உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Sunday, November 22, 2009

வானலையில் வெற்றிகரமாக ஒரு வருடம்.

காலம் சிலரை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடும் இல்லாவிட்டால் வடமராட்சியில் பிறந்து வரணியில் தவழ்ந்து இன்று வெற்றியோடு நான் தவழ்வதை என்னவென்று சொல்வது. சரி விசயத்துக்கு வா என்பது புரிகிறது. வெற்றி வானொலியில் வானலை வழியே உங்களை நான் சந்தித்து இன்றுடன் ஒருவருடமாகிவிட்டது. அதற்காக சில நினைவு மீட்டல்கள் தான் இந்த பதிவு.

நான் கொழும்பில் ஒரு விடுதியில் இருந்த காலம் என் கைத்தொலைபேசியில் எல்லா வானொலிகளையும் கேட்பேன். ஒருநாள் அலைவரிசைகளை செட் செய்யும் பொது தொடர் இசையாக பாடல்கள் ஒலித்த ஒரு அலைவரிசை தட்டுப்பட்டது. பாடல்கள் நன்றாக இருக்கே என கேட்க ஆரம்பித்தேன். சில நாட்கள் செல்ல கற்றது கையளவு என்னும் நிகழ்ச்சியில் நானும் என் கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன். அத்துடன் ஒரு சொல் ஒரு கானம் நிகழ்ச்சியிலும் பங்குபற்றியுள்ளேன். அதை தொடர்ந்து காற்றின் சிறகுகள் நிகழ்ச்சிதான் என்னை மாற்றிப்போட்டது எனலாம். எனக்கும் சுபாஷ் அண்ணாவிற்கும் இடையில் சிறு மோதலோடு தான் பேச்சு ஆரம்பமானது, அதன் பின் என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் நபர் அவர் என தெரியாமல். மோதல் எப்படி காதலாகுமோ அதேபோல எங்களுக்குள்ளும் மோதல் இல்லாமல் போய் நல்ல நட்பு சகோதரத்துவம் ஏற்பட்டது.

இந்த நேரம் தான் எனக்கு வானொலி ஆசை கொஞ்சம் எட்டிப்பார்த்தது. ஒரு இணையத்தில் இயங்கும் பிரபல வானொலியில் நேர்முகத்தேர்வுக்காக போனேன். நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டாலும் அந்த நிலையம் அமைந்துள்ள இடம் ரொம்ப தூரமாக அமைந்தது என் வீட்டுக்காரருக்கு கொஞ்சம் விருப்பமின்மையை ஏற்படுத்தியது. இதை நான் சுபாஷ் அண்ணாவுடன் பகிர்ந்து கொள்ள அவர் சொன்ன வார்த்தை உனக்கு வெற்றியில் ஒரு நேர்முகத்தேர்விற்கு வாய்ப்பினை உண்டு பண்ணிவிடுகின்றேன் ஆனால் மிகுதி உன் கையில் உன் திறமையில் என்றார். நானும் சரி என்று விட்டேன். இந்த இடத்தில் என் பெற்றோருக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம் நான் என்ன செய்தாலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுப்பவர்கள் இவர்கள். இல்லாவிட்டால் வாழ்க்கையில் விழுந்து போன என்ன தாங்கிப்பிடித்து எழுப்பிவிட்டிருப்பார்களா?


நேர்முகத்தேர்வுக்கான நாளும் வந்தது நான் என் பெற்றோருடனும் ஒரு அண்ணாவுடனும் வெற்றி அலுவலகத்துக்கு போனேன். இதில் இன்னொரு முக்கியமான விடயம் இதுவரை எனக்கு சுபாஷ் அண்ணாவின் முகமே தெரியாது. தொலைபேசியில் பேசியது மாத்திரமே. அலுவலகத்தில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு காத்திருக்க ஒரு பெண் வந்து என்னை அழைத்து போனார். அவர்தான் பூஜா அக்கா. நேரடியா Recording அறைக்கு என்னை அழைத்து போக அங்கே ஒருவர் இருந்தார். எனக்கு அவரையும் யாரென தெரியாது. அந்த அறைக்குள் இருந்த கண்ணாடியாலான இன்னொரு அறைக்குள் ஒலிவாங்கி இருக்கும் இடத்துக்கு என்னை போகச் சொன்ன அந்த நபர் தானும் உள்ளே வந்து ஒலிவாங்கியை எனக்கு சரி செய்துவிடும் போது உங்கள் பெயர் என கேட்க விமல் என்றார். உடனே நான் நீங்கள் தானே எங்க பாடசாலையில் படித்தீர்கள் என சொல்ல அவரும் ஆமாம் என சொல்லிவிட்டு என் குரலை பதிவு செய்யத் தொடங்கினார்.

செய்தி அறிக்கையை நான் வாசித்துக்கொண்டிருந்த போது லோஷன் அண்ணா உள்ளே வந்து நிறுத்த சொல்லிவிட்டு ஒரு நிகழ்ச்சி செய்ய சொன்னார். நானும் காற்றின் சிறகுகள் செய்து காட்ட Fast ஆக ஒரு நிகழ்ச்சி செய்யும் படி சொல்ல பகல் பந்தி செய்து காட்டினேன். வெளியே வரச்சொல்லி இப்போ சின்ன வயது தானே இன்னும் காத்திருக்கலாமே என்றார். எனக்கும் பயமாக இருக்க தாங்கள் மீண்டும் அழைக்கிறோம் இப்போ போகலாம் என்றார். நானும் வீட்டுக்கு வந்தாலும் சுபாஷ் அண்ணாவை நையப்புடைந்து கொண்டே இருந்தேன். என் குடைச்சலகளுக்கு கோபப்படாமல் பதில் சொல்லியே அவர் களைத்திருப்பார்.(அதற்கு பிறகு அண்மையில் தான் அன்றைய தினம் என்னை எடுப்பதா இல்லையா என்ற விடயத்தில் என்ன முடிவு என்ன பேசினார்கள் என்பதை விமல் அண்ணா மூலம் அறிந்தேன். விமல் அண்ணா உங்களுக்கு என் நன்றிகள். அத்துடன் நீங்கள் நடுநிலையாக நடந்தது மகிழ்ச்சியாக உள்ளது.)

அதன் பின் இன்னும் மூன்று முறை நேர்முகத்தேர்வு எல்லாம் முடிந்து நவம்பர் மாதம் மூன்றாம் திகதி அலுவலகத்தில் நானும் ஒரு ஊழியனாய் இணைந்தேன். ஆரம்பகால பயிற்சிகள் ஆரம்பித்தன. அப்போது எனக்கு இரண்டு பேரைக்கண்டால் பயம் ஒன்று விமல் அண்ணா இன்னொருவர் சந்துரு அண்ணா இரண்டு பேரும் ஏதாவது கேட்டு அன்று ஒரு ரணகளப்படுத்தாமல் விடமாட்டார்கள். இன்று விமல் அண்ணா நல்ல அண்ணாவாக நல்லா நண்பனாக மாறினாலும் இன்னும் எனக்குள் அந்த பயம் போகவில்லை. ஆனால் இப்போது தான் உணர்ந்தேன் அது பயம் மட்டுமலல மரியாதையும் என்று.( ஆனால் நம் பாடசாலைக் காலத்தில் விமல் அண்ணா எங்களுக்கு சீனியர் அதை நினைத்தால் இன்றும் நடுங்கும்.) சந்துரு அண்ணாவும் தன் கண்டிப்பை குறைத்தாலும் இன்று நல்ல நண்பனாக அதேநேரம் என் தயாரிப்பு பணிகளில் நல்ல உதவியாக இருக்கின்றார்.

அடுத்து ஹிஷாம் அண்ணா செய்தி வாசிப்பதில் கவனிக்கவேண்டிய விடயங்களை முதலில் சொல்லித்தந்தவர். எங்கள் உதவி முகாமையாளர். பெரிதாக கோபப்படமாட்டார் ஆனால் வேலை சரியாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர். இப்போது எங்கள் மாலை நேரத்து வேலை நேர உற்ற நண்பனாக. அடுத்து பிரதீப் அண்ணா, ஆரம்பத்தில் நான் ஒருநாள் இவரிடம் வாங்கிய திட்டு தான் இன்று என்னை பக்குவப்படுத்தியுள்ளது. நன்றி அண்ணா. அதேபோல சகலவிடயங்களையும் சொல்லித்தருவதில் இவருக்கு நிகர் இவரே. ஆரம்பத்தில் எனக்கு பாடல்கள் பற்றிய அறிவை வளர்க்க பெரிதாக உதவியவர் இன்றும் என் பாடல்தெரிவுகளுக்கு ஆதாரமாக விளங்குபவர். செந்தூரன் அண்ணாவுடன் பெரிதாக பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.ஆனால் அவரின் அறிவுரை இன்றும் பயன்படுகின்றது. தான் நாடு விட்டு போகமுதலே எங்கள் கனவில் முதல் தீபத்தை ஏற்றிவைக்கும் வண்ணம் தன் அனுபவத்தை பகிர்ந்து போன அன்பு அண்ணா. இன்றும் வாழ்த்தி இருக்கின்றார். நன்றி அண்ணா.
.

அடுத்து பூஜா அக்கா, நேர்முகத்தேர்வுக்கு சென்ற நேரம் என்னை அழைத்து சென்றவர். இவரின் பகல் பந்தி எனக்கு பல அனுபவங்களை பெற்றுத்தந்த களம். அனேகமாக பகல் பந்தி நிகழ்ச்சி செய்யும் போது அதை பார்த்து பார்த்து நல்ல விடயங்களை கற்றுக்கொண்டேன். இந்த நேரம் தன்னால் முடிந்த அளவு எனக்கு நிகழ்ச்சி பற்றி சொல்லி கொடுத்த அக்காவிற்கு நன்றிகள். அடுத்தவர் வைதேகி அக்கா, இப்போது என் குறைகளை சொல்லி திருத்துவது மட்டுமில்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்லி விடுவார். ஆரம்பகாலத்தில் என் செய்திகளை அவர் தந்தை சர்வானந்தா அவர்கள் கேட்டு (பிரபல வானொலி அறிவிப்பாளர்.) நன்றாக இருக்கு நல்லா வருவான் என சொல்லி எனக்குள் நம்பிக்கை அளித்தவர்.

சுபாஷ் அண்ணா எப்போதும் மாலையில் வருவார் ஆனால் என் தயாரிப்பு வேலைகள் செய்ய பிள்ளையார் சுழி போட்டவர். முகம் தெரியாமலே உதவியவர் முகத்துக்கு நேரே நல்ல சகோதரனாக மாறிவிட்டார். அடுத்து லோஷன் அண்ணா. என் ஐந்தாம் ஆண்டில் இருந்து நான் தொடர்ந்து வந்த ஒரு சாதனையாளர். வானொலி அறிவிப்புத் துறையில் என் மானசீக குரு. இதை வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை. எந்தளவிற்கு நான் விஜய் ரசிகன் என நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதேபோல இங்கே லோஷன் அண்ணாவின் ரசிகன்.(விஜயை ஒப்பிட காரணம் எல்லோரும் என்னை விஜயின் தீவிர ரசிகனென நன்கறிந்திருப்பதே.) இதனால் தானோ என்னவோ அவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அவர் நிகழ்ச்சி செய்யும் நேரம் அவர் அருகே இருந்து ரசித்து பார்த்திருக்கின்றேன். அத்தனை விடயங்களையும் அறிந்து விட்டீர்களா என கேட்டு எங்கள் ஆவலை அதிகரிப்பதுடன் தெரியாத விடயங்களை தானே சொல்லித்தரும் நல்ல மனது. முகாமையாளர் என்னும் பதவியில் இருந்தாலும் பழகுவதில் அவர் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அண்ணாவே. (அண்ணா உங்களிடம் வேலை செய்த ஒருவர் எனக்கு சொன்னது லோஷன் அண்ணாவின் முகாமைத்துவத்தின் கீழ் வேலை செய்ய முடியாத யாரும் இன்னொருவரின் கீழ் வேலை செய்ய முடியாது என்று. இது என் அனுபவத்திலும் உண்மை.) இப்படி எத்தனையோ இனிமையான நினைவுகள் இருந்தாலும் இந்த பயிற்சிக்காலம் ஒரு முட்படுக்கையே.

நாங்கள் வெற்றியோடு இணைந்து அடுத்த வாரமே ஒரு சில வேண்டத்தகாத சம்பவங்கள் லோஷன் அண்ணாவிற்கு நடக்க உள்ளே வெளியே ஆட்டம் நடந்தேறியது. என்ன நடக்கப்போகின்றது என தெரியாமல் எல்லோரும் விழி பிதுங்கிய நேரம் ஹிஷாம் அண்ணா சொன்னார் நாளை சதீஷ்,வனிதா இருவரும் நிகழ்ச்சி செய்யப்போகின்றீர்கள் ஆனால் உங்கள் பெயர் சொல்லக்கூடாதென. மனதிலே பயமும் வலியும் கலந்திருக்க கடந்தவருடம் நவம்பர் இதே தினம் ஒரு சனிக்கிழமை என் கன்னிக்களம் சுபாஷ் அண்ணாவுடன் அரங்கேறியது நானாட நீயாடாவில். எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடலோடு நானும் நதியாக ஓடத்தொடங்கினேன்.அந்த நிகழ்ச்சியில் நான் விட்ட பிழைகள் எல்லாவற்றையும் திருத்தி எனக்கு நல்ல வழி காட்டினார் அவர். இதில் இன்னொரு சந்தோசமும் சேர்ந்துகொண்டது அதுதான் லோஷன் அண்ணா உள்ளே வெளியே ஆட்டம் முடித்து வீட்டுக்கு வந்து விட்டார். எவர் எனக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டரோ அவருடன் என் பயணம் ஆரம்பமானது இரட்டிப்பு சந்தோசம். மறுநாள் விமல் அண்ணாவுடன் அமரகானங்கள் மற்றும் ஒரு சொல் ஒரு கானம். அன்று நான் நன்றாக மாட்டி கொண்டேன். ஆனால் இன்று அதுவும் படிப்பினையாக மாறி உதவி புரிகின்றது. தொடர்ந்து அனேகமாக எல்லோருடைய நிகழ்ச்சியிலும் இருந்து அவர்கள் நிகழ்ச்சி செய்யும் விதத்தை பார்த்து கற்றுக்கொண்டேன்


இப்படியே போகப் போக குறுகிய காலங்களிலேயே வாங்க நீங்க நிகழ்ச்சி வாய்ப்பும் கிடைத்தது. ஒருநாள் சுபாஷ் அண்ணா தன் வீட்டுக்கு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு போக வேண்டும் என்பதற்காக என்மேல் முழு நம்பிக்கை வைத்து காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியை ஒப்படைத்தார்.

இதற்கு காரணமும் இல்லாமல் இல்லை, நானாட நீயாட நிகழ்ச்சியில் அடிக்கடி வெளியே சென்று என்னை தனியே செய்ய விட்டு எனக்கு பயத்தை போக்கி அனுபவத்தை வளர்த்தார். அந்த நம்பிக்கையை லோஷன் அண்ணா என்மேல் வைக்க முதல் முறையாக காற்றின் சிறகுகளில் தனி ஆவர்த்தனத்தை தொடங்கினேன். நிகழ்ச்சி முடிந்த உடன் சுபாஷ் அண்ணாவிற்கு அழைப்பெடுத்து சரியாக செய்தேனா என கேட்டேன் அவரும் குறைநிறைகளை சொல்லி மேலும் உதவினார். மறுநாள் காலை லோஷன் அண்ணாவிடம் இருந்து நேற்றைய நிகழ்ச்சி சூப்பர் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் என்ற எஸ்.எம்.எஸ் வந்தது இன்றும் என் தொலைபேசியில் இருக்கிறது அது. இன்று அதே நிகழ்ச்சி எனக்கு வழங்கப்பட்டிருப்பது இன்னொரு ஆச்சரியம். இதை அடுத்து பூஜா அக்காவும் என் மேல் தன் நம்பிக்கை வெளிப்பாட்டை பகல் பந்தியைக் கொடுத்து வெளிப்படுத்த நான் அதை பயன்படுத்திக்கொண்டேன். கிறிஸ்மஸ் தினத்தன்று நத்தார் தாத்தாவாக நான் செய்த அட்டகாசத்துக்கு கிடைத்த பாராட்டுகள் இன்னும் சந்தோஷ அலைகள்.

இப்படியே போகப்போக என்றென்றும் உங்கள் பிரியமானவனாக வலம் வர தொடங்கினேன். இந்த ஆண்டின் முதல் நாள் விடியலில் லோஷன் அண்ணா மூலம் நானும் வனிதாவும் உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டோம். அன்றும் இரவு காற்றின் சிறகுகளோடு வந்த நான் அதன் பின் இரு வாரங்கள் நெருப்பு காச்சலால் வைத்தியசாலையில் இருந்து மீண்டும் வந்தேன். அதன் பின் தொடர்ந்து குதூகல குவியல், இருபது புது இசை, வேகம் விவேகம், கற்றது கையளவு, அதிரடி புதிரடி, வினோத வியூகம், எங்கேயும் எப்போதும், சினிமாலை, விடியல் என பெரும்பாலான நிகழ்ச்சிகள் செய்து விட்டேன். இதில் சினிமாலை நிகழ்ச்சி லோஷன் அண்ணா செய்தது ஒருநாள் அவர் சொன்ன வார்த்தைகள் தான் கஷ்டப்பட்டு ரசித்து ரசித்து தயார் செய்த நிகழ்ச்சி உனக்கு வழங்கியுள்ளேன் கெடுத்துவிடாதே என்று. அதேபோல முழு சுதந்திரத்துடன் உன் ஸ்டைலில் செய் என சொல்லிவிட்டார். ஓரளவிற்கு நன்றாக அந்த நிகழ்ச்சியை கொண்டு செல்கின்றேன் என நம்புகின்றேன். அதேபோல்தான் விடியல் என் மனதுக்குள் ஒரு எட்டாத கோட்டையாக இருந்த நிகழ்ச்சி, சுபாஷ் அண்ணா விடை பெற்று செல்லும் போது உனக்கு இனி காலை நேர நிகழ்ச்சி தான் குறியாக இருக்க வேண்டும் அந்தளவிற்கு உன் செயற்பாடு அமைய வேண்டும் என்பதை எனக்குள் பதித்து போனது. இன்னும் உலாவரும் உற்சாகம், ஏன் எதற்கு எப்படி,அவதாரம், தாம் தூம் மட்டுமே எனக்கு எட்டாக்கனியாக இருக்கின்றன.

இப்படியே சென்ற எனக்கு இன்னொரு வாய்ப்பு செய்தி அறிக்கை மூலம் கிடைத்தது. ஒருநாள் காலை லோஷன் நான் இன்று மதியம் செய்தி வாசி என சொல்ல நானும் சரி சொல்லி விட்டு அலுவலகம் சென்ற நேரம் காலை பதினொன்று நாற்பது. அன்றுதான் என் வாழ்க்கையில் இன்னொரு சரிவை சந்தித்த நாள். ஆனால் அதை யாரிடமும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் தடுமாறி செய்தி வாசிக்க உள்ளே சென்றுவிட்டு இறுதி நேரம் வைதேகி அக்காவிடம் கொடுத்து விட்டு வெளியேறிவிட்டேன். இதனால் எல்லோரிடமும் கொஞ்சம் பேச்சு வாங்கவேண்டிய நிலை. அப்போதும் இருநாள் கழித்து மீண்டும் எனக்கு அந்த வாய்ப்பினை லோஷன் அண்ணா வழங்கினார். செய்தி வாசித்து விட்டு வந்ததன் பின்னர் அவர் சொன்ன வார்த்தைகளும் மறக்கவில்லை. சங்ககாரபோல எப்போதும் போர்மில் இரு மஹேல போல அடிக்கடி Form அவுட் ஆகிடாதே என்று. ஒரு சில நாட்களிலேயே காலை நேர செய்தி அறிக்கை வாசிக்கும் வாய்ப்பை லோஷன் அண்ணா வழங்கினார்.


இதுவரை நான் சொன்னவர்கள் உங்களுக்கும் தெரிந்தவர்கள் இவர்களை விட அருந்ததி அக்கா எப்போதும் பெரிய பலம். அறிவுரைகளும் அனுபவ பாடமும் அவரிடம் கிடைக்கும். அடுத்து திஷோ அண்ணா, எப்போதும் சிரித்த முகம் சிறுபிள்ளை போல குறும்புத்தனம். ஆரம்பத்தில் ஒரு பிரச்சனை எனக்கும் அவருக்கும்.ஆனால் அடுத்தடுத்த நாட்களிலேயே எல்லாம் சரியாகிவிட்டது. அண்ணா இந்த நேரத்தில் அந்த சம்பவத்துக்கு உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். இவரை பற்றி சொல்ல வேண்டுமாக இருந்தால் என் பாடல் விருப்பம் அறிந்தவர். அமரகானங்களில் எனக்காக பாடல் போட்டு அசத்தியவர். இப்போதும் இது உனக்கு ஏற்ற பாட்டு போடு என சில பாடல்களை தருபவர்.

அடுத்து செய்திப்பிரிவில் தெரியாதைதை சொல்லித்தரும் பென்சி அண்ணா, தன் வேலையில் கண்ணாயினும் எங்களுக்கு அறிவுரைதரும் ரஜினி அண்ணா என் நண்பர்கள் அருண், விஜய், லெனின்,ஸ்ரியான்(நம்மா சீயான்) என எல்லோரும் என் ஒரு வருட படிக்கட்டை தாங்கி நிற்பவர்கள். இதில் ஜெய்சன் தினேஷ் இருவரும் அடிக்கடி காணாமல் போனாலும் என் வெற்றிப்பயணத்தின் ஒவ்வொரு கற்கள்.

அடுத்து என்னுடன் வெற்றியில் இணைந்து குருவியாக வலம் வந்து இன்று உங்களுக்கும் எனக்கும் இனிய தோழியாக இருக்கும் வனிதா, நாங்கள் இணைந்ததன் பின் இணைந்து இப்போது என் இணைபிரியா நண்பனாக காற்றின் சிறகுகள் நிகழ்ச்சியில் என் பாடல்தெரிவுகளின் குறை நிறைகளை சுட்டிக்காட்டி என் பாடல் அறிவை மேம்படுத்தும் அன்பு நண்பன் ரஜீவ் இவர்களின் துணை என் வெற்றிப் பயணத்தில் கிடைத்தது. வெற்றியில் இப்போது இணைந்தாலும் அனுபவமுள்ள பாபு, பிர்னாஸ், தினேஷா என எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் என்னை மேம்படுத்த உதவுகின்றனர்.
லோஷன் அண்ணா முதல் பிர்னாஸ், தினேஷா வரை ஒவ்வொருவரிடம் இருந்தும் நிறைய கற்றுக்கொண்டிருக்கின்றேன்.

இவர்கள் எல்லாரையும் போல என் வெற்றிப் பயணத்தில் பிரதான பங்காளிகள் என் பிரியமான நேயர்கள். என்னையும் ஒரு அறிவிப்பாளனாக ஏற்றுக்கொண்டு ஆதரவை வழங்கிவரும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள். உங்களிடம் இருந்து கூட நல்ல பாடல் அறிவு, இன்னும் பல பொது விடயங்களை கற்பதோடு உங்கள் வீட்டில் ஒருவனாக ஏற்று அன்புதரும் நேயர்களும் இருக்கின்றார்கள் என்ற சந்தோசத்தில் உங்கள் அன்புக்கு தலை வணங்குகின்றேன். ஒரு வருடம் கடந்தாயிற்று.... இன்னும் பல வருடம் வெற்றிக்குடும்பத்தோடு வெற்றிகரமாக வலம் வரலாம் என்ற நம்பிக்கையில் இன்று வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றிகளோடு விடைபெறுகின்றேன்.
Share:

Saturday, November 21, 2009

நீ ஹலோ சொல்லவில்லை என்றால்.... இன்று உலக ஹலோ தினம்.


தினம் தினம் ஒரு தினம். அதை அனுதினம் கொண்டாடுவதில் ஒரு சுகம். அந்த வகையில் இன்று ஹலோ தினம். அட எவ்வளவோ தினம் கொண்டாடிட்டோம் இதையும் கொண்டாடிலாம் என கொண்டாட இருப்பவர்களுக்கு இத்தினம் பற்றிய சுவாரஸ்யமும் தெரியட்டுமே. இந்த தினத்தின் பிறப்பு இறப்புகளின் இறுதியில் இருந்து ஆரம்பமாகி இருப்பது இன்னொரு சுவாரஷ்யம்.

எகிப்து-இஸ்ரேல் நாடுகளுக்கிரையில் இடம்பெற்ற போர் நிறைவுக்கு வரும் நேரம் (1973.11.21) இரு நாட்டு தலைவர்களும், அப்படைவீரர்களும், மக்களும் மட்டும் ஹலோ சொல்லி சமாதானம் ஆனால் போதாது உலகமே ஹலோ சொல்லி அமைதியாக இருக்கட்டுமென நினைத்தார்களோ என்னவோ அன்றுமுதல் ஹலோ தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் கொண்டாடப்பட்டு வரும் ஹலோ தினத்தின் வயது 37. நிற்க நடக்க ஓட என மலிந்து போய் இருக்கும் தினக் கொண்டாட்டங்களுக்கு நடுவில் ஹலோ தினத்தின் சாரம் பாராட்டப்படக்கூடியதே. உலகமெங்கும் அமைதி நிலவ பாடுபடுவோம் என்னும் கருப்பொருளுக்கே வைக்கலாம் ஒரு சல்யூட்.

எல்லாம் சரி நாம கொண்டாடவேன்டாமா ? நான் ரெடி.....

ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ

என்ன பார்க்கிறிங்க பத்து தரம் சொல்லி நான் ஆரம்பித்து விட்டேன் கொண்டாட்டத்தை நீங்களும் கொண்டாடுங்கள். செலவில்லாமல் ஒரு அமைதிக்கான கொண்டாட்டம். பத்துப் பேருக்காவது ஹலோ சொல்லுங்கள்......

ஹலோ தினம் என்றவுடன் நினைவு வந்த பாடல்
நீ ஹலோ சொல்லவில்லை என்றால் ஒரு கிலோ எடை குறைவேன்........
பார்த்து சொல்லிடுங்க இல்லாட்டில் எடை குறைந்து குறைந்து ஒல்லிப்பிச்சான் ஆகமுதல்.......

ரொம்பநாளாக பதிவிடவில்லை. காரணம் என் பெரியப்பாவின் இழப்பு. இப்போது மீண்டும் வந்துவிட்டேன் இனி கலக்கல் தான். இந்த நேரத்தில் இறந்த செய்தி கேட்டு தொலைபேசி வாயிலாகவும் மூஞ்சிப் புத்தகம் வாயிலாகவும் இதர வழிகளிலும் ஆறுதல் கூறிய நண்பர்கள் நல்லுள்ளங்களுக்கும் என் திடீர் யாழ்ப்பான பயணம் செய்ய வியாபரங்களை தந்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இழப்புகள் இடிந்து போகவல்ல இதயத்திற்கு வாழ்க்கை பாடத்தை படிப்பிக்கவே.
Share:

Monday, November 9, 2009

வந்திக்கு என் பிந்திய வாழ்த்துக்கள்.


நம் பச்சிளம் பாலாகன் தான் இது.

வந்தியத்தேவன் என பதிவுலகில் பிரபலமாக மூத்த பதிவராக பலரால் அறியப்பட்ட என் மாமா(இந்த உறவுக்கு ஆயிரம் அர்த்தம் உண்டு யாரும் தப்பா நினைக்காதிங்க.) இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

லோஷன் அண்ணாவின் நண்பராக என் பிறந்தநாளில் அறிமுகமான நம் பச்சிளம் பாலகன் பிறந்தநாளுக்கு இந்த மருமகன்(மாமாவே பச்சிளம் பாலகன் என்றால் மருமகன் யோசித்து பாருங்க எவ்வளவு பச்சிளம் பாலகன் என்று. யோ வாய்ஸ் இது உங்கள் கவனத்திற்கு.௦) வாழ்த்தாமலா?

வந்துவிட்டேன் என் உளறல்களோடு(மன்னிக்கணும் மாமா வழக்கமா நீங்கள் தான் உளறுவிங்க இன்று நான்.காரணம் இது கவிதை என சொல்ல முடியாதெல்லா.) ஏன் தாமதம் என கேட்கலாம்? பிறந்தநாள் விருந்து கேட்டால் கொடுக்கமாட்டேன் என சொல்லிவிட்டார். அப்புறம் எதற்காக நேரத்தை செலவு செய்து ஒரு பதிவு என ஒதுங்கிய வேளை வரும் வாரம் விருந்தாம்(வர விரும்புபவர்கள் தெரியப்படுத்தலாம் மாமா எஸ்கேப் ஆக முதல்.) அப்பாடா இனி வாழ்த்தாவிட்டால் மனிசன் தரும் விருந்து சமிபாடடையாது.

இதோ என்னால் முடிந்த வாழ்த்து....


பதிவுலகம் வந்தீர்கள் நீங்கள் முந்தி.-இங்கே
பட்டையை கிளப்புகிறீர்கள் வந்தி.

நெல்லியடியில் உதித்தீர்கள்.- ஆனாலும்
பிறரை சொல்லால் அடிக்காமல் புன்முறுவல் உதிர்ப்பீர்கள்.

முதல் சந்திப்போ Futsalல்.-
உங்கள் பதிவுகளோ Fruit சலட்.

அண்ணனாய் என் பிறந்தநாளில் அறிமுகமாகி வாழ்த்தினீர்கள் -இன்று
மாமாவாய் உம் பணி செய்து மருமகனுக்கு வழிகாட்டுகின்றீர்கள்.

பின்னூட்ட பெருமகனே-எங்கள்
பின்னூட்டத்தின் பின்னூட்ட தளபதியே.

திரை உலகில் உங்கள் தலைவர் உலக நாயகன்-என்றும்
பதிவுலகில் நீங்கள் எங்கள் உள்ளூர் நாயகன்.

கோபியரின் கண்ணனே- எங்கள்
பதிவுலகின் பச்சிளம் பாலகனே.

சிரித்தால் நீங்கள் குழந்தை- மீறி
பலம்கொண்டெளுகையில் ஆயிரம் யானை.

புதியவர்களுக்கு வழிகாட்டி-இன்றும்
பழையவர்களுக்கு ஆட்காட்டி.(பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுபவர்.)

அகவைகள் பலபோயும்-உந்தன்
அகத்துக்கு வயதுபோகவில்லை.

பதிவுலகின் தேவனுக்கு விரைவில்- வந்து
சேரட்டும் ஒரு தேவதை.

இளவரசன் நீங்கள் தான்- அந்த
இளவரசி(????) உம்மவர் தான்.

இணையட்டும் இதயம் இரண்டு-இன்றுபோல்
அன்றும் வாழ்த்தும் இந்த இளைய உள்ளம
Share:

Wednesday, November 4, 2009

மீண்டும் இணையும் சிம்பு-நயன்?




ஐயா படத்தில் அறிமுகமான நயனை ஐயகோ என்ன கொடுமை இது என சொல்ல வைத்த படம் வல்லவன். பல்லனாக நுழைந்த சிம்பு மன்மதனாகி பின் வல்லவனாகும் நேரம் நயன் வல்லவளாகி
பல்லனின் பல்லை உடைத்த கதை எல்லோருக்கும் தெரியும். அதன் பின் இரண்டுபேரும் காதல் தோல்வியில் வாட நயனோ பில்லாவில் பிகினியில் வந்து பிஞ்சு நெஞ்சுகளையும் கெடுத்தார். சிம்புவும் ஒருபுறம் தன் வழியில் போனாலும் பெரிய வெற்றிப்படங்கள் இன்றி போய்க்கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் தங்கள் சொந்தக்கதை சோகக்கதையை கெட்டவன் என்னும் பெயரில் தொடங்கிய சிம்பு அதை கெட்டுப்போகவே விட்டுவிட்டார். இடையில் சிம்பு வரலட்சுமி (சரத்குமார் மகள்) பக்கம் சாய(படத்துக்கு கதாநாயகி மட்டுமே) நயனம் பிரபுதேவாவில் சயனம் கொண்டது ஊரரிந்ததே. இப்போது இந்த கூட்டணியிலும் ஒரு சிறு விரிசல் மறுக்கமுடியா உண்மையே.

இந்த நிலையில் மீண்டும் தன் சகலகலாதன்மையை நிரூபிக்க சிம்பு தயாராகிவிடார். வாலிபன் படத்துக்கு கதை திரைக்கதை எழுதி நடிக்கப்போவதே அவரேதான்(வல்லவனிலும் இதே கதை தான்) ஆரம்பத்தில் சரத்தின் மகள் வரலட்சுமியை கதாநாயகியாக கேட்டு ஒப்புதல் வாங்கியபின் என்ன காரணமோ சாக்கு போக்கு சொல்லி பின்வாங்கி விட்டார் நாட்டாமையின் மகள். ஆனால் இப்போது மீண்டும் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் சிம்புவின் பார்வை மீண்டும் நயனின் பக்கம் திரும்பி இருக்கிறது.

என்னடா ஆச்சரியம்? நம்பமுடியலையே, உங்களை கிள்ளிப் பார்க்கிறிங்களா? என்ன செய்வது சில உண்மைகள் நம்பமுடியாதுதானே. வாலிபனில் வாலிபி (சும்மா ஒரு டைமிங்க்கு தான் தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும் ) நாயனாக இருந்தால் நல்லம் என கெட்டவன் (சாரி வாலிபன் ) யோசிக்க ஆரம்பித்து விட்டார். அண்மையில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் அருகருகே இருந்தும் எதுவும் பேசிக் கொள்ளாத இந்த ஜோடி அதன் பின் தொலைபேசியில் தங்கள் அன்பை பொழிந்திருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் இனி அவனுடன் தொடர்பில்லை என சீறிய நயனே சிம்புவுக்கு அழைப்பெடுத்து வம்பில் மாட்டி இருக்கின்றார். பத்து நிமிடம் உரையாடிய இந்த ஜோடிக்கு பழைய தீ பற்றியதோ தெரியவில்லை வாலிபனில் நடிக்கிறாயா என கேட்க நயனும் யோசித்து செல்வதாக சொல்லி இருக்கின்றாராம். அப்போ பிரபுதேவா???? அந்த யோசித்து என்பது பிரபுதேவாவிடம் கேட்டா அல்லது அவரை கழட்டி விட்டா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.
Share:

Monday, November 2, 2009

ஷேவாக், கம்பீர் இல்லாமல் களமிறங்குமா இந்தியா?




இறுதியாக இடம்பெற்ற போட்டியில் அமோகமாக ஆடி இந்தியா வெற்றி பெற்றது. இந்தநிலையில் ஷேவாக் துடுப்பெடுத்தாடும் போது ஏற்ப்பட்ட காயம், மற்றும் கம்பீருக்கு களத்தடுப்பில் ஈடுபடும் போது ஏற்ப்பட்ட அடி போன்ற காரணங்களால் இன்று இடம்பெறும் போட்டியில் இவர்கள் ஆடுவது கேள்விக்குறியாகி உள்ளது.

ஷேவாக் கடந்த போட்டியில் பிரகாசிக்காவிட்டாலும் ஆரம்பத்தில் அதிரடியை தொடரக்கூடியவர். சச்சினும் ஷேவாக்கும் களத்தில் இருந்தால் எதிரணிக்கு கலக்கும் அப்படி இருக்கையில் ஷேவாக் இல்லாதது இந்தியாவிற்கு பேரிழப்பு. கடந்த காலங்களில் ஷேவாக் இல்லாமல் இந்தியா தலை நிமிர காரணமாக இருந்த கம்பீரும் இப்போது இப்போது இல்லை என்றால் ஆரம்பமும் இல்லை இடையும் இல்லாமல் தடுமாரப்போகின்றது இந்தியா.

கடந்த போட்டிகளில் சச்சின் பிரகாசிக்காத நிலையில் இப்போது ஆரம்ப துடுப்பாட்டம் பலம் குன்றி காணப்படுகின்றது. இன்று சச்சினுடன் தொடக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் மீள அண்மைக்காலமாக சர்வதேச போட்டிகளில் சொதப்பிய தினேஷ் கார்த்திக் மீள அழைக்கப்பட்டுள்ளார்.

திராவிட், ஷேவாக்,கம்பீர், ரோஹித் ஷர்மா இல்லாத நிலையில் இவரை விட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யாரும் இல்லை. தோணியோ அல்லது யுவ்ராஜோ இன்று தொடக்க வீரராக வந்தாலும் அது மத்திய வரிசையை பலமிழக்க வைக்கும். எனவே கார்த்திக்-சச்சின் இணையே இன்று ஆரம்ப இணையாக் இறங்க வாய்ப்புண்டு. அவுஸ்திரேலிய அணி காயங்களால் தவிக்கும் இந்த நேரம் இரு ஜாம்பவான் அணிகள் மோதும் இந்த தொடரில் முழுமையான அணிவிளையாட முடியாமல் போனது ரசிகர்களாகிய எங்களுக்கு கவலையே.

டிஸ்கி: எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அச்சுவலை சந்திப்பு இன்று மாலை மூன்று மணிக்கு இருக்கிறம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தசந்திப்பில் நேரடியாக கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு நம் அந்நியன்(அவர் தலை முடி ஸ்டைல் அப்படிதான்) பிரியமுடன்,மதுவதனன் மௌ.(Aka) கௌபாய்மது (ஒன்றும் விடாமல் சரியா போட்டிட்டன் மது,

கடந்த முறை போன்று இம்முறையும் நேரடி ஒளி பரப்பு செய்து அசத்த தயாராகிவிட்டார். நிகழ்வு நடைபெறும் நேரம் உங்கள் பயன் மிக்க கருத்துகளை நீங்கள் அந்த ஒளிபரப்பில் chatting மூலம் பகிரும் வாய்ப்பும் உண்டு. மதுவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.(என்ன தான் கடந்தமுறை திட்டு வாங்கினாலும் மனிதர் சளைக்கவில்லை.) மீண்டும் வந்துவிட்டார். மாலை சந்திப்போம் நேரடியாகவும் நேரடி ஒளிபரப்பிலும்.

நேரடி ஒளி பரப்பை நீங்கள் பார்க்க மதுவின் ஏற்ப்பாட்டில் அமைந்த களம்.....

Share:

Thursday, October 29, 2009

உதயநிதியின் ஆதவன் உதிக்காமல் போக காரணங்கள்.

ஆதவன் திரைப்படம் எல்லோரும் விமர்சனம் என்ற பெயரில் கிழித்து விட்டனர். உண்மையில் பல ஓட்டைகள் இருந்தாலும் சாதாரண சினிமா ரசிகனுக்கு பிடித்த ஒரு பக்கா கமர்சியல் திரைப்படம் தான் இந்த ஆதவன். சூர்யா என்னும் நடிகரிடம் இருந்து இப்படி ஒரு திரைப்படம் வந்ததை தான் பலரால் ஏற்கமுடியாமல் போய் விட்டது. சரி வந்த திரைப்படத்தை பார்த்த எல்லோரும்( நான் உட்பட) ஏதோ பார்க்க கூடாததை பார்த்து விட்டதைப் போல ஒரு அனுபவம் பெற்று விமர்சனம் எழுதியது மறுக்க முடியாத மறக்க முடியாத உண்மை. இப்போ ஒவ்வொரு காரணங்களால் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த சூர்யாவின் ஆதவன் ஏனோ சரியாக உதிக்காமல் ஒரு முகம் காட்டிவிட்டு அஸ்தமித்து விட்டான்.


முதலில் ஆதவனுக்கு பாதகனாக அதிக எதிர்பார்ப்பு. கே.எஸ் ரவிக்குமார் என்னும் நல்ல இயக்குனர் விதவிதமான படங்களால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து தளபதிகள் ஸ்டார்களை ஓரம்கட்டி விட்டு முதல் நிலை நாயகனானாக இருக்கும் சூர்யா குருவி என்னும் அமோக வெற்றி(??????) பெற்ற திரைப்படத்தை தொடர்ந்து தயாரிக்கும் படம் என்பது மட்டுமன்றி தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகி நயன்தாரா நடிப்பில் தொடர் சொத்தப்பல்களை தொடர்ந்து வரும் படம் என்னும் சிறப்புகளே அமைந்து விட்டன.


கே.எஸ்.ரவிக்குமார் ரஜினி,கமல்,அஜித் என பெரிய நடிகர்களோடு வெற்றிக்கூட்டணி கொண்டவர். இவராலும் நிமிர்த்த முடியாமல் போனவர் தளபதி மட்டுமே. இப்போது அவர் அவரிசையில் அவர் நண்பர் சூர்யா. கே.எஸ் .ரவிக்குமார் என்றாலே ஒரு கலகலப்பான படம் கொடுப்பவர் என்னும் பெயர் உண்டு. அவர் படங்களில் நட்சத்திர பட்டாளம் இருக்கும். ஆதவனிலும் அது தொடர்ந்தது. தசாவாதாரம் என்னும் படைப்பில் இருந்து மீளாமலேயே கே.எஸ்.ஆர் ஆதவனில் களம் இறங்கியது தெட்டத் தெளிவாக தெரிகிறது. கதையை விட திரைக்கதையில் கில்லாடியான இயக்குனர் இங்கே தள்ளாடிப்போய்விட்டார். நொண்டியடிக்கும் திரைக்கதையை கொடுத்து தனித்தன்மையை கெடுத்து விட்டார். அதேநேரம் சூர்யாவின் தற்போதைய நிலை என்ன அவரின் பாதை என்ன ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன என தெரியாமல் அவரும் குழம்பி எங்களையும் குழப்பிவிட்டார்.


அடுத்தவர் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் அதற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்து குருவி படம் எடுத்தேன் என சொன்னவர் குருவியை வெற்றிப்படம் என்றாலும் குருவி சொதப்பிய சொதப்பல் யாவரும் அறிந்ததே. ஆனால் அந்த படத்தில் நடித்த கதாநாயகன் விஜய்க்கு மாஸ் இருந்தது. இங்கே சூர்யாவோ சிறந்த நடிகர் மாத்திரமே. மாஸ் ஹீரோ செய்ததுக்கே துவைத்தெடுத்தவர்கள் சூர்யா என்னும் நடிகன் செய்வதை ஏற்பார்களா என தெரியாமல் உதயநிதி விளையாடி விடார். அதேநேரம் காசை தண்ணீராக செலவழிக்க ஒரு நல்ல தயாரிப்பாளர் இருக்கின்றார் என குருவியில் நிரூபித்தவர் இவர். எனவே இவரை சரியாக பயன்படுத்தி இருக்கலாம் கே.எஸ்.ஆர். ஆதவனின் சில காட்சி அமைப்புக்கள் குருவியை நினைவு படுத்தாவிட்டால் நீங்கள் எல்லாம் கஜினிகள் தான்.


அடுத்து இளம் கதாநாயகர்களில் எந்த அடைமொழியும் இல்லாமல் தனக்கென ஒரு பாணியில் நடித்து இப்போதுள்ள பலரின் இதயத்தில் வேகமாக இடம்பிடித்து வந்தவர்தான் சூர்யா. ஒவ்வொரு படத்திலும் நல்ல கதை தரமான நடிப்பு. அனைவரையும் கவரும் சூர்யாவின் திசை முடிந்து விட்டதோ என எனக்கு தோன்றுகின்றது. காரணமும் இல்லாமல் இல்லை. ஒரு காலத்தில் இளம் நாயகர்கள் என்றால் விஜய் அஜித் இரண்டுபேரும் தான். எந்த போட்டியும் இல்லாமல் இருவரும் வளர்ந்து ஒரு நல்ல நிலைக்கு வந்தனர். ஒரு கட்டத்தில் விஜய் உச்சத்தில் இருந்தால் அஜித் அதல பாதாளத்திலும் அஜித் எழுந்து விட்டால் விஜய் படுத்துக்கொள்வதுமாக இருந்து வந்தது. இடையில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் வந்த விக்ரம் தில்,தூள்,ஜெமினி,சாமி என கலக்கிக்கிண்டிருந்தார். அந்த நேரம் விஜய் அஜித் எங்கே என தேடும் நிலை. அதன் பின் விஜயின் திருமலையோடு எல்லாம் மாறியது.


கடகடவென வெற்றிமேல் வெற்றி குவித்து விஜய் உயர்ந்தார். விக்ரம் அப்பப்போ தான் இருக்கின்றேன் என ஒருசில படம் கொடுத்தார். இந்த இடையில் அந்நியன் வந்தாலும் விஜயின் நம்பர் 1 என்ற இடத்தை விக்ரமால் அசைக்க முடியவில்லை. இதேநேரம் கவிழ்ந்து போய் இருந்த அஜித்தும் தன்னை ஓரளவு தூசு தட்டி வர மீண்டும் ஒரு சில பரப்பரப்பான ஆட்டங்களோடு இந்த மூவரும் அடங்கி விட. சூர்யாவின் ஒளி பரவத்தொடங்கியது. இதற்கு இன்னொரு காரணம் ஜோதிகா என்னும் புகழ் பெற்ற நடிகையை சூர்யா திருமணம் செய்து கொண்டதும் ஒன்றே. காரணம் ஜோதிகாவிற்கு இருந்த பெரிய ரசிகர் கூட்டத்தையும் சூர்யா சேர்த்துக்கொள்ள காரணமாகிவிட்டது. அதேநேரம் இப்போதெல்லாம் வெளிப்படையாக ஜோதிகா புகழ்பாடுவது சூர்யாவிற்கு பழக்கமாகிவிட்டது. இது தனக்கு நல்லதென அவர் நினைக்கின்றாரோ தெரியவில்லை. ஆனால் மனைவியின் பெயரை வைத்து காலத்தை ஓட்டுகின்றார் என்ற பெயரும் சேர்ந்துவிடும்.இப்போது அவரின் ஆட்டமும் முடிந்து இன்னொரு நடிகரின் கையில் இன்னும் சில ஆண்டுகள் போகப்போகும் நேரம் வந்து விட்டதாகவே நான் உணர்கின்றேன்.

காரணங்கள் உதிக்கும்......
Share:

Tuesday, October 27, 2009

என்னை அடிக்க நினைப்பவர்களுக்கு....



நெருங்கிக்கொண்டிருக்கின்றது மீண்டும் ஒரு இனிய நாள். அண்மையில் நடந்து முடிந்த பதிவர்கள் சந்திப்பு தித்திப்பாகவும் வெற்றியாகவும் நடந்து முடிந்தாலும் அதன் பின் இன்னொரு சந்திப்பு என்பது கேள்வியாக இருந்து வந்த நிலையில் நாங்களும் இருக்கிறம் கவலை வேண்டாம் சந்திப்போமா என இப்போது கேட்டிருக்கின்றார்கள் இருக்கிறம் சஞ்சிகை குழுவினர்.

வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி ஒரு நிறைந்த பூரணை நாளில் (பலர் வருவது இலகு எங்களை போன்றவரை தவிர) எல்லோரையும் சந்தித்து சிந்திக்க வைக்க முடிவு செய்து விட்டனர். கொழும்பு 7 இல அமைந்துள்ள அவர்களின் அலுவலகத்தில் இந்த இனிய ஒன்று கூடல் இடம்பெறப்போகின்றது. மாலை 3 மணி அளவில் ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சந்திப்பு பல நல்ல நண்பர்களையும் நல்ல அனுபவங்களையும் தந்திருக்கும் நிலையில் ஊடகம் சார்ந்தோர் பதிவர்கள் என எல்லோரும் சந்திக்கப்போகும் இந்த சந்திப்பும் இன்னும் பல தித்திப்புகளை வழங்கும் என்பதில் ஐயமில்லை. இருக்கிறம் உங்களை ஒன்று சேர்க்க நாங்கள் இருக்கிறோம் என சொல்லிவிட்டனர் இனி நாங்களும் வருவோம் என சொல்லவேண்டியது மட்டுமே எங்கள் கடமை. கொழும்பு மட்டுமல்ல இலங்கையின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்ல நாடு விட்டு நாடு சென்ற நம் நல்லுள்ளங்களும் வந்து கலந்து கலக்கலாம்.

சொல்ல காத்திருக்கும் வழிகள்....
மின் அஞ்சல் irukiram@gmail.com
தொலைபேசி 0113150836

கடந்தமுறை சந்திப்பில் எனக்கு கிடைத்த வேலை அறிவிப்ப்பு செய்வது இம்முறை எந்த வேலையும் இல்லாமல் வேடிக்கை பார்க்கப்போறன். சந்தோசமா, ஆனால் கடந்தமுறை பேச முடியாமல் போன அனானிகள் பற்றிய பேச்சு இம்முறை எழும் என எதிர்பார்க்கின்றேன். ஆனால் ஒரு சந்தோசம் இப்போது எனக்கு அனானிகள் தாக்குதல் குறைந்துள்ள நிலையில் மீண்டும் என்னை அடிக்க அண்ணன்கள் தயாராகலாம். இதுவரை முகம் தெரியாமல் தெரிந்தவர் என சொல்லி அடித்த கில்லிக்கும் சொல்லாமல் அடித்த திருப்பாச்சிக்கும் சொல்லியும் சொல்லாமலும் அடித்த சிவகாசிக்கும் என்னை நேரடியாக் அடிக்க வாய்ப்பு உண்டு வங்க அன்பால் ஒருவரை ஒருவர் அடிப்போம்.

சொல்லவேண்டியதை சொல்லிட்டன் இன்னொரு விஷயம் இருக்குங்க. இந்த பதிவு என் நூறாவது பதிவு. ஒருவாறு ஒரு நல்ல நிகழ்வுக்குரிய அழைப்பிதழாக என் நூறாவது பதிவு அமைந்தது சந்தோசமே. இந்த நேரத்தில் என் ஐம்பதாவது பதிவில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த நல உள்ளங்களை நினைவு கூர்ந்திருந்தேன் மீண்டும் ஒரு தடவை அவர்களை நினைவுகூர்வதொடு எல்லோருக்கும் என் நன்றிகள். அதேநேரம் எனக்கு புதிதாக கிடைத்த வாசகர்கள், நண்பர்கள், அறிவுரையாளர்கள் இன்னும் பல அனானிகள் எல்லோருக்கும் என் நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் அன்பான ஆதரவை எதிர்பார்க்கின்றேன்.

இந்த நூறாவது பதிவை சதத்துக்கு முன் இரட்டை சதம் அடித்த நான் என பதிவிட இருந்தேன் காரணம் பதிவுலகில் என் நூறாவது பதிவை தொட முன் மூஞ்சி புத்தகத்தில் இருநூறு நண்பர்களை சேர்த்துவிட்டேன். சும்மா ஒரு பில்ட் அப்புக்கு தான். ஆனால் இப்போ என்னை அடிக்க நினைப்பவர்களுக்கு என எழுதுகின்றேன். சில மனபாரங்கள் தீர்ந்ததும், சூடான பதிவுகளோடு சிந்திப்போம். அதுவரை எனக்கு உங்கள் வாக்குகளையும் பின்னூட்டங்களையும் வழங்கி வளப்படுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
Share:

Sunday, October 25, 2009

ஆதவன் என்ன பாதகனா?

ஆதவன் திரைப்படம் எப்படியாவது இம்முறை முதலில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள்ளும் சில நாட்களாக இருந்தது. காரணம் சூர்யாவின் அண்மைய அபார வளர்ச்சி. அதன்படி தீபாவளி அன்று காலை பார்க்கலாம் என திட்டம் தீட்டினேன். அதற்கு முன்னர் முதல் நாள் இரவு ஆதவனை பார்த்த நண்பர்களிடம் ஆதவனை பற்றி விசாரித்ததில் ஆதவன் பாதகனாவிட்டான் என நொந்துகொண்டேரே பலர். இதனால் நானும் மறுநாள் காலை அதுவும் ஒரு நரகாசூரன் அழிந்தநாளில் இன்னொரு நரகாசுரனை பார்க்கவேண்டுமா வேண்டாமே என முடிவெடுத்து தள்ளிப்போட்டேன். காரணம் படம் பார்த்த பதிவர்கள் குருவி, வில்லு திரைப்படங்களை விட ஆதவனை வறுத்தெடுத்தமை என்னை ஏனோ யோசிக்க வைத்தது.


அப்படி இப்படி என்று ஒருவாறு கடந்த வெள்ளிக்கிழமை மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒருதடவை பார்ப்போம் அப்படி என்னதான் இருக்கின்றதென்று என முடிவெடுத்து திரை அரங்கிற்கு போக என்னுடைய நண்பன் ஒருவனையும் அழைத்தேன். நன்றாக தூங்கி எழுந்து நான் திரை அரங்கு சென்று சேர எழுத்தோட்டத்தில் சூர்யாவின் பெயர் வந்து போய் விட்டது. ஏதோ சூர்யாவின் குழந்தை படத்தில் இருந்து அவரின் குழந்தை தியாவின் படம் வரை போட்டு தொடங்குகின்றார்கள் என பலர் சொன்னனர். ஆனால் நான் அதை தவற விட்டு விட்டேன்.

அதற்கு பிறகு சூர்யாவின் அறிமுக பாடல் காட்சி . எனக்கென்னவோ நடனத்தில் சூர்யா ஏற்கனவே தன படங்களில் ஆடிய அதே அசைவுகளை மீள செய்தது போல இருந்தது இருப்பினும் அதையும் ரசிக்கும் படி செய்திருந்தார். தொடர்ந்து கதை ஆரம்பிக்கும் போதே என்னடா இது நம் பதிவர்கள் சொன்னது போல இல்லை பரவாயில்லாமல் தானே இருக்கு என நினைத்தேன். ஆனால் அதுவெல்லாம் வடிவேலு திரையில் வரும் வரை தான். இதில் குறிப்பிடத்தக்க விடயம் திரை அரங்கில் பெரிதாக கூட்டமும் இல்லை சூர்யாவின் அறிமுக காட்சி உட்பட எந்த ஒரு காட்சியிலும் விசில் அடிக்கவோ கைதட்டவோ இல்லை. ஆனால் வடிவேலுவின் அத்தனை காட்சிகளுக்கும் விசில் பறந்தது.

நயன்தாரா குடும்பம் அது ஒரு குடும்பமா அல்லது ஒரு ஏரியாவா என சந்தேகமே வந்தது. இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் இருக்குமா என்பது என் சந்தேகம். முரளி சரியான தேர்வு. அச்சுஅசலாக பொருந்தி இருக்கின்றார். அடுத்து சரோஜாதேவி. பெரிதாக இவர் படத்தை நான் பார்த்ததில்லை. அதனால் சொல்லவும் தெரியவில்லை ஆனால் ஆதவனில் நன்றாக தான் செய்திருக்கின்றார். அவருக்கும் நயனுக்கும் இடையில் நடக்கும் சண்டை போன்ற அந்த தேக்கோ பாடல் எனக்கு வானொலியில் கேட்க பிடிக்கவில்லை. திரையில் ஏனோ பிடித்துப்போனது.

ரமேஷ்கண்ணா ஏன் வந்தார் என தெரியவில்லை. ஒருவேளை இயக்குனர் இப்படி ஒரு லூசுத்தனமான கதையை கொடுத்த உனக்கு லூசாகவே பாத்திரம் தருகின்றேன் என கொடுத்தாரா தெரியவில்லை. அனுகாசனையும் உப்புசப்பாக பாவித்திருக்கின்றார்கள். இவர்களை விட வேறு யாரும் என் நினைவில் வரவில்லை. எல்லோரும் சொன்னது போல நயனின் முகத்தை குளோசப்பில் பார்க்க பயமா இருந்தது. ஆனால் கொஞ்சம் தள்ளி முழுதாக காட்டும் போது எல்லாம்...... நல்லா தான் இருந்தது. ஆனால் என்ன நடிக்க தான் வாய்ப்பில்லை. அதே நேரம் பச்சை பெரிதாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.


அடுத்து சூர்யாவா? வடிவேலுவா? ஹீரோ என்ற கேள்விக்கு ஒருமித்த பதில் வடிவேலுதான் என்று. அதற்கு இன்னொரு சான்று அண்மையில் படத்தின் சில காட்சிகளை தூக்கும் போது வடிவேலுவின் எந்த காட்சியிலும் கை வைக்காமல் சூர்யாவின் பல காட்சிகளை கத்தரித்து விட்டது . அதேநேரம் முதல் பாதி முழுவதும் படத்தை தொய்யவிடாமல் கொடுத்திருப்பது வடிவேலுதான். நகைச்சுவையில் எப்போதுன் தான் ஹீரோ தான் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்? ஒவ்வொரு காட்சியிலும் சிரித்து சிரித்து எனக்கு புரைக்கேறியதுதான் மிச்சம். முன் பாதி ஏனோ எனக்கு பிடித்தது. இடைவேளையில் நண்பனிடம் சொன்னேன். எனக்கு படம் பிடித்திருக்கின்றதென.

ஆனால் பின்னாலே இப்படி ஒரு வெடிகுண்டு காத்திருக்கும் என தெரியாமல். இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பித்து ஓரிரு நிமிடங்களிலேயே அலுப்பு தட்ட ஆரம்பித்து விட்டது ஹீரோ வடிவேலுவை விட துணை நடிகர் சூர்யா அதிகம் திரையில் வந்தார். ஆனால் கதை நகரவே இல்லை. ஏற்கனவே பார்த்த காட்சிகளை மீண்டும் பார்க்கும் அலுப்பு. சாயாஜி சிண்டேயை எல்லோரும் புகழ்ந்தனர். எனக்கோ மனிதரை பார்க்கையில் அழகிய தமிழ் மகனில் அவர் செய்த அதே விளையாட்டை இங்கேயும் காட்டி உள்ளாரோ என தோன்றியது. அந்த டாக்டர் வில்லன் நன்றாக பொருந்தி இருக்கின்றார். ஆனால் நடிக்கவே இல்லை.

நிஜ ஹீரோ.

இரண்டாம் பாதியின் இழுவையில் இனிமை சேர்த்தது மூன்று பாடல்கள். மூன்றும் நல்ல பாடல்கள் ஆனால் அடுத்தடுத்து வந்து எரிச்சலை தந்தன. மூன்றும் முத்தாக இதயத்தை வருடியதை மறுக்கமுயாது. ஆனந்த பாபு இதுவரை நான் எழுதும் வரை நினைவு வரவில்லை. அதேபோல ஒரு பாத்திரம் தான் அவருக்கு படத்திலும். அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி அப்பப்பா என்ன ஒரு உலகத்தரம். அதை விபரிக்க வார்த்தை இல்லை. சண்டைக்காட்சிகள் அப்படியே குருவியில் விஜய் செய்தது. குருவியில் ஆவது விமானத்தில் இருந்து கொண்டே விஜய் கீழே விழுவர். இங்கோ கீழே இருந்த சூர்யா பறக்கும் விமானத்தில் ஏறிவிடுவார். பல இடங்களில் சூர்யா தன முந்தைய படங்களின் நடிப்பை அப்படியே கொடுத்துள்ளார்.

யாரப்பா சொன்னது பத்துவயது சிறுவனைக் சூர்யா நடித்துள்ளார் என்று ஏதோ ஒரு உடலுக்கு சூர்யாவின் முகம் அதுவும் பொருந்தவில்லை என்பது பத்துவயது பிள்ளைக்கே தெரியும். தயவு செய்து ஏமாற்றும் படத்திலும் இப்படியான ஏமாற்றும் காட்சிகளை வைத்தால் உங்களை ரசிகர்கள் ஏமாற்றி விடுவர். ஆனால் இப்படியான ஒரு முயற்ச்சிக்கு தொழில்நுட்ப கலைஞருக்கே பாராட்டுக்கள் சேரும் உங்களுக்கல சூர்யா என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கே.எஸ்.ஆர் மற்று ஹரிஷ் இந்த படத்தில் சொல்லிக்கொள்ளும் படி இல்லை நல்ல படங்களை தந்த இயக்குனரையும் பின்னணி இசையிலும் கலக்கிய ஹரிஷ் இருவரையும் இங்கே காணவில்லை. எனவே அவர்களை பற்றி நான் பேசவில்லை.


நடனம், மேனரிசம், நடிப்பு, வசன நடை என எதிலும் புதிய சூர்யா தெரியவில்லை. சூர்யா நீங்கள் விஜய் அஜித் போல ஒரு ஸ்டார் நடிகர் அல்ல. சாதாரண நடிகர். உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது வித்தியாசமான கதை ஓட்டம் உள்ள நடிப்புடன் கூடிய படங்களையே. அதேநேரம் நீங்கள் இதுவரை கொடுத்த ஹிட் எதுவும் சூர்யா என்னும் பெயருக்காக ஓடவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். வடிவேல் என்னும் பெயருக்காக எத்தனையோ படங்கள் ஓடும் நிலையில் இன்னும் உங்கள் பெயருக்காக எந்த படமும் ஓடவில்லை. உங்கள் படத்தின் கதை அந்த காதாபாத்திரமாக நீங்கள் மாறும் திறமை (இதுதான் இப்பொது உலை வைத்ததுள்ளது.) இந்த இரண்டுமே உங்கள் வெற்றியின் காரணம். அதேநேரம் கணிசமான ஜோவின் ரசிகர்களும் இப்போ உங்கள் ரசிகர்களாகி விட்டனர். புது முக இயக்குனர்களோ அல்லது கமர்சியல் படம் தரும் இயக்குனர்களோ உங்களை காப்பாற்ற முடியாது. உங்கள் பலமும் பலவீனமுமான கதாபாத்திரமாக வாழும் உங்கள் வழக்கமான படங்களையே கொடுங்கள். அதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கின்றார்கள். சிங்கம் அசிங்கமாகி உங்களை கீழே தள்ளி இன்னொரு ஆறாக்காமல் உடனடியாக நிங்கள் தை இட்டாலே ஒழிய உங்கள் தலை எழுத்தை மாற்ற முடியாமல் போய்விடும்.

இதுவே ஸ்டார் வலியூ உள்ள விஜய் அல்லது அஜித் ஏன் சிலவேளை விஷால் நடித்திருந்தால் கூட மெஹா ஹிட் ஆகி இருக்கும் இந்த திரைப்படம். படம் முடிந்து வெளியே வரும் போது எனக்கு படம் பிடித்திருந்தது. என்னதான் குறைகள் பல இருந்தாலும் ஒரு தடவை பார்க்க கூடிய திரைப்படமே இந்த ஆதவன்.

இவங்க கூட்டே தாங்க முடியல......


இனி இதுவேற இருக்கா.....?
Share:

Monday, October 19, 2009

நயன்தாராவை சங்கடப்படுத்திய சன் டி.வி



தீபாவளி நாள் எனக்கு இம்முறை ஏனோ தித்திக்கவில்லை. சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய பிளிம்பெயார் விருது வழங்கும் விழாவை பார்த்து விட்டு மதிய உணவும் முடித்தது விட்டு நல்லா தூங்கி எழுந்து வரும் போது என் மனதில் ஏனோ கோபம் வெறுப்பு. அப்படியே வந்திருந்து போட்டது சக்தி தொலைக்காட்சியை.

தீபாவளி நாள் தானே நம்ம தளபதி நடித்த அழகிய தமிழ் மகன் போய்க்கொண்டிருந்தது. அது முடிய ஐந்து மணிக்கு தானே சன் டி.வியின் பட்டிமண்டபம் வரும்(பட்டி மன்றம் என்பது சரியான தமிழ் பதம் அல்ல) அதற்க்கு முன் அரை மணித்தியாலம் இருக்கே என்ன நிகழ்ச்சி என பார்ப்போம் என பொறுத்திருந்த எனக்கு அந்த காத்திருப்பு வீண்போகவில்லை.


தமிழ்நாட்டின் மாதவி(கண்ணகி வேறுயார் நம்ம பிரபுதேவா மனைவி ரம்லத் தான்) திரையில் வந்தார். அடடா தமிழ் நாட்டுக்கே வரமட்டேன் என்ற புயல் இன்று அதுவும் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கப்போகின்றதே. நயனை தமிழ் நாட்டிலேயே கால் வைக்க விடமாட்டேன் என்றவர்கள் எங்கப்பா போய்ட்டார்கள் என்ற எண்ணத்துடன் பொண்ணு(ஆதவன் விமர்சனங்களை பார்க்கும் போது வயதான பொண்ணு என சொல்லணும் போல) என்னதான் சொல்லப்போகிறது பார்ப்போம் என காத்திருந்தேன்.


வழக்கம் போல ஒருவர் பரவாயில்லை ஓரளவு அழகா இருந்தார் அவர்தான் நயனை பேட்டி எடுக்கப்போகும் புண்ணியவான் நயன் மனம் திறந்து(எதை எதையோ எல்லாம் திறந்து காட்டியவர் இதை காட்டமாட்டாரா? ) பதிலளிக்கப்போகின்றார் என சொல்லியே ஆரம்பித்தார். பேட்டி ஆரம்பம் ஒரு சில நிமிடத்திலேயே சூடு பிடித்தது. பேட்டி எடுத்தவரின் குறிக்கோள் நயனின் செவ்விதழ் திறந்து சிம்பு, பிரபுதேவா பற்றி சொல்லவைப்பதே. (நமக்கும் என்ன சொல்லப்போகின்றார் என்ற ஆசைதான்.) அதற்க்கு அவர் ஆயுதமாக பாவித்தது காதலை.(அடப்பாவிங்களா சிம்புவோட காதல் எண்டால் ஏற்கலாம் பிரபுதேவாவோடும் என்பது தாங்கமுடியாது.) பெட்டியில் அடிக்கடி காதலை மையப்படுத்தியே மனிதர் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். பாடசாலையில் காதல்? இது கேள்வி நயனும் சளைக்காமல் நிறைய பசங்க லெட்டர் கொடுத்தாங்க நான் யாரையும் காதலிக்க என்றார்.


தொடர்ந்து விட்டாரா பேட்டி எடுத்தவர் அப்போ உங்க முதல் காதல்? என்றார் நயன் சொன்னார் அதுதான் உங்க எல்லோருக்கும் தெரியுமே ஊரறிந்த அந்த காதல் தான் என் வெளிப்படையாக சிரித்தது சிரித்தே சொல்லிவிட்டார். அத்தோடு விட்டிருக்கலாமே. எதுவுமே தெரியாத பச்சை பிள்ளை போல அப்பிடியா யாரை எங்கே காதலிச்சிங்க என கேள்விமேல் கேள்வி கேட்க நயன் சங்கடப்பட்டு போனார். சிரிப்பே அவர் பதிலாக வந்தது மட்டுமில்லாமல் இதை விட்டுவிடுங்கள் என எத்தனையோ முறை சொல்லியும் வேதாளம் முருங்கை மரக்த்டில் இருந்து இறங்கவில்லை. பார்த்துக்கொண்டு இருந்த எனக்கே அட என்ன மனிதனடா இவன் என்ற எண்ணம் வந்தது. என்னதான் நயன் செய்தது தவறாக இருந்தாலும் ஒரு பிரபல நடிகை அதுவும் பல நாடுகளில் ஒளிபரபரப்பாகும் சன்.டியில் தீபாவளி நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்ப்பார் அப்படி இருக்கையில் இப்படியான தர்மசங்கடமான கேள்வியை தவிர்த்திருக்கலாம்.


ஆனால் அடுத்து நடந்தது இதை விட கொடுமை. தன் பழைய தொழில் நினைவு வந்ததோ தெரியாது பேட்டி எடுத்தவர்க்கு நயனிடம் உங்க இடக்கையை காட்டுங்க ஜோதிடம் சொல்லப்போறேன் என்றார் தடுக்க முயன்றார் முடியல. (நானும் பயபுள்ளைக்கு நயனின் கையை பிடிக்க ஆசை போல என நினைக்க பய கைய தொடல.) இறுதியில் கையைப்பார்த்து ஜோதிட சிகாமணி நயனின் பூர்வீகத்தை சொல்லியவர் உங்களுக்கு தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர்தான் வாழ்க்கையில் பெரும்பகுதியை கொடுக்கப்போகின்றார் என அடுத்த ரூட்டை போட்டார்.


அப்படியே அவர் பார்வை கொஞ்சம் மேலே போய் நயன் கையில் இருந்த பச்சையில் நின்றது. எல்லோருக்கும் தெரிந்த பிரபு என்று நயன் கையில் உள்ள பச்சை விடயம் தெரியாத நம் அறிவு நிரம்பிய பேட்டி எடுத்தவர் அதை கிளறினார். நேரடியாகவே கேட்டார் நயன் உங்களுக்கு உண்மைக்கும் தெரியாத இந்த விடயம்தான் எல்லோருக்கும் தெரியுமே நீங்கள் வேண்டுமென கேட்கின்றீர்கள். வம்பில் (சிம்பு இல்லை) மாட்டப்பார்க்கிறீர்கள் என சிரித்து சொனாலும் நயன் மனதில் வாடா மவனே உனக்கு இருக்கெண்டு என சொல்லிரியிருப்பார்.(பார்த்த எனக்கே வெறுப்பும் கோபமும் கூடும் போது அவர்க்கு வராதா என்ன?) ஆனால் அவரோ விடுவதாக இல்லை. பொருத்தது பார்த்த நயன் இறுதியில் பொங்கி எழுந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நேரடியாக கேட்டு விடுங்கள் இப்படி அங்கெ சுற்றி இங்கே சுற்றி வரவேண்டாம் என சொன்னதும் பயல் கொஞ்சம் அடக்கிவாசிக்க ஆமா பிரபு என குத்தி இருக்கேன் எனக்கு பிடிச்சவர் பெயரை நான் குத்தி இருக்கேன் என நேரே சொல்லிவிட்டார். சாத்தித்து விட்டார் பேட்டி
எடுத்தவர். . பேட்டியும் நல்ல படியாக முடிந்தது.

ஒரு பொறுப்பான(?????) பலர் பார்க்கும் அதுவும் தீப திருநாள் அன்று பிரபல நடிகை ஒருவரை வேண்டுமென்றே இப்படி செய்ததோ என தோன்றுகின்றது. காரணம் பார்த்த்ட எனக்கே சங்கடமாக இருக்கும் போது சம்பந்தப்பட்ட நயனுக்கு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல எவ்வளவு சங்கடம் வந்திருக்கும். நான் நயன் புகழ் பாடுகின்றேன் என நினைக்கவேண்டாம். ச டி.வி செய்த இந்த நிகழ்ச்சி என்னை பொறுத்தவரை தப்பே. வேறு கேள்விகை கேட்டிருக்கலாம். அதை விட்டு விட்டு அசிங்கமான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பேட்டி எடுத்தா சன் இன்று வில்லனாக செய்தது தப்பென்றாலும் தைரியமாக சொன்ன நயன் நிஜ கதாநாயகி ஆகிவிட்டார்.

என்னிடம் அந்த பேட்டியின் வீடியோ இல்லை யாரும் நண்பர்களிடம் இருப்பின் அதை பகிருங்கள் பார்க்காதவர்களும் பார்த்து இன்பம் பெற.

பி.கு: ஏனோ தெரியல பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல மனது இன்னும் நேரத்தை கொடுக்கல. வரும் போது சொல்கின்றேன். நிறைய நண்பர்கள் நிறைய பதிவில் கேட்டவை காத்திருக்கு.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox