உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Sunday, February 15, 2015

வெட்டிப்பேச்சை விடுத்து மக்களுக்காக வெள்ளவத்தையில் ஒன்று கூடிய இளைஞர் யுவதிகள்

இளைஞர் யுவதிகள் என்பவர்கள் எப்போதும் வெட்டிப்பேச்சு பேசுபவர்கள் இணையத்தில் நேரத்தை வீணாக்குபவர்கள் ஆபாசத்தை தேடுபவர்கள் என்பது பலரால் குறை சொல்லப்பட்டு கொண்டே இருக்கும் விடயம். ஆனால் அதே இளைஞர் யுவதிகள் நினைத்தால் எப்படி ஒரு மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை இன்று வெள்ளவத்தையில் சாதித்து காட்டி இருக்கின்றார்கள்.



சுன்னாகம் எண்ணெய் கழிவு எமது சந்ததியை அடியோடு அழிக்கும் என்பது பலருக்கு இன்னமும் புலப்படாமல் இருப்பது என்னவோ கவலையளிக்கின்றது. ஒரு சிறு பிரதேசத்தில் ஆரம்பித்த நிலத்தடி நீர் மாசு இன்று 10 மைல்களுக்கு மேல் பரவி இருப்பது அதன் ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது. இதன் பாதிப்பு கடந்த நவம்பரில் எனக்கு தெரியவந்த போது ஊடகனாக என் பங்குக்கு விழிப்புணர்வு மற்றும் அது தொடர்பான உண்மை நிலைப்பாடுகளை வெளிக்கொண்டு வர இது தொடர்பான ஆரம்பகட்ட செயற்பாட்டாளர்கள் உதவி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் மைந்தன் சிவாவின் முகப்புத்தகத்தில் வெள்ளவைத்தையில் ஒரு விழிப்புணர்வு ஒன்று கூடல் என்று பார்த்த போது இன்று நடந்த அளவுக்கு பலரது பங்களிப்பு இருக்கும் என எண்ணவில்லை. 



எமக்கும் பொறுப்பு இருக்கின்றது என்ற எண்ணத்தில் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டிய ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள். இனி வரும் நாட்களில் இன்னும் பல ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்ய இது ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.



இன்று இடம்பெற்ற ஒன்று கூடல் தொடர்பான ஊடக அறிக்கை:

கரம் கோர்த்த உறவுகளுக்கு நன்றி!
யாழ் குடாநாட்டின் சுன்னாகம் உள்ளிட்ட வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்கழிவுகள் கலப்பதால் மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினையை முன்னிறுத்தி, இன்று ஞாயிற்றுக்கிழமை (பெப் 15, 2015) காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரையில் கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற ‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ கவனயீர்ப்பு நிகழ்வு நூற்றுக்கணக்கான மக்களின் பங்களிப்போடு அமைதியான முறையில் நிறைவு பெற்றது.
சமூக ஊடகத் தளத்தில் தொடர்ச்சியாக இயங்கும் இளைஞர்கள் சிலர் இணைந்து ‘சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள்’ என்கிற பெயரில் இந்த கவனயீர்ப்பு நிகழ்வுக்கான அழைப்பை விடுத்திருந்தோம். இந்த அழைப்பு விடுக்கப்பட்டதும் சமூக ஊடகத் தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேவேளை, விமர்சனங்களையும், பல்வேறு விதமான கேள்விகளையும் எதிர்கொள்ள நேரிட்டது.
நிகழ்வுக்கான அழைப்பை விடுத்தபின், அதனை செயற்பாட்டுத் தளத்தில் நகர்த்த முனைந்த போது பல பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பின்னர், வெள்ளவத்தையில் காலி வீதியின் ஒரு பக்கத்தில் அமைதியான முறையில் எமது உரிமைக்காக நாம் ஒன்றிணைந்து கவனயீர்ப்பை செய்ய முடிந்துள்ளது.
இந்த கவனயீர்ப்பின் மூலம்,
1.யாழ் குடாநாட்டின் சுன்னாகம் உள்ளிட்ட வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்கழிவுகள் கலப்பதால் மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் பரந்துபட்ட அளவிலான கருத்தாடல்களையும் கவனத்தினையும் பெற வைத்தல்.
2.பிரதான ஊடகங்களில் பேசப்படாது பெருமளவு மறைக்கப்பட்டு வந்த யாழ் குடிநீர் பிரச்சினையை யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் எடுத்துச் சென்று மக்களிடம் குறிப்பிட்டளவு விழிப்புணர்வை ஏற்படுத்த முனைதல்.
3.மத்திய, மாகாண அரசாங்கங்கள் யாழ் குடிநீர் பிரச்சினைக்கு வெளிப்படையாகவும், தெளிவாகவும், அதேவேளை விரைவாகவும் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்துதல்.
4.நிலத்தடி நீரைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தி, எமது அடுத்த தலைமுறைக்கு நீரை வழங்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
5.எமது அடிப்படை உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியிலான கவனயீர்ப்பு நிகழ்வுகளை எதிர்காலத்திலும் முன்னெடுக்க முடியும் என்பதை உணர்த்துதல்.
6.சமூக ஊடகத் தளங்களில் இயங்கும் இளைஞர்களுக்கு சமூகப் பொறுப்புணர்வும், கடமையும் இருக்கின்றது என்பதை வலியுறுத்தல்.- உள்ளிட்ட விடயங்களை வெளிக்கொணர்வது ஆகும்.
அத்தோடு, இன்று நிகழ்த்தப்பட்ட ‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ கவனயீர்ப்பு நிகழ்வு சமூக பொறுப்புள்ள விடயங்களுக்காக இளைஞர்கள் எந்தவித பாகுபாடுமின்றி இணைவார்கள் என்பதை இன்னொரு வடிவில் நிரூபித்தும் இருக்கிறது. இதனையே, நாம் வெற்றியாகவும் கொள்கின்றோம்.
நிகழ்வில் நேரடியாக பங்களித்தவர்கள், வெளியிலிருந்து ஆதரவு அளித்தோர், சமூகத் தளங்களில் தொடர்ந்தும் கருத்தாடல்களை நிகழ்த்தி ஒத்துழைத்தோர், ஊடகங்கள், தங்களை வெளிக்காட்டாவிட்டாலும் தொடர்ச்சியாக உதவியோர் என்று பல தரப்பினருக்கும் இந்த வெற்றியில் பங்கிருக்கின்றது. அது, ‘எமக்கான உரிமைக்காக நாமே இணைந்தோம்’ என்கிற ரீதியில் பொறுப்புணர்வாகின்றது. ஆனாலும், ஏற்பாட்டாளர்கள் என்கிற ரீதியில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!
- சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள்
பெப்ரவரி 15, 2015
வெள்ளவத்தை, கொழும்பு











































Share:

Wednesday, March 19, 2014

இயல் விழா 2014



இளம் கலை-இலக்கிய ஆர்வலர்களின் ஒன்றிணைவில் கடந்த வருட நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டு, வவுனியா மாவட்டத்தில் கலை இலக்கிய ரீதியிலான தொடர்ச்சியான பணிகளை சிறப்பாக செய்து வருகின்ற, தமிழ் மாமன்றம், தனது முதலாவது பொது விழாவான 'இயல் விழா 2014' இனை இம்மாதம்(மார்ச் மாதம்) 30ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, வவுனியா கலாசார மண்டபத்தில் நடாத்தவுள்ளது. இவ் இயல் விழாவில், உலக அளவில் பிரசித்தி பெற்ற சிறந்த பேச்சாளரும், அகில இலங்கைக் கம்பன் கழகத்தினுடைய ஸ்தாபகருமான, கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். காலை 9 மணி தொடக்கம் 12.30 மணி வரை காலை அமர்வும், மாலை 4.00 மணி தொடக்கம் 8.30 மணி வரை மாலை அமர்வும் இடம்பெறவுள்ளது. காலை அமர்விலே பாடசாலை மாணவர்கள் பங்கேற்று விவாதம் புரியும் விவாத அரங்கு "பாரதி மகாகவியாய் நின்று நிலைப்பதற்குப் பெரிதும் காரணமாவது , தேச விடுதலைப்பாடல்களே !, தெய்வ வணக்கப் பாடல்களே!, தமிழ் வாழ்த்துப் பாடல்களே !, பெண் விடுதலைப்பாடல்களே !, சாதி எதிர்ப்புப் பாடல்களே !, சுயசரிதைப் பாடல்களே!" என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது. இவ்விவாத அரங்கிற்குத் தமிழாசிரியர் என். கே. கஜரூபன் அவர்கள் நடுவாண்மை புரியவுள்ளார். காலை அமர்விலே இரண்டாவது நிகழ்வாகத் தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் களம் காணும் சுழலும் சொற்போர் இடம்பெறவுள்ளது. "வள்ளுவன் கூறும் பெண்மை ஆற்றலில் பெரிதும் சிறந்தவள், கண்ணகியே !, சீதையே !, பாஞ்சாலியே !, தாரையே !, புனிதவதியே !, கைகேயியே !" என்ற தலைப்பில் அமைந்த சுழலும் சொற்போரினை, கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் நடுவுநிலைமை புரிந்து சிறப்பிக்கவுள்ளனர். மாலை அமர்வில் முதல் நிகழ்வாக கவிஞர் ஐங்கரன் அவர்கள் தலைமையில் தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கவியரங்கு இடம்பெறவுள்ளது. "நால்வர் நற்றமிழ்" என்ற பொதுத் தலைப்பிலே இடம்பெறும் இக்கவியரங்கில் "நாமார்க்கும் குடியல்லோம் - அப்பர்", "மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சம்பந்தர்", "ஆளிலை எம்பெருமான் - சுந்தரர்", "மூர்க்கரொடும் முயல்வேனை - மாணிக்கவாசகர்" என்ற நான்கு தலைப்புக்களில் கவி பாடவுள்ளனர். மாலை அமர்விலே இரண்டாவது நிகழ்வாகவும் விழாவின் சிறப்பு நிகழ்வாகவும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் தலைமையில், நாட்டின் பல பாகங்களில் இருந்து கலந்து கொள்ளும் சிறப்புப் பேச்சாளர்களும் தமிழ் மாமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் பட்டி மன்றம் இடம் பெறவுள்ளது. இப்பட்டி மன்றம், "செயற்கரும் செய்கை செய்த தீரருள் முன்னிற்பவர், சிறுத்தொண்டரே !, நீலகண்டரே !, கண்ணப்பரே !" என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது. குறைந்து செல்லும் தமிழார்வத்ததை, மீண்டும் துலங்க வைத்து, வவுனியா மாவட்டத்தினுடைய, கலை இலக்கிய ரசனையும், இளம் சமுதாயத்தினுடைய கலை இலக்கிய ஆர்வத்தையும் பெரிதும் உயர்த்திச் செல்ல, இவ் விழா கால்கோளாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
Share:

Tuesday, June 25, 2013

ICC Champion கிண்ணமும் எதிர்கால இந்தியாவும்.

ஐ.சி.சி சாம்பியன் கிண்ணம் மழையையும் வென்று இந்தியா வசம் ஆகிவிட்டது. எதிர்பார்த்த பல அணிகள் பல் இழித்து நிற்க திடீர் விஸ்வரூபம் எடுத்த இந்தியா சாதித்து விட்டது. அதுவும் எதிர்கால நம்பிக்கைகளுடன்.



போட்டி ஆரம்பிக்க முன் பெரிதும் எதிர்பார்த்த தென் ஆபிரிக்கா முதல் போட்டியில் இந்தியாவிடம் மண்டியிட்டாலும் எப்போதும் அவர்களுக்கு வில்லானாக அமையும் மழை இம்முறை கை கொடுக்க அரை இறுதியை அடைந்துவிட்டது. அதே குழுவில் இடம்பிடித்த பாகிஸ்தானோ கனடா அணியை விட கேவலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறிவிட மீண்டும் 1970/80 காலங்களை நினைவில் கொண்டுவரும் மேற்கிந்திய தீவுகளும் இம்முறை தனது அசுர பலத்தைக் காட்டியது. துரதிஷ்டம் துரத்தவே அவர்களும் அவுட். வழக்கத்துக்கு மாறாக இந்தியா இந்த மூன்று அணிகளையும் ப்பூ என ஊதித்தள்ளி முதல் ஆளாக அரை இறுதிக்குள் நுழைந்து நின்றது.



மறுபுறமோ யார் உள்ளே யார் வெளியே என்பதை தீர்மானிக்க பபிள்கம் இழுபடுவது போல எல்லா போட்டிகளும் இழுவை.  கடந்த இரு முறை சாம்பியன் ஆன அவுஸ்திரேலியா இம்முறை ஒரு போட்டியிலும் வெல்லாது வெளியேறியது. நீண்ட கால ஜாம்பவான்களின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. நம்பிக்கைக்குரிய வீரர்கள் என்று இப்போது யாருமே இல்லை. வாட்சன் எப்போதாவாது பிரகாசிக்கின்றார். மழை கை கொடுத்திருக்காவிட்டால் சில நேரம் கிடைத்த அந்த ஒரு புள்ளியும் கை விட்டு போயிருக்கும். ஆனால் அந்த போட்டியில் ஓரளவுக்கு அவுஸ்திரேலிய கை ஓங்கி இருந்தது.



அடுத்தவர்கள் இவர்களின் அயல் நாட்டுக்காரர்கள். திறமையான வீரர்கள் இருந்தும் பெரிதாய் சாதிக்க தவறும் அணி, இம்முறையும் பலமாய் வந்து கடைசியில் பாவமாய் வெளியேறினார்கள். இலங்கை அணியோ இம்முறை தடுமாற்றத்தின் மேல் தடுமாற்றம் கண்டு கடைசி நேர துடிப்பால் அரை இறுதியை அடைந்தது. சங்கா, மகேல தாண்டி இளம் வீரர்கள் பலர் கைவிட்டு விட்டனர். அத்துடன் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு மத்தியூசின் தலைமைத்துவத்தில் உடன்பாடில்லை.(என் கருத்து மாத்திரமே) ஒரு சோம்பேறி போன்று களத்தில் இருக்கும் ஒருவர் எப்படி மற்ற வீரர்களை ஊக்குவிக்க முடியும். இந்த விசயத்தில் எனக்கு என்னவோ சந்திமால் சிறப்பான தெரிவாக இருக்கும் என நினைக்கின்றேன். கொஞ்சம் வாய்ப்பை குடுத்து எதிர்காலத்தை யோசிக்கலாமே. மறுபுறம் இங்கிலாந்து அணி இலங்கையுடன் மாத்திரம் தோல்வி அடைந்தாலும் தங்கள் தாயகத்தில் மிகப்பலம் பொருந்திய அணியாக இந்த தொடரில் சிறப்பாக செயற்ப்பட்டனர். குக்கின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை அளிக்கின்றது இந்த அணி.



இந்நிலையில் முதல் அரை இறுதியில் தென் ஆபிரிக்காவும் இங்கிலாந்தும் மோதின. ஒட்டுமொத்த பலத்தையும் இங்கிலாந்து காட்ட பெட்டிப்பாம்பாய் சுருண்டது தென் ஆபிரிக்கா. இம்முறையும் துரதிஷ்டம் அவர்களை தொற்றிக்கொண்டது. பந்து வீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என அனைத்திலும் அசத்திய இங்கிலாந்து புதிய வேகத்துடனும் பலத்துடனும் தங்கள் மண்ணில் இன்னொரு இறுதிப்போட்டியில் காலடி வைத்தது.



மறுபுறம் போர் அடித்தால் மாறி மாறி அடிவாங்கும் அண்ணனும் தம்பியும். இம்முறை இந்தியா கொண்டிருக்கும் பலத்துடன் ஒப்பிட்டால் காலுக்குள் போட்டு நசுக்கி விடுவார்கள் என விமர்சிக்கப்பட்டாலும் முக்கியமான போட்டிகளில் இலங்கை அணி எளிதில் சோடை போகாது என்ற நம்பிக்கையில் அடுத்த அரை இறுதி. ஆனால் எப்போதும் இல்லாதளவு பலமான பந்துவீச்சை கொண்டிருக்கும் இந்திய அணியிடம் இலங்கையின் பம்மாத்து ஆட்டம் பலிக்கவில்லை. குறைந்த ஓட்டத்துக்குள் சுருட்டி வேகமாய் அடித்து நொறுக்கி பெட்டி படுக்கையை கட்ட வைத்துவிட்டது இந்தியா.

இப்போது முதன் முறையாக ஒரு ஐ.சி.சி இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து. பலம் என்று பார்க்கும் பொது இந்தியா கொஞ்சம் மேலே தெரிந்தாலும் அரை இறுதியில் தென் ஆபிரிக்காவை சுருட்டிய விதம் சொந்த மண் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு அலேர்ஜி என இங்கிலாந்துக்கும் ஒரு நம்பிக்கை கொடுத்தது.



போட்டி ஆரம்பிக்க முன்னரே மழை விளையாட்டை தொடங்கிவிட்டது. (வானொலியில் நேரடி வர்ணனைக்கு காத்திருந்து சலித்தது தான் மிச்சம்.) 50ஓவர் போட்டி 20ஓவராக மாறியதும் தாதா கங்குலி இந்த வகை கிரிக்கெட்டில் இந்தியா புலி என நம்ம தாத்தா சாரி தல லோஷன் அண்ணாவோ அதெல்லாம் இந்தியாவிலும் ஐ.பி.எல்லிலும் என ஸ்டேடஸ் போட இந்தியாவின் துடுப்பாட்டமும் கங்குலி இருந்த நேரமெல்லாம் எப்படி இறுதி வரை வந்து கோட்டை விடுவார்களோ அதே கதை தான் இந்த முறையும் என நினைக்க வைத்துவிட்டார்கள். ஆரம்பம் முதலே மழை விளையாட இடை இடையே இவர்கள் விளையாட என போட்டியும் பெரிய சூட்டை கொடுக்கவில்லை.

இந்த தொடர் முழுவதும் பிரகாசித்த இந்தியாவின் ஆரம்ப ஜோடி இறுதியில் அம்பேல். தவான் கொஞ்சம் முயன்று பார்த்தாலும் முடியவில்லை. எப்போதும் அசத்தும் கோலி இங்கும் தனது பங்கை சிறப்பாக வழங்கினார் இறுதியில் அந்த துடுப்பாட்டம் தான் இந்தியாவின் வெற்றிக்கும் கை கொடுத்தது. தொடர்ந்து இம்முறை ஆரம்ப போட்டியிலும் பயிற்சி போட்டியிலும் அசத்திய தினேஷ் கார்த்திக் தான் வந்த வேலையை மறந்து கஜினி ஆனது தான் மிச்சம். எப்போதும் உச்சம் போவதும் பின் அடி மட்டம் செல்வதும் இவரை கேட்டுத்தான். தொடர்ந்து அணியில் இருப்பதெல்லாம் நடக்காது. அடுத்தவர் ஐ.பி.எல் நாயகன் ரைனா அணியில 11 பேர் வேண்டும் என்றதுக்காக ஆடினவர் போல இருக்கு. தலையும் இம்முறை பெரிதாய் துடுப்பால் சாதிக்கவில்லை. எல்லோருக்காகவும் சேர்த்து இம்முறை சாதித்தது Sir தான். கடந்த சில வருடங்களுக்கு முன் தோணி அதிகம் இவருக்கு சப்போர்ட் பண்ணுகிறார் உருப்படமாட்டார் என்று எல்லாம் விமர்சிக்கப்பட்ட ஜடேயா தான் இப்போது இந்தியாவின் அசகாய சூரன். கையில் துடுப்பிருந்தா பந்து பறக்கிறது பந்து இருந்தா விக்கெட் பறக்கிறது களத்தடுப்பு செய்தா பயபுள்ள பறக்கிறது.



துடுப்பாட்டத்தில் ஒட்டு மொத்த சொதப்பல் முடிந்த பின் இங்கிலாந்து தனது ஆட்டத்தை ஆரம்பித்தது. ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் இந்தியாவின் தற்போதைய வேகப்பந்து நம்பிக்கை யாதவ். மறுபுறம் புவநேஷும் சிறப்பாக பந்துவீச இங்கிலாந்து ஆட்டம் காண தொடங்கியது. இருந்தாலும் ஆஷிஷ் நெஹ்ராவின் வாரிசு இஷாந் ஷர்மா(எப்போ ரன் கொடுப்பாங்க எப்ப விக்கெட் விழுமென்று அவங்களுக்கே தெரியாது) பந்து வீச இங்கிலாந்து பக்கம் காற்று வீசியது. இந்நிலையில் ஜடேயாவும் அஷ்வினும் சுழலில் சுழற்ற இங்கிலாந்தும் தடுமாறி தடுமாறி வெற்றியை நோக்கி நகர்ந்தது. பந்து வீச்சில் வில்லனான இந்திய வம்சாவளி வீரர் போபரா துடுப்பில் தடை போட மோர்கன் மறுபுறம் கை கொடுக்க வெற்றியை உறுதியுடன் நெருங்கியது இங்கிலாந்து. அப்போதுதான் அந்த உலக அதிசயம் நடந்தது. உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்???? இஷாந்த் ஷர்மா அடுத்தடுத்து இந்த இரண்டு பேரையும் அனுப்பி வைக்க இந்தியாவின் கை ஓங்கியது. இறுதியில் சுழல் நாயகர்கள் இருவரும் வெற்றியை உறுதி செய்து தோணி கையில் இதுவரை தவழாத அந்த ஒரே கிண்ணத்தையும் தவழ வைத்து விட்டனர்.



இம்முறை ஐ.சி.சி கிண்ணத்தின் பின்னர் ஒவ்வொரு அணிகள் மீதான என் கணிப்புக்கள்.

அவுஸ்திரேலியா.


இவர்களின் காலம் முடிந்துவிட்டது. மைக்கல் கிளார்க் மீண்டும் வந்தாலும் ஒரு நல்ல சமச்சீரான அணி உருவாகும் வரை அந்நிய மண்ணில் இவர்களின் வெற்றி இனிக்கனவே. நம்பமுடியா வொட்சன் குழப்படி பயல் வார்னர் தலைவர் கிளார்க் இவர்களுடன் ஹியூச், மக்ஸ்வெல், பெயிலி, வோக்ஸ், வேட் என எல்லோரும் துடுப்பாட்டத்தில் அசுரராக வேண்டும். பந்து வீச்சிலும் இன்னும் எத்தனை காலம் ஜோன்சனை நம்புவது. மற்றவர்களும் நம்பிக்கை அளிக்க வேண்டும். இதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமே இல்லை.


பாகிஸ்தான்.


சொல்ல ஏதுமே இல்லை. நசீர் ஜம்சாட் , உமர் அக்மல் தவிர நம்பிக்கை தரும் இளம் வீரர்கள் வேறு யாருமே இல்லை. எப்போ வெல்வது எப்போ கோட்டை விடுவது என அவர்களுக்கே தெரியாத போது நான் என்ன சொல்ல.

நியூசிலாந்து.


இன்று இல்லை எப்போதும் நல்ல வீரகள் உண்டு. அதேபோல எப்போதும் ஓரளவை மிஞ்சி பிரகாசிப்பதில்லை. இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் இவர்கள் இதே போல தான் இருப்பார்கள்.

தென் ஆபிரிக்கா.



அடுத்த அணித்தலைவர் என்று சொல்லப்படும் டூ பிலேசிக்கே முப்பது நெருங்கும் நிலையில் டேவிட் மில்லர் ஒருவரே எதிர்கால நம்பிக்கை. மோர்கல் மற்றும் ஸ்டைன் இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் தாக்கு பிடிக்கலாம். ஆனால் இந்த அணிக்கு எங்கிருந்து பலமான வீரர்கள் எப்போது வருவார்கள் என்பது சொல்ல முடியாது. எப்போதும் பலமாகவே இருப்பார்கள்.

இலங்கை.


நிறைய இளம் வீரர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால் தொடர்ச்சியான பெறுபேறுகள் தான் தொடர்ந்து வருவதில்லை. சங்கா, மகேல, டில்ஷான் என்ற மும் மூர்த்திகளின் ஓய்வுக்கு பிறகு இவர்கள் இடங்களில் நின்று அணியை தாங்கும் வல்லமையை இவர்கள் இப்போதே வளர்த்தால் பலமான ஒரு அணிக்கு வாய்ப்புண்டு. குசால் பெரேரா, சந்திமால், திசர பெரேரா, எரங்கவுடன் தலைமையை விட்டு சகலதுறை வீரராக மத்தியூசும் பிரகாசித்தால் இன்னொரு இளம் படை ரெடி.

மேற்கிந்திய தீவுகள்.


கிரிக்கெட்டின் ஆரம்பகால மேற்கிந்தியாவை கட்டி எழுப்பிக்கொண்டிருக்கின்றனர் என சொல்லவேண்டும். டுவைன் பிராவோ, சமி ஆகியோரின் சில வருட பங்களிப்புடன் கேமோர் ரோச், போலர்ட், சுனில் நரைன், ஹோல்டர் மற்றும் டரன் பிராவோ போன்றோர் அடுத்த கட்டத்துக்கு அணியை கொண்டு செல்வார்கள். மீண்டும் ஒரு ஆட்சிப்பீடம் ஏறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இங்கிலாந்து.


ஒரே காலகட்டத்தில் (70/80) உச்சத்தில் இருந்த அணிகள் மீண்டும் ஒரே நேரம் எதிர்கால நம்பிக்கை கொடுக்கும் நேரம் இது. இந்தியா, மேற்கிந்தியாவுடன் அந்த நம்பிக்கையை இங்கிலாந்தும் கொடுக்கின்றது. இம்முறை ஆஷஷில் அவுஸ்திரேலியாவுக்கு மரண அடி காத்திருக்கிறது. துடிப்பான ஆளுமை கொண்ட தலைவர் குக். வேகப்பந்தில் இன்னும் ஓரிரு வருடம் தாக்கு பிடிக்கும் அண்டர்சன், கொஞ்சம் நம்பிக்கை கொண்ட புரோட், ஸ்வான் விடை பெற சில காலம் தாக்கு பிடிக்கக் கூடிய ட்ரேட்வேல் இவர்களுடன் வோக்ஸ், ஸ்டீபன் பின், ரூட், பட்லர், போபரா, பரிஷ்டவ் என இன்னொரு தலைமுறை காத்திருக்கிறது. அடுத்த தலைவராய் இயன் மோர்கனின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன். சமச்சீருடன் துணைக்கண்ட ஆடுகளங்களிலும் சாதிக்கும் ஒரு அணி உருவாகும் வாய்ப்பு உண்டு.

இந்தியா.


தற்போதைய கிரிக்கெட்டின் முடி சூடா மன்னர்கள். குறைந்தது ஐந்து வருடத்துக்கு இவர்கள் வெற்றியை தொடர்ந்து ருசிக்கும் வாய்ப்பு உண்டு. சச்சின், கங்குலி, திராவிட், லக்ஸ்மன், கும்பிளே ஓய்வுக்கு பிறகு இந்தியா அவ்வளவு தான் என நினைக்க அவர்கள் இருந்ததை விட பலமான ஒரு அணி உருவாகி நிற்கிறது.  இங்கே தான் அவுஸ்திரேலியா கோட்டை விட்டு நிற்கிறது. சச்சின் ஓய்வின் பின் யார் ஒப்பெநிங் என்ற கேள்விக்கு சேவாக்-கம்பீர் என்ற பதிலுக்கு பதலாக ரஹானே வந்தார். இப்போது அவருக்கும் பதில் கொடுத்து நிற்கிறது இந்த புதிய இணை. எதிர்கால தலைவர் ரோஹித் ஷர்மா - சகீர் தவான் நம்பிக்கைக்குரிய ஜோடியாக தெரிகிறது. ஆரம்ப துடுப்பாட்டக்காரனாக அசத்தும் ரோஹித் இங்கிலாந்து ஆடுகளத்தில் பிரகாசித்து இருப்பது இன்னொரு பலம். மறுபுறம் தவான் இனொரு கங்குலி. ஷேவாக்கின் காலம் முடிந்துவிட்டது என்றே தோன்றுகிறது. கம்பீர் வந்து வந்து போகலாம்.


அதற்க்கு அடுத்த இடத்தில் அடுத்த தலைமுறையின் கிரிக்கெட் வீரர் விராத் கோலி(குழப்படியை தாண்டி திறமையை அங்கீகரிக்க வேண்டும்) எந்த மைதானத்திலும் எந்த அணிக்கு எதிராகவும் ஆக்ரோஷமாக சிறப்பாக ஆடுபவர். இப்போது டெஸ்ட் மட்டுமே ஆடும் புஜாரா, மனோஜ் திவாரியில் ஒருவரோ அல்லது இருவர் உள்ளே வந்தால் மத்திய வரிசைக்கு இன்னொரு பலம். புஜாரவை விரைவில் எதிர்பார்க்கின்றேன். இவர்களை தொடர்ந்து ரைனா மற்றும் ஜடேயா கைகொடுப்பார்கள். இப்போது இருக்கும் சிறந்த சகலதுறை ஆட்டக்காரரில் ஒருவராக ஜடேயா தொடர்ந்து பிரகாசித்தால் இந்தியாவுக்கு கூடுதல் பலம். மறுபுறம் பந்து வீச்சில் இப்போது ஏகப்பட்ட தெரிவுகள். உமேஷ் யாதவ், திண்டா, புவனேஸ்வர் குமார், பிரவீன் குமார் என பல வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளேயும் வெளியேயும் உள்ளனர். சுழற்ச்சி முறை தெரிவு அவர்களிடம் இருந்து மிகச்சிறந்த திறமையை அணிக்கு கொடுக்க வைக்கும். மறுபுறம் ஹர்பஜன் சிங்கின் அட்டம் முடிந்தது. அஷ்வின் சுழலை கவனிக்க இடை இடையே அமித் மிஸ்ரா மற்றும் பிரகன் ஓஜா கைகொடுக்கலாம்.

அடுத்ததாக நான் சொல்லப்போகும் விடயம் தான் பலருக்கு ஆச்சரியத்தை தரலாம். 

தல தோணி.


இப்போது இருக்கும் நல்ல விக்கட் காப்பாளரில் ஒருவர். தேவைப்பட்டால் பந்துவீசுகின்றார். நிலைத்து நின்று ஆடி அணியை கரை சேர்க்கின்றார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெல்லாத கிண்ணம் இல்லை. இந்தியாவின் அதிக வெற்றிக்கரமான தலைவர் பல நட்டு ரசிகர்களை தன வசம் கொண்டிருக்கும் நல்ல மனிதர். இவரின் இழப்பு தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். காரணம் நீண்ட காலத்தின் பின் இந்தியாவுக்கு கிடைத்த நல்ல விக்கெட் காப்பாளர். விக்கெட் கீப்பரிடம் பந்தை விட்டால் அப்பிடியே எல்லைக் கோட்டை கடந்துவிடும் என ஓட்டங்கள் பெற்ற அணிகளும் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தது  இவரின் வருகையின் பின். சகா அல்லது கார்த்திக் அந்த இடத்தை நிரப்ப இருந்தாலும் இருவருமே முப்பதை நெருங்குகின்றார்கள். அதே போல இவரைப்போல ஒரு சிறந்த பினிஷரும் இந்தியாவுக்கு இலகுவில் கிடைக்க போவதுமில்லை.

என்ன இருப்பினும் இவருக்கு ஈடாக இன்னொரு வீரரை தேட வேண்டிய நேரம் இது. அணித்தலைவராக கோலி சிறப்பாக செயற்படுவார் என நம்புகின்றேன். உதவி தலைவராக ரோஹித்தை நியமிக்கலாம். தோணி இருக்கும் இந்த நேரமே இவர்களை பழக்கப்படுத்தி விடவேண்டும். இந்நிலையில் எல்லா கிண்ணங்களும் வென்று இந்தியை உச்சத்தில் கொண்டு சென்று விட்டிருக்கும் தோணி இத்துடன் ஓய்வை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் சச்சின் தன இறுதிக்காலத்தில் செய்ததை தோணி இப்போதே செய்ய வேண்டும். முக்கியமான போட்டிகளில் மட்டும் தான் ஆடிக்கொண்டு அவருக்கான மாற்று வீரரை உருவாக்க வேண்டும். காரணம் அடுத்த உலகக்கோப்பையில் தோணி விளையாடும் வாய்ப்பு இல்லை. எனவே காலம் கடந்து செய்யாமல் இப்போதே துணிந்தால் இன்னு பத்து வருடங்கள் கிரிக்கெட்டில் இந்தியாவின் ராஜ்ஜியமாக இருக்கும்.


Share:

Sunday, April 28, 2013

லண்டன் குறும்திரைப்பட விழாவில் தமிழர்களின் முயற்சி.

திரைப்பட துறை ஒரு மிகப்பெரிய கடல். அதில் நீந்த ஆரம்பித்திருக்கும் என் அன்புத்தம்பி ஒருவனின் இயக்கத்தில் நான் நடித்த ஒரு குறும் திரைப்படம் இது. புகைத்தலால் ஏற்படும் பாதிப்பு பற்றி அவன் மனதில் உதித்த ஒரு கரு இங்கே.

ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச குறும்திரைப்பட விழாவுக்கான போட்டிக்காக இந்த திரைப்படம் இப்போது போட்டி இடுகின்றது. லண்டனில் இருந்து பல குறு திரைப்படங்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளும் அதேவேளை நீங்கள் அளிக்கும் வாக்குகளே எம்மை வெல்ல வைக்கும். இப்போட்டியில் நாம் வெற்றி பெற உங்களின் வாக்குகளை எதிர்பார்க்கின்றோம். அத்துடன் உங்கள் உறவுகள் நண்பர்களிடமும் முடிந்தவரை இதை கொண்டு சேர்ப்பீர்கள் என நம்புகின்றேன்.




உங்கள் வாக்குகளை அளிக்க:

CUT FILMS FESTIVAL (CLICK HERE)

Voting!

Hello!
To vote, just click on the arrow underneath the film on the left hand side and login in through your social media or email or if you haven’t got social media – just register and vote through that. 

If you register to vote, you'll be setting up an account. When you get to your account page press HOME in the left hand corner and you can browse the films and vote. 




YOBI FILM FESTIVAL



வெள்ளித்திரையில் எம் குறுந்திரைப்படத்தை கண்டு கழிக்க......





உங்கள் அன்பான ஆதரவிற்கு நன்றி.





Share:

Tuesday, February 12, 2013

கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா?




முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற குழப்பத்துக்கு பிரித்தானிய விஞ்ஞானிகள் தீர்வு கண்டுள்ளனர். கோழியே முதலில் வந்தது என்பது தமது ஆய்வில் நிரூபணமாகியுள்ளதாக யோர்க்ஷயலுள்ள ஷெபியல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கோழியின் கருப்பையில் காணப்படும் புரதம் ஒன்றின் மூலமே முட்டை உருவாக்கம் இடம் பெறுகிறது என்பதை தாம் கண்ட றிந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.“ஒவோகிளெடிடின்  17' (ஒசி  17) என்ற புரதமானது முட்டை ஓட்டின் அபிவிருத்தியை விரைவுபடுத்தக் கூடியதாக உள்ளது.

இந் நிலையில் முட்டையின் உருவாக்கம் மேற்படி முட்டை ஓட்டு அபிவிருத்திக்கான புரதத்தால் கட்டுப்படுத்தப்படுவது தமது ஆய்வில் அவதானிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.இந்தப் புரதம் கல்சியம் காபனேற்று மூலக்கூறுகளை கல்சிய பளிங்குகளாக மாற்றி முட்டை ஓட்டு விருத்திக்கு உறுதுணையாக செயற்படுகிறது."நீண்ட காலமாக முட்டையிலிருந்தே கோழி வந்ததாக சந்தேகிக்கப்பட்டது. ஆனால், தற்போது கோழியே முதலில் வந்தது என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது'' எனத் தெரிவித்த மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய கலாநிதி கொலின் பிறீமன், இந்த ஆய்வின் முடிவானது புதிய மூலப்பொருட்களை கண்டுபிடிக்க வழிவகை செய்யும் என நம்புவதாகக்  கூறினார். 
Share:

Wednesday, February 6, 2013

காதல் வலி.....- காதல் மாதம் ஆரம்பம்

இது காதல் மாதம்..........காதலர்கள் குதூகலிக்கும்  மாதம்.......
இது சாதல் மாதம்..........காதல் தோல்வியில் நெஞ்சங்கள் துடிக்கும் மாதம்.....
வானொலியில் இரவு நிகழ்ச்சி ஒன்றில் பாடல்களுக்கிடையில் பிணைப்பை ஏற்ப்படுத்த நான் எழுதிய சொற்க் கோர்வைகளை இங்கே பகிர்கின்றேன்...........



உள்ளத்தில் இன்றும் இருக்குதடி காதல் 
உதட்டில் உதித்துவிட்டால் வந்திடுமா சாதல் 
உணர்வுக்குள் ஏண்டி இன்னமும் மோதல் 
இவை தீர நாம் செய்யவேண்டியது உண்மையாய் வாழ்தல் .......
நெருப்பென்று தெரிந்து விரல் வைத்தேன் 
நெருப்பு சுடவில்லை 
நிலவென்று தெரிந்தும் தொட துணிந்தேன் 
முயற்சியில் தோற்கவில்லை 
படுகுழிஎனும்  உன் உள்ளத்தில் விழுந்தேன் 
அன்று முதல் கடவுள் ஆனேன் 
அவன் போல்  கல்லுமானனேன் 
இன்னும் எழும்பவில்லை 
இதயம் துடிக்கவில்லை 
உன் இன்னா சொற்கள் மட்டும் ஏதோ செய்யுதடி 
ஒ இதுதான் காதல் வலியா ?............



நினைத்து பார்த்தாயா என் பாசத்தை 
நீதி கேட்கின்றாயா அதை வேஷம் என்று 
அசைத்து பார்க்கின்றாயா என் ஆழ்மன ஒட்டத்தை 
ஆடி அடங்கினாலும் அழியாதடி என் காதல்...........



அன்று கொன்றாய் உன் விழிவீச்சில்
அது காதல் 
இன்று கொல்கின்றாய் உன் வார்த்தை வீச்சில் 
இது ?
உறவுகள் எனக்கில்லை 
ஆனால் உணர்வுகள் இருக்குதடி 
கண்ணாம்பூச்சி ஆட்டமில்லை 
இது கனவை உலுக்கும் ஆட்டமடி ...............


Share:

Friday, November 9, 2012

வெற்றிப்பாடல்.

நேரம் கிடைக்கும் நேரங்களிலும் சில வம்பளக்கா நேரங்களிலும் எனக்குத்தோன்றும் எண்ணங்களை ஒரு இசையை நானே மனதில் நினைத்தபடி வரிகளாக கோர்ப்பது என் வழக்கம். இது காதல்,மோதல்,கவலை,புரட்சி என்று அன்றைய மனநிலையை பொறுத்திருக்கும். இன்று நான் இங்கே பகிர இருக்கும் வரிகளை கவிதை என்றோ பாடல் என்றோ நீங்கள் கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பாளியல்ல.

இங்கே இடம்பெறப்போகும் வரிகள் கடந்த வருடம் நான் லண்டனில் இருக்கும் நேரம் எழுதியவை. அப்போது நான் ரசித்த நேசித்த என்னை உருவாக்கிய ஜாம்பவான்கள் நிறைந்த வெற்றி எப்.எம்மை மனதில் வைத்தே இந்த வரிகள் வந்தன. இதை ஒரு கதாநாயகனின் அறிமுக வரிகளாக கூட நினைத்துப்பார்க்கலாம். வெற்றி எப்.எம் தற்போது சந்தித்துவரும் இழப்புக்கள் பிரச்சனைகள் வெற்றியின் முதல் குழந்தையாய் என்னை மிக கவலையடைய வைத்துள்ளது. இதே மாதம் 22ம திகதி 2008 இல் வெற்றியில் ஆரம்பித்த என் ஊடக பயணம் இன்றும் கடல் கடந்தும் தொடர்ந்தாலும் நான் நேசித்த என்னை உருவாக்கிய வானொலியில் அப்போது என்னை செதுக்கிய சிற்பிகள் இன்று இல்லை. எத்தனை தடைகள் வந்தாலும் உடைக்கும் படை அது அந்த படையையும் அதன் வலிமையையும் மனதில் வைத்து எழுதிய வரிகள் இங்கே.

மீண்டும் சொல்கின்றேன் இவை பாடலோ,அல்லது கவிதையோ அல்ல என் மன உணர்வின் கிறுக்கல்கள்.



எழுக எழுக என்று சிறிய விதையும் ஒன்று விருட்சமாக இன்று வளர்கின்றதே 
தீயின் வேகம் கொண்டு தென்றல் குளுமை கொண்டு தேசமெங்கும் இவன் தவழ்கின்றானே 
தடைகள் தடைகள் பல உடைத்து உடைத்து திசை எட்டும் இவன் புகழ் பரவுறதே 
கோட்டை என்றெதிரி பறைகொட்டும் இடமெங்கும் வெற்றி வெற்றி என்று முழங்கியதே 

காற்றின் அலை இவனின் முதல்வரியே -வரும் 
காலம் ஏற்றி வைக்கும் முதல்வரியே 
நண்பன் போல் இருப்பான் கனிவுடனே - பல 
புதுமை படைத்திடுவான் துணிவுடனே 
இவன் எடுத்து வைக்கும் அடி தப்பாது - தன்னால் 
கொள்ளை கொண்ட நெஞ்சம் காட்டாறு 
தரத்தில் என்றும் இவன் தனி தாண்டா - இப்போ 
தரணியெங்கும் இவன் படை தாண்டா.

கணங்கள் கூட இங்கு ஓய்வேது - இவன் 
அலையில் பாயும் போது கரை ஏது ?
நீ கலங்கும் போது உந்தன் அன்னையடா 
களை கட்டும் போது இவன் நண்பன்டா 
தினமும் பிறப்பது பலம்தாண்டா 
இவன் பெயரே சொல்லும் என்றும் ஜெயம் தாண்டா 
போட்டி என்பதே கிடையாது - இவன் 
போகும் வழி தோல்வி நெருங்காது. 



Share:

Wednesday, November 9, 2011

வந்தி! மாமோய்! மாமோய்! மாமோய்!


மு.கு:இது கவிதையோ வெண்பாவோ இல்லை. வெறும் வெறும் மொக்கை. அரிவாளால ஆளைத்தான் வெட்டணுமா? நாங்க சீட்டும் பிடிப்பமெல்லெ(வேலாயுதம் போல) அப்பிடி தான் இதுவும்.

பிறந்த நாள் காணும் வந்தி
உனக்கு இல்லையே உன் நண்பன் போல தொந்தி(ஹீ ஹீ அவரே தாங்க)
உனக்கென்று பிறந்தவளை விரைவில் சந்தி
அழகிய தேவதையாய் வருவாள் மணமாலை ஏந்தி!(எனக்கு தெரியுமே)

வடமராட்சியில் பிறந்த வைரமே(யாரும் களவெடுக்க போகாதிங்க)
அதனால் தான் எங்கள் எல்லா மொக்கை அடியையும் தாங்கியும்
வைரம் போல் வலிக்காமல் சிரிக்கிறாயா?

பதிவு எழுத வந்த மூத்தவனே
பச்சிளம் பாலகன் என நீ சொல்லி வந்தாலும்
தாத்தா என என் ஆருயிர் நண்பன் ஹர்ஷூ உங்களை அழைக்கையில்
நீங்கள் துடித்த துடிப்பை யார் அறிந்திருப்பார்?.

கும்மிகளை தொடக்கும் குயவன் நீங்கள் தான் - ஆயினும்
அங்கே நீங்கள் குதறப்படுவதை உங்கள் ரசிகைகள் அறிவாரோ?

வெள்ளை மனம் உங்களது நாமறிவோம் இதனை
வெள்ளை காரிகள் அறியாமல் விட்டதேனோ?(அவங்க மட்டுமா?)

வாழ்க்கையில் மேடு பள்ளம இருக்குதெண்டு
சிரட்டை தத்துவம் சொன்ன எங்கள் சுவாமியியே (இப்போ இவரை சிரட்டை என நாங்கள் ஏன் கூப்பிடிரம் என்ற டவுட் தீர்ந்துதா?)

இருக்கென்பார் இல்லை என்பார் இருந்தால் நல்லம் என்பார் (இது என்ன என்று லோஷன் அண்ணா சொல்வார்)
இல்லாமல் இருப்பவர்க்கு இவர்தான் உபயம் என்பார்
கொட்டிக்கொடுக்கும் நீலக்கலர் எம்.ஜி.ஆரே நீர் வாழ்க பல்லாண்டு.


நண்பன்,குரு,பு.மா.மா,மாமா என எங்கள் கும்மி குழுவில் எங்கள் உறவுகளில் ஒருவாங்க இருக்கும் என்றும் எங்கள் நெருங்கிய நண்பன் மாமா வந்தி என அழைக்கப்பட்டாலும் மாயூரன் என்னும் சொக்க தங்கத்துக்கு எங்கள் கும்மி குழு சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Share:

Monday, June 27, 2011

கனிமொழி தான் அடுத்த முதல்வர்- முத்தழகன் சொன்னதன் திரை மறைவு அரசியல் என்ன?



கம்பி
க்கு பின்னால் இருக்கும் கனி மொழிதான் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் என தி.மு.க பேச்சாளர் வாகை முத்தழகன் சொன்ன கருத்து இப்போது பாரிய சிக்கல்களை தி.மு.கவுக்குள் கொண்டு வர போகின்றது. அவருடைய இந்த கருத்தை பலர் பலவிதமாக பேசினாலும் ஸ்டாலின் இருக்கையில் கனிமொழி என்ற கேள்வியே பெரும்பாலும் சில இணைய தளங்களாலும் சில சமுக ஆர்வலர்களாலும் எழுப்பப்பட்டுள்ளது.

அழகிரி எதிர் ஸ்டாலின் என இருந்த இருமுனைப் போட்டி இப்போது மும்முனை போட்டி ஆக்கப்படுள்ளது. ஸ்டாலின் தான் அடுத்த வாரிசு என எல்லோரும் சொன்னாலும் அதை மறுக்காமல் முத்தழகன் பேசி இருக்கும் விதம் என்னவோ பல நூறு உண்மைகளை சொல்லாமல் சொல்கின்றது. என்னதான் அடுத்த முதல்வர் என கனிமொழியை சொன்னாலும் முத்தழகன் அடுத்த தலைவர் ஸ்டாலின் இல்லை என சொல்லவே இல்லையே.

இப்போது தி.மு.க இருக்கும் நிலையில் மீட்டு எழ பாரிய முயற்சியும் சில பல வருட கால அவகாசமும் தேவை. ஐயாவுக்கு விழுந்த அடி கொஞ்ச நஞ்சமல்ல. கட்சி என்பதை மீறி இப்போது இது குடும்பத்துக்கு எதிராக மாறி நிற்கிறது.
எழும்ப ரொம்ப நேரம் ஆகும் சில வேளை எழும்பாமலே போகலாம். அத்துடன் இம்முறை தான் அம்மா, அம்மா என்னும் பெயருக்கு ஏற்ப நடக்க ஆரம்பித்திருக்கிறார்.சுய தம்பட்டம் இல்லை தன்னிலை அதிரடி இல்லை. அமைதியாக சுழன்றடிக்கின்றது இந்த சூறாவளி. மறுபக்கம் கேப்டன், தோணி போல அமைதியாய் முன்னேறிக்கொண்டிருக்கிறார். எனவே அம்மா விட்டால் கேப்டன், கேப்டன் விட்டால் அம்மா என்ற நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை. காரணம் ஐயாவுக்கு பின் அடுத்தவாரிசுகளுக்கு அவ்வளவுக்கு பவர் இல்லை.

எனவே தான் சொல்கின்றேன் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் கனிமொழிதான். கரணம் ஐயா போனபிறகு(அரசியலில் இருந்து போறத மட்டும் தான் சொன்னேன் வேற எதையும் நினைக்காதிங்க.) தளபதி தான் தல ஆவார். ஆனால் அவர் ஒருநாளும் ஜெயித்து முதல்வர் ஆக போவதில்லை. அந்த நேரம் அந்தளவுக்கு தி.மு.க படுத்து விடும். கிட்டத்தட்ட அவர் ஒரு இருபது ஆண்டுகள் ஆப்பிழுத்து பார்த்துவிட்டு விட கனிமொழிக்கு அறுபது வயசாகிடும் அப்போ அவர் அடுத்த முதல்வருக்கு தகுதியானவராக இருப்பார்.(சிறை போவதும் அறுபது எழுபது வயது இருப்பதும் தானே தமிழ் நாட்டில் முதல்வர் ஆக முதல் தகுதி.) அந்த இருபது வருடங்களில் தி.மு.கவும் மீண்டும் எழுந்துவிடும். அந்த இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தாலும் தி.மு.க ஆளப்போவதில்லை. அப்படி இருக்கையில் ஸ்டாலின் எப்படி முதல்வர் ஆக முடியும். ஆக எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு சூசகமாக தான் வாகை முத்தழகன் இதை சொல்லி இருக்கின்றார். புரிவார்களா என்ன?


அவங்க புரியிறான்களோ இல்லையோ என்னை பின்னி எடுக்க ஆட்கள் வாறது தெரியுது. எஸ்கேப்
Share:

Friday, June 24, 2011

கவிஞர் வாலியின் வாளி வாழி!


கருணாநிதி ஆட்சியில் இருக்கையில் அவர் புகழும் இப்போது அம்மா புகழும் பாடும் கவிஞர் வாலி அவர்களுக்கு அவர் ஸ்டைலில் ஒரு கவிதை பதில். இந்த பதிவை இட காரணமாக அமைந்தது அவர் அண்மையில் ரங்கத்து நாயகியாய் அம்மாவை புகழ்ந்து பாடிய துதி.


''ரங்கநாயகி -ஜெயலலிதா' கவிஞர் வாலியின் அந்தர்பல்டி


ஒரு கவிஞராக பாடலாசிரியராக அவர் வரிகளின் மேல் எனக்கு காதல் ஆனால் அவர் படித்த துதியால் இங்கே மோதுகின்றேன். மன்னிக்கணும் பெரியவரே அதுக்காக மனதில் பட்டத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

காவியக்கவிஞனே!

உன் கவிவரிகளின் மேல் எனக்கு காதல்
நீ படித்த துதிகளினால் நமக்குள் மோதல்
தமிழன் குணம் எப்போதும் அடுத்தவனுக்கு ஈதல்
தங்கள் குணமோ ஏன் ஆட்சியாளர் பக்கம் சாய்தல்
உந்தன் உயிரினும் மேலான தமிழினம் சாதல்
கண்டு உன் மனதுக்குள் வரவில்லையா கூதல்.

மார்க்கண்டேயனே!

மாற்றத்திலும் மாறாத உன் தமிழை ரசிக்கின்றேன்
நீயோ
மறத்தமிழ் குருதியை ருசித்தவனை ரசிக்கின்றாய்

எம் வலியும் வரிகளில் விதைத்தாய் வியக்கின்றேன்
அதே பேனாவால்
வலியைக் கொடுத்தவனையும் இந்திரன் சந்திரன் என வாய்கூசாமல் விழிக்கின்றாய்

வாலி!

உன் வரிகளில் தெறித்தது நம்மவரின் வலி
உன் வார்த்தைகளில் ஏன் இன்று இந்த போலி
ஈழத்தமிழன் கொண்டதோ உயிர் கிலி
ஈனத்தவனாய் ஆட்சிமாறியதும் நீ கொண்டதும் கிலி
நீ துதி பாடிய நிதியால் அறுந்தது பல தாலி
எந்த நிதியால் கொடுக்க முடியும் இழந்த உயிர்களுக்கு கூலி
கவிதைகளில் நீ பராக்கிரமசாலி
களங்க மனத்தால் நீ இனி மக்கள் மனதில் எலி
நின் பெயருக்கு ஏற்றது போல பிடிக்காதே வாளி
உந்தன் களங்கம் களைந்து நீ பல்லாண்டு வாழி!
Share:

குரங்கால் முடிகிறது ஏன் எம்மால் முடியாது? - காணொளி

இந்த உலகில் மனிதன் மற்ற உயிரினங்களால் செய்ய முடியாததை செய்து சாதிக்கின்றான். அனால் இந்த குரங்கு தற்கால நிலையறிந்து இந்த மகத்தான சேவையை செய்கிறது. ஏன் எங்களால் முடியாது என கொஞ்சம் சிந்திப்போம்.....



இந்த காணொளியை அனுப்பி வைத்த நண்பர் பிரதீப்க்கு நன்றி.
Share:

Wednesday, June 22, 2011

லண்டன் ரயில்களும் தற்கொலைகளும்



இதமான பனி விழும் காலைப்பொழுது.இலங்கையின் வெள்ளவத்தை தொடர்மாடியில் ஒரு வீட்டில் அலாரம் அடிக்க புத்துணர்ச்சியுடன் அதுதான் இலங்கையில் தன் தாய் தந்தை தங்கையுடன் தான் எதிர்கொள்ளும் இறுதி விடியல் என தெரியாமல் கண்விழித்து கண்ணாடியினூடே கதிரவனை பார்க்கின்றான் கதிர்.

கதிர்!

யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு கால சக்கர ஓட்டத்தில் ஓடி ஓடி இன்று தென் இலங்கை பக்கம் கரை ஒதுங்கி இருக்கும் சராசரித் தமிழன். அன்பான அப்பா அம்மா சுட்டித்தங்கை என அழகான குடும்பம் இருந்தும் அழகான காதல் செய்யப்போய் அழுக்காகி போனதால் வாழ்வை தொலைத்துவிட்டு இறுதியில் வந்து சேர்ந்த இடம் கொழும்பு.

வழக்கம் போல சில பல கணினி கற்கை நெறிகளை முடித்துவிட்டு இலங்கை சராசரிக்குடிமகனின் பெருங்கனவாகிய லண்டன் படிப்பை தொடரவேண்டும் என்பதே அவன் அவா. அவனுக்காகவே அவன் குடும்பமும் கொழும்பில் தங்கிவிட்டது. எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை அடுத்தவருக்கு கெட்டதும் நினைப்பதில்லை என்ற கொள்கையுடன் ஒரு இருப்பதே வயது வாலிபனுக்கான மிடுக்குடன் கொழும்பில் வளம் வந்தான். மீண்டும் சில காதல் விளையாட்டுக்கள் தலையெடுக்க முற்பட்டாலும் அவன் காதல் என்னவோ லண்டன் மீது அமைந்துவிட்டது. படிப்பும் முடிய லண்டன் விசாவை பெறுவதற்கான தகுதிகளை பெறுவதற்கு ஆங்கில பரீட்சை அது இது என எல்லாம் செய்து விட்டு காத்திருக்கின்றான்.

தானுண்டு தன் வேலை உண்டு என அவன் இருந்தாலும் அவன் பெற்றோரை அவர்காலத்து நண்பர்கள் விட்டு வைக்கவில்லை.
"என்ன பெடியனை லண்டன் அனுப்பிற வேலையள் நடக்குது போல" இது கதிரின் அப்பாவின் நண்பர் ஒருவர்.
"பின்னே என்ன செய்றது இந்த நாட்டில அவனை வச்சிருந்து என்ன செய்றது. ஏதோ போய்ட்டான் எண்டால் எங்கட குடும்பமும் தல நிமிர்ந்திடும்." பெருமூச்சோடு ஓய்கின்றது பல ஏக்கங்களை மனதிலே சுமந்து திரியும் கதிரின் தந்தையின் இதயம்.
ஒருவாறு ஒருவருக்கு பதில் சொல்லியாச்சு இருந்தாலும் உவங்க கண்ணு எல்லாம் என்ட பெடியன் மேல பட்டா ஒண்டும் சரிவராது இண்டைக்கு அவனுக்கு சுத்திப்போடணும் என நினைத்துக்கொண்டே நடந்து செல்லும் அவரை பார்த்து சிரிக்கின்றது தினமும் மரக்கறி சந்தையில் பார்த்து பழகிய அந்த முகம்.
"என்ன கணேஷ் அண்ணே இப்பிடியே யோசிச்சுக்கொண்டு போனால் முன்னுக்கு வாறது கூட தெரியாது"
"அட சுந்தரேசா, நான் உங்களை கவனிக்கல என்ன சந்தைக்கோ?"
"ஓமண்ண என்ட மகளும் மருமகனும் இண்டைக்கு மத்தியான சாப்பாட்டுக்கு வீட்ட வரீனமாம். அதுதான் உதில கறியை கிரியை வாங்கிட்டு போவம் எண்டு வந்தன்"
"ஒ அதுசரி உங்க மருமகன் கட்டார் போறதா சொன்னிங்க என்ன மாதிரி எப்ப போறார். அதுக்கு தான் வந்திருக்கினமோ"?
"இல்லை இல்லை அது அந்த ஏஜென்சி காரன் ஏமாத்தி போட்டான். இப்ப இங்கேயே ஒரு பிசினஸ் செய்யலாம் என நினைக்கிறார். என்ன செய்றது எல்லாம் விதி"
"ம ஏதோ என்ட மகனுக்கும் போடா போறம் ஆனால் லண்டனுக்கு உந்த ஏஜென்சியளுக்கு எல்லாம் நான் போகமாட்டேன். எங்களிட்ட எல்லாம் இருக்கு பிறகேன் உந்த ஏமாத்திற கள்ளன்களிட்ட எங்கட காசை"
"என்ன ஸ்டுடென்ட் விசாவோ...?"
"ஓமோம்"
"இப்ப அங்கே கொஞ்சம் கஷ்டம்போல இருக்கு........எல்லாம் ஏற்ப்பாடு பண்ணிட்டியல் தானே"
"அதெல்லாம் ஓகே அவன் அங்க போய் இறங்கிட்டான் எண்டா அப்புறம் எல்லாம் ஓகே"
"ஏதோ பார்த்து நல்லதை செய்யுங்கோ. அவன் நல்லாய் இருந்தா சந்தோசம்"
"ம நான் வாறன் எனக்கு நிறைய வேலை இருக்கு" என சொல்லிக்கொண்டே இவனுக்கும் என்ட பிள்ளை போறது பிடிக்கல. எல்லாரும் சரியான எரிச்சல் பொறாமை பிடிச்சவன்களாய் இருக்காங்க. கணேஷின் மனம் உள்ளுக்குள் சொல்லிக்கொல்கின்றது.

கதிர் வீட்டில்.

"அப்பா! இந்த யோகா அக்கா சொன்னவ பெடியனுக்கு விசாவுக்கு கொடுக்க முதல் அந்த வெள்ளவத்தை கடக்கரையில இருக்கிற விசா பிள்ளையாருக்கு ஒரு பூசை செய்திட்டு கொண்டே குடுக்கட்டாம். கட்டாயம் விசா கிடைக்கும் என சொல்லுறா. என்ன நாங்களும் செய்வமா? பெடியன் போகணும் ............." கதிரின் அம்மா ஜெயந்தி.

"நானும் அதை நினைச்சன் எனக்கும் ஒரு சிலர் அந்த பிள்ளையாரை பற்றி சொல்லி இருக்கினம், அங்க பூசை வச்சா தப்பாதாமே. ஏன் அந்த குறையை மட்டும் வைப்பான். விசாவுக்கு குடுக்கிற அண்டைக்கு காலமை இந்த பூசையை செய்திட்டு கொண்டு போய் குடுப்பம்." - கணேஷ்.

புகைப்படங்கள்,பாஸ்போர்ட், விண்ணப்பபடிவங்கள் என எல்லாம் தயார் செய்தாயிற்று.
"அடுத்த திங்கள் கிழமை கொடுக்கணும்...ஏம்மா திவ்யா எங்க அண்ணாவை கூப்பிடு இதில ஒரு கையெழுத்து போடணும்....எல்லாத்தையும் இண்டைக்கே ரெடியாய் வச்சால் நாளைக்கு ஒருநாள் கோவில் வேலையளை பார்க்கலாம் நாளைஇண்டைக்கு அப்பிளை பண்ணினால் சரியாய் பெப்ரவரிக்கு விசா கிடைச்சிடும்......" என்று கணேஷன் சொல்வதை கூட கேட்காமல்
"அண்ணா டேய் அண்ணா .......அண்ணா டேய்...." இது திவ்யா
"அடியேய் உனக்கு எத்தனை தரம் சொல்லி இருப்பேன் ஒண்டில் அண்ணா எண்டு கூப்பிடு இல்லாட்டி கதிர் எண்டு கூப்பிடு எண்டு எதுக்கிடி இப்பிடி இரண்டையும் சேர்த்து கூப்பிட்டு என்ன அவமானப்படுத்துறாய்.....உன்னை...." இது கதிர்.
"அடிக்காதடா உன்னை அப்பா கூப்பிட்டார்" - திவ்யா
"எதுக்கடி?"
"ஆஹ உன் ஆட்டோகிராப் வாங்கி வைக்க தான். ஐயா லண்டன் போறார் எல்லே பிறகு அங்கே போய் லண்டன் இளவரசியை பார்த்து பிடிச்சிட்டா அதுதான் இப்பவே......." என்று திவ்யா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டு மெதுவாக அப்பாவை நோக்கி போக திவ்யா இரவு செய்தி கேட்பதற்காக வெற்றி எப் எம்மை போட்டுவிட அதில் "ம் ஒருமாதிரி விமல் இண்டைக்கு அவுட் ஆகாமல் நல்லா விளையாடிடிங்க ஆனால் அடுத்ததா ஒருத்தர் ஆடு ஆடு என ஆடி கையில ஒரு பெரிய கட்டோடு உங்களை எங்களை ஆட வைக்க வந்திருக்கின்றார் எனவே நாங்க இப்ப போகப்போறோம் மீண்டும் சந்திக்கலாம் ஒ வந்திருக்கிறவர் பெயரை நான் சொல்ல மாட்டேன் நீங்களும் சொல்லவேண்டாம் விமல் வெற்றியின் செய்தியை தொடர்ந்து நானாடா நீயாட நிகழ்ச்சியோடு இணைந்திருக்கலாம் விடை பெற்றுக்கொள்ளும் நாங்கள் என்றும் அன்புடன் விமல் ஏ.ஆர்.வி.லோஷன்...இப்பிடி சொன்னதுக்காக எல்லாம் டெரரா முறைக்கப்படாது.. பாய்" என்று போக திவ்யா செய்துயுடன் அமர மறுபுறம் கதிரும் அம்மா அப்பாவும் இறுதிக்கட்ட படிவங்கள் நிரப்பி சரிபார்க்கும் வேலையில் மும்முரமாக இருந்தனர்.

அம்மா அப்பா கதிர் என மூவரின் குரல்களும் பல விவாதங்களை செய்தாலும் மிக குறுகிய நேரத்தில் வெற்றி எப்.எம் செய்திகள் என்ற தீமுடன் செய்தி ஆரம்பமானது. வழக்கம் போல வெற்றி எப்.எம் செய்திகள் செய்தி ஆசிரியர்........வாசிப்பவர்........என்ற வழக்கமான விடயங்கள் கடந்து தலைப்புச் செய்திகள் என்று வரும் போது கூட திவ்யா கூர்ந்து கவனிக்கவில்லை. ஆனால் முக்கிய செய்திகளில் மூன்றாவதாக வந்த செய்தி முழு புலனையும் உல் நாட்டு செய்திகள் திவ்யாவை மட்டுமன்றி முழு குடும்பத்தையும் கொண்டு சென்றது.

"...........மாணவர் விசா மூலம் இங்கிலாந்து சென்று கற்கை நெறியை மேற்கொண்டு வரும் இலங்கை மாணவர்கள் இங்கிலாந்து குடிவரவு புதிய சட்டங்களின் படி வரும் ஏப்ரில் மாதம் முதல் மட்டுப்படுத்தப்பட்ட மணி நேரமே வேலை செய்யலாம். வெளிநாட்டில் இருந்து வரும் பெருமளவானோரின் எண்ணிக்கையை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....................................." என அந்த செய்தி நீண்டு கொண்டு செல்ல அனைவர் முகத்திலும் ஒரு ஏமாற்ற பிரதிபலிப்பு. இருப்பினும் செய்தியில் இருந்து புலனை திருப்பி மனதை ஆசுவாசப்படுத்தி எல்லாவற்றையும் சரி பார்த்து முடிக்கவும்.

"நேயர்கள் இந்த சனி இரவு நானாட நீயாட நிகழ்ச்சியோடு இணைந்திருக்கின்றீர்கள். உங்களை ஆட வைக்கும் பாடல்களோடு கொஞ்சம் கருத்துக்களை சொல்லும் பாடல்களாகவும் இன்றைய நானாட நீயாட பாடல்கள் வரபோகின்றன........................இதோ வருகிறது இது நம்மண்ணின் பாடல் மண் பெருமையை சொல்லும் மண் பட பாடல் லண்டன் பிரான்ஸ் கனடா என ஓடாமல் இங்க இருந்தா எவ்வளவு சந்தோசமா இருக்கலாம் ஆனால் ஓடிக்கொண்டே இருக்கிறாங்களே" என சொல்லிவிட்டு லண்டனுக்கு போகவில்லை பாரிசுக்கும் ஓடவில்லை சொந்த மண்ணில் தானிருந்தோம் உற்சாகமாக ....................என பாடல் ஒலிக்கவும் கதிர் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து போடவும் சரியாக இருந்தது......

(தொடரும்.......)

Share:

Monday, June 20, 2011

தமிழுக்கு ஒரு தமிழனின் கடிதம்!



எத்தனை எத்தனையோ காரணங்களுக்காக தாய் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து இன்று எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களில் ஒருவனாக தமிழுக்கு நான் எழுதும் கடிதம். நிச்சயம் இது என் ஆதங்கம் மட்டுமல்ல பல பேரின் ஆதங்கம்.

என் இனிய தமிழே! என்னை வாழவைக்கும் தமிழே! என் உயிரினும் மேலான தமிழே! என நான் உன்னை விழிக்க மாட்டேன். காரணம் இன்று பலர் உயிரிழக்க காரணமாக இருந்த உன்னை எப்படி நான் அப்படி அழைப்பது. இது நீ செய்த பாவமா இல்லை நாங்கள் செய்த பாவமா? இலங்கையில் ஒரு புறம் தமிழன் அழிந்து கொண்டிருக்க இந்தியாவில் மத்திய அரசோ தமிழனின் கத்தும் குரலையும் கணக்கெடுக்காமல் விட்டுவிட்டது. இந்த நிலையில் தம் நாடு விட்டு உறவு விட்டு எங்கெங்கோ வாழும் என் போன்றவர்கள் தான் உன்னை காப்பாற்ற போகின்றார்களாம். இந்த கொடுமையை சொன்னால் எனக்கு சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.

உன்னை தன் நாவினின்று பிறக்க வைக்கும் பல நல்லுயிர்களை நான் காண்பது இங்கே அரிதாகிவிட்டது. பெரும்பாலும் வேற்று நாட்டுக்காரர் தான் அதனால் தமிழ் பேசும் நபர்களை காண்பது அரிதாகிவிட்டது என நான் காரணம் சொன்னால் நீ என்னை அடித்தே கொல்ல வேண்டும் தமிழர்கள் பலர் இருந்தும் அங்கே உன்னை தேட வேண்டி இருக்கின்றது. சில நேரங்களில் நம்மை பற்றி அடுத்தவர்கள் சொல்வதை தமிழர்கள் நாம் உண்மையாக்கி உனக்கு அபகீர்த்தி தந்துவிடுவோமா என பயமாக இருக்கின்றது.

புலம்பெயர் தமிழர்கள். இன்று பல்வேறு விதத்தில் பெயர் சொல்லும் பெரிய சக்தி. ஆனால் எங்கள் மொழியை காப்பாற்ற தெரியாமல் நாங்கள் போடும் கூத்தை நினைத்தால் நான் வெட்கி தலைகுனிகின்றேன். இருபது இருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே வந்து சேர்ந்த ஆண்கள் சொந்த நாட்டு பெண்களை திருமணம் முடித்து அல்லது அதன் பின் பெண்கள் வர என இன்று பல அந்நிய நாடுகளில் தமிழர்கள் எண்ணிக்கை பல. அதுவும் லண்டனில் முக்கிய ஒரு மொழியாக சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்று விட்டாய் நீ. தமிழ் நாட்டிலேயே செம்மொழியாக்க செலவழித்த ஆண்டுகள் பல இருக்கையில் செந்நிறத்தவனே நின் சிறப்பறிந்து தந்த பெருமை அது. அப்படி இருக்கையில் உன் பெருமையை உன்னை சொல்லியே வயிறு கழுவும் நம்மில் சிலரும் உன்னையே மூச்சு, பேச்சு என வாழும் சிலரும் உன்னை வைத்து வியாபாரம் செய்வதை என்னால் பொறுக்கமுடியவில்லை.

தனியே வந்து பின் துணையை தேடி அதன் விதைகளை கனிகளாக்கி அறுவடை செய்யும் நம்மவர்கள் நம் பழையதையும் உன்னையும் மறந்துவிட்டார்களா என பயம்தான் வருகின்றது. எவனை பார்த்தாலும் ஹாய் சொல்கின்றான் தமிழன். சரி அதுதான் அறிமுகம் என நினைத்தால் அதை தொடர்ந்து வந்து விழுகின்றது உன் தலை. காரணம் அவன் பேசும் தமிழில் நீ செத்துப்போகின்றாய். ஆங்கில மொழி சரளமாய் புகுந்து Goal அடிக்கிறது. மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ் தமிழ் என உன்னை அழைக்கும் தமிழன் தன் சுய நலனுக்காய் உன்னையே விற்கவும் தயங்குவதில்லை. இருப்பினும் நம்மூத்தோர் இன்றும் தமிழை பேசினால் அது அமிர்தம் தான். ஆனால் அவர்கள் தான் பேச தயங்குகின்றார்கள்.

வீட்டில் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என தங்கள் குழந்தையிடம் கண்டிக்கும் உன் பிள்ளைகள் அங்கே தொடங்குகின்றார்கள் உன் முதல் கள பலியை. அதன் பின் உன்னை அறிந்து கொல்ல(எழுத்துப்பிழை அல்ல) , படிக்க என அதுக்கு வேறு பிரத்தியேக வகுப்புக்கள், பரீட்சைகள் வைத்து அதில் என் பிள்ளை சித்தி அடைந்துவிட்டான் என ஸ்வீட் எடு கொண்டாடு என கொண்டாடி உன்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துகின்றார்கள். உன்னை தாய் மொழியாய் பெற்றவர்கள் உன்னையே தனி வகுப்புக்கு சென்று கற்று அதை வெற்றியாய் கொண்டாடும் இழிச்செயலை என்ன சொல்வேன். சிறுவயதில் பிள்ளையின் மனதில் விதைக்கும் விஷம் விருட்சமாகும் போது What is this Culture? Why you waste to your time for tamil? என அந்த பிள்ளை கேட்கும் நிலைக்கு வளர்த்து விடுகின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை நாம் செய்யும் சடங்குகள் புலம்பெயர் தமிழர்களின் அடுத்த தலைமுறையிடம் கேலிக்குரியதாக இருக்கின்றது. இது சொல்வதற்கு வெட்கமாய் இருக்கின்றது.

பிள்ளை குழப்படி செய்தால் பிள்ளையை தண்டிக்க முடியாது. என்மேல் கைவைக்க நீங்கள் யார் நான் இந்த நாட்டு குடிமகன் என பெத்த தாய் தந்தையையே உருட்டுகின்றது மிரட்டுகின்றது விவரம் அறிந்த குழந்தை. அதை தாண்டியதும் குடி கும்மாளம் டிஸ்கோ பப் என பிள்ளையின் அட்டகாசம் உன்னையும் உன் பண்பாட்டையும் கொல்வதற்கான வலை விரிகின்றது. இதை தட்டிக்கேட்க முடிவதும் இல்லை தடுக்க முடியவும் இல்லை. பையன்கள் இப்படி என்றால் பெண்களோ அரைகுறை ஆடையும் கையில் ஆறாவது விரலும் நிழலில் இன்னொரு நிழலும் மனதில் பல இதயங்களும் என மாறி அடுத்த தலைமுறையின் தலை எழுத்தை இடியப்ப சிக்கல் ஆக்கிவிடுகின்றார்கள். இதற்கெல்லாம் பாவிக்கப்படுவது உன் பெயர் தமிழே.

சடங்கு சம்பிரதாயத்துடன் நடந்த கல்யாணங்கள் மாறிப்போய் தென் இந்திய பிரபலங்களின் சிறப்பு வருகைகளில் நடக்கிறது எம்மவரின் பிறந்த நாள் கல்யாண நாட்கள். தமிழன் என்பதற்கு எந்த ஒரு சான்றும் இன்றி கடந்து போகின்றான் தன் மானமும் பிறர் மானமும் பற்றி அடிக்கடி பேசும் தமிழன். உண்மையில் இந்த இடத்தில் ஒரு பட வசனம் தான் நினைவுக்கு வருகின்றது. அதிகமாய் தன் மானம் பற்றி கதைப்பதும் தமிழன் தான் அதேபோல தன் மானத்தை காப்பாற்றாமல் நாறடிப்பவனும் அவன்தான்.

அண்மையில் ஒரு வானொலியில் இதை ஒரு தலைப்பாய் எடுத்து சிலரிடம் இதை பற்றி கேட்ட ஒரு நிகழ்சி நடந்தது. உண்மையில் அதை கேட்கும் போது இப்படி ஒரு நிகழ்ச்சி செய்ய வேண்டிய நிலைக்கு தமிழன் வந்துவிட்டானே என்ற வெட்கம் தான் எனக்கு வந்தது. அதில் ஒருவர் இந்த நவ நாகரிகத்துக்கு நாங்கள் மாற வேண்டும் என்பதற்காய் ஏற்க முடியாத உன்னை கேவலப்படுத்தும் காரணியை சொல்கின்றார். ஒரு தாய் சொல்கின்றார் தன் பெண்ணுக்கு தானே கட்டை சட்டையும் அதுவும் இதுவும் கொடுப்பேன் என. எங்கே போகிறது தமிழே உன் கலாசாரம். ஆனால் அதே நிகழ்சியில் இன்னொரு பெண் கூறிய கருத்து எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தையும் என் மனநிலையையும் பிரதிபலித்தது. நாம் தெளிவாக் திடமாக இருந்தால் எந்த நண்பியும் என்னை இந்த உடுப்பு போடு என கட்டளை இடமாட்டாள் அங்கே இங்கே என இரவில் கூப்பிட மாட்டாள் அதேபோல தண்ணி கிண்ணி என இழுக்க வைக்க மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் எம் மன திடம் வேண்டும் என அவர் சொன்ன கருத்துக்கு என்னையறியாமல் புல்லரித்துவிட்டேன். நானும் எத்தனயோ வழிகளை தாண்டி வந்தவன் இன்றும் என் நண்பர்கள் சிலர் கட்டாயப்படுத்தியும் எந்த கெட்ட பழக்கத்துக்கும் அடிமையாகவில்லையே. உண்மையில் எங்கள் மனம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும் என அவர் சொன்னது எத்தனை உண்மை என உன்னை வைத்து வியாபாரம் செய்யும் நபர்கள் ஏன் சிந்திக்கவில்லை.

அண்மையில் லண்டனில் ஒரு தமிழ் கலை நிகழ்ச்சிக்கு அறிவிப்பு செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்னை கோட் சூட்டில் தான் வரவேண்டும் என சொல்லிவிட்டார்கள்.(கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே.) அந்த நிகழ்ச்சியின் பிரதம விருந்தினர் இங்கிலாந்து அமைச்சர் ஒருவர். தமிழை சொல்ல போகின்ற தமிழில் நடக்கப்போகின்ற ஒரு விழாவுக்கு எதுக்கு ஒரு ஆங்கில அமைச்சர். அவருக்கு அந்த நிகழ்வில் என்ன புரியப்போகின்றது. ஏன் இப்படி அவரை அழைத்தீர்கள் என கேட்டதுக்கு அவர் வந்தால் தான் ஏதும் கிடைக்கும் என்றார்கள். உன்னை விற்று பிழைப்பு நடத்தும் இந்த கூத்து தேவையா தமிழே. அதை விட இன்னொருகொடுமை அங்கே நிகழ்ச்சி செய்த பிள்ளைகள் கதைத்த தமிழுக்கு எமி ஜாக்சன் நமிதா பேசும் தமிழ் எவ்வளவோ மேல். வரவேற்புரை செய்த பையனின் தமிழ் அறிவை எண்ணி நான் உன்னையே கடிந்துகொண்டேன். இறுதியில் அந்த விழா தலைவர் உரையாற்றும் போது சொன்னா பாருங்க. இந்த விழாவுக்கு நான் ஆங்கிலத்தில் தான் என் உரையை தயார் செய்து வைத்திருந்தேன் அதனால் இப்போது தமிழில் சிறிது பேசும் போது தவறு வந்தால் மன்னித்துவிடுங்கள் என்று. என்ன கொடுமை இது. தமிழ் விழாவுக்கு எதற்கு ஆங்கில உரை. (இதுவும் அதுக்கு தான்.) அத்துடன் தமிழ் கதைக்க நடுக்கம் வருதாம். இதில் இன்னுமொன்றை சொல்கின்றேன் அங்கே வந்த அதிகாரியும் விருந்தினருமான ஒருவர் நான் பேசிய தனி தமிழ் கேட்டு தான் சந்தோசமாக இருந்ததாக என்னை வாழ்த்திவிட்டு போன போது அவர்களுக்காய் ஆங்கில மோகம் கொண்டு கத்தியவர்கள் கொஞ்சம் சிந்தித்திருப்பார்கள் என நினைக்கின்றேன்.

நான் கேட்பது எல்லாம் உன்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம் என்று தான். உன்னை பேச சுவாசிக்க பிடிக்கவில்லை என்றால் அவர்கள் எதையும் பேசிவிட்டு போகட்டும் பிரச்சனை இல்லை. ஆனால் உன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டாமே. உன்னை பற்றி அறியா விட்டால் தெரியாவிட்டால் உன்னை பற்றி பேசாமல் இருக்கலாமே. உன் பெயரை சொல்லி வேறு வேறு காரியங்களுக்கு பணத்தை கொள்ளை அடிக்காமல் இருக்கலாமே. எல்லாவற்றுக்கும் மேலாய் உன்னை வாள வைக்காவிட்டாலும் வாழ்விழக்க வைக்கமால் இருக்கலாமே என்பதுதான். நீ கேட்கலாம் நீயும் இதில் ஒருவன் தானே என்று. நான் எங்கும் நெஞ்சு நிமிர்த்தி சொல்வேன் உன்னை நான் எங்கும் எதற்கும் என் சுய நலத்துக்காய் பாவித்ததில்லை. அதே போல இங்கும் பலர் இருக்கலாம் ஆனால் இந்த பதிவின் தொப்பி அளவானவர்கள் செய்வது என்னை உன்னை என் உன் வீட்டு பக்கத்துவீட்டு காரனை கூட பாதிக்கிறது. இது தனி மனித சொத்தல்ல நினைத்தவர் நினைத்தபடி நடக்க. எனவே நீ தான் உன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் தமிழே.....

தொப்பி அளவானவர்களே நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். தமிழ் என சொல்லவும் தமிழன் என புளங்காகிதம் கொள்ளவும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று. நான் என்னையும் இந்த கேள்வியை கேட்டு பார்க்கின்றேன். சுய பரிசோதனைக்காய்.

இப்படிக்கு,
தமிழன்.(இப்படிதான் எல்லோரும் சொல்கின்றார்கள்.)
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox