
நாற்பது வயதான ரமேஷ் அனேகமாக பெண் கலைஞர்கள் குரலில் பேசுவதில் அசகாய சூரர். அதிலும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியை போல இவர் பேசினால் கண்ணை மூடிக்கேட்டால் சரோஜாதேவியே பேசுவதுபோல இருக்கும். பெண்களை போலவே உடை உடுத்திக்கொண்டு தோன்றி கவலைகளால் துவண்டுபோன பல நெஞ்சங்களை தன் கலையால் சிரிக்க வைத்து எல்லோர் மனதிலும் இடம்பிடித்தவர். பொதுவாகவே மற்றவர்களை சிரிக்க வைப்பது என்னும் கடினமான வேலையை மிக சர்வசாதாரணமாக செய்து வெற்றிகண்டவர் ரமேஷ்.
நான் ஒருமுறை இவர் நிகழ்ச்சியை பார்க்கும் போது அப்படியே சொக்கிப் பொய் விட்டேன். மிமிக்கிரி என்றால் எனக்கு கொள்ளை ப்ரியம்.(ஏனெனில் எனக்கு மிமிக்கிரி செய்ய தெரியாது.) அதனால் மிமிக்கிரி செய்பவர்களை பார்த்தால் ஏதோ எனக்குள் ஆனந்தம்.
இன்று.......?
இதன் மூலம் கிடைத்த புகழ் அங்கீகாரம் என்பவற்றைக் கொண்டு இசை நிகழ்வுகளில் பங்கேற்று வந்த ரமேஷ், தன் கலைப்பயனத்திலேயே தன் நண்பர்களோடு கலந்துவிட்டார். ஒரு இசை நிகழ்வு முடிந்து வரும் வழியில் இடம் பெற்ற விபத்தில் இந்த அற்புத கலைஞனின் வாழ்வு முற்றுப்பெற்றுவிட்டது. அவரின் உடல் இங்கிருந்து போனாலும் அவர் செய்த கலை சேவை காலம் கடந்தும் மக்கள் மனதில் அவரை வாழவைக்கும்.
ரமேஷின் அசைவுகளும் அவரின் நகைச்சுவை உணர்வும் இப்போது என் கண்முன்னே தோன்றி மறைகின்றது. இந்த நெஞ்சத்தை கிள்ளிய மனிதனை இனி கடந்து போன டி.வி நிகழ்வுகளில் மட்டுமே பார்க்க முடியும் என்னும் போது மனது கனக்கிறது. மரணம் எப்போதும் வரும் அது ரமேஷை கொஞ்சம் சீக்கிரமே அழைத்துவிட்டது. அவரி ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக.