Wednesday, May 13, 2009

என்ன ஜனநாயக நாடு இது? நீங்களும் கையை மேலே தூக்காமல் இனியாவது யாருக்கு வாக்களித்தீர்கள் என சொல்லலாமே.

உலகத்திலேயே பிரபலமான ஜனநாயக நாடு இந்தியா. அடுத்த நாட்டுக்கெல்லாம் ஜனநாயகம், இறையாண்மையை பற்றி சொல்லிக்கொடுக்கும் மிகப்பெரிய அரசியல் சாணக்கியர்களை கொண்ட நாடு. இன்று தன் 15 வது தேர்தலை சந்தித்திருக்கின்றது. இந்தத்தேர்தலில் எத்தனை மோசடிகள் நடைப்பெற்றிருக்கின்றது என எனக்கு தெரியாது. இருந்தாலும் வெளிச்சத்துக்கு வந்த சில ஜனநாயக முரண்பாடுகள் இன்றைய தேர்தலை கேள்விக்குறியாக்கி இருக்கின்றது.

சிறியவர்களுக்கும் பிரபலமில்லாதவர்களுக்கும் ஒரு அநீதி நடந்தால் அது வெளி உலகுக்கு தெரிவதில்லை. மூடி மறைக்கப்பட்டு உயிரோடு சமாதி கட்டப்பட்டு விடும். (இது எத்தனையோ நாட்டில் நடக்கின்றது.) அவர்களும் சொல்ல வலி இன்றி எதிர்க்க சக்தி இன்றி ஊமைகளாகிவிடுகின்றனர். (பலம் படைத்தவர்களாக காட்டிக்கொண்டு சர்வாதிகாரமாக நடந்தால் நாம் என்ன செய்வது) ஆனால் பிரபலங்களுக்கு அப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றால் மட்டும் அது பெரிய செய்தி ஆகிவிடுகின்றது.

என்ன கொடுமை சார் இது எனக்கு இதிலும் சோதனையா?
ஒவ்வொருமுறையும் வாக்களித்து வரும் நடிகர் கமலஹாசனுக்கு இம்முறை வாக்களிக்க முடியாமல் போய் இருக்கின்றது. தொடர்ந்து வாக்களித்து வந்த கமலின் பெயர் இம்முறை வாக்காளர் பெயர்ப் பட்டியலில் இல்லையாம். தொடர்ந்து வாக்களித்து வரும் ஒருவரின் பெயர் எப்படி இல்லாமல் போய்விட்டது. (அல்லது வேண்டுமெனவே இல்லாமல் செய்யப்பட்டதா தெரியாது.) இருந்தாலும் அதற்காக சொல்லப்பட்ட காரணமோ அதிகாரிகள் வீட்டிற்கு சென்ற நேரம் கமல் வீட்டில் இல்லை என்பதே.(இதென்ன நியாயம் அப்படியானால் கமல் தொழிலை விட்டுவிட்டு வீட்டில் அல்லவா இருக்க வேண்டும்.)
இதனால் வருத்தப்பட்ட கமல் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் இந்த தேர்தலில் தன் பங்கு இல்லாமல் போய்விட்டதே என தெரிவித்திருக்கின்றார். நான் எந்தக்கட்சிக்கும் சார்பானவன் அல்ல(அதுதாங்க பிரச்சனையே) இருப்பினும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வாக்களிக்க வந்தேன் இப்படி ஆகிவிட்டதே என்கின்றார் கமல். உலக நாயகன் என்ற பட்டத்தை வைத்திருப்பதால் உலகத்தில் எங்கு இருக்கின்றார் என தெரியாமல் அதிகாரிகள் தவறவிட்டுவிட்டார்களோ? உலகத்துக்கு தமிழக கலாச்சாரத்தையும் தமிழக சினிமாவையும் தலை தூக்க வைக்கும் ஒரு உன்னத கலைஞனின் நிலை இது.

நல்ல காலம் விரலை மேலே காட்டவில்லை
ஆனால் தன் குரலாலேயே அரசியலை கடந்தகாலங்களில் நிர்ணயித்த ரஜினி இம்முறை சாதரணமாக வந்து வாக்களித்து விட்டார். வழமைபோலவே பத்திரிகையாளர்கள் அரசியலுக்கு வருவீர்களா என கேட்க கையைத் தூக்கி மேலே காட்டிவிட்டு அவர் போய்விட்டார். இனி அவர் எதை காட்டினார். அவர் நகத்தில் அழுக்கு இருந்ததா இல்லையா என எல்லாம் பார்த்து அதற்கும் அரசியல் சாயம் பூசப்போகின்றார்கள். மனிதர் யாருக்கு வாக்களித்தேன் என சொல்லவே இல்லை.(ஜனநாயம் இதுதானோ?)

பிரச்சாரம் முடிஞ்சிதா மறந்தே போய்விட்டேன்.
இந்த இரண்டு தலைகளின் நிலை இப்படி இருக்க தமிழகத்தை அண்மையில் கலக்கிய இன்னொரு புரட்சி புயல் சூறாவளி சீமான் தன் கொள்கையை இன்றும் விடவில்லை. வாக்குசாவடிக்கு அருகில் வந்த சீமான் அங்கிருந்த மக்களிடம் காங்கிரஸ் மற்றும் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்காமல் அ.தி.மு.கவிற்கு வாக்களியுங்கள் எனவும் ப.சிதம்பரத்துக்கு வாக்களிக்க வேண்டம் என கூறினார்.(பிரசாரங்கள் நிறைவடைந்ததை மறந்து விட்டாரோ? அத்துடன் இது மட்டும் ஜனநாயகமா என தெரியவில்லை.) யாராக இருப்பினும் இப்படி செய்வது குற்றம்தானே. இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் சீமானை அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்திய பின் அடங்கியது.

அதேபோல் அமீர் மற்றும் கஞ்சா கருப்பு போன்ற பிரபலங்களும் இம்முறை வாக்களிக்க முடியாமல் போய் விட்டது.

நமக்கு தெரிந்தே இத்தனை பேர் வாக்களிக்கவில்லை அதேபோல் சில ஜனநாயக மீறல்களும் நடைபெற்றிருக்கின்றது. இவை எல்லாம் பிரபலமானவர்களுக்கு என்பதால் அந்த இடங்களை விட்டு நாட்டை விட்டு பரவி இருக்கின்றது. இப்படி இன்னும் எத்தனை சாதரண குடிமகன்களுக்கு நடந்திருக்கு. இப்படிப்பட்ட தேர்தல் தேவைதானா?.(என்ன செய்வது அனேகமாக பல நாடுகளில் இப்படித்தானே நடக்கின்றது.)

பிரபலமானவர்களுக்கு நடக்கும் இப்படியான சம்பவங்கள் சாதாரண மக்களுக்கும் நடைபெறும் அநீதிகள் வெளி உலகங்களுக்கு தெரிந்து முற்றாக அழிக்கப்படும்போது தான் ஜனநாயகம் என்னும் உன்னதமான வார்த்தைக்கு அர்த்தம் கிடைக்கும். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல இலங்கை உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.
Share:

1 கருத்துரைகள்:

ஆ! இதழ்கள் said...

ஜனநாயகமா இல்லையா என்று கேட்க வேறு பிரச்சனைகள் இருக்கின்றன இவை அதற்கு தகுதியில்லாதவை.

அதேபோல் ஒருவர் வீட்டில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு அவர் இங்கில்லை வெளிநாட்டில் இருக்கிறார் என்று கூறினால் அவருக்கு வாக்கு கிடையாது, வெளிநாட்டில் இருப்பவர் வந்து வாக்களிக்க முடியாது என்று எண்ணிவிடுவர். கள்ள ஓட்டுக்கு வித்திடும் என்ற ஒரு காரணம்.

அதே போல் தேர்தலுக்கு முந்திய மாதங்களில் வாக்காளர் அட்டவணையில் பெயர் இருக்கிறதா என்று பார்ப்பது ஒவ்வொரு வாக்காளருக்கும் அவசியம், அப்படி பார்த்து சரி செய்ய ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்தும் அதைச்செய்யாமல், தேர்தல் அன்று வந்து கூக்குரலிடுவதற்கு தேர்தல் அதிகாரி போறுப்பாக மாட்டார்.

:)

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive