இலங்கை மண்ணின் இதய பூமியான கண்டியில் 1972ஆம் ஆண்டு அவதரித்தவர் தான் முத்தையா முரளிதரன். நான் அவதாரம் என சொல்ல காரணம் கிரிக்கெட் என்னும் வரலாற்றில் சாதித்த ஒருவரை அதற்காக அவதரித்த அவதாரம் என்று சொல்வதில் தப்பில்லை என நினைக்கின்றேன். சின்னசாமி முத்தையா என்ற பிஸ்கட் வாணிபம் செய்யும் ஒரு தொழில் அதிபரின் மகனாக பிறந்த முரளியின் குடும்பத்தில் அவருடன் சேர்த்து நால்வரும் ஆண் பிள்ளைகள். தன் ஒன்பதாவது வயதிலேயே சென் அன்டனீஸ் கல்லூரியிலே படிக்க வைக்கப்பட்டார். கூட்டுக்குடும்பமாக இருந்த வீட்டில் பெண்கள் தான் அதிகம் என்பதால் தங்கள் சிறுவயது விளையாட்டே பெண்கள் சார்ந்ததாக இருந்தது என்று அண்மையில் ஒரு பேட்டியில் கூறி உள்ளார். அதுமட்டுமன்றி தன் பள்ளிக் காலத்தில் பெருமபாலான காலப்பகுதியில் ஹாஸ்டலிலேயே தன்கிப்படித்திருக்கின்றார் இன்று சாதித்திருக்கும் இந்த வீரத்தமிழன்.
தன் பள்ளி ஆரம்பகாலத்தில் மித வேகப்பந்து வீச்சாளராக ஆரம்பித்த முரளி தன் பாடசாலை பயிற்சியாளரான சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைப்படி தன் பதின்னான்காவது வயதில் சுழல் பந்து வீச்சாளராக மாற்றப்பட்டார்.(அப்போது யாருக்குத் தெரியும் இவர் தான் பின்னாளில் கலக்கப்போகும் சுழல் மன்னன் என்று.) அடுத்த நான்கு வருடங்களில் தன் பாடசாலை அணிக்காக களமிறங்கிய முரளி மிடில் ஆர்டரில் சகலதுறை வீரராக களம் கண்டார். பாடசாலைக் காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை கைப்பற்றிய முரளி 1990 மற்றும் 1991 ஆண்டுகளில்
இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் "பாட்டா ஆண்டின் சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரராக" தெரிவானார்.
பாடசாலைக் காலத்தை முடித்துவிட்டு தமிழ் யூனியன் கழகத்துடன் இணைந்த முரளி 1992ஆம் ஆண்டி இலங்கை ஏ அணிக்காக தெரிவானார். அந்த தொடரில் முரளி பெரிதாக பிரகாசிக்கவில்லை. அதன் பின் சர்வதேச அணியில் இணைந்து முரளி படைத்த சாதனைகளும் சவால்களும் இன்று சரித்திரமாகி இருக்கின்றது. தமிழ் நாட்டு பெண்ணை மணம் முடித்து அவர்களின் மருமகனாகி இன்று நரேன் என்னும் பையனுக்குத் தந்தையாகவும் வாழ்ந்து காட்டுகின்றார். ஒருநாள் டெஸ்ட் என முரளியின் சாதனைகள் அளப்பரியன ஆனால் அதற்காக அவர் கொடுத்த விலைகளும் ஏராளம். இவை எல்லாம் சொல்ல எனக்கு பத்துப்பதிவிர்க்கு மேல் சென்றுவிடும். முரளி-வார்னே டிராபி என்று ஒன்றை ஆரம்பித்து இவரை கௌரவித்திருக்கின்றன இரண்டு கிரிக்கெட் சபைகளும். ஆனால் இந்த டிராபி முரளிதரனின் பெயரையே மாற்றியதும் சுவாரஷ்யமானது. MURALITHARAN என்று எழுதிவரப்பட்ட பெயரை MURALIDARAN இப்படி மாற்றிய பெருமையும் உண்டு.
இதே அவுஸ்திரேலியர்களால் பலமுறை பந்தை எறிகின்றார் என்று அவமானப்படுத்தப்பட்டும் அதை எல்லாம் தாண்டி தமிழன் ஒருவனின் பெயரை கிரிக்கெட்டிலும் படைத்த பெருமைக்காரன். உலக அரங்கில் பல சாதனைகளால் எதிரியாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முரளி இன்னும் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படாததற்கு காரணம் அவர் தமிழன் என்பதே. எத்தனையோ சாதனை படைத்த முரளியால் தலைமை தாங்கமுடியாதென எண்ணி விட்டார்களோ என்னவோ இலங்கை அணியின் தலைமை பதவிக்கு ஒருபோதும் இவர் தெரிவு செய்யப்படவில்லை. அதிகபட்சமாக உதவித் தலைவராக மட்டுமே கடமையாற்றினாலும் எனக்கென்னவோ பல தடவை அணியில் முரளிதான் தலைவராக கடமையாற்றினார் என்றே எண்ணத்தோன்றுகின்றது. சனத்,மாவன்,மஹேல,சங்கா போன்றவர்கள் அணித்தலைவராக இருந்த காலத்தில் பல தடவை முரளியின் ஆலோசனை பெறப்பட்டது களத்திலே நாங்கள் கண்ட உண்மை. உண்மையில் முரளிக்குள் தலைத்துவப்பண்பு இல்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் ஒருமுறையேனும் வாய்ப்பைக் கொடுக்காமல் இல்லை என்று சொல்வது எப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியது. இதனால் தான் என்னவோ சில காலங்களின் பின் தனக்கு தலைமைப் பதவியே வேண்டாம் என முரளியே சொல்லிவிட்டார்.
தன் நாடே கொடுக்கவில்லை. அப்படி இருக்கையில் பண முதலைகளின் ஆட்டம் என்று சொல்லப்படும் ஐ.பி.எல்லில் மட்டும் வாய்ப்புக் கிடைத்துவிடுமா? தோணி இல்லாத நேரம் கூட ரைனா அணித்தலைவராகப்பட்டாரே தவிர முரளியின் பெயர் அடிபடவில்லை. இதை விட கொடுமை அஜந்தா மென்டிஸ் என்னும் மாயையில் கட்டுண்ட இலங்கை கொஞ்சம் கொஞ்சமாக முரளியை ஒதுக்கியது. ஓரம் கட்டிவிடுவார்களோ என்று பயந்த நேரம் அந்த மாயை விலகிப்போக மீண்டும் முரளியிடம் தஞ்சம். இதையே தான் இப்போது தோனியும் செய்கின்றார். அண்மைக்காலமாக முரளியின் பந்து வீச்சில் அதிக ஓட்டங்கள் குவிக்கப்படுகின்றது என்பது உண்மை. அனால் விக்கெட் வேட்கை குறைந்ததேன்றில்லை. அப்படி இருக்கையில் சென்னை போன்ற ஆடுகளங்களில் முரளியை ஒதுக்கியது முட்டாள்தனம். காரணம் உலகில் இப்போது விளையாடிக்கொண்டிருக்கும் மற்ற சுழல்பந்து வீச்சாளர்களால் சாதிக்க முடியும் என்றால் முரளியால் விளையாட முடியாதா என்ன?
கிரிக்கெட்டில் இரண்டு பிரதான பகுதியிலும் ஆசிய வீர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்னும் போது பெருமையாக உள்ளது. துடுப்பாட்டம் என்றால் சச்சின். பந்துவீச்சென்றால் என்னை பொறுத்தவரை முரளிதான். அந்த அற்புதமான கிரிக்கெட் வீரனுக்கு ஒரு தமிழனாக பெருமைப்பட்ட என் வாழ்த்துக்கள். நீங்களும் பின்னூட்டத்தில் உங்கள் வாழ்த்தை சொல்லுங்கள்.....
2 கருத்துரைகள்:
அண்மையில் காபி வித் அனு நிகழ்ச்சியில் முரளிதரன் கலந்து கொண்டார். முரளிதரனின் ஆரம்ப காலம் முதல் எனக்கு மிகவும் பிடிக்கும். தலைக்கனம் இல்லாத அவரின் நடவடிக்கைகளே காரணம். அவரின் செயல்களில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும்.
இன்று போல் என்றும் வாழ்க முரளிதரன் அவர்களே...
நன்றி சதீஷ்..
முரளிக்கு வாழ்த்துக்கள்
ஏன் பயோகிராபி ஒப் முரளி என்று போட்டு இருக்கலாமே ::::
Post a Comment