த நாள் என சொன்னார் அங்கிள். எனக்கென்னவோ பயமாய் தான் கிடக்கு.....இன்னுமொன்று சொல்லிட்டு போறேன்...அங்கிளின் இன்னொரு பக்கம் என்ற இந்த கடைசி பகுதிக்கு எப்பிடியும் நான் கும்மியில கும்பாபிசேகம் செய்யப்படுவேன்....நேரம் ஆகிறது வரட்டே.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் லோஷன் அண்ணாவுக்கு என் குடும்பத்தினர் சார்ப்பாகவும், பதிவர்கள் சார்பாகவும், ஏனைய வானொலி அறிவிப்பாளர்கள் சார்ப்பாகவும், என் போன்ற உங்களை போன்ற அவர் ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்.
ட்ரீட் கேட்டா கிடைக்கவா போகுது..அதனால கேட்கமாட்டேன்...
2 கருத்துரைகள்:
///ட்ரீட் கேட்டா கிடைக்கவா போகுது..அதனால கேட்கமாட்டேன்...//
ஏதாவது கிரிக்கட் போட்டியில பந்த்தயம் கட்ட வேண்டியதுதானெ!!! pizza நிச்சயம்..
even i started to admire him in through "shakithi in muttuhal pattu" with Anjanan. Precious moment in that program is last five minutes with the kavithai.
MArthu :)
Post a Comment