நம்ம சின்ன வயசில பாட்டி வடை சுட்ட கதையை பாட்டி சொல்லவும் அம்மா அக்கா சொல்லவும் கேட்டிருப்போம் இல்லை பாடசாலையிலாவது அறிந்திருப்போம். இந்தக்கதை இப்போது ஒரு சரித்திர படமாக வரப்போகின்றது. அண்மைக்காலமாக இளைய தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளிவரும் படங்களில் கதை இல்லை என்பது மிகப்பெரிய குற்றச் சாட்டு. ஒரே மாதிரிப்படங்களில் நடிக்கின்றார் என்று இன்னொரு வசைபாடல். அதை எல்லாம் விட ஒரு சரித்திரக் கதையில் நடிக்கவில்லையே என்று விஜய் ரசிகர்கள் எங்களுக்கும் ஏன் விஜய்க்கு கூட ஒரு கவலை இருக்கும். இதை எல்லாம் தீர்க்க விஜய் கையில் எடுத்திருக்கும் கதை தான் இந்த பாட்டி வடை சுட்ட கதை ரீமேக். முதலே சொல்லிவிட்டேன் இது ரீமேக் என எனவே கதையில் பல திருப்பங்கள் இருக்கும். அதேநேரம் விஜய் படங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் வருகின்றது இந்தப்படம். வழக்கமாய் விஜய் படம் கிளைமாக்ஸ் சொதப்பலாய் இருக்கும் என்பர். இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கிளைமாக்ஸ் இருக்கு.
சரி இந்தப்படம் பற்றிய என் கற்பனை எப்படி உருவானது என்று சொல்லவேண்டாமா. நேற்று மூஞ்சிப்புத்தகத்தில் என் சிறுவயது முதல் அறிந்திருந்தும் அண்மையில் நண்பியான ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்(தான் தான் இந்தக்கதையின் மூலம் என தன் பெயரை குறிப்பிட வேண்டாம் என சொன்னார். எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்குத்தான்.) அப்போதுதான் ஏதாவது சொல்லு என கேட்டபோது பாட்டி வடை சுட்ட கதை ரீமேக் சொல்றன் என சொன்னார். அவர் சொன்ன கதையில் இன்னும் சில மெருகேற்றலோடு இங்கே தரப்போகின்றேன். படத்தை இயக்குவது வெறு யாரும் இல்லை. சாட்சாத் எஸ்.ஏ.சந்திரசேகர் ஐயா தான்.(மனசுக்குள்ள நல்ல கெட்ட வார்த்தைகள் வரித்து இந்த பாவிப்பயலை திட்ட.)
அப்பிடியே ஓபன் பண்ணினால் பிரான்ஸ்(எல்லாம் அஜித்தின் பில்லா பாதிப்பு தான்.) அதிகாலை வேளை எல்லோரும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வீதியில் பல வாகனங்கள் நெரிசலோடு இருக்க அப்பிடியே ஒரு சோடி காலுக்கு கமெரா சூம் போகிறது. அந்தக் கால்கள் ஓடிக்கொண்டிருக்க அப்பிடியே கமராவை மேலே கொண்டுவந்து முகத்தைக் காட்டினால் ஒரு சின்ன சிரிப்போடு அட நம்ம இளைய தளபதி.(எப்பிடி அறிமுகம் இதுவரை நீங்கள் எந்தப்படத்திலும் இதை பார்க்கமுடியாது.) ஓடிக்கொண்டிருக்கும் விஜயை ஒரு நபர் மறிக்கிறார் அவர் தான் இளவரசு.
இளவரசு: என்னப்பா ஈசா எங்கே இப்பிடி ஓடிக்கொண்டிருக்காய்?
விஜய்: என்ன சொன்னாய்? உலகத்திலேயே என்னை பாத்து இப்பிடி ஒரு கேள்வி கேட்கிறது நீயாய் தான் இருக்கும். ஓடிறதை பற்றி உனக்கு என்ன தெரியும். அதுவும் யாரை பாத்து ஓடிறதை பற்றி கேட்கின்றாய். நான் ரோட்டில ஓடிறது. என்னை பார்க்கும் தயாரிப்பாளர்கள் ஓடறது. என் படம் தியேட்டரை விட்டு ஓடிறது படத்தை பார்க்க வாரவங்க "தல"தெறிக்க ஓடிறது.(அப்பாட ஒரு மாதிரி தலைக்கு பன்ச் வைச்சாச்சு.) என்று ஆள் ஏரியாவிலும் ஓடவக்கிரவண்டா நான்.
இளவரசு: (மனசுக்குள்) பல்லு விளக்காமலே பன்ச் டயலாக் சொல்றானே. இவன்கிட இருந்து தப்பனும் என எண்ணிக்கொண்டு "சரிப்பா நீ போப்பா"
அப்படியே விஜய் ஓடிக்கொண்டிருக்கின்றார். உடனே பாட்டு வருது.......
இது .......(இதில் ஒரு சொல் வரும் இப்போ சொன்னா சஸ்பென்ஸ் போயிடும்) தேடிவந்த புழுகன் பெத்த பிள்ளை
ஓட்டம் என்ற ஒன்றை இவன் விட்டு வைத்ததில்லை.
கொடுப்பது தலைவலி இவன்பெயர் தளபதி என்றும் மொக்கை நாயகன்
இவனே எங்கள் வாழ்வில் இனிமேல் பிடித்த சனியன்.
பாடல் முடிய விஜய் அப்பிடியே ஒரு மிகப்பெரிய கட்டடத்துக்கு முன்னுக்கு நின்று அங்கேயும் இங்கேயும் பார்க்கிறார். வாசல் திறந்திருந்தும் உள்ளே போகல. அப்பிடியே வலது புறமாய் போய் ஒரு மதில மேல் ஏறி ஜம்ப் பண்ணி அந்தக்கட்டடத்துக்குள் போறார்(பிரான்சிலும் இப்பிடியா என கேட்கப்படாது இது விஜய் படம் இயக்குவது மிகப்பெரிய இயக்குனர் திருவாளர் எஸ்.ஏ. சந்திரசேகர் என்பதை மறக்கப்படாது.) அப்போ தான் எங்களுக்கு தெரியிது அது ஒரு சூப்பர் மாக்கட் என்று. அப்பிடியே அதிலே நிற்கும் தொழிலாளர் ஒருவருக்கு வணக்கம்னா என்ற போட்டிட்டு ஒரு இடத்தை நோக்கி போறார். அங்கே யாரையோ தேடிறார். அப்பிடியே தேடிக் கொண்டிருக்கும் போது வடிவேல் வாறார்.
வடிவேல்: என்னப்பா ஈசா வந்திட்டியா?
விஜய்:வாப்பா ரெயின் கோட்(அம்பிரல்லா என்று பெயர் வைப்பான்களாம் நாங்கள் ரெயின் கோட் என்று வைக்கக் கூடாதா.) எங்கேடா நம்ம பாட்டியை காணல.
வடிவேல்:ஆமா எல்லே. எங்கே போயட்டிது இந்த பாட்டி. ஒருவேளை ஒரேடியாய் போட்டிதோ? (இந்த இடத்தில் நீங்கள் சிரிக்கணும் இப்போ இதுதான் வடிவேல் ஜோக்.)
விஜய்: உனக்கு எப்ப பார்த்தாலும் இப்பிடித்தான்.....எங்கே போய்ட்டிது..............நேரம் வேற ஆச்சே....
வடிவேல்: ஏப்பா அங்கே பார் பாட்டி வருது. அடேய் பாட்டியோட இன்னுமொரு பாட்டி வருதுப்பா பார்.
விஜய்: அடேய் பாட்டியோட பாட்டி தானேடா வரும்.....பின்ன என்ன குமாரனா வருவான்......
வடிவேல்: இல்லைப்பா.........பாட்டியோட பூட்டி இதுவேற பாட்டி வருதடா?
விஜய் அப்பிடியே திரும்பி பார்க்கிறார். அங்கே தமன்னா அறிமுகமாகின்றார். அழகாய் காட்டிறாங்க.(முதல் முறையாய் சொல்றன் தமன்னா அழகென்று) விஜய் வாய் மூடாமல் கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க.
வடிவேல்: ஏம்பா ஏம்பா ஈசா .......ஈசா.....ஈசு அப்பிடியெல்லாம் பார்க்கப்படாது. நாங்களும் பார்க்கணும்.
விஜய் இதை கவனிக்காமல் வடிவேலுக்கு கையாலே ஒரு அடி விட்டிடு அப்பிடியே பாட்டியை நோக்கி போறார். அந்த நேரம் பார்த்து தமன்னாவும் விஜயை பார்க்க.
இந்த இடத்தில் ஒரு பாட்டு.
சிறகடிக்கும் நிலவு என்ற பாட்டு போல பாடவும்
ஆண்: பாட்டியோட பேத்தி பார்த்துவிட்டேன் உன்னை
பெண்: பார்த்தவுடன் எனக்கு பிடித்துவிட்டு சனியன்
ஆண்: அப்படி நீ சொன்னால் வலிக்குமடி எனக்கு
பெண்: அவ்வே அவே அவ்வே நான் சிக்க மாட்டேன்
இப்படி ஆரம்பிச்சு ஒரு மாதிரி பாட்டு முடிகிறது.
அப்பிடியே இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து முடித்த பின்.
விஜய்: என்ன பாட்டி இண்டைக்கு லேட்.
பாட்டி: ஆமா ஈசா இண்டைக்கு என் பேத்தி பிறந்தநாள் அதுதான் கோவிலுக்கு போட்டு வாறம்.
விஜய்: (தமன்னாவை பாத்து) என்னது இண்டைக்கு உங்களுக்கு பிறந்தநாளா? (தமன்னா ஆம் என்பது போல தலை ஆட்ட) விஷ் யூ எ ஹாப்பி பெர்த் டே
தமன்னா: தாங்க்ஸ்.
விஜய்: என்ன பாட்டி நீங்க இப்பிடி ஒரு அழகான பேத்தி இருக்கிறதை சொல்லாமல் விட்டின்களே. (என்று சொல்லிக்கொண்டிருக்கவே பாட்டி மெதுவாய் வழக்கமாய் தான் பீசா வைத்து விற்கும் இடத்துக்கு போக விஜயும் தமன்னாவும் ஒருவரை ஒருவர் மீண்டும் பாத்துக் கொள்கின்றனர்.)
என்னது பாட்டி வடை சுட்ட கதையில் பீசா என்று கேட்கப்படாது. இது ரீமேக் எனவே அங்கே வடை இங்கே பீசா. எப்பிடி நம்ம யோசனை.
இப்பிடியே ஒருவரை ஒருவர் பாத்துக்கொண்டிருக்க. அங்கே வந்த திருடன் ஒருவன் பாட்டியின் பேர்ஸ்சை எடுத்துக் கொண்டு ஓட விஜய் அவனை திரத்திறார். அவன் மாடிப்படியால் ஏறி ஓட விஜய் கீழே இருந்து அப்பிடியே ஒரு ஜம்ப் பண்ணி அடுத்த தளத்துக்கு சென்று அந்த திருடனோட சண்டை போடிறார்.
விஜய்: நானே ஒரு கதை திருடன். எனக்கு முன்னாலேயே திருடிரியா என்று பன்ச் பேசி அவனை அடிக்க அவனோ பையைக் கொடுத்திட்டு ஓடிறான்.
பையை அப்பிடியே ஒரு லுக விட்டு சுற்றும் முற்றும் பார்க்க அங்கே இருக்கும் வெள்ளைக் காரன் கூட தன் வேலையை விட்டிட்டு விஜயை சுத்தி நின்று கைதட்டிறான்.(விஜய் மாக்கட் உலக லெவலில் என சொல்லலாம் எல்லா.) கை தட்டினால் பரவாயில்லை.
பாட்டு தொடங்கிறது ஆரம்பிக்கிறது பிரான்சுக்காரன் தான்.....
திருடன் கதை திருடன் திருடனை வென்ற திருடன்
உலக லெவலில் வந்தும் கதையை திருடுவான்
திட்டம் போட்டு அடிப்பான் திருடித் திருடி ஜெயிப்பான்
இவனைப் போல திருடன் இனிமேல் யார் வருவான்
பாட்டு முடிய முதலில் பாட்டியின் பேர்ஸ் அடித்த திருடன் மீண்டும் வந்து விஜயின் பேர்ஸ்சை அடித்துக் கொண்டு ஓட. இந்த முறை ஹீரோ பாத்து சிரிச்சிட்டு நிற்கிறார்.(ஏன் என்றெல்லாம் கேட்கப்படாது இது விஜய் படம் நான் தொடர்ந்து சீன கொண்டு போகணும்) இதை பாத்தா தமன்னா விஜயிடம் வாறார்.
இதில் இடை வேளை
தமன்னா: அவன் உங்க பேர்ஸ்சை அடிச்சிட்டு போறான். பாத்திட்டு நிக்கிறியள்.
விஜய்: அட விடுங்க அவனும் என்னை போல தான் எத்தனை தோல்வி வந்தாலும் தன்னை மாத்திக் கொள்ளல. முதலில என்னிடம் பிடிபட்டு தன் தொழிலில் தோற்றாலும் என்னைப்போல அதை காட்டிக் கொள்ளாமல் அசட்டை செய்யாமல் அதே போல என் பேர்ஸ் அடிச்சேன் எனக்கு அது பிடிச்சிருந்தது அதுதான் விட்டிட்டன்.
தமன்னா: யூ ஆர் சோ ஸ்வீட். உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. இப்பிடி பட்ட ஒருவர் தான் எனக்கு வேணும்......ஐ.லவ்.யூ
வடிவேல்: இதென்ன சின்னப் பிள்ளை தனமாய் இஉக்கு. ஒரு ஹான்ட்சம்மான அழகான அறிவான ஒருத்தன் இங்கே இருக்கேக்கே இப்பிடி நான்சன்சா பேசப்படாது. வலிக்கிறது.
விஜய்:யாரடா அது?
வடிவேல்: கண்டிப்பாய் நீ இல்லை. உன்னை தான் எல்லா பதிவர்களும் போட்டு தாளிக்கிரான்களே. இன்னுமா நீ உன்னையை நம்பிறாய்.
தமன்னா: அப்போ யார் அது?
வடிவேல்: என்ன கேள்வி இது அவரை தெரியாதா.
தமன்னா: இல்லையே.
வடிவேல்: அது நான் தான்.....
தமன்னா: ஹீ ஹீ ஹீ. என்னது அது நீயா. எனக்கு அப்பிடிப்பட்டவரே வேணாம். இப்போ உன்னையை விட இவர்தான் அதிகம் மொக்கை போடிறார். இவரை பற்றி தான் அதிகம் பேசிறாங்க எனக்கு இவரே. போதும்.
தமன்னா: வேணாம் செல்லம வலிக்கிது.
விஜய்:போதும் போதும் நிறுத்து அடுத்த பாட்டு ஆடனும். எவ்வளவு நேரம் தான். நடிக்கிரமாதிரி நடிக்கிறது.
தமன்னா:அதுதானே இவ்வளவு நேரமாய் ஹீரோயின் நான் வரும் சீன் வருதே. வரக்கூடாதே. விஜய் படம் எண்டால ஹீரோயின் வந்தவுடன் பாட்டு வரும் என்றெல்லா எல்லோரும் காத்திருப்பாங்க. நானும் உடுப்பை அவுத்துப்போட்டிட்டு உள்ளுக்குள் போடும் உடுப்பு சைசில் துணியை சுத்திட்டு ஆடனும். இல்லாட்டில் இது விஜய் படம் இல்லையோ என்று சந்தேகம் வந்திடும்.
உடனே ஒரு பாட்டு வருது. அப்பிடியே ஒரு பிளைட் பிடிச்சு லண்டன் போய் ஆடிறாங்க
தஞ்சாவூர் ஜில்லாக்காரி பாடல் போல படிக்கணும்
ஆண்: பீசாவை விற்க வந்த பிசாசே நைசா வாயேண்டி
பெண்: போக்கிரி பயலே எந்தன் டவுசரைக் கலட்டி போடாதே....
ஆண்: பொம்மாயி பொம்மாயி இது ரீமேக் ரீமேக் மறக்காதே பொம்மாயி
பெண்: சூ மந்திர காளி இவன்கிட்ட மாட்டிக்கிட்டா நான் காலி
என்று பாட்டு ஆரம்பித்து முடிகின்றது.
இந்த நேரம் பாத்து விஜய்க்கு ஒரு தொலை பேசி அழைப்பு வருகிறது. அதற்கு விஜய் சொல்றார் இன்னும் ஐந்சே நிமிசத்தில அங்கே இருப்பேன்.. ஆமா கையோட கொண்டுவாறேன்......
உடனே விஜய் சுத்தும் முத்தும் பார்க்கிறார். தமன்னா வந்திருப்பதால் தமன்னாவின் பாட்டி கொண்டுவந்த பீசாவை சுட்டுக்(திருடிக்) கொண்டு தமன்னாவையும் ஒரு கையால் பிடித்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கின்றார்.(இதை தமன்னா கூட கவனிக்கல.) இதை பார்த்த அந்த பாட்டி கத்த முதல் வாசலுக்கு வரும் விஜயையும் தமன்னாவையும் அன்று புதிதாய் வேலைக்கு சேர்ந்த காவலாளி பிரகாஷ்ராஜ் மறிக்கிறார்.
பிரகாஷ்ராஜ்: நில்லுடா செல்லம். நில்லு அதெப்பிடி நீ ஓடுவாய். நீ ஒரு தங்க கட்டியை எடுத்திட்டு போ அந்த பாட்டி சம்பாதிச்சிடும். ஆனால் நீ அந்த கிழவி சாப்பிட்டு வைச்ச மிச்ச பீசாவையும் ஒரு சப்பை பிகரையும் கூட்டி ஓடிரியே. இது தாங்குமா செல்லம்.
விஜய்: இதோ பார் உனக்கும் எனக்கும் பிரச்சனை இல்லை. எவனுக்கும் எனக்கும் பிரச்சனை நடுவில நீ வந்து கத்தாத. இந்த சப்பை பிகரையும் சாப்பிட்டு போட்ட பீசாவையும் கொண்டு போறதுக்கா கத்திறாய்.
பிரகாஷ்ராஜ்: பின்னே என்னடா செல்லம். இதை மாதிரி ஒரு சப்பை பிகரை எங்கேடா போய் அந்த பாட்டி தேடும். எல்லோரும் அழகாய் எல்லா இருக்காளுகள். மவனே நான் அடிச்சன் நீ பீஸ் ஆகிடுவாய்.
விஜய்: நீ அடிச்சா பீஸ் நான் அடிச்சா(திருடினா) பீசா.
அப்பிடியே இரண்டு பேருக்கும் நடுவில ஒரு சண்டை. சண்டையில் விஜய் கடுமையாய் அடிவாங்கி நடக்க முடியாமல் போக அப்பிடியே சுருண்டு விழுகின்றார். முதல் முறையாக விஜய் படத்தில் வில்லன் ஜெயிக்கபோறார் என்று நீக்கள் கனவெல்லாம் காணப்படாது.
தமன்னா: (பிரகாஷ்ராஜிடம்) நீ வேணுமானால் அவரை அடிச்சு விழுத்தலாம். முடிஞ்சா அவரோட பாட்டை பாத்தா பின்னும் நீ உயிரோட இருந்தால் அவனென்ன நானே அவனோட போக மாட்டேன். இந்த பீசாவையும் உனக்கு ஊட்டி விடுறன். ஓகே வா?
பிரகாஷ்ராஜ்: எந்திரிச்சு பாடி ஆட சொல்லடி.
இப்போதான் கடைசி பாட்டு.
எழும்பிற விஜய்க்கு சும்மா அட்டகாசமாய் கோட் சூட எல்லாம் போட போட்டிருந்த டிறேசை குறைச்சுக்கொண்டு தமன்னா மறு பக்கம் நடந்து வந்து விஜய்க்கு ஒரு முத்தம் கொடுக்க.
நான் நடந்தால் அதிரடி பாடல் ஸ்டைலில் படிக்கணும் ஓகே.
ஆண்: நான் ஆடினால் கதகளி என் பேச்சு தலைவலி என்னை துரத்தும் சுண்டெலி நீ
பெண்: நீ நடிச்சால் வெறுப்படா நாளை சி.எம் நீயாடா அடிக்காதே என் கிட்ட ஜோக்கடா
ஆண்: நான் யார் அடுத்த பி.எம்மு
பெண்: நீ யார் இங்கே முழு லூசு
ஆண்: வேண்டாம் பேச்சு வெட்டிப் பேச்சு அவன் கதை இப்போ காலி ஆகிப்போச்சு.
இறுதிப் பாட்டும் முடிஞ்சிது. பாட்டு முடிஞ்சு பார்த்தால். பிரகாஷ்ராஜ் குற்றுயிரும் குலைஉயிருமாக கிடக்க. இதை விஜய் ஒரு மாதிரி பார்க்க.
சாகப்போற அந்த நேரத்தில் கூட பிரகாஷ்ராஜ் வசனம் பேசிறார்.
பிரகாஷ்ராஜ்: என்னடா அப்பிடி பார்க்கிறாய். மவனே இது என்னோட போகட்டும். இனிமேலும் பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி யாரையும் இப்பிடி கொல்லாதே. நல்ல காலம் தமன்னா அப்பிடி அரை குறையாய் ஆடினதால் கொஞ்சம் உயிர் இருக்கு. மவனே இங்கே இருந்து ஓடிடு.
விஜய் தமன்னாவை கூட்டிக்கொண்டு போக முற்பட தமன்னா விஜயை மறிக்கிறார்.
தமன்னா: ஒரு சப்பிய பீசாவையும் சப்பை பிகர் என்னையும் கூட்டிக்கொண்டு நீ ஓட என்ன காரணம் சொல்.
விஜய் உடனே தன் பிளாஷ் பக் சொல்ல ஆரம்பிக்கின்றார்.
விஜய்: நான் சின்ன வயசை இருக்கும் போதே என் பாட்டி இறந்திட்டா. இறக்கும் போது எனக்கு அவ சொன்ன ஒரு விஷயம். தனக்கு தன் திருமணத்தன்று சீதனமாய் வடைகள் பல செய்து கொடுத்தாங்களாம். உங்கம்மா ஓடிப்போய் கல்யாணம் செய்ததால அவளுக்கு என்னால இதை சீதனமாய் கொடுக்க முடியல. ஆனால் உன் தங்கச்சிக்கு கல்யாணம் செய்யும் போது நீ கட்டாயம் அவளுக்கு சீதனமாய் எங்கேயாவது இதை தேடிக்கொண்டுவந்து கொடுக்கணும் என்று சொன்னா. நானோ ஒரு வெட்டிப்பயல் வேலையும் இல்லை. அரசியலுக்கு வா என்று அப்பா சொல்லி சொல்லியே என் வாழ்க்கையை நாசமாக்கிறார். வேலை இல்லை அதை விட அரசியல் என்ற சாக்கடை என்று நான் இருக்கிறதால ஒருத்தனும் பொண்ணு குடுக்கிறானும் இல்லை.எவளும் பாக்கிறாளும் இல்லை. அப்பத்தான் இங்கே பாட்டியை ஏமாத்தி கொஞ்ச பீசா வாங்கிட்டு போகலாம் என வந்தான். பீசா வாங்க காரணம் இது ரீமேக் படம். வந்த இடத்தில நீ மடங்கிட்டாய். இந்த சப்பை பிகர் கூட கிடைக்காட்டில் இனி நம்ம வாழ்க்கை அப்படியே போய்டும் என்று உன்னையும் கூட்டிட்டு வந்திட்டன்.
தமன்னா: நீங்க தங்கச்சி மேல வச்சிருக்கிற பாசம் எனக்கு ரொம்ப புல்லரிக்கிது. ஐ.லவ்.யூ சோ மச்.......
அப்படியே சுபம்......
தங்கைக்கு கொடுத்தாரா இல்லையா என்று கேட்கப்படாது......நேரம் முடிஞ்சிது சோ படம் முடிஞ்சிது....அதுவா முக்கியம் நாலு பைட் ஐஞ்சு பாட்டு ஒரு துள்ளல் இரண்டு பறப்பு முடிஞ்சிது நேரமும் போய்ட்டு சரிதானே.