Thursday, December 31, 2009

சினிமாலை-2009



வெற்றி எப். எம் வானொலியில் ஞாயிறு மாலை 3-5 மணிவரை சினிமா செய்திகள்,புதிய பட விமர்சனம், சிறப்புத்திரைப்படமாக ஏற்கனவே வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனா ஒரு திரைப்படத்தோடு திரைப்படங்களுக்கான தரப்படுத்தலையும் வழங்கி வருகின்றேன்.அந்த வகையில் இந்த வருடத்தின் நிறைவு சினிமாலை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒலி பரப்பானது. சாதனைகள்,வேதனைகளோடு முற்று முழுதான இந்த அலசலில் சில முக்கியமான விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்த வருட தமிழ் சினிமா இப்போது திரும்பி பார்க்கும் போது அதிக இழப்புக்களை சந்தித்த ஒரு வருடமென சொல்லலாம் அதேநேரம் ஒரு சில அளப்பரிய சாதனைகளை கொண்டு வந்ததும் இந்த வருடமே. இதில் என்ன கொடுமை என்றால் மொக்கையோ அல்லது சக்கை போடு போடும் படமோ இரண்டையும் இந்த வருடம் பார்க்கும் பாக்கியசாலி நான் தான். இதோ இந்த வருடத்தின் தமிழ் சினிமா.....

இந்த வருடம் வெளிவந்த திரைப்படங்களில் சிலவற்றை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளேன்.
1.மிகப்பெரிய வெற்றி.
2.வெற்றி.
3.சராசரி.
4.எதிர்பார்த்து தோல்வி அடைந்தவை.



முதலில் எதிர்பார்த்து தோல்வி அடைந்தவற்றை பார்த்தால். விஜயின் வில்லு அந்த பெயரை முதலில் தட்டிக்கொள்கின்றது. அழகிய தமிழ் மகன்,குருவி சறுக்கல்களுக்கு பின் தன் முந்தைய வெற்றி இயக்குனர் பிரபுதேவாவுடன்(போக்கிரி) கைகோர்த்த இரண்டாவது திரைப்படம் ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் படுத்துக்கொண்டது. அடுத்து கே.பாலசந்தருக்கு பிறகு இரண்டு முன்னணி கதாநாயகர்களை உருவாக்கிய பாலா இயக்கிய நான் கடவுள் ஆர்யாவை பழிவாங்கிகொண்டது. விருதுகளை அள்ளிக்குவித்து பிரகாஷ்ராஜ் நடித்த காஞ்சிவரமும் ஏனோ வசூலை குவிக்கவில்லை. கல்லூரி கலாட்டாக்களுடன் அழகிய அம்மா நதியா நடித்த பட்டாளம் பட்டையை கிளப்பவில்லை. பில்லா படத்தை பிரமாண்டமாக கொடுத்த விஷ்ணுவர்த்தன் நான் கடவுளில் சொதப்பினாலும் நடிப்பில் இன்னொரு பரிமாணம் காட்டிய ஆர்யா இணையும் படம் என்ற எதிர்பார்ப்பில் வந்த சர்வம் சந்தடி இன்றி போனது. தளபதி பட்டத்தை சொருகிக்கொண்டு விஷால் இளைய தளபதியை பின்பற்றி நடித்த தோரணை விஷாலுக்கு சத்தியத்தை தொடர்ந்து வந்த சோதனையாகிப்போனது. பத்து இயக்குனர்கள் ஒன்றாக நடிக்கும் படம் என்பது மட்டுமில்லாமல் சீமான் பாடி நடித்த பேசாமல் பேசாமல் இருந்து...என்ற பாட்டும் எதிர்பார்ப்பை கூட்டி நல்ல படமாக வெளி வந்தாலும் எமதருமை ரசிகர்கள் அதை ஏற்கவில்லை. தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் எடுக்க நினைக்கும் கதை ஆனால் தொட பயப்படும் கதை பிரசன்னா-சினேகா வாழ்ந்து காட்டிய அச்சமுண்டு அச்சமுண்டை வெளிநாட்டவர் ரசித்து விருது கொடுத்தளவிற்கு வசூலை கொடுக்கவில்லை. அஜித்தின் அசல் படத்தை இயக்கப்போபவர் முன்னைய சறுக்கலை துடைப்பார் என்னும் எதிர்பார்ப்பில் மோதி விளையாடுக்காக காத்திருக்க திரைக்கதையில் ஓட்டையை வைத்து எங்களுக்கு சாட்டை அடி கொடுத்தார் சரண். சேரனின் படங்கள் இழுவை அதிகமானாலும் தரம் இருக்கும் என்ற நம்பிக்கையை பொக்கிஷம் காப்பாற்றாமல் போனது. சிறுவர்களுக்கான படம் என்ற கவர்ச்சியுடன் வந்த வண்ணாத்திப்பூச்சி சிறகு விரிக்கவில்லை. சின்ன தளபதிக்கு சூப்பர் ஸ்டார் ஆசையில் மண்ணைப் போட்டது ஆறுமுகம். நான் அவனில்லை படம் கொடுத்த தைரியத்தில் செல்வாவும் ஜீவனும் கை கோர்த்து கொடுத்த நான் அவன் இல்லை இரண்டு நான் அவனில்லை ஒன்றைக் கொடுத்த அவன் நான் இல்லை என சொல்ல வைத்து விட்டது


அடுத்து வெற்றி என்ற இலக்கை அடைந்த படங்கள்.
ஜீவா ஒரு சராசரி கதாநாயகனாக நடித்த படம் சிவா மனசில சக்தி நகைச்சுவையால் வெற்றி பெற்றது. புதுமுகங்கள் நடிப்பில் வெளிவந்த குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் நன்றாக போனது. சண் டி.வி புண்ணியத்தில் நம்ம சுனைனா(இப்போ எனக்கு தலைவி இவதாங்க அதுதான் நம்ம அசின், திரிஷா எல்லாம் இல்லையே) நடித்த மாசிலாமணி மாசில்லாமல் ஓடி வெற்றியை தொட்டது. நகைச்சுவையை மையப்படுத்தி வந்த வெடிகுண்டு முருகேசன், குயிக் கண் முருகன் இரண்டும் எதிர்பாராத வெற்றியை ருசித்தன. தொடர்ந்து பல வருடங்களாக தன்னை நிலை நிறுத்த போராடிய அருண்குமார்-அருண் விஜய் என்ற பெயரில் நடித்த மசாலா திரைப்படம் அவர் திரை உலக வாழ்க்கையில் பாரிய திருப்பத்தை உண்டு பண்ணியது. மீண்டும் ஒரு கல்லூரிக்கதை நினைத்தாலே இனிக்கும் விஜய் ஆண்டனியின் அதிரடி இசையில் இனிக்கும் கரும்பானது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த மதுரை சம்பவம், நகைச்சுவையை தெளித்த திரு திரு துரு துருவும் தங்கள் வெற்றிய பதிவு செய்தன. அண்மையில் வெளிவந்த ரேணி குண்டாவும் இந்த வருடத்துக்கான வெற்றி படமாக தன்னையும் சேர்த்துக்கொண்டது.



இந்த வருடம் இப்படி சங்கடங்களை சந்தித்தாலும் சில படங்கள் புரட்சி செய்யத் தவறவில்லை. இவைதான் இந்த வருடம் மிகப்பெரிய வெற்றிக் கொடியை நாட்டிய படங்கள் இந்த வருடத்துக்கான பெரிய வெற்றிப்படங்களை ஆரம்பித்து வைத்தவர் தனுஷ் படிக்காதவன் மூலம் வழக்கமான சாதாரண கதை தான் என்றாலும் தனுஷ்-தமன்னா என்பதையும் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பினால் ஒடிவிட்டது. கிராமத்தையும் விளையாட்டையும் மையப்படுத்தி குழுவாக திட்டமிட்டு வந்த வெண்ணிலா கபடிக்குழு திரில்லர்,ஆவி என பயமுறுத்திய யாவரும் நலம், அழகிய அனுஷ்காவை மீள அழைத்து ஆனால் கொஞ்சம் பயப்படுத்திய(எங்களை மட்டுமல்ல அசின்,திரிஷா நயனங்களையும் தான்.) அருந்ததி என தங்கள் பங்குக்கு படங்கள் வெற்றியை பதிவு செய்து இந்த வருடத்தை காப்பாற்றின. அதனை தொடர்ந்து இந்த வருடத்தின் வசூல் சாதனை படைத்த அயன் பாடல்களிலும் பட்டையை கிளப்பியது.சிறுவர்களையே நாயகர்களாக்கி வீட்டுக்குள் நடக்கும் சுவாரஷ்யத்தை திரையில் தந்த பசங்க சாதனையோ அளப்பரியது. அடுத்து நாடோடிகள் இந்த வருடம் வந்த சிறந்த படம் என மார்தட்டி சொல்லலாம். சசிகுமார் என்னும் இவ்வருட நட்சத்திரத்தை மின்ன வைத்த படம். இப்படி ஒரு படமா என ரசிகர்களை பாராட்டவைத்தது.

விக்ரமின் கடின உழைப்பில் பொழுது போக்குடன் சமூக கருத்தும் சொன்ன கந்தசாமியை நம் பதிவர்கள் நொந்தசாமி ஆக்கினாலும் அவர்களை வெந்தசாமி ஆக்கிவிட்டு வெற்றிக் கோட்டை சாமியானார் விக்ரம். இமாலய வெற்றியை சூர்யாவிற்கு பதிவு செய்த அயன் திரைப்படமும் படிக்காதவனும் கந்தசாமியும் தான் இந்த வருடம் வெற்றி பெற்ற மசாலா படங்கள். இது தமிழ் சினிமாவிற்கு ரசிகர்கள் அடித்த சாவு மணி என்றே சொல்லலாம். ரசனை மாற்றம் ஏற்ப்படத்தொடங்கிவிட்டது என்பதையும் காட்டிகின்றது. வழக்கம் போலவே புதுமையுடன் இருந்த இடத்தில் இருந்தே சிக்ஸர் அடித்தார் உன்னைப்போல் ஒருவன் கமல். அருந்ததி,யாவரும் நலம் வரிசையில் இன்னொரு த்ரில்லர் ஈரமும் ஒட்டிக்கொண்டது. இளைய நாயகர்களில் இவ்வருடம் வித்தியாசமாக சாதித்தது ஜெயம் ரவி தான் கோமணத்தோடு நடித்து வெற்றியும் கண்டார். எஸ்.பி.ஜனநாதன் என்ற அற்புத படைப்பாளியின் இன்னொரு குழந்தையாக வந்து அசர வைத்தது பேராண்மை . மொழிமாற்றப்பட்டு அளப்பரையற்று வந்த கண்டேன் காதலை வெற்றியை கண்டுகொண்டது. அண்மையில் வெளிவந்து வெற்றிகரமாக தன் ஆரம்பத்தை கண்டிருக்கும் வேட்டைக்காரன்(நாம என்ன சொன்னலும் வசூலை தடுக்க முடியல) கந்த கோட்டை திரைப்படங்களை இந்த வருட கணக்கில் சேர்க்கவில்லை காரணம் சில நாட்கள் மட்டுமே ஆன நிலையில் முழுதாக இவற்றின் வெற்றி தோல்வி பற்றி பேசமுடியாது.


அடுத்து இந்த வருடம் இசை அமைப்பாளர்களில் விஜய் அன்ரனியே அதிகம் ஜொலித்திருக்கின்றார். யுவன் ஷங்கர் ராஜாவும் விஜய் அண்டனியும் ஒரே அளவு படங்களுக்கு இசை அமைத்தாலும் விஜய் அண்டனியின் இசையில் வந்த பாடல்களும் படங்களும் பட்டையை கிளப்பியதை மறுக்கமுடியாது. அ ஆ இ ஈ ,தா ந 07அ ல 4777, நினைத்தாலே இனிக்கும்,வேட்டைக்காரன் என விஜய் அன்டனிக்கு இசை ரீதியான வெற்றியை இந்த பட பாடல்கள் பெற்றுக்கொடுத்தன. ஆனால் யுவன் இசை அமைத்த பெரிய படங்கள் சர்வம்,வாமணன்,யோகி கவித்துவிட சிவாமனசில சக்தி கொஞ்சம் பெயரை காப்பாற்றியது. பாடகர்களில் இந்தவருடம் பென்னி தயாளுக்கும் சுசித்ராவுக்கும் முக்கியமான ஆண்டாக முடியப்போகின்றது.



கடந்த வருடங்களில் அதிக படங்களில் நடித்த சத்யராஜின் ஒரு படமும் இந்த வருடம் வராமல் போக சுந்தர்.சி இம்முறை அந்த இடத்தை பிடித்துக்கொண்டார். தீ,பெருமாள்,ஐந்தாம்படை இந்த மூன்று படங்களும் சராசரியாக ஓடியதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல ஜெய்,அஜ்மல் இந்த இரண்டுபேருக்கும் தங்கள் திறமையை வெளிக்காட்டவும் முன்னிறுத்திக் கொள்ளவும் இந்த வருடம் உதவியாக அமைந்தது. நடிகைகளில் சந்தேகமே இல்லாமல் இது தமன்னா ஆண்டு. அசின்,திரிஷா இல்லாத இடத்தில் புகுந்து தனி ஆவர்த்தனம் நடத்தினார். ஆனந்த தாண்டவத்தை தவிர அயன்,கண்டேன் காதலை,படிக்காதவன் மூன்றும் ஹிட் ஆகி இந்த வெண்ணிற அழகியை(சுடுதண்ணி ஊத்தின தோல் என என் நண்பன் நக்கலடிப்பான்.) முன்னணிக்கு கொண்டுவந்தது. யார் முன்னுக்கு வந்தால் என்ன நான் தான் அதிக படம் நடிப்பேன் என நடித்த கவர்ச்சி பாம் நமீதாவிற்கு தீ,பெருமாள் தவிர ௧௯௭௭,இந்திரவிழா,ஜெகன்மோகினி படங்கள் கைகொடுக்கவில்லை. அடுத்து கவனிக்கப்பட்டவர்கள் லக்ஷ்மிராயும் சரண்ஜா மோகனும்


எதிர்கால நபிக்கையை யார் கொடுத்தார்கள் என்றால் புதுமுகங்களில் யாருமே இல்லை என்று சொல்லலாம். குங்குமபூவும் கொஞ்சும் புறாவும் நன்றாக போயும் ஹீரோ ராம கிரிஷ்ணனை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதே போல உன்னை போல் ஒருவனில் நடித்த கணேஷ் வெங்கட்ராமன் கவனிக்கப்படாலும் பின்னர் படங்கள் அமையவில்லை. யோகி அமீர் நடிகராக ஓரளவு தன்னை காட்டிக்கொண்டாலும் இது தொடருமா என்பது கேள்வியே? பெண்கள் அணியில் நாடோடிகள் கதாநாயகியை தவிர யாருக்கும் தங்களை நிலை நிறுத்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அந்த வகையில் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகியும் பிரகாசமற்று போன ஒரு வருடம் கடந்து போகின்றது. நகைச்சுவை நடிகர்களில் வடிவேலு,விவேக்கை முந்தி சந்தானமும் கஞ்சாகருப்பும் வந்து கொண்டிருக்கின்றனர்.


இந்த வருடம் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சாதனைகளும் வேதனைகளும்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒஸ்கார் விருது.
நகைச்சுவைத்திலகம் நாகேஷ் எழுபத்தாறு வயதில் காலமானார்.
அசினின் உதவியாளர் மாயமான பிரச்சனை ஒரு கலக்கு கலக்கியது.
இலங்கைத் தமிழர்களுக்காக அஜித் தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார்.
சண்டை கலைஞர் ராம்போ ராஜ்குமார் தன் ஐம்பத்து மூன்று வயதில் காலமானார்.
தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜி எழுபத்து நானு வயதில் காலமானார்.
கஸ்தூரிமான் திரைப்படத்தை இயக்கிய மலையாள இயக்குனரும் மீரா ஜாஸ்மினுடன் கிசுகிசுக்கப்பட்டவருமான லோகிதாஸ் காலமானார்.
காவ்யாமாதவன் திருமணமும் விவகாரத்தும்
மலையாள நடிகர் முரளி காலமானார்.
உலகநாயகன் தன் ஐமபதாவதாண்டை திரை உலகில் பூர்த்தி செய்தார்.
ஜெயம் ரவி,மீனா,விக்ராந்த் போன்று இன்னும் சில நட்சத்திரங்கள் திருமண பந்தத்தில் இணைந்தன.
சோனியா அகர்வால்-செல்வராகவன்-ஆண்ட்ரியா பிரச்சனை.
நயன்தாரா-பிரபுதேவா கள்ளக்காதல்.(அம்பலக்காதல்)
நடிகர் விஜயின் அரசியல் நாடகம்.
காஞ்சிவரம் படத்துக்கும் பிரகாஷ்ராஜுக்கும் தேசிய விருது.
சி.என்.என் ஐ.பி.என் டி.வியின் சிறந்த இந்தியருக்கான விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

இதோ இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் இந்த வருடம் விடைபெற்றுக்கொள்ளப்போகின்றது. அடுத்த வருடம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல நம் பலரின் வாழ்கையில் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமில்லாமல் உதயமாக போகின்றது. என் பிரியமானவர்களுக்கு என் இனிய புது வருட வாழ்த்துக்கள்.

Share:

4 கருத்துரைகள்:

தர்ஷன் said...

அப்பாடா எவ்வளவு பெரிய ஆய்வு நீங்கள் சொல்லியிருக்கும் சில படங்களின் வெற்றி தொடர்பில் சந்தேகமாய் இருக்கிறதே

Subankan said...

நல்ல அலசல் சதீஷ், WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR

Admin said...

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

உண்மைத்தமிழன் said...

தொகுப்புரைக்கு மிக்க நன்றிகள் நண்பரே..!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox